'விக்ரம் வேதா' என்ன மாதிரியான திரைப்படம்?: இயக்குநர் காயத்திரி புஷ்கர் விளக்கம்

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விக்ரம் வேதா திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜுலை 21-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. புஷ்கர்-காயத்திரி தம்பதியரின் இயக்கத்தில் வெளிவரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆர். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வெளியாகும் விக்ரம்வேதா திரைப்படம் குறித்தும், தனது திரையுலக சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இத்திரைப்படத்தின் இயக்குநர் காயத்திரி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''அதிகளவில் தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகிறது. உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகிறது. இது மிகவும் மகிழ்ச்சியையும், பரபரப்பையும் தருகிறது'' என்று விக்ரம் வேதா திரைப்படம் வெளிவருவது குறித்து இயக்குநர் காயத்ரி தெரிவித்தார்.

'விஜய் சேதுபதி, மாதவன் ஆகிய இருவருமே பெருந்தன்மையானவர்கள்'

இத்திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இருவரும் இயல்பாகப் பொருந்தினர் என்று தெரிவித்த காயத்ரி, இருவருமே விக்ரம் வேதா திரைப்படத்தில் மிக சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர் என்று தெரிவித்தார்.

விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த மாதவனும், வேதா கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இருவருமே படப்பிடிப்பு தளத்தில் மிகவும் இயல்பாக நடித்தனர் என்று குறிப்பிட்ட காயத்திரி, '' விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இருவருமே பெருந்தனமையானவர்கள். இது எங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது'' என்று கூறினார்.

விக்ரம் வேதா பற்றி மேலும் குறிப்பிட்ட காயத்திரி, '' எங்களது முந்தைய திரைப்படங்களை விட விக்ரம் வேதா திரைப்படத்தின் கதை மிகவும் மாறுபட்டது. இது ஒரு வகை திரில்லர் திரைப்படம்'' என்று குறிப்பிட்டார்.

கேங்ஸ்டர் வகை திரைப்படமா `விக்ரம் வேதா` என்று கேட்டதற்கு, ''அவ்வாறும் கூறலாம். இந்த திரைப்படத்தின் வித்தியாசத்தை மக்கள் நிச்சயம் உணர்வர். விக்ரமாதித்தன் வேதாளம் கதையின் அடிப்படை இத்திரைப்படத்தில் உள்ளது'' என்று காயத்திரி புஷ்கர் தெரிவித்தார்.

வரலக்ஷ்மி மற்றும் ஷ்ரத்தாவின் பங்கு

வரலக்ஷ்மி மற்றும் ஷ்ரத்தாவின் பங்களிப்பும் இத்திரைப்படத்தில் நன்றாக இருந்தது. ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் மிகவும் சவால்விடக்கூடியது. மாதவனுக்கு இணையாக நடிக்கும் அவர் தனது நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தியுள்ளார் என்று காயத்திரி தனது திரைப்பட கதாநாயகிகள் குறித்து கூறினார்,

நீண்ட இடைவெளி ஏன்?

தனது முந்தைய திரைப்படமான 'வா' திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி உண்டானது பற்றி கேட்டதற்கு , ''ஆம், அது உண்மைதான். அதிகப்படியான திரைப்படங்கள் செய்ய வேண்டும் என்று துடிப்பு எங்களுக்கு இல்லை. இயல்பாக திரைப்படங்கள் செய்வதால் தாமதம் ஏற்படுகிறது'' என்று காயத்திரி தெரிவித்தார்.

''ஒரு திரைப்படம் செய்தால் முழு திருப்தி எங்களுக்கு ஏற்பட வேண்டும். அப்போதுதான் திரைப்படம் செய்வோம். இந்த திரைப்படத்தின் கதையை எழுதவே நீண்ட காலம் தேவைப்பட்டது'' என்று காயத்திரி மேலும் தெரிவித்தார்.

நல்ல கதை தயார் செய்து விட்டால் நிச்சயம் பெரிய நடிகர்களுடன் திரைப்படம் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது. என்று கூறிய காயத்திரி மேலும் கூறுகையில், '' இனிமேல் விரைவாக திரைப்படங்கள் இயக்க எண்ணமுள்ளது. கதைகள் தயார் ஆகிக்கொண்டிருக்கின்றன'' என்று கூறினார்.

என்ன சொல்கிறார் ஷ்ரத்தா?

விக்ரம் வேதா திரைப்பட கதாநாயகிகளில் ஒருவரும் , மாதவனுக்கு இப்படத்தில் இணையாக நடித்த ஷ்ரத்தா பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இத்திரைப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்'' என்று கூறினார்.

தமிழ் நன்றாக தெரியாவிட்டாலும் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறிய ஷ்ரத்தா, விக்ரம் வேதா திரைப்படத்தின் இயக்குனர்களும் மிகவும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

காற்று வெளியிடை மற்றும் இவன் தந்திரன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே நடித்துள்ள ஷ்ரத்தா, ''காற்று வெளியிட திரைப்படத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்தது ஒரு வாழ்நாள் அனுபவம். எனது கனவு நிறைவேறியது அப்படத்தால்தான்''என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்