சினிமா விமர்சனம்: திருட்டுப் பயலே-2

சுசி கணேசன் இயக்கத்தில் 2006ஆம் வருடத்தில் வெளிவந்த படம் திருட்டுப் பயலே. ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் நடித்திருந்த அந்தப் படத்தின் கதையை ஒட்டியே உருவாகியிருக்கிறது, திருட்டுப் பயலே - 2.

நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் காவல் துறை ஆய்வாளர் செல்வம் (பாபி சிம்ஹா). பலரது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரது மனைவி அகிலா (அமலா பால்). துவக்கத்தில் மிக நேர்மையானவராக பணியைத் துவங்கும் செல்வம், ஓட்டுக்கேட்பதன் மூலமாக தனக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.

அகிலாவுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகும் பால்கி என்ற பாலகிருஷ்ணன் (பிரசன்னா), ஒரு கட்டத்தில் அகிலாவின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாக மிரட்ட ஆரம்பிக்கிறார். மனைவியின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க ஆரம்பிக்கும் செல்வத்திற்கு இந்த விவகாரம் தெரியவருகிறது. தனக்குத் தெரிந்தது மனைவிக்குத் தெரியாத வகையில் விஷயத்தை முடிக்க நினைக்கிறார் செல்வம்.

கணவனுக்குத் தெரியாமல் விஷயத்தை முடிக்க நினைக்கிறாள் அகிலா. இருவரையும் பகடைக்காய்களாக்கி விஷயத்தை சாதிக்க நினைக்கிறான் பால்கி.

திருட்டுப் பயலே படத்தைப் போலவே இதுவும் ஒரு 'எரோடிக் த்ரில்லர்'. படம் துவங்கியவுடனேயே நேரடியாக கதைக்குள் நுழைவது ஆசுவாசமளிக்கிறது. சுசி கணேசனின் திரைப்படங்கள் அனைத்திலும் இருக்கும் கச்சிதமான திரைக்கதை இந்தப் படத்திலும் இருக்கிறது. தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் பணியின் சிக்கல்கள், அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்ற தகவல்கள், அதற்குப் பின்னான அரசியல் சதிகள் என 2010-2011ஆம் ஆண்டின் தமிழகத்தை ஞாபகப்படுத்துகிறது படத்தின் முற்பகுதி.

தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி கதாநாயகன் பணம் சம்பாதிக்கும் காட்சிகள், வில்லனாக வரும் பிரசன்னாவின் அறிமுகம் என இடைவேளை வரை விறுவிறுப்பாக நகர்கிறது திரைப்படம். ஆனால், இடைவேளைக்குப் பிறகு, கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல், ஒரே மாதிரி தொடர்ந்துகொண்டே போவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஏதோ ஒரு கட்டத்தில் கதாநாயகன் மிக புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்தி, வில்லனை வீழ்த்துவார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, மிகச் சாதாரணமாக முடிகிறது படம். படத்தின் முற்பாதியில் இருந்த விறுவிறுப்பு பிற்பாதியில் சுத்தமாக கரைந்துபோகிறது.

ஹீரோ, வில்லன் ஆகிய இருவரையும்விட மிக புத்திசாலித்தனமான டிடெக்டிவாக வரும் சுசி கணேசனின் பாத்திரம் படத்தோடு சுத்தமாக ஒட்டவில்லை.

பாபி சிம்ஹாவின் முந்தைய சில படங்கள் சரியாக ஓடாத நிலையில், இந்தப் படம் அவர் விரும்பும் கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும். பல இடங்களில் மிக இயல்பான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பாபி சிம்ஹா.

அமலாபாலுக்கு மீண்டும் முன்னிலை தரப்போகும் படம் இது எனத் தோன்றுகிறது. சந்தோஷம், உற்சாகம், காதல், கவர்ச்சி, பயம் என பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடங்களில் பின்னியெடுக்கிறார். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணிக் குரல் வித்தியாசமாக இருக்கிறது.

வில்லன் பால்கியாக வரும் பிரசன்னா ஏற்கனவே இதுபோன்ற அழுத்தமான வில்லன் பாத்திரங்களில் பரிச்சயமானவர்தான் என்பதால் ஆச்சரியமேற்படவில்லை.

வித்யாசாகரின் இசையில் 'நீ பார்க்கும் பார்வை கண்ணோடு' பாடல், முதல் முறை கேட்கும்போது மனதில் ஒட்டிக்கொள்கிறது. பிற பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன.

ஒரு சாவகாசமான த்ரில்லருக்கு ரெடி என்றால் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :