சினிமா விமர்சனம்: பரத் எனும் நான்

’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது, விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

மாநில முதல்வரான ராகவனின் (சரத்குமார்) மகன் பரத் (மகேஷ் பாபு) ஜாலியாக லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென ராகவன் இறந்துவிட நாடு திரும்புகிறான் பரத். ராகவனின் நெருங்கிய நண்பரும் அந்தக் கட்சியின் தலைவருமான வரதராஜன் (பிரகாஷ் ராஜ்), புதிய முதல்வராக பரத்தை பதவியேற்க வைக்கிறார். ஆனால், பதவியேற்ற பிறகு வரதராஜனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால், கட்சியினரும் கோபமடைகின்றனர்.

ஆனால், பரத்தின் நடவடிக்கைகளால் மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. ஒரு கட்டத்தில் அவர் காதலிக்கும் பெண்ணான வசுமதியை (கியாரா அத்வானி) வைத்து அவதூறு பரப்ப, முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார் பரத். அதற்குப் பிறகு வரதராஜனே முதல்வராகி, பரத்தை ஒழித்துக்கட்ட முயல்கிறார். அப்போதுதான் தன் தந்தையைக் கொன்றதும் வரதராஜன் என்பது பரத்திற்கு புரிகிறது. வரதராஜனை என்ன செய்தார், மீண்டும் முதல்வரானாரா என்பது மீதிக் கதை.

அர்ஜுனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் பாணியில் உருவாக்கப்பட்ட படம். அந்தப் படத்தில் ஒரு நாளில் பல காரியங்களைச் செய்து மக்கள் முதல்வராவார் கதாநாயகன். இந்தப் படத்தில் ஐந்து மாதங்களில் அதைச் செய்கிறார் பரத். ஆனால், முதல்வன் படத்தில் இருந்த சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் ரொம்பவுமே மேம்போக்காக, மேல்தட்டுப் பார்வையில் பார்க்கிறது படம். அதிலும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து தவறுசெய்பவர்களாகவும் சட்டத்தை மீறுபவர்களாகவும் இருக்கிறார்கள். கார் ஓட்டுபவர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள்; ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆட்டோக்காரர்களும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அதனால் சிக்னலை மீறுபவர்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநிலத்தில் யாரும் விதிமீறலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்கிறார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதில்லை என்பதால் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பிக்கச் சொல்கிறார். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வது பற்றி அறிவுரை சொல்கிறார். பிறகு எல்லாப் பஞ்சாயத்துக்கும் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அளிப்பதன் மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுகாண்கிறார். இப்படி போய்க்கொண்டே இருக்கிறது படம்.

படத்தின் முக்கியமான பிரச்சனை, முதலமைச்சராக இருக்கும் பரத்திற்கும் கட்சித் தலைவராக இருக்கும் வரதராஜனுக்கும் இடையிலான முரண் முற்றுவதும் எதிர்ப்பாக மாறுவதும் திரைக்கதையில் சரியாக வெளிப்படவில்லையென்பதுதான். தவிர, கதை ஆரம்பித்ததிலிருந்தே, இதுபோல பல காட்சிகளை மேலோட்டமாக வைத்திருப்பதால் படத்தோடு ஒட்டவே முடியவில்லை.

எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராகிறார், பிறகு முதல்வர் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார், பிறகு அந்தப் பெண்ணுக்காக பதவியை ராஜினாமா செய்கிறார், பிறகு கடைசியில் மீண்டும் முதல்வராகிறார் என்று தலைசுற்ற வைக்கிறார்கள்.

முதல்வராக பதவியேற்று வாகன அணிவகுப்பில் அலுவலகத்திற்குச் செல்லும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதலிக்கிறார். அந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இதெல்லாம் போக படத்தின் நீளம் இன்னொரு பெரிய பிரச்சனை. சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது.

மகேஷ் பாபுவில் துவங்கி, எல்லோரும் வழக்கம்போல நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் வழக்கம்போல தனித்துத் தெரிகிறார். அவர் மட்டும் இல்லையென்றால் ரொம்பவுமே படம் சோதித்திருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: