You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'PADMAN' திரைப்படத்தை தமிழ் படைப்பாளிகள் எடுக்க தவறியது ஏன்?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
'எந்நு நிண்டே மொய்தீன்', `செல்லுலாய்ட்` என நிஜ வாழ்வின் ஆளுமைகள், உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்துக் கொண்டும் இருக்கின்றன.
இந்தி திரை உலகமும் இதில் விதி விலக்கு அல்ல. அள்ளி பூசப்பட்ட ஜிகினாகளுக்கு நடுவே, பாலிவுட்டிலும் தொடர்ந்து அது போன்ற உயிர்ப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை பெருமளவில் வெற்றியும் பெறுகின்றன. உதாரணம்: மேரி கோம், நோ ஒன் கில்டு ஜெஸிகா, ஏர் லிஃப்ட் ஆகிய திரைப்படங்கள்.
இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளது, தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் வாழ்வை அடிப்படையாக வைத்த எடுக்கப்பட்ட `பேட்மேன்` திரைப்படம்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான `உஸ்தாத் ஹோட்டல்` திரைப்படமும், மதுரையை சேர்ந்த சமையல் கலைஞர் நாராயணன் கிருஷ்ணன் வாழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.
தமிழர்கள் வாழ்வை, தமிழ் ஆளுமைகளை மையமாக வைத்து பிற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வரும்போது, தமிழில் ஏன் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை?
முருகானந்தத்தின் வாழ்வை மையமாக வைத்து தமிழ் திரை உலகம்தானே திரைப்படம் எடுத்து இருக்க வேண்டும். ஏன் எடுக்கவில்லை என்று சமூக ஊடகத்திலும் குரல்கள் கேட்க தொடங்கிவிட்டன.
எது நம் படைப்பாளிகளை இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்வதிலிருந்து தடுக்கிறது?
"தயக்கம்தான் காரணம்"
நிஜ கதைகள் தமிழில் திரையேறவில்லை என்றுமுற்றிலுமாக சொல்லிவிட முடியாது. தமிழிலும் அது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்கிறார் திரைப்பட விமர்சகரான சரா.
கீட்சவன் எனும் முகநூல் பக்கத்திலும், பல இதழ்களிலும் தொடர்ந்து சினிமா குறித்து எழுதி வரும் சரா, "சீவலப்பேரி பாண்டி திரைப்படம் அத்தகைய முயற்சிதான். அதுதந்த மகத்தான வெற்றி அக்காலகட்டத்தில் அதுபோல முயற்சிகள் எடுக்கவைத்தது. ஆனால், துரதிருஷ்டமாக அந்தப் படங்களில் வன்முறைதான் மேலோங்கி இருந்தன. பின் அவ்வாறு எடுக்கப்படுவது மெல்ல நின்றது" என்கிறார்.
அவர், "இப்போது நிஜ வாழ்வு ஆளுமைகள் குறித்த திரைப்படங்கள் வராவிட்டாலும், நிஜ கதைகளால் ஊந்தப்பட்டு திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான `குக்கூ`, `ஜோக்கர்` ஆகிய திரைப்படங்களை சொல்லலாம். இவை வணிக ரீதியாக வெற்றியும் பெற்றன என்பது குறிப்பிடதக்கது" என்கிறார்.
"ஏன் நேரடியாக ஆளுமைகள் குறித்து திரைப்படம் எடுக்கப்படுவதில்லை என்பதற்கு காரணம் திரை உலகினரின் தயக்கமாக மட்டும்தான் இருக்க முடியும். பெரியார், பாரதி, காமராஜர் என ஆளுமைகளின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கலைபடமாகதான் பார்க்கப்பட்டன, அந்தப் படங்களும் அந்த தன்மையுடன்தான் இருந்தன. சினிமா என்று வரும் போது வணிகம் முக்கியம். இந்த காரணம்தான் மனதடையாக இருக்கிறது. ஆனால், இந்தி, மலையாளம் எடுக்கப்படும் நிஜகதாநாயகர்களின் படங்களும், அவை பெறும் வெற்றியும், நிச்சயம் இந்த தயக்கத்தை உடைக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற படங்கள் நிச்சயம் வரும்" என்று நம்பிக்கை பகிர்கிறார் சரா.
"வணிகம் மட்டும்தான்"
தமிழ் சினிமாவில் தன் திரைமொழியால் அழுத்தமான படைப்புகளை தந்த இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்துகளும் ஏறத்தாழ இவ்வாறானதாகதான் இருக்கிறது.
வணிகம்தான் இங்கு அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிறார் காதல், வழக்கு எண் 18/9 ஆகிய திரைப்படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல்.
அவர், "கலையின் மீதான காதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற காரணங்களுக்காக மட்டும் அவர்கள் நிஜவாழ்க்கை கதைகளை படமாக்கவில்லை. இந்தி சினிமாவின் சந்தை பெரிது. அவர்கள் இந்த வகை படங்களில் வணிக வெற்றி கண்டு இருக்கிறார்கள். அதுதான் அவர்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது." என்கிறார்.
மேலும், "அங்கு கதாநாயகர்கள் தயாராக இருக்கிறார்கள். இங்கு அதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமானால், புதுமுக நடிகர்களை வைத்துதான் எடுக்க வேண்டும். அது வணிக வெற்றி தருமா என்பது கேள்விகுறிதான்." என்கிறார்.
"குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை"
தமிழ் திரை உலகத்தை குறைத்து மதிப்பிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் பத்தி எழுத்தாளரும், இயக்குநருமான வெற்றிவேல் சந்திரசேகர்.
அருவி, அறம், சவரக்கத்தி போன்ற நல்ல திரைப்படங்கள் தமிழில்தான் வருகின்றன. இங்கு வெளியான பல படங்கள் தன்னை கவர்ந்து இருக்கிறது; தூண்டுதலாக இருக்கிறது என அனுராக் காஷ்யப் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் இவர்.
அதேநேரம் இங்கு பயோபிக்கும், நிஜத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களும் வரமால் போனதற்கு நாயக வழிபாடும், அரசியலும்தான் காரணம் என்கிறார் வெற்றிவேல்.
வெற்றி, "வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இங்கு இரண்டு உச்ச நாயகர்கள் கட்சி தொடங்க இருக்கிறார்கள். இங்கு அனைத்து நடிகர்களுக்கும் அரசியல் அபிலாஷைகள் இருப்பது போன்ற தோற்றம் வந்துவிட்டது. அப்படியான சூழ்நிலையில் அவர்களை வைத்து உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுத்தால் நிச்சயம் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும். பூசியும் இருக்கிறார்கள். நடிகர்களின் பிம்பம்தான் அனைத்திற்கும் தடையாக இருக்கிறது." என்கிறார்.
"கதாசிரியர்கள் இல்லை"
இந்தக் கருத்துகளிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறார் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு.
மாநகரம், அருவி ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான பிரபு, "தமிழ் சினிமாவில் கதை இலாக்கா எனும் துறை மிகவும் சன்னமாக உள்ளது. தனி மனித வரலாற்று படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு நீண்ட ஆய்வு தேவை. கதை ஆசிரியர்கள்தான் அந்த ஆய்வை மேற்கொண்டு, அதற்கு திரைக்கதை வடிவம் கொடுக்க முடியும். ஆனால், தமிழில் சினிமாவுக்கான கதாசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனி மனித ஆளுமைகள் குறித்த திரைப்படங்களோ, உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களோ இல்லை." என்கிறார்
வணிகம் ஒரு சிக்கலே இல்லை என்பது இவரது பார்வை. தரமான படங்களைக் கொடுத்தால் மக்கள் இங்கு பார்க்க தயாராகதான் இருக்கிறார்கள். அதற்கான முன்முயற்சிகளை நாம்தான் செய்ய வேண்டும் என்கிறார் பிரபு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :