தமிழ்நாடு முழுவதும் 68 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ‘ராட்மேன்’ காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

    • எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய வீடுகள் தான் இலக்கு; கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங்க் மில்லில் முதலீடு. இரும்பு ராடு, சங்கேத மொழி என புதிய வகையில் தமிழ்நாடு முழுவதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த இரண்டு வருடமாக காவல்துறையினருக்கு போக்கு காட்டி வந்த 'ராட்மேன்' (Rodman) என்ற கும்பலின் தலைவன் மற்றும் கூட்டாளிகளை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

68 கொள்ளை சம்பவங்களில் 1500 சவரன் தங்க நகைகளை திருடியதாகக் கருதப்படும் ’ராட்மேன்’ என்ற நபரை காவல்துறை எப்படி அடையாளம் கண்டு கைது செய்தது?

தொடர் கொள்ளைச் சம்பவங்கள்

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளில் இரும்பு ராடை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறின.

இதன் பின்னணியில், ஒரே நபர் இருந்ததை கொள்ளைச் சம்பவத்தில் இருந்து கிடைத்த தடயங்கள் உறுதி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

முழுக்கை சட்டை ,கையில் இரும்பு கம்பி, முகம் முழுவதையும் மூடிய மாஸ்க் உள்ளிட்ட அடையாளங்களோடு தொடர்ச்சியாக நடந்த 18 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட நபரை அடையாளம் காண வேறு தடயங்கள் இல்லாததால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இதற்காககத் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கோவை மாநகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதேபோன்று கொலை சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் விபரங்களை கைப்பற்றி விசாரணையில் இறங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடந்த சம்பவங்களில் இருந்து சிசிடிவி மூலம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் முழுக்கை சட்டை, முகமூடி, கையில் இரும்பு கம்பி கொண்டு கொள்ளையடிப்பதை கண்டறிந்ததாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.

சிசிடிவியில் பதிவான, கொள்ளையனின் உருவம் மற்றும் உடல் அசைவுகளை வைத்து ஒர் ஓவியத்தை காவல்துறை வரைந்தது. அந்த ஓவியத்தின் அடிப்படையில் துப்பு துலக்கிய காவல்துறையினர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி ஹம்சராஜை கைது செய்தனர்.

காவல்துறை தரப்பில் சொல்லப்படுவது என்ன?

கைது செய்யப்பட்டுள்ள ராட்மேன்(எ) மூர்த்தி மீது கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகள் உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 68 வழக்குகள் இவர் மீது உள்ளது.

இவரது கொள்ளை கும்பலில் 7 பேர் உள்ளதாகவும், தற்போது கும்பலின் தலைவர் மூர்த்தி, அவரது கூட்டாளி ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக கோவை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை விசாரணை அதிகாரிகள், "ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகள் என்றால், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும், சிசிடிவி கேமராக்கள் இருக்காது, நாய்கள் உள்ளிட்டவை அதிகம் இருக்காது என்பதால் இவர்கள் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளில் மட்டும் நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

கொள்ளையின் போது வீடுகளில் உள்ளவர்களை பிணை கைதிகளாக கட்டி போட்டு மிரட்டி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். ஆனால் யார் மீது தாக்குதலில் இந்த கொள்ளை கும்பல் ஈடுபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இருப்பு ராடை கொண்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்தால் சத்தம் அதிகமாக வெளியே வராது என்பதால், அதை கொள்ளை சம்பவத்தின் போது பயன்படுத்தியுள்ளனர்.

ஒட்டன்சத்திரம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இவரின் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரியவந்ததாக காவல்துறை விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோவை மாநகரில் சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இந்த கும்பல் மீது அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் 1500 சவரன் நகைகளையும், கோவை மாவட்டத்தில் மட்டும் 376 சவரன் நகைகளை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளதாக கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொள்ளையடித்த பணத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு

கொள்ளையடித்த பணத்தை கொண்டு ராஜபாளையத்தில் பாழடைந்த ஸ்பின்னிங் மில் ஒன்றை ரூ.4.5 கோடிக்கு ‘ராட்மேன்’ (Rodman) என்ற மூர்த்தி வாங்கியுள்ளார். மேலும் அதே ஊரில் பேருந்து நிலையம் அருகே 53 சென்ட் நிலம், விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி ஆடம்பரமாக இருந்துள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூர்த்தியின் மனைவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக உள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவரையும், மூர்த்தியின் கூட்டாளி சுரேசையும் ராஜபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் உட்பட 4 நபர்களிடம் கொடுத்து பணமாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மனோஜ் குமார், சுதாகர், ஓம்பிரகாஷ், பிரகாஷ், ஆகிய நால்வரையும் காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவித்தனர்.

மாவட்ட வாரியாக வழக்குகள்

மூர்த்தியின் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 63 சவரன் நகைகள், இரண்டு விலையுயர்ந்த கார்கள், ரூ.13 லட்ச ரூபாய் மதிப்புடைய சூப்பர் பைக் உட்பட ஆறு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்யும் போது நகைகள் முழுமையாக மீட்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகரில் 20, கோவையில் 18, மதுரையில் 14, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் வழக்குகள் என மொத்தம் 68 கொள்ளை வழக்குகள் ராட் மேன் கும்பல் மீது பதிவாகியுள்ளன.

பேருந்துகளில் சென்று கொள்ளை

மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளை சம்பவங்களை பொது பேருந்துகளில் சென்றே மேற்கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பல்வேறு வாகனங்களை வாங்கியிருந்தாலும், கொள்ளையடிக்க செல்லும் போது அவற்றை பயன்படுத்தியதில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

பயணிகளோடு பேருந்துகளில் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர் தண்டாவாளம் வழியாக தனித்தனியாக நடந்து சென்று கொள்ளையடிக்க ஏதுவாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு குற்றத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். அதேபோல் வீட்டின் பூட்டுகளை இரும்பு ராடால் உடைத்து கொள்ளையடிப்பது இவர்கள் பாணி என காவல்துறையினர் கூறுகின்றனர்.

முழுக்கை சட்டை, சங்கேத பாஷை, சட்டைக்குள் பை

மூர்த்தி கும்பல் கொள்ளையடிக்கும் வீடுகளில் உள்ளவர்களை கட்டிபோட்ட பின்பு பல மொழிகளின் வார்த்தைகளை கொண்ட சங்கேத மொழியில் ( கும்பலுக்கு மட்டுமே தெரிந்த மொழி) மட்டுமே பேசியுள்ளனர். தாங்கள் யார் என்பதை அடையாளம் கண்டுக்கொள்ள கூடாது என்பவதற்காகவும், கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இதை பயன்படுத்தி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் மூர்த்தி முழுக்கை சட்டையை மட்டுமே அணிந்து ஈடுபட்டுள்ளார். மேலும் கொள்ளையடித்த நகைகளை மறைத்து எடுத்து செல்வதற்காக ஒரு சட்டையின் மீது மற்றொரு சட்டையை போட்டு நடுவே பையை வைத்து கொள்ளையடித்த நகைகளை எடுத்து சென்றுள்ளார்.

வாகன சோதனையில் சிக்கி கொள்ளாமல் தப்பிப்பதற்காக பேருந்து பயணத்தை பயன்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் கொள்ளை சம்பவங்களின் போது செல்போன் பயன்படுத்தினால் சிக்கிவிட வாய்ப்புள்ளது என்பதற்காக செல்போன்களை பயன்படுத்தாமல் இருந்துள்ளனர்.

போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கடந்த பிப்ரவரி மாதம் பீளமேடு பகுதியில் உள்ள வீட்டில் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 35 சவரன் நகைகள் கொள்ளை போனது. இதையடுத்து துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கியதும் கோவையில் நடந்த கொள்ளை சம்பவங்கள் ஒரே மாதிரி நடந்துள்ளதை கண்டறிந்தனர்.

எல்லா கொள்ளை சம்பவங்களும் ஒரே பாணியில் நடந்திருப்பதால் ரயில்வே தண்டவாள கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் வேறு மாவட்டங்களில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதா என விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அப்போது தான் திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் இதே பாணியில் கொள்ளை சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த கும்பல் சிசிடிவி இல்லாத இடங்களை குறிவைத்து கொள்ளையடித்திருந்தாலும், சில வீடுகளின் சிசிடிவி கேமராக்களில் இவர்கள் உருவம் பதிவாகியிருந்தது. அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் கண், வாய் , உடல் அசைவுகளை வைத்து வரைந்த ஓவியம் மூலமே மூர்த்தியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட மூர்த்தி பட்டதாரி என்பதும் இதற்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)