கனவு கண்டது போர்விமானம், கையில் ஏந்தியது இசைக் கருவி: தஞ்சை பெண்ணின் உற்சாகப் பயணம்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
வகுப்பறையில் நடக்கும் சாதிய பாகுபாடு குறித்து அந்த இளைஞர்கள் நெகிழ்வாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீளமான பெரிய குழாயிலிருந்து புறப்பட்ட இசையானது அந்த அரங்கை மெல்ல ஆக்கிரமிக்கிறது. அந்த கலைஞர்களின் நடிப்புக்கு இந்த இசை மெல்ல கனம் சேர்க்கிறது. இசையும் நடிப்பும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை விதைக்கிறது. வெளி எங்கும் விசும்பல் சத்தம் மெல்ல கேட்கிறது.

பட மூலாதாரம், Charu
இது நடந்தது 'கண்காணிப்பின் இருள்வெளி' நாடக நிகழ்வில்.
அனைவரின் மனதையும் நெகிழ செய்த இசை செவ்விந்தியர்களுடையது. அந்த இசை இசைக்கப்பட்ட வாத்தியம் ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களான அபாரஜின்களுடையது. அந்த இசையை இசைத்தவர் தஞ்சையை சேர்ந்த சாரு.
'போர்க் களத்திலிருந்து இசை களத்திற்கு'
தஞ்சாவூர் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சாரு. இந்திய பாதுகாப்புத் துறை பணியில் சேர வேண்டும்மென்று, அதை நோக்கி பயணித்தவர், இப்போது பழங்குடிகளின் இசையை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறார். அந்த இசையை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமென பயணித்து கொண்டிருக்கிறார்.
"கல்லூரிக் காலத்தில் படிப்பின் காரணமாக இலகுரக விமானப் பயிற்சி பெற்றிருந்தேன். படித்து முடித்த பின் பாதுகாப்புத் துறையில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அப்பா விமானத் துறையில் இருந்ததும் அதற்கொரு காரணம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.

பட மூலாதாரம், Charu
எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு நாளில் திடீரென எனக்கு நிகழ்த்து கலையில் (Performing Arts)ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே இசை, நாட்டியம் என கலையுடன் பயணித்திருக்கிறேன். வீட்டில் சொன்னேன். முதலில் தயங்கியவர்கள் பின் என் பிடிவாதத்தைப் பார்த்து சம்மதித்தார்கள். இப்படியாக நான் இந்தத் துறைக்கு வந்தேன்" என்கிறார் சாரு.
மேலும் அவர், "இவை அனைத்தும் நிகழ்ந்தது 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில். நிகழ்த்து கலையை அனைவரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம் சேர்க்க வேண்டும். அதன் மூலமாக அவர்கள் வாழ்வில், ஆளுமையில் சிறு மாற்றத்தையேனும் கொண்டு வர வேண்டும் என பேரார்வம் இருந்தது. அதனை நோக்கி செயல்பட தொடங்கிய போதுதான் ஒரு நாள் சர்வதேச நிகழ்த்து கலை பயிற்சி பள்ளி ஒன்றில் லியோன் ஜேம்ஸை சந்தித்தேன். புதுப்புது இசைக் கருவிகள் என் வாழ்வில் ஓர் அங்கமானது அந்த சந்திப்புக்குப் பின்புதான்" என்று தெரிவித்தார் சாரு.
'அபாரஜின்களும், லியோனும், இசை கருவியும்'
"லியோனும் நிகழ்த்துக் கலை, இசை என கலை சார்ந்து பயணிப்பவர். எந்தக் கட்டணமும் பெறாமல் பழங்குடிகளின் இசையை, தொன்மையான இசைக் கருவிகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ந்துவிட வேண்டுமென அர்ப்பணிப்புடன் உழைப்பவர். அவர் மூலமாக எனக்கு அபரிஜின்களின் 'டிஜிருடூ' இசைக் கருவி அறிமுகமானது.
ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இசை கருவி அது. அதனை இசைக்க லியோன் பயிற்சி அளித்தார். இப்போது எனக்கு ஆப்ரிக்கன் களிம்பா, அமெரிக்கன் கஸோ உட்பட ஐந்து பழமையான இசைக் கருவிகள் இசைக்கத் தெரியும். இவை நேர்மறை அதிர்வுகளை உண்டாக்குகின்றன. இதன் மூலமாக சிறுவர்களின் வாழ்வில் பெரும் ஒளி பாய்ச்ச முடியுமென நம்புகிறேன்." என்கிறார்.
'இயற்கையான இசை கருவி'
டிஜிருடூ இசைக் கருவி குறித்து பெரும் ஆராய்ச்சி நிகழ்த்தியவர் இசை கலைஞர் லியோன். இவருடன் இணைத்துதான் சாரு நிகழ்த்துக் கலை பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார்.

பட மூலாதாரம், Leon James
பிபிசி தமிழிடம் பேசிய லியோன், "நான் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவன். மேற்கத்திய இசை என்பது ஆங்கிலோ இந்தியர்களின் குடும்பத்தில் ஓர் அங்கம். அப்படியாகதான் எனக்கு இசைக் கருவிகள் அறிமுகமாகின. மெல்ல பழமையான இசை கருவிகள் குறித்து தேட தொடங்கினேன். அந்தத் தேடல்தான் டிஜிருடூவை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது."
"கித்தாரும், பியானோவும் மட்டுமே இசை கருவிகள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,லட்சகணக்கான இசை கருவிகள் இங்கே இருக்கின்றன. மிகவும் தொன்மையான இசை கருவி இந்த 'டிஜிருடூ', ஆஸ்திரேலிய அபாரிஜின்களுடையது. இயற்கையான இசை கருவி இது. ஆம், யூகலிப்டஸ் மரத்தின் உட்பகுதியை கரையான் அரித்து, அங்கொரு வெற்றிடத்தை உணடாக்குகிரது. அதனை பதப்படுத்தி இந்த இசைக் கருவியை அபார்ஜின்கள் உண்டாக்குகிறார்கள்." என்கிறார் லியோன்.
'டிஜிட்டல் மயம்'
"இப்போது இசை என்பது டிஜிட்டல்மயமாக மாறிவிட்டது. நான் அதனை தவறு சொல்லவில்லை. பெருங்கூட்டத்திடம் இசையை கொண்டு சேர்க்க தொழில்நுட்பம் அவசியமானது. ஆனால், அதே நேரம் டிஜிட்டல் இசையானது நமது ஆன்மாவை அசைத்து பார்க்கவில்லை என நான் நினைக்கிறேன்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லியோன்.

பட மூலாதாரம், Leon
அவரே தொடர்கிறார், "நான் நிகழ்த்து கலையின் போதும், நாடகங்களுக்கு இசை அமைக்க கலைஞர்கள் அழைக்கும் போதும், முன்பே பதிவுசெய்யப்பட்ட எந்த இசையையும் பயன்படுத்தாமல், பழமையான கருவிகளை கொண்டு நேரடியாக இசை அமைக்கிறேன். இந்த இசைதான் நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது நம்புகிறேன்."என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












