You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக ஊரே சேர்ந்து மொட்டையடித்து, இறுதிச்சடங்கு
கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிஷா மாநிலம் பாலாசோர் நகருக்கு அருகே நடந்த ரயில் விபத்தில் 288 பேர் இறந்தனர். இது இந்தியாவின் நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விபத்து நடந்த 10ஆம் நாளான ஜூன் 11ஆம் தேதி, பாலசோர் நகரைச் சேர்ந்த மக்கள் கூட்டாக மொட்டையடித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா ரயில் விபத்தின் 10ஆம் நாள்: கூட்டாக அஞ்சலி செலுத்திய பாலாசோர் மக்கள்
ஒடிசாவில் நிகழந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அம்மாநிலத்தின் பாலசோர் நகரைச் சேர்ந்த மக்கள் கூட்டாக மொட்டையடித்து ஈமக்கிரியைகள் செய்தனர்.
ரயில் விபத்து நடந்த பாலாசோர் நகரின் மக்கள் செய்த அஞ்சலி
கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிஷா மாநிலம் பாலாசோர் நகருக்கு அருகே உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதின.
288 பேரை பலிகொண்ட இந்த ரயில் விபத்து, இந்தியாவின் நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விபத்து நடந்து 10 நாட்கள் கழிந்துவிட்ட நிலையில், அவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யும் வகையிலும், நேற்று, ஜூன் 11ஆம் தேதி, பாலாசோரைச் சேர்ந்த மக்கள் கூட்டாக தலைமழித்து, அருகிலிருந்த நீர்நிலையில் குளித்துச் சடங்குகள் செய்தனர்.
மேலும், விபத்து நடந்து 10 நாட்கள் ஆனதைக் குறிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக அர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூன்று-நாள் அஞ்சலி நிகழ்ச்சிகளை ஏற்பாது செய்திருந்தனர். அதன் ஒரு பகுதியாகவே இச்சடங்குகள் செய்யப்பட்டன.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்படிருந்த பஹானகா பள்ளியிக்கு அருகில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘உறவினர்கள் தேடி வராத உடல்களுக்குச் சடங்குகள்’
விபத்தில் இறந்தவர்களில் இதுவரை யாருடைய உறவினர்கள் கண்டுபிடிக்கப்படவில்லையோ, அவர்களுக்கான சடங்குகளை அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து செய்ததாகக் கூறினார் உள்ளூர்வாசி ஒருவர்.
“இறந்தவர்களில் யாருடைய உறவினர்களெல்லாம் இதுவரை தேடி வரவில்லையோ, யாருடைய பிள்ளைகளோ பெற்றோர்களோ கிடைக்கவில்லையோ, இன்றுவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறதோ, அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் இன்னும் நடந்திருக்க வாய்ப்பில்லை,” என்றார், சடங்குகள் முடிந்து தலைமழைத்து வந்த அந்த நபர். “அவர்களுக்கான சடங்குகளை நாங்கள் செய்தோம்.”
மேலும் பேசிய அவர், அம்மக்களுக்கான பத்தாம் நாள் சடங்குகளை விபத்து நடந்தபோது அங்கிருந்தவர்கள், பாலாசோரின் உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்து இந்நிகழ்ச்சியைச் செய்ததாகக் கூறினார்.
“உறவினர்கள் தெடி வராத உடல்களுக்கான சடங்குகளை நாங்கள் செய்தோம்.”
அனைத்து மதத்தினருக்கும் அஞ்சலி...
இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில், விபத்து நடந்தபோது அங்கு உதவி செய்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார்.
“சடங்குகளைத் தொடர்ந்து பகவத் கீதை, பைபிள், குர்ஆன் ஆகிய புனிதநுல்கள் வாசிக்கப்படும் நிகழ்வும், மெழுகுவத்தி அஞ்சலியும் நடத்தப்படும்,” என்றார்.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
ஒடிஷாவில் 3 ரயில்கள் மோதிய விபத்து நேரிட்டு 6 நாள்களைக் கடந்துவிட்ட பிறகும்கூட அங்கே இன்னும் துயரம் கொஞ்சமும் குறையவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிஷாவில் உள்ள பஹாநாகா ரயில் நிலையத்தில் நடந்த மிக மோசமான ரயில் விபத்திற்குப் பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இன்று இடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் விபத்தில் பலியானோரின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் படிப்பதற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தற்போது மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டித் தருமாறு பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
சடலங்கள் வைக்கப்பட்ட பள்ளிக்கு வருவதில் குழந்தைகளுக்கு அச்சம்
பாலாசோர் மாவட்ட ஆட்சியரும் விபத்து நடந்த நேரத்தில் அதில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் மேலாண்மைக் குழுவும் நேற்று சந்தித்த கூட்டத்தில், அந்தக் கட்டடம் முழுவதையும் இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தி ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மைக் குழு மனு அளித்தது.
இன்று காலையில் பிபிசியிடம் தொலைபேசியில் பேசிய ஆட்சியர் தத்தாத்ரேயா பௌசாஹேப் ஷிண்டே, கட்டடத்தை இடிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
அப்போது, “அந்த அறைகளைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதால் இன்று மேற்கூரை மட்டும் இடிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் இடிக்கப்படுவது குறித்து இன்று காலை ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ராஜாராம் மொகபத்ரா கூறுகையில், “விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான சடலங்கள் கிடந்த கட்டடத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லாததால் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை வைத்துள்ளோம். குழந்தைகள் பயப்படுவதாகச் சொல்கிறார்கள்,” என்று கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதால் விபத்தில் இறந்தவர்கள் முதலில் இந்தப் பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டு பின்னர் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், “ரயில் விபத்திற்கு முன், குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தார்கள். ஆனால் இந்த விபத்துக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்கு வர மறுக்கின்றனர்.
இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆன்மா இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஒன்றும் இல்லை என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்கவேண்டும்,” என்று தெரிவித்தார்.
தற்செயலாக பதிவான வீடியோவின் பயங்கர காட்சிகள்
இந்த விபத்து நடந்த நேரத்தில் தற்செயலாகப் பதிவான வீடியோ, அந்தத் துயரத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ளது.
துளசி மாலிக்கின் வீடு விபத்து நடந்த பகுதிக்கு அருகில்தான் கமாரிபூர் கிராமத்தில் உள்ளது. ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு, ரயில் விபத்து நடந்த இடத்திலிருந்து பெரிய சத்தம் கேட்டு அந்த இடத்தை நோக்கி மின்சார கேபிள்களில் மிதித்துவிடாமல் இருளில் அலைந்தார்.
அங்கு இருட்டாக இருந்ததால், நிலைமையின் வீரியத்தைப் புரிந்துகொள்வதற்காக அவர் தனது மொபைல் ஃபோனில் டார்ச்சை ஆன் செய்ய முயன்றார்.
ஆனால் தவறுதலாக அவரது போனில் கேமரா ஆன்-ஆகி வீடியோ பதிவாகத் தொடங்கியது.
விபத்து நடந்தபோது உதவிய நபர்களை பிபிசி செய்தியாளர் சந்தித்துப் பேசியபோது, இந்தத் துயர்மிகு சம்பவம் நடந்த நேரத்தில் துளசி மாலிக் தற்செயலாகப் பதிவு செய்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதுகுறித்து முழு விவரம் கீழே.
"ஓ! ரயில் விபத்துக்குள்ளானது போல் தெரிகிறது"
"அட கடவுளே! எத்தனை பேர் இருக்கிறார்கள்?"
"நிறைய பேர் இருக்கிறார்கள்"
தயவு செய்து யாரேனும் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வாருங்கள்."
இது துளசி மாலிக்கின் நம்பிக்கையற்ற வேதனையான குரல். பலத்த சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்தை இவர் அடைந்தார். இவரது வீடு அருகில்தான் கமாரிபூர் கிராமத்தில் உள்ளது.
ஒரு விளைக்கை ஏந்திக்கொண்டு, மின்சார கேபிள்களில் மிதித்துவிடாமல் இருளில் அலைந்தார். அவர் தனது மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்ய முயன்றாள், ஆனால் தவறுதலாக அவரது போனில் கேமரா ஆன்-ஆகி இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது.
துளசி மாலிக் தன்னால் இயன்ற வழிகளில் ரயில் பயணிகளுக்கு உதவ விரும்பினார்.
ஆனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்று சிலர் கூறியதால் அதிகமாகத் தண்ணீர் கொடுக்கவில்லை என்கிறார் துளசி மாலிக். நெற்றியில் மட்டும் சிறிது தண்ணீர் ஊற்றிவிட்டு அருகேயுள்ள வயல்களில் கிடத்தியிருக்கிறார்கள். பின்னர் உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
கண்ணீருடன் அனுபவத்தைப் பகிர்ந்த துளசி மாலிக்
ரயில் விபத்து மிகப் பெரியளவில் நடந்துள்ளது என்பதையும் அளவிட முடியாத அளவுக்கு மோசமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் உணர்ந்துகொண்ட துளசி மாலிக் ரயில் பயணிகளுக்குத் தன்னால் இயன்ற வழிகளில் உதவ விரும்பினார்.
அதுகுறித்துப் பேசிய துளசி மாலிக், “மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்று யாரோ எச்சரித்ததால் நாங்கள் அவர்களுக்கு அதிக தண்ணீர் கொடுக்கவில்லை.
அவர்களின் நெற்றியில் சிறிது தண்ணீரை மட்டும் ஊற்றி, அருகிலுள்ள வயல்களில் சாய்த்து படுக்க வைத்தோம்,” என்று கூறினார்.
அதோடு, அவர்களுக்காக உணவு தயாரிக்கும் பணிகளையும் உடனடியாகத் தொடங்கினார் துளசி மாலிக்.
“நான் அவர்களுக்கு சமைத்தேன். மருத்துவர்கள் வரும் வரை காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தேன். நாங்கள் அன்று இரவு முழுவதும் விழித்திருந்தோம்.”
துளசி, அந்த இரவின் வலியை நினைவுகூர்கையில் உணர்ச்சிவசப்படுகிறார். அந்த அதிர்ச்சிகரமான, துயர்மிகுந்த சம்பவத்தை நினைத்து துளசியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏதேனும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அருகிலுள்ள கிராமங்களை நோக்கி ஓடியபோது இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் காயமடைந்திருந்த பலருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. நல்லவேளையாக ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த சௌபாக்யரஞ்சன் சாரங்கியின் மருந்தகத்தை அடைந்தனர்.
“நான் மக்களைப் பார்த்தபோது அவர்களுக்கு ரத்தம் உறைவதற்கு ஒரு ஊசி போட வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அந்த ஊசியின் ஐந்து குப்பிகள் மட்டுமே என்னிடம் இருந்தன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், எனக்கு மருந்து சப்ளை செய்யும் சவுரவுக்கு ஃபோன் செய்து, அந்த மருந்தை அதிகமாக அனுப்பச் சொன்னேன். பின்னர் அந்த மருந்துகள் வந்தன. எனக்கு மருந்து கொடுக்க உதவுங்கள் என்று அவரிடம் சொன்னேன். நான் ஊசி போடுகிறேன், நீங்கள் மாத்திரைகள் கொடுங்கள், காயம்பட்டவர்களுக்கு கட்டுப் போடுங்கள் என்று சொன்னேன். மேலும் இரண்டு, மூன்று பேர் எனக்கு உதவினார்கள். காயமடைந்தவர்களில் ஒருவரின் கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்ததால், அவரது கையைப் பிடித்துக்கொண்டு கவனமாக அழைத்துச் சென்று அமர வைத்தோம்.” என்கிறார் சௌபாக்ய ரஞ்சன் சாரங்கி.
மகேஷ்குமார் குப்தாவின் மளிகை கடையும் அந்த சாலையை ஒட்டி இருந்தது. அவரும் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
“காயம்பட்ட நிறைய பேர் இங்கே ஓடி வந்தார்கள். அவர்களுக்கு குளிர்ந்த நீர், வலி எதிர்ப்பு மருந்துகள் கொடுத்தேன். டீ போட்டுக் கொடுத்தேன். என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன். பின்னர் அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை வெளியேற்ற ஏணிகளையும், பிற உபகரணங்களையும் பெற்றோம். மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளில் உதவினோம். தொடர்ந்து வேலை செய்தோம். அன்று இரவு நாங்கள் தூங்கவில்லை.” என்றார் அவர்.
நிர்வாக உதவிகள் வருவதற்கு முன்பே, உள்ளூர் மக்கள் பயணிகளுக்கு தங்களால் இயன்ற விதத்தில் உதவ முயன்றனர். விபத்து நடந்ததும், தண்டவாளத்தின் இருபுறமும் வசிக்கும் இவர்களைப் போல ஏராளமானோர் இங்கு வந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர்.
தண்டவாளத்தின் அருகே உள்ள கமாரிபூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பிரதாப் சிங். ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை எப்படி வெளியே எடுப்பது என்ற சவாலை எதிர்கொண்டார். பின்னர் சாக்குப்பைகளைப் பயன்படுத்தி தற்காலிக ஸ்ட்ரெச்சர்களை உருவாக்கினார்.
“ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் இல்லை. கால் எலும்பு முறிந்து பல பேர் இருந்ததால், அவர்களை அசைக்க வழியில்லாததால், சணல் பைகள் மற்றும் மூங்கில்களை பயன்படுத்தி ஸ்ட்ரெச்சர் செய்து அதன் உதவியுடன் நகர்த்தினோம்.” என்றார் அவர்.
“இது மிகவும் கடினமான வேலை. அங்கு இறந்தவர்கள் இருந்தனர். உயிருடன் இருப்பவர்களை வெளியே எடுக்க இறந்த உடல்களின் மேல் செல்ல வேண்டியிருந்தது.”
மோசமாகப் பழுதடைந்த ரயில் பெட்டிகளைப் பார்க்கும்போதே நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது. அந்த இரவில் பயணிகள் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த வலியை உணர்ந்ததால் தான், இந்த மக்களும் தங்கள் சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், பயணிகளுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளித்தனர்.
உயிரிழப்பு 288, அடையாளம் காணப்பட்டவை 205
விபத்தில் பறிகொடுத்த உறவுகளைத் தேடி குடும்பத்தினர் ஒடிஷாவுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். விபத்து நடந்த பாலசோருக்கும், உடல்கள் வைக்கப்பட்டுள்ள புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் பல்வேறு நகர மருத்துவமனைகளுககும் அவர்கள் மாறி மாறி, தங்கள் உறவுகளைத் தேடி ஓடும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மீண்டும் ஒரு திருத்தம் வந்துள்ளது. இதனால், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் மத்திய அரசின் நடவடிக்கையில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஒடிஷா மாநில அரசு மீண்டும் திருத்தத்தை அறிவித்துள்ளது. ஒடிஷா ரெயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிஷா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 83 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 288இல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள் கூறப்பட்ட நிலையில் மீண்டும் 288 என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒடிஷா தலைமை செயலாளர் ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடலை சாலை வழியாக எடுத்துச் செல்ல விரும்புபவர்களுக்கு மாநில அரசு சார்பில் அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்படும். இதற்கான செலவை அரசே ஏற்கும். அடையாளம் காண முடியாத உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை மேற்கொள்ளப்படும்," என்றார்.
103 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
இதனிடையே ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "ஒடிஷா மற்றும் மேற்கு வங்க அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 31 பேரைக் காணவில்லை," என்று அவர் தெரிவித்தார். விபத்து தொடர்பான விவகாரத்தில் 'உண்மை வெளிவர வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிபிஐ விசாரணை - FIR பதிவு
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஸ்வந்த்பூர்- ஹௌரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டதன்படியும் , ஒடிஷா அரசாங்கத்தின் ஒப்புதல் படியும் இந்திய அரசுடைய உத்தரவின்படியும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரனையைத் தொடங்கியுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னணு இன்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோலாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டது என ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சிபிஐயின் 10 பேர் குழு, விபத்து நடந்த இடத்தில் விசாரணையை நேற்று தொடங்கியது.
மேலும் 3 ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
"288 பேரை பலிவாங்கிய இந்த விபத்து மனித தவறின் காரணமாக ஏற்பட்டதா அல்லது ரயிலை கவிழ்க்க சதி ஏதாவது நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கும்," என்று ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய சிபிஐ மூத்த அதிகாரி தெரிவித்தார்.
சந்தேகம் எழுப்பும் அகிலேஷ் யாதவ்
மமதா பானர்ஜியை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையைச் சொல்ல முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பேசிய அவர், "ஒடிஷாவில் 3 என்ஜின்கள் மோதிக் கொண்டுள்ளன. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைக் கூறுங்கள்? எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அவர்களால் இன்னும் கூற முடியவில்லை," என்றார்.
15.6 கோடி ரூபாய் நிவாரணம்
தென்கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஆதித்ய குமார் சௌத்ரி நிவாரணம் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில், "531 பேருக்கும் சுமார் 15.6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்கள் மற்றும் இழப்பீடு பெற விரும்புவோர், கட்டாக், மிட்னாபூர், புவனேஸ்வர், பாலாசோர் ஆகிய இடங்களில் உள்ள உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டார்.
"சிக்னல் கோளாறுதான் ஒடிஷா ரயில் விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது," என்று ரயில்வே வாரியம் கூறியிருப்பதாக 'தி ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டது.
முன்பாக சதிச் செயலாக இருக்கலாம் என்பதை முற்றிலும் மறுப்பதற்கில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்தது. விபத்து நேரிட்ட சூழலையும், ரயில்வே நிர்வாகத்திற்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும் சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விபத்து நேரிட்டது குறித்து முன்பு ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியபோது ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கான காரணம், யார் பொறுப்பு என்பது தெரிய வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது பேசியவர், "ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அவரது விசாரணை அறிக்கை வரட்டும். ஆனால், 'விபத்துக்கான காரணம் என்ன? அதற்கு யார் பொறுப்பு?' போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.
சிக்னல் குறித்த டிஜிட்டல் பதிவுகள் கூறுவது என்ன?
"அன்றைய இரவில் பதிவான டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்ததில், அந்த பாதையில் சிக்னல் சரியாக, எதிர்பார்த்தபடியே இருப்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் விபத்து நேரிட்டுள்ளது. ஆகவே, எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது." என்று ரயில்வே சிக்னல் கட்டமைப்பின் தலைமை செயல் இயக்குநர் சந்தீப் மாத்தூர் தெரிவித்ததாக 'தி ஹிந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில், இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் பெரிய பிரச்னை இருக்கிறது என்று ஒரு மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்தாக அந்த பத்திரிகை கூறுகிறது. சிக்னலில் மனித குறுக்கீடு அல்லது கணினி கருவிகள், மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு ஆகிய இரண்டில் ஒன்றே விபத்துக்கு காரணங்களாக இருக்கலாம்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் என்ன கூறுகிறார்
இந்த விபத்து எப்படி நடந்தது என்ற கேள்வி தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா பதிலளித்தார்.
விபத்திற்குப் பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிடிஆர், சரக்கு ரயிலின் காவலாளி ஆகியோரிடம் பேசியதாகக் கூறிய ஜெய சின்ஹா, அந்த விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜெய சின்ஹா கூறியதன்படி, ஓட்டுநர் தனக்கு கிரீன் சிக்னல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
“ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். ஆனால், அவர் பேசும்போது சுயநினைவுடன் இருந்தார். சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாகத் தெளிவாகக் கூறினார். அதேபோல், பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டிருப்பதை எங்களிடம் இருக்கும் பதிவுகளும் காட்டுகின்றன,” என்று ஜெய சின்ஹா கூறினார்.
மேலும், தற்போது ஓட்டுநரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிடிஆர் என்ன சொன்னார்
யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிடிஆர் ஏ1 பெட்டியில் இருந்துள்ளார். பின்னாலிருந்து ஏதோ மிகவும் உரத்த சத்தம் கேட்டதாக அவர் கூறினார். திரும்பிப் பார்த்தபோது பாதையை ஏதோ தடுத்திருப்பதைப் பார்த்துள்ளார். ஆனால், அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை.
ஏ1 பெட்டிக்குப் பின்னால், இரண்டு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள் இருந்தன. இறுதியில் ஒரு காவலர் கோச் இருந்தது. அந்த இரண்டு பெட்டிகளும் விபத்தின்போது ரயிலில் இருந்து பிரிந்தன. பின்பக்கத்தில் இருந்த இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன,” என்று ஜெய சின்ஹா தெரிவித்தார்.
உயிர் தப்பியவர்கள் கண்டது என்ன?
விபத்தில் உயிர் தப்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, விபத்தின் போது கண்ட காட்சிகளை விவரித்தார்.
"ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த போது பலத்த சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். ரயிலில் இருந்து கீழே இறங்கிப் பார்த்த போது, எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் யாருக்கு உதவுவது?ஆனால் அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்.” என்று அவர் கூறினார்.
2 வயது குழந்தை தப்பிப் பிழைத்தது
விபத்தில் தப்பிய மற்றொருவர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன்” என்றார்.
"எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் போகியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவரின் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
நேரில் பார்த்த மற்றொருவர், "யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். விபத்து நடந்தபோது யாரும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். எல்லோரும் பயந்தார்கள். அப்போது யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை.”
“எங்கள் இருக்கைக்கு அடியில் இரண்டு வயது குழந்தை உயிருடன் இருந்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.” என்று மற்றொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கவச் அமைப்பு இருந்திருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்குமா?
ரயில் விபத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களும் பொது மக்களும் இவ்வளவு பெரிய விபத்து எப்படி நடந்தது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நடத்தப்படும் விசாரணையின் அறிக்கை வந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும்,” என்று கூறினார்.
இதற்கிடையே சமூக ஊடகங்களில் ‘கவச்’ என்ற வார்த்தையும் பேசுபொருளாகியுள்ளது.
கவச் என்ற அமைப்பு மூலம் ரயில் விபத்துகளைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால், இந்த இரண்டு ரயில்களும் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.
கவச் அமைப்பு மார்ச் 2022இல் தொடங்கப்பட்டது. அரசாங்கத் திட்டத்தின்படி, 2000 கிமீ ரயில் நெட்வொர்க் கவச் அமைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பழைய வீடியோ ஒன்றில், அஸ்வினி வைஷ்னவ், “நாங்கள் சொந்தமாக கவச் என்ற அமைப்பை உருவாக்குகிறோம்,” என்று கூறுவதைக் காணலாம்.
மேலும், "இந்த அமைப்பு ஐரோப்பிய தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது. நாங்களும் சோதனை செய்தோம். இந்தச் சோதனையில் நானும் ரயிலில் இருந்தேன். ஒரே பாதையில் இருபுறமும் ரயில்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்தன. கவச் அமைப்பு தானாகவே 400 மீட்டர் தூரத்தில் ரயில்களை நிறுத்துகிறது.
நான் ஒரு பொறியாளர். எனவே, இந்த ரயில்களில் உட்கார்ந்து நானே ரிஸ்க் எடுத்து அந்தச் சோதனையைச் செய்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்,” என்று அந்தப் பழைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில், பாலசோரில் கவச் அமைப்பால் விபத்து ஏன் தடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா பதிலளித்தபோது, “கவச் அமைப்பு ரயில் பாதையை அடிப்படையாகக் கொண்டது. அது தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை வழித்தடங்களில் மட்டுமே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. விபத்து நடந்த பாதையில் கவச் அமைப்பு நிறுவப்படவில்லை,” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்