ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், KENZO TRIBOUILLARD/AFP via Getty Images
இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமை விதிகளை மீறும் வழக்கில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளன.
ஜனவரி 2023 இல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு முக்கியமான போரில் வெற்றி பெற்றார், அது தேர்தல் வெற்றி இல்லை.
இந்த வெற்றிக்கு பிறகு அவர் மீதான பேஸ்புக்கின் தடை நீக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியில் இருந்துவிட்டு இப்போது அவர் ஃபேஸ்புக்கில் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்தரம் பெற்றுள்ளார்.
2020 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை ஃபேஸ்புக் முடக்கியது. இதையடுத்து, தேர்தல் முடிவை மாற்றக்கோரி முன்னாள் அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
அப்போது, அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருப்பதாகவும், இங்கு கருத்து தெரிவிப்பது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதியாக நம்பினால் மட்டுமே பேஸ்புக்கிற்கு திரும்ப அவர் அனுமதிக்கப்படுவார் என்றும் கூறி ஃபேஸ்புக் அவரது கணக்கைத் தடை செய்தது.
முகநூலைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதி, கடந்த காலங்களிலும் பல பதிவுகளால் சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், அவர் மீதான தடையை நீக்கிய ஃபேஸ்புக் முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஃபேஸ்புக் விமர்சிக்கப்பட்டதும் இது முதல் முறை இல்லை. உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் தினசரி ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் இந்த சமூக ஊடக தளம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித் தான் வருகிறது. பயனர்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளமான பேஸ்புக், அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது.

பட மூலாதாரம், Getty Images
அன்றாடச் சலசலப்பு
ஃபேஸ்புக்கிற்கு முன்பே பல சமூக ஊடக தளங்கள் இருந்தன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையின் மூத்த ஆராய்ச்சியாளரும் ஊடக நிபுணருமான ஜூடிட் டோனாத் கூறுகிறார்.
"ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஐந்து மாணவர்கள் பேஸ்புக்கை அறிமுகப்படுத்தினர், இது சமூக ஊடகங்களை வியத்தகு முறையில் மாற்றியது. இது மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டாக்கள் அடங்கிய மாணவர் தகவல்களின் பேப்பர் டைரக்டரியாகத் தொடங்கியது." இந்த கோப்பகத்தின் பெயர்- ஃபேஸ்புக். இந்த மாணவர்கள் தங்கள் சமூக ஊடகத் தளத்திற்கும் அதே பெயரையே தேர்வு செய்தனர்."
"பேப்பர் டைரக்டரியில் நபர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, அதைப் பற்றி நீங்கள் கருத்தும் தெரிவிக்க முடியாது. அவர்கள் எளிதாக மக்களைக் கண்டுபிடிக்கும் தளத்தை உருவாக்க முயன்றனர். மார்க் ஜுக்கர்பெர்க், கணினி அறிவியல் மற்றும் உளவியல் மாணவர் ஆவார். அவர் ஃபேஸ்புக்கை உருவாக்குவதில் ஈடுபட்டார். இதற்காக அவர் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார்."
ஃபேஸ்புக்கின் பயணம் குறித்து ஜூடிட் டோனாத் கூறும்போது, "பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கினார்கள் ஆனால் பிற்காலத்தில் மற்ற பல்கலைகழகங்களிலும் இது தொடங்கப்பட்டது. அதிக மக்கள் இணைந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நிலை உருவானது. மற்ற பலகலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டனர். அவர்களுக்கென்று நண்பர்கள் மற்றும் நெட்வொர்க்குகள் இருந்தன, பின்னர் அவர்களின் உறவினர்களும் அவர்களுடன் இணைந்தனர், மேலும் இந்த நெட்வொர்க் பரவியது." என்றார்.
2006 ஆம் ஆண்டில், பேஸ்புக் ஒரு பெரிய சமூக ஊடக தளமாக மாறியது, இது மற்றவர்களுடன் போட்டியிடத் தொடங்கியது.
அந்த நேரத்தில், மைஸ்பேஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்டர் போன்ற பிற பிரபலமான மற்றும் பெரிய சமூக ஊடக நெட்வொர்க்குகள் இருந்தன, அங்கு மக்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களின் சுயவிவரங்களைப் பார்க்கவும், அவர்களின் நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும்.
