சினிமா விமர்சனம்: ஹரஹர மகாதேவகி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழ்நாட்டில் வாட்சப் ஸ்வாமிஜி என்ற ஆடியோ தொடர் ஒன்று வாட்சப்பில் வலம் வந்துகொண்டிருந்தது. நவீன சாமியார் ஒருவர் பேசுவதைப்போல, ஆபாசமான வார்த்தைகளை வைத்து கதைகள் அந்தத் தொடரில் வந்துகொண்டிருந்தன. 'ஹர ஹர மகாதேவகி' என்று அந்த ஆடியோ துவங்கும்போதே கேட்பவர்கள் சிரிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமாக இருந்ததால், அந்த வரியை படத் தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
இறுதிச் சடங்குகளுக்கான பொருட்களை வாடகைக்கு விடும் ஹரியும் (கௌதம் கார்த்திக்) கல்லூரி மாணவியான ரம்யாவும் (நிக்கி கல்ராணி) காதலர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ஒத்துவராமல் பிரிய முடிவெடுக்கிறார்கள்.
இருவரும் பரிசளித்த பொருட்களை எடுத்துவந்து கொடுத்துவிட்டு பிரிந்துவிட வேண்டுமென கூறுகிறாள் ரம்யா. அவள் கொடுத்த பொருட்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு வருகிறான் ஹரி.
அதேபோல, அரசியல்வாதி (ரவி மரியா) ஒருவர், தேர்தலை ஒத்திவைக்க தன் கட்சிக் கூட்டத்திலேயே வெடிகுண்டு வைக்க முடிவுசெய்து, ஒரு பையில் வெடிகுண்டைப் பொருத்தி ஸ்பைக் டைசனையும் (மொட்டை ராஜேந்திரன்) குமாரையும் (கருணாகரன்) தன் கூட்டத்தில் அதை வைக்கச் சொல்கிறார்.
அதே நேரத்தில் கள்ள நோட்டு மாற்றும் கும்பலைச் சேர்ந்த ரவி (பால சரவணன்) ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டை ஒரு பையில் எடுத்துவருகிறான்.
இவை எல்லாமே ஒரே மாதிரியான பைகள் என்பதால், அவை மாறிவிடுகின்றன. அதைத் தொடரும் குழப்பமும், இவர்கள் எல்லாம் இறுதியில் ஒரே இடத்தில் சேர்வதால் நிகழும் ரகளைகளும்தான் படம்.

படம் ஆரம்பிக்கும்போதே, வயதுவந்தோருக்கான நகைச்சுவைப் படம் என்று அறிவித்துவிட்டதாலும் அதற்கேற்றபடி தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருப்பதாலும் வசனங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். 'சின்னப் பையனா அவன், அவ்வளோ பெரிசா இருக்கு' என்று நேரடியாகவே பேசுகிறார் கதாநாயகி.
திரையரங்குகளில் இதற்கு பெரும் ஆரவாரம் இருக்கிறது என்றாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டிருப்பதால் ஒரு முழுமையான அனுபவத்தைத் தரவில்லை.
கதாநாயகன் ஹரியின் கதை ஒன்று, வெடிகுண்டு வைக்கும் கதை ஒன்று, கள்ள நோட்டு கதை ஒன்று என மூன்று கதைகளையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைப்பதே சிரமம் என்கிறபோது, இடையில் குழந்தை கடத்தல் கதை ஒன்றையும் இணைத்திருப்பதால், எந்தக் கதையோடும் முழுமையாக ஒன்றுபட முடியவில்லை.
அதிலும் வெடிகுண்டு கதையில் நடக்கும் சம்பவங்கள் எந்த சுவாரஸ்யமுமின்றி மெதுவாக நடப்பதும் பொறுமையை சோதிக்கிறது.
வசனங்களில் வரும் நகைச்சுவையை நம்பியே படத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், பல இடங்களில் நகைச்சுவை கைவிட்டிருக்கிறது.

நாயகன் உடனேயே வரும் சதீஷின் நகைச்சுவை பெரும்பாலான இடங்களில் சிரிப்பை வரவழைக்கவில்லை.
கௌதம், நிக்கி கல்ராணி, ரவி மரியா, அவரது உதவியாளராக நடிக்கும் நமோ, சக்தி, பால சரவணன் ஆகியோரின் நடிப்பு பரவாயில்லை. ஆனால், மீதமிருக்கும் பலர் இரண்டாம் தர படங்களில் வருபவர்களைப் போல மிக சுமாராக நடித்து வெறுப்பேற்றுகிறார்கள்.
நாயகி - நாயகன் இடையிலான காட்சிகள், அடல்ட்ஸ் ஒன்லி வசனங்கள், ஹரஹர மகாதேவகி என்ற பெயர் ஆகியவற்றை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் வெட்டி, கிளைக் கதைகளைக் குறைத்திருந்தால் ஒரு நேர்த்தியான வயதுவந்தோருக்கான நகைச்சுவைப் படம் கிடைத்திருக்கும்.
பிற செய்திகள்:
- நுகரும் திறனை இழக்கிறீர்களா? மறதி நோய் எச்சரிக்கை!
- தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இத்தாலிப் பெண்
- இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன
- அமெரிக்க சுகாதாரச் செயலாளர் பதவி விலகல்: தனி விமான விவகாரம்
- மரிலின் மன்றோ கல்லறை அருகே 'உறங்க' போகும் உல்லாச பத்திரிகை அதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












