"செம வெயிட்டு"- வெளியானது காலா படத்தின் பாடல்

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் பாடல் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானவர்கள் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனர்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் காலா என்ற கரிகாலன். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒரு பாடலை, அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் நடிகர் தனுஷின் ஒன்டர்பார் நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டுள்ளது. "செம வெயிட்டு" என்று துவங்கும் இந்தப் பாடல் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

'அடங்க மறுப்பவன், வெளிச்சம் கொடுப்பவன், கவலை கலைக்கிறவன் யாருன்னுதான் காட்டு, கறுப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு.. கறுப்பர் நகரத்தின் கறுப்பு வைரம், கருஞ்சிறுத்தை' என்று நீளும் இந்தப் பாடலை எழுதியவர், அருண் ராஜா காமராஜ். பாடலை, ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் வேலைகள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். முன்னதாக இந்தப் படம் ஏப்ரல் 27ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்களின் கட்டணங்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய தயாரிப்பாளர்கள், மார்ச் 1ஆம் தேதி முதல் படங்கள் வெளியாகாது என அறிவித்தனர்.

இந்த நிலையில்தான், ஏப்ரல் 27ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி காலா வெளியாகுமென படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் இரண்டாவது படம் இது.

2.0 படத்தின் க்ராஃபிக்ஸ் பணிகள் நடந்துவருவதால், இதுவரை அந்தப் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: