எடையை கூட்டறாங்க, குறைக்கிறாங்க... 5 பிரபல நடிகர்களிடம் இருக்கும் அந்த ரகசிய மேஜிக் என்ன?

இந்திய நடிகர் ராஜ்குமார் ராவ் தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளமார செய்பவர். தான் நடித்த ட்ரேப்டு (Trapped) படத்திற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்த அவர், தற்போது உருவாகி வரும் சுபாஷ் சந்திர போஸ் இணைய தொடருக்காக 11 கிலோ எடையை கூட்டியுள்ளார்.

ராவ் உடலைமைப்பின் மாற்றங்களை காட்டும் படங்கள் இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றன.

ராஜ்குமார் மட்டுமல்ல, உடல் எடையை கூட்டுவதிலும் குறைப்பதிலும் பல நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

அமீர் கான் இந்திய நடிகர் ராஜ்குமார் ராவ் தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளமார செய்பவர்.

அமீர் கான்

இன்னொரு பாலிவுட் நடிகரான அமீர் கான், உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் வசூலை வாரி குவித்த 'தங்கல்' படத்தில் தான் நடித்த மல்யுத்த வீரர் பாத்திரத்திற்காக எடையை கூட்டினார்.

இந்தியாவில் 'நேர்த்தியானவர்' என்று அறியப்படும் அமீர் கான் , அப்படத்திற்காக 25 கிலோ எடையை கூட்டினார். ஒரு கட்டத்தில் அவரின் உடல் எடை 97 கிலோவை தொட்டது.

அதே படத்தில் இளம் வயது பாத்திரத்திற்காக, 25 கிலோ எடையை 25 வாரங்களில் குறைத்து சாதித்துக் காட்டினார்.

டாம் ஹேங்க்ஸ்

எடையை குறைப்பதில் டாம் ஹேங்க்ஸ் வல்லவர். தான் நடித்த கேஸ்ட் அவே (Cast Away) படத்தில் தொப்பை உடைய கணினி பொறியாளர் பாத்திரத்தில் இருந்து ஒரு விமான விபத்தில் தப்பித்து நான்கு ஆண்டுகள் ஒரு தீவில் உள்ள காட்டில் வாழும் பாத்திரமாக ஒரே காட்சியில் வரும் மாற்றதிற்காக அவர் 24 கிலோ குறைத்ததாக கூறப்படுகிறது.

டாம் ஹேங்க்ஸ் பழங்கள், காய் கறிகள், நண்டு, தேங்காய் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை உட்கொண்டு இதை சாதித்துள்ளார். இந்த உணவு முறை, 'கேஸ்ட் அவே டயட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அக்காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் தான் உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவின் அளவை ஒரு உள்ளங்கைக்குள் அடக்கி விடலாம் என்று ஹேங்க்ஸ் ஒருமுறை நகைச்சுவையாக கூறினார்.

ஃபிலடெல்ஃபியா படத்தில் எய்ட்ஸ் நோயாளி கதாபாத்திரத்திற்காக 11 கிலோ எடை குறைத்ததன் பின்னர் அவர் அதிக அளவில் எடை குறைத்தது இது இரண்டாவது படம் ஆகும்.

சார்லீஸ் தெரன்

சார்லீஸ் தெரன் மான்ஸ்டர் படத்தில் நிஜ வாழ்வில் தொடர் கொலைகள் செய்த பெண்ணான அய்லீன் உர்னோஸ் பாத்திரத்திற்காக 13.5 கிலோ அளவுக்கு எடையை அதிகரித்தார்.

உர்னோஸ் போன்றே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக சுமார் 30 பவுண்டுகள் எடையை கூட்டிய தெரன் பெரும்பாலும் டோனட்டுகள் மற்றும் உருளை கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவையே உட்கொண்டார். அந்த நடிப்பிற்காக அவர் ஒரு ஆஸ்கர் விருதை பெற்றார்.

ஒரு கதாபாத்திரத்திற்காக அவர் ஒரு விரிவான உணவுத்திட்டத்தை பின்பற்றியது இது முதல்முறையல்ல. 'ஸ்வீட் நவம்பர்' (Sweet November) படத்தில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்க அவர் பல கிலோ எடை குறைத்தார்.

ராபர்ட் டீ நீரோ

ஒரு நிஜ மனிதரின் பாத்திரம்போல் இருக்க உடலமைப்பை மாற்றுவதில் மிகவும் புகழ்பெற்ற ரேஜிங் புல் (Raging Bull) படத்தில், வயதாகும் குத்துச்சண்டை வீரர் ஜேக் லா மோட்டா பாத்திரத்திற்காக ராபர்ட் டீ நீரோ 27 கிலோ எடையை கூட்டினார்.

அதோடு மட்டுமல்லாமல், தன் உடலின் கட்டுக்கோப்பை கூடிய அவர் அந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரருடனேயே பயிற்சியும் மேற்கொண்டார். அவர் மூன்று வெவ்வேறு குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்கேற்றார்.

அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. எடை அதிகரிப்பு நீரோவின் உடல் நலம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தடித்தல் மற்றும் சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டார்.

ஆனால் அது அவருக்கு இறுதியில் பலனளித்தது. அப்பாத்திரத்திற்கு அவர் கோல்டன் குளோப் விருதையும் தெரனை போல் ஆஸ்கர் விருதையும் வென்றார்.

ரன்தீப் ஹுடா

ரன்தீப் ஹுடா குறுகிய காலத்தில் எடையை குறைத்த இன்னொரு இந்திய நடிகர்.

சரப்ஜீத் படத்தில் நடிப்பதற்காக 18 கிலோ உடல் எடையை வெறும் 28 நாட்களில் ரன்தீப் ஹுடா குறைத்தார்.

தனது குடும்பத்தினர் மற்றும் மருத்துவரின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் ரன்தீப், 'ஸ்டார்வேஷன் டயட்' ( Starvation Diet) எனப்படும் மிக மிக குறைவாக உண்ணும் உணவுத்திட்டத்தை பின்பற்றினார்.

அந்த படத்தின் இயக்குனர் ஓமுங் குமார், ஓர் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "முதல் முறையாக நான் ரன்தீப்பை பார்த்தபோது நான் அவரின் எலும்புகளை பார்க்க விரும்புவதாக கூறினேன். அதை அவர் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு என்னையே அதிர்ச்சியடையச் செய்தார்" என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்