'அழுகிய முட்டை' நாற்றம் வீசும் தொலைதூர கிரகம் - வேற்றுகிரக உயிர்கள் குறித்து உணர்த்துவது என்ன?

    • எழுதியவர், மேடி மோல்லோய்
    • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூ

மோசமான வானிலைக்குப் பெயர் போன ஒரு தொலைதூரக் கிரகத்தில் அழுகிய முட்டை நாற்றம் வீசுவதாக, புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி, சுட்டெரிக்கும் வெப்பம், மற்றும் கண்ணாடித் துகள்கள் விழுவதை ஒத்த மழைப்பொழிவு கொண்ட ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

வியாழன் கிரகத்தில் இருக்கும் ஹைட்ரஜன் சல்ஃபைடு, ஹெச்.டி 189733 பி (HD 189733 b) எனும் இந்த கிரகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது துர்நாற்றத்தை வெளியிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது, மனிதர்கள் காற்றை வெளியிடும் போது வெளியாகும் வாயுவாகும்.

முதல்முறை கண்டுபிடிக்கப்படும் விஷயம்

சூரியமண்டலத்திற்கு அப்பால் காணப்படும் புறக்கோள் ஒன்றில் ஹைட்ரஜன் சல்ஃபைடு கண்டறியப்படுவது இதுவே முதன்முறை.

“1000 டிகிரி செல்சியஸில் உங்களின் மூக்கு வேலை செய்தால், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தித்தில் அழுகிய முட்டை நாற்றம் வீசுவது தெரியும்,” என இந்த ஆராய்ச்சியை வழிநடத்தியவரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் இயற்பியலாளருமான டாக்டர் குவாங்வெய் ஃபூ தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி, பிரபல அறிவியல் சஞ்சிகையான 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

'இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது'

தொலைதூர கிரகங்கள் வேற்றுகிரக உயிரினங்களின் இருப்பிடமாக இருக்கலாம் என்பதை ஹைட்ரஜன் சல்ஃபைடு குறிக்கின்றது. எனினும், இந்த கிரகம் வியாழன் போன்று மிகப்பெரிய வாயு அமைப்பாக, மிகவும் வெப்பத்துடன் இருப்பதால் இதில் உயிர்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராயவில்லை.

எனினும், ஹைட்ரஜன் சல்ஃபைடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கிரகங்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு படியாகும் என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தொலைதூர கிரகங்களில் உள்ள வேதிப்பொருட்கள் குறித்து ஆராய்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திறந்துள்ளது. இது, வானியலாளர்கள் கிரகங்களின் தோற்றங்கள் குறித்து அதிகம் அறிவதற்கு உதவிசெய்கிறது.

“இது ஆட்டத்தை மாற்றுவதாக உள்ளது. வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சில வழிகளில் எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது,” என டாக்டர் குவாங்வெய் ஃபூ தெரிவித்தார்.

மேலும், கிரகங்களை ஆய்வு செய்ய விண்வெளி தொலைநோக்கியில் இருந்து தகவல்களை பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)