You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணுவ வீரரின் மனைவியை 120 பேர் சேர்ந்து தாக்கினார்களா? திருவண்ணாமலை அருகே நடந்தது என்ன?
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க.
- பதவி, பிபிசி தமிழுக்காக, கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு அருகில் உள்ள கடை சம்பந்தமாக உரிமையாளருக்கும் வாடகைதாரர் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி மீது எதிர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..
"என் மனைவியை அடித்ததால் காது, மூக்கில் ரத்தம் வருகிறது. நடவடிக்கை எடுங்கள் காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பிரபாகரன்.." என்று தொடங்கும் அந்த வீடியோவில் அவர் பின்வருமாறு தொடர்கிறார்.
"படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு அருகில் உள