ஆனால் அவை 'நிலையான' வலைத்தளங்கள், அங்கு எதுவும் மாறவில்லை. அதனால்தான் இதை மாற்றும் வகையில் ஃபேஸ்புக் தனது தளத்தில் நியூஸ்ஃபீட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

பட மூலாதாரம், Justine Hunt/The Boston Globe via Getty Images
ஜூடிட் டோனாத் கூறுகிறார், "பேஸ்புக் தொடங்கப்பட்டது. இப்போது மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பகிர முடியும். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது. அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பன நண்பர்களின் நெட்வொர்க்கில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது."
இப்போது பெரும்பாலான மக்கள் இதைப் பகிரத் தயங்குவதில்லை. ஆனால் இது முதலில் ஆரம்பித்தபோது மக்களுக்கு மிகவும் புதிய விஷயமாக இருந்தது.
ஃபேஸ்புக்கின் ஆரம்ப வடிவமைப்பை உருவாக்கும் போது மார்க் ஜுக்கர்பெர்க், மக்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை உணர்ந்தார் என்று ஜூடிட் டோனாத் கருதுகிறார். இது அவருடைய கருத்து.
இது குறித்து அவர் கூறுகையில், 'கான்டாக்ட் கோஆப்ட்' என்பது நமது நண்பர்களைப் பற்றி மட்டுமின்றி அவர்களின் நண்பர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளத் தொடங்கும் ஒரு கருத்தாகும்.
சில நேரங்களில் நாம் ஒரு குறிப்பிட்ட நபரிடம் சொல்ல விரும்பும் ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் சொல்ல மாட்டோம். ஆனால் ஃபேஸ்புக்கில் சொன்னது இப்போது பெரிய நெட்வொர்க்கை எட்டியது. இதன் காரணமாக, தகவல் கொடுக்கும் முறையுடன், பரஸ்பர உறவுகளின் சமன்பாடுகளும் மாறத் தொடங்கின.
இந்த சமூக ஊடக தளம் மிக விரைவாக வெற்றி பெற்றது. நான்கு ஆண்டுகளில் மைஸ்பேஸ் நிறுவனத்தை பேஸ்புக் முந்தியது. பின்னர் பல சமூக வலைதளங்கள் வந்தாலும் ஃபேஸ்புக் இன்னும் முதலிடத்தில் இருந்தது.
ஜனவரியில், ஃபேஸ்புக்கின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளிவந்தன, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே தொண்ணூறு லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, தினமும் இரண்டு பில்லியன் மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஒரு பெரிய கேள்வி என்னவென்றால், பேஸ்புக் எப்படி வருவாய் ஈட்டுகிறது? என்பது தான்.

பட மூலாதாரம், Getty Images
க்ளிக்குக்குப் பதில் ரொக்கம்
ஃபேஸ்புக் என்ற வலைதளம், பேஸ்புக் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டது.
இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஊடக ஆய்வுகள் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மர்லின் கோமரோவ்ஸ்கியிடம் பிபிசி இதன் வர்த்தகத்தைப் பற்றிப் பேசியது. அப்போது அவர், "இதன் முக்கிய வணிகம் விளம்பரம் தான். அதன் வருவாயில் 98 சதவீதம் விளம்பரத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இது விளம்பர உத்தியின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரம் அதற்கு வருவாய் ஈட்டித் தருகிறது." என்றார்.
மக்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள், பார்க்கிறார்கள். ஆனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களையும் வாங்கியுள்ளது.
டாக்டர். மெர்லின் கூறுகிறார், "இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சமூக ஊடகப் பயனர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் பல வலைத்தளங்களில் பதிவு செய்ய உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த தகவல்கள், விளம்பரங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். விளம்பர நிறுவனங்கள் இந்த இணையதளங்களில் விளம்பரம் செய்கின்றன. அவர்களின் பயனர்களின் தேவைகளுக்கேற்ப அவை வெளியாகின்றன."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும் அவர், "ஃபேஸ்புக்கில் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்து, மக்கள் அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் சென்று பொருட்களை வாங்குகிறார்கள். அதிக மக்கள் இந்த விளம்பரங்களை கிளிக் செய்தால், அதிக பணம் ஃபேஸ்புக்குக்கு வருகிறது. அதாவது, தினமும் குறைவான நபர்கள் பேஸ்புக்கில் பதிவு செய்தால், அதன் வருமானமும் குறையும்." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்ற இறக்கம்
2022 ஆம் ஆண்டில், ஃபேஸ்புக்கின் வருவாய் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் நான்காவது காலாண்டில், அது 32 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விடச் சிறப்பாக இருந்தது.
பேஸ்புக் 2022 இல் மொத்தம் 116 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது. பில்லியன் கணக்கான மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் 13 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள், இது எதிர்காலத்தில் அதன் வருமானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
டாக்டர் மெர்லின் கூறுகிறார், "ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதற்கான மிகப் பெரிய வயதுப் பிரிவினர் 25 முதல் 34 வயதுடையவர்கள். இவர்கள் அதன் சந்தாதாரர்களில் கால் பகுதியினராக உள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, இந்த வயதில் உள்ளவர்கள் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தகிறார்கள்."
ஆனால் இது விளம்பரதாரர்களுக்கு நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா? டாக்டர் மெர்லின் விளக்குகிறார், "விளம்பர நிறுவனம் எந்த வயதினரைப் பற்றி ஆர்வமாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆனால் இளம் நுகர்வோர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் உங்கள் தொடர்புகளுக்கு அபாயம் ஏற்படலாம்."
"இரண்டாவது விஷயம், ஃபேஸ்புக், விளம்பர வருவாயை மட்டுமே சார்ந்துள்ளது. இதில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். உதாரணமாக, கூகிள், தொலைபேசியுடன் பல்வேறு அம்சங்களையும் விற்பனை செய்கிறது. ஒரே ஒரு வருமான ஆதாரத்தை மட்டுமே நம்பியிருப்பது சற்று கடினம்."
சமீப காலங்களில் மெட்டா தனது நிறுவனத்தின் பிராண்டிங்கை மாற்றியமைத்துள்ளது. அது மெட்டாவெர்ஸில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. மெட்டாவெர்ஸ் என்பது டிஜிட்டல் உலகம், அதில் கற்றல், விளையாடுதல் அல்லது தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றுடன் உங்கள் சொந்த டிஜிட்டல் வடிவத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் இணைக்கப்படுவீர்கள். ஆனால் இது நடைமுறைக்கு வர நீண்ட காலம் ஆகலாம்.
டாக்டர் மெர்லின் கூறுகிறார், "2023 ஆம் ஆண்டிற்கான மெட்டாவின் குறிக்கோள், நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதாகும். அதனால்தான் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டு இறுதியில் பதின்மூன்றாயிரம் பேரை பணிநீக்கம் செய்தார். இந்த முறை சரியானதா இல்லையா என்று சொல்வது கடினம்."
பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் சட்டப்போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் உதவிப் பேராசிரியர் டிஃப்பனி லீயிடம் பிபிசி பேசியது.
ஃபேஸ்புக் சர்வதேச அளவில் பலமுறை பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது என்று பேராசிரியர் டிஃப்பனி கூறுகிறார். "என்னைப் பொறுத்தவரை, 2018 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மிகப்பெரிய வழக்கு, இதில் நிறுவனம் பல மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த அனுமதித்தது, இதனால் மற்ற நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை அந்த நபர்களுக்கு வழங்க முடியும்."
"கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அத்தகைய மூன்றாம் தரப்பு டெவலப்பர்களில் ஒன்றாகும், மேலும் அவர்கள் இந்தத் தகவலை மக்களின் அனுமதியின்றி மற்றும் ஃபேஸ்புக் விதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளனர்."
அடிப்படையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஒரு அரசியல் ஆலோசனை நிறுவனமாகும். அதன் சேவைகள் டொனால்ட் டிரம்பின் 2016 தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார், அதன் பிறகு இந்த மோசடி 2018 இல் வெளிச்சத்திற்கு வந்தது.
அப்போது எட்டரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தகவல்கள், அவர்களின் அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களுக்கு விளம்பரங்கள் அனுப்பப்பட்டன.
டிஃப்பானி லீ, "இது உலக அளவில் ஒரு சர்ச்சையை உருவாக்கியது. யாரும் தங்கள் தகவல்களைத் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. குறிப்பாக இதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம் நல்லதல்ல. இது தவிர, பல சிக்கல்களும் எழுந்தன. தனியுரிமைப் பிரச்சினை, தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் தேர்தல் முடிவைப் பாதிக்கச் செய்தல் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அதே நேரத்தில், கொரோனா தொடர்பான சதித்திட்டங்கள் பற்றிய வதந்திகள் ஃபேஸ்புக் மற்றும் அதன் பிற தளங்களில் பரவின. இணைய வழியில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதான செய்திகள் தொடர்ந்து வருகின்றன." என்கிறார்.
பொதுவாக, ஒரு நிறுவனம் இது போன்ற வழக்குகளால் காணாமலே போயிருக்கும். ஆனால், ஃபேஸ்புக் இன்றும் நிற்கிறது.
டிஃப்பானி லீ, "கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஊழலுக்குப் பிறகு, பல நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டன. சிலர் தேர்தல்களில் நியாயமற்ற முறையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தளத்தை ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறினர். ஆனால் இறுதியில் அது பயனர்களின் கைகளில் உள்ளது. பயனர்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து பயணிக்கும் வரை, விளம்பர நிறுவனங்களும் பயணிக்கும்." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பொறுப்பேற்பு
ஆனால் ஒரு பிரச்சனை என்றால் ஃபேஸ்புக் யாருக்கு பதில் சொல்லும், அதை யார் கேள்வி கேட்பார்கள்?
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லை என்றும் இதுவே பெரிய பிரச்சனை என்றும் டிஃப்பானி லீ இந்த விஷயத்தில் கூறுகிறார்.
"உலகில் பல்வேறு அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில், இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மிகவும் மென்மையானவை மற்றும் இந்த நிறுவனங்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில், சட்டங்கள் மிகவும் கடுமையானவை."
அபராதம்
பல ஆண்டுகளாக, ஃபேஸ்புக், சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காக கோடிக் கணக்கான டாலர்களை அபராதமாகச் செலுத்தியுள்ளது. 2021 டிசம்பரில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வழக்கில் எந்தத் தவறையும் ஒப்புக்கொள்ளாமல் $700 மில்லியனுக்கும் அதிகமான அபராதத்தை ஏற்றுக்கொண்டது.
ஜனவரியில், தரவு தனியுரிமை மீறல்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு $400 மில்லியன் அபராதம் விதித்தது.
டிஃப்பானி லீ கூறுகிறார், "ஃபேஸ்புக் பல ஒழுங்குமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இணையத்தில் உள்ள அல்காரிதம்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வருகின்றன, அவை பயனர்களுக்கான உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கின்றன. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மற்றும் சட்டத்துக்குப் புறம்பான உள்ளடக்கமும் இதில் இருக்கலாம். ஃபேஸ்புக் மற்றும் பல இணைய நிறுவனங்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்."
ஆனால் அதே நேரத்தில், இந்த ஒழுங்குமுறை தொடர்பான விதிகள் லாபத்திற்காக வேலை செய்யாத விக்கிபீடியா போன்ற பல சிறிய நிறுவனங்களையும் பாதிக்கலாம் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்.
'வேகமாக முன்னேறு, தடைகளை உடை'
ஆரம்ப நாட்களில், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென்று கோஷங்களை வைத்திருப்பது ஒரு வழக்கமாக இருந்தது.
'தீயவராக இருக்காதீர்கள்' (தீமையைத் தவிர்க்கவும்) என்பது கூகுளின் முழக்கம். அதே போல, ஃபேஸ்புக்கின் முழக்கம், 'வேகமாக முன்னேறு, தடைகளை உடை'.
டிஃப்பானி லீ கூறுகிறார், "இது சிலிக்கான் பள்ளத்தாக்கின் மந்திரம். இந்த முறை வேலை செய்யாது என்று இப்போது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவருடைய நிறுவனம் வெற்றிபெறும் போது, அவர் நிறைய பேசினார், ஆனால் இப்போது அவரால் செய்ய முடியாது. இப்போது அவர்கள் சட்டத்திற்கு இணங்க வேண்டும். அதே நேரத்தில் பயனர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதும் அவசியம்."

பட மூலாதாரம், Manjunath Kiran/AFP via Getty Images
புது யுகத்தில் புது சவால்கள்
கடந்த சில ஆண்டுகளில், பல புதிய சமூக ஊடக நிறுவனங்கள் சந்தையில் வந்துள்ளன, அவை ஃபேஸ்புக்கிற்குப் புதிய சவால்களை முன்வைக்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்களை ஃபேஸ்புக் முறியடிக்க முடியுமா?
டாவோஸில் உள்ள சமூக ஊடகங்களின் பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் கார்ல் மில்லருடன் பிபிசி பேசியது.
சமூக ஊடக உலகில், ஃபேஸ்புக் மற்ற தளங்களில் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வது அசாதாரணமானது அல்ல என்று அவர் கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்.
கடந்த ஆண்டு இது, அதிகபட்சமாக 700 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருப்பினும், டிக் டாக்கின் சிக்கல் என்னவென்றால், இது ஒரு சீன நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் பல நாடுகள் தரவு தனியுரிமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.
அதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில், மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுடன் இணைக்கப்பட்ட கணினிகள் மற்றும் மொபைல் போன்களிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பூரணத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கார்ல் மில்லர் கூறுகிறார், "சமீப காலங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வந்துள்ளன அல்லது கொண்டு வரப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது இந்த சட்டங்களின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறுவது அபராதம் மட்டுமல்ல, நிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் ஈர்க்கும் என்ற நிலையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறோம்.
எந்தவொரு சமூக ஊடக வலைத்தளத்திற்கும் அதன் தளத்தில் யார் இருக்க வேண்டும் மற்றும் யாரை நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் தவறான முடிவை எடுப்பதில் ஆபத்துகள் உள்ளன. அதேபோல, எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதும் ஆபத்தாக முடியும்.
மெட்டாவெர்ஸின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், குறிப்பாக தனியுரிமை, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நியாயமான தேர்தல்கள் தொடர்பாக இணையச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு பல ஆண்டுகளாக அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
கார்ல் மில்லர் கூறுகிறார், "நிறுவனங்கள் பெரிதாகிவிட்டதால், எது சரி, எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர். வெறுப்பூட்டும் அறிக்கைகள் என்ன, அவற்றின் இயல்பு என்ன? பயங்கரவாத அமைப்புகள் என்ன? முன்னதாக இந்த முடிவுகள் அரசாங்க இயந்திரத்தால் எடுக்கப்பட்டன. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன, அவை சாமானியர்கள் மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்பிற்குத் தேவையானவை."
ஆனால் அதே நேரத்தில், கார்ல் மில்லர் மேலும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பேஸ்புக்கிற்கு ஒரு சோதனையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
தேர்தல் பிரசாரத்தில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வாக்காளர்களை சரியான அல்லது தவறான வழியில் செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள ஃபேஸ்புக் தயாராகி வருவது குறித்து, கார்ல் மில்லர் கூறுகையில், "2016 அமெரிக்க அதிபர் தேர்தலை விட, இம்முறை பிரச்சனையை முகநூல் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் அதன் குழு சரியான முறையில் செயல்படுகிறதா இல்லையா என்று சொல்வது கடினம். முன்பை விட அதிக வேகத்துடன், அது தனது தளத்தில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கியது.
ஃபேஸ்புக் தனது தளத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கார்ல் மில்லர் கூறுகிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடுகைகளை இடுகையிட மக்களை அனுமதிப்பது மற்றும் பயனர்களைப் பற்றிய சரியான தகவலைப் பெறுவது மற்றும் சரிபார்ப்பது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஃபேஸ்புக்கில் எல்லாம் சரியாக நடக்கிறதா?
சமூக ஊடகங்களில் மூன்று ஆண்டுகள் என்பதே நீண்ட காலமாகும், எனவே 19 ஆண்டுகள் மற்றவர்களை விட முன்னால் இருப்பது ஒரு பெரிய சாதனை.
இது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது, எதிர்காலத்தில் அதை விட்டுவிடுவதை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
ஆனால் ஃபேஸ்புக்கிற்குச் சில சவால்கள் கண்டிப்பாக உள்ளன. அதன் எதிர்காலம் மனித இயல்பு மற்றும் நடத்தையைப் பொறுத்தது, இது கணிக்க கடினமாக உள்ளது.
கார்ல் மில்லர் கூறுகிறார், "மக்கள் குழப்பம் நிறைந்தவர்கள், அவர்களும் தவறான எண்ணங்களால் தூண்டப்படுகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் நடத்தையை கணிப்பது கடினம். பார்வைகளின் துருவமுனைப்பு மற்றும் கோபம் உலகில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பு பேஸ்புக்கிலும் தெளிவாகத் தெரிகிறது."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












