ட்வீட் சர்ச்சையைக் காட்டிலும் கேரி லினெகர் கிளர்ச்சியால் பிபிசி பெரிய பிரச்னையில் இருப்பதாக தோன்றுகிறதா?

பிபிசி - கேரி லினெகர் கிளர்ச்சி

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், டேவிட் சிலிடோ
    • பதவி, ஊடகம், கலைகள் பிரிவு செய்தியாளர்

2020-ம் ஆண்டில் பிபிசி தலைமை இயக்குநராக டிம் டேவி பொறுப்பேற்ற போது, பாரபட்சமின்றி இருப்பதே தனது பிரதான கொள்கை என்று பிரகடனம் செய்தார்.

மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த கொள்கையும், பிபிசி முழுவதும் அது செயல்படுத்தப்பட்ட விதமும் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இது மேலாளர்களை திடுக்கிடச் செய்துள்ளது.

சில ட்வீட்கள் குறித்த சர்ச்சையைக் காட்டிலும் இந்த நெருக்கடி பெரிது என்பதற்கு வாராந்திர அட்டவணையில் முடிவான நிகழ்ச்சிகளை கைவிடப்பட்டிருப்பதே சான்றாகும்.

கேரி லினெகர் சர்ச்சை என்பது அதிக ஊதியம் பெறக் கூடிய விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரின் கருத்துகள் தொடர்பானது என்பதைக் காட்டிலும், பிபிசியின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் தற்போதைய பொது இயக்குநர் கடைபிடிக்கும் பிரதான கொள்கைக்கான சோதனை என்பதே பொருத்தமானது.

லினெகரின் அரசியல் ட்வீட்களும், பிபிசியுடனான பிரச்னை முடியும் வரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகியிருப்பது எனற அவரது முடிவும் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போல பிரிட்டிஷ் அரசியலில் பிபிசியின் பங்கு குறித்த விவாதத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது.

ஆனால், முதலில் நாம் உடனடி பிரச்னையைப் பார்க்கலாம்.

லினெகரின் அரசியல் ட்வீட்கள் குறித்த புகார்கள் வருவது இதுவே முதன் முறையல்ல என்பது ஒப்புநோக்கத்தக்கது.

2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் புலம் பெயரும் குழந்தைகள், பிரெக்சிட் குறித்து அவர் கருத்துகளால் சர்ச்சை எழுந்தது. அப்போது, லினெகர் ஒரு சுயாதீன ஊடகவியலாளர், அது அவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு என்றும், பத்திரிகையாளர்களுக்கான கடுமையான விதிமுறைகள் விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பொருந்தாது என்றும் பிபிசி விளக்கம் அளித்தது.

விளையாட்டு அல்லது அறிவியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அரசியல் அல்லது கலை தொடர்பான தனது பார்வையை முன்வைப்பது போல, தனக்கு தொடர்பே இல்லாத ஒரு துறை குறித்து ஒருவர் கருத்தை பகிர்ந்து கொள்வதால் பிபிசியின் பாரபட்சமின்மை கொள்கைக்கு பெரிய ஆபத்து இல்லை என்று அப்போதைய வழிகாட்டும் நெறிமுறைகள் கூறின.

அதன் பிறகு, விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதிகம் பிரபலமான பெரிய ஆளுமைகளாக திகழும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஊடகம் குறித்த புதிய நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன.

இதனை லினெகர் விதிகள் என்றே சிலர் வர்ணிக்கின்றனர்.

அந்த விதிகள் நியாயமாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அளவுக்கு மீறிப் போய்விட்டார்கள் என்று சிலர் நினைப்பதற்கான சான்றுகள் ட்விட்டரில் நிரம்பியுள்ளன. ஆலன் சுகர், கிறிஸ் பெக்கம், ஆண்ட்ரூ நீல் ஆகியோரின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன.

பிபிசி தலைமை இயக்குந்ர் டிம் டேவி பதிலளிக்கையில், தற்போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாகவும், வழிகாட்டும் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்தால் தப்பிப்பதற்கான வழிகள் இருக்கலாம் என்றும் கூறினார்.

இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர அவர் விரும்புவார் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.

பாரபட்சமின்மை என்பது மிகவும் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உரிமக் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு சேவை அளிப்பதும் இன்னும் முக்கியமானது.

பிபிசி ஒன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவில் மேட்ச் ஆப் தி டே நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிபுணர்கள், வர்ணனைகள் இல்லாத, வழக்கத்தைவிடக் குறைவாக 20 நிமிடங்களே கொண்டதாக அது இருந்தது. கால்பந்து தொடர்பான பிற நிகழ்ச்சிகள் கைவிடப்பட்டன.

நிகழ்ச்சிகளை ரத்து செய்வது என்பது உரிமக் கட்டணம் செலுத்துவோரிடம் இருந்து கூடுதல் புகார்கள் வர வழிவகுக்கும். ட்விட்டரில் லினெகர் என்ன சொல்கிறார் என்பதைக் காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதையே அவர்கள் பொருட்படுத்துவார்கள்.

பிபிசியையும், அதன் தாராளவாத சார்பையும் விமர்சிக்கும் போக்கு அரசு தரப்பில் அதிக அளவில் இருக்கிறது.

மேட்ச் ஆப் தி டே நிகழ்ச்சியில் இருந்து கேரி லினெகரை விலக்கி வைக்கும் முடிவின் மூலம் டோரி அரசிடம் இருந்து வரும் அரசியல் அழுத்தங்களுக்கு நிறுவனம் பணிந்தது போல் தெரிகிறது என்று பிபிசியின் முன்னாள் தலைமை இயக்குநர் கிரெக் டைக் கூறுகிறார். அவர், 2004-ம் ஆண்டு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசுடன் மோதல் ஏற்பட்டதால் பிபிசியை விட்டு விலகியவர்.

இவை அனைத்துமே, பிபிசியின் பாரபட்சமின்மை பற்றி எழுப்பப்படும் கேள்விகள் குறித்த மற்றொரு பிரச்னைக்கு கொண்டு செல்கின்றன. பிபிசி தலைவரான ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் நன்கொடையாளர். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 8 லட்சம் பிரிட்டிஷ் பவுண்ட் கடன் உத்தரவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் அவருக்கு பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அந்த கடன் ஏற்பாட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.

மிகப்பெரிய விவாதத்திற்கான இடிதாங்கியாக லினெகர் மாறியுள்ளார். தற்போது பொதுவான பிரச்னையாக உள்ள இது பெரும் நெருக்கடியாக மாறாமல் தடுக்க, கூடிய விரைவில் தீர்வு காணவே பிபிசி விரும்பும்.

எனினும் பிபிசியோ, ட்விட்டரில் 87 லட்சம் பின்தொடர்வோரைக் கொண்ட லினெகர் அரசியல் ரீதியான ட்வீட்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறது. அவரோ, மௌனித்திருக்க ஒப்புக் கொண்டதற்கான எந்தவொரு அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை. ஆகவே, இது எப்படி தீர்க்கப்படும் என்று கூறுவது கடினம்.

பிபிசியைப் பொருத்தவரை, இது பாரபட்சமின்மை பற்றியது. ஆனால் மற்றவர்களுக்கோ, இது பேச்சு சுதந்திரம் பற்றியது.

உண்மையில், லண்டனில் பிபிசி தலைமை அலுவலகத்திற்கு வெளியே '1984' நூலை எழுதிய, முன்னாள் பிபிசி டாக் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜார்ஜ் ஆல்வெல்லின் சிலை இருக்கிறது. ஆர்வெல் சிலைக்கு பின்புறம் உள்ள சுவரில், "சுதந்திரம் என்பது மக்கள் கேட்க விரும்பாததைச் சொல்லும் உரிமை என்பது பொருள்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

ஆர்வெல் பிபிசியை விட்டு விலகி 80 ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனம் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்தது. ஆர்வெல்லின் எண்ணங்களும், பிபிசிக்காக அவை எழுப்பிய கேள்விகளும் லினெகர் விவாதத்தின் மையப் பொருளாக அமைந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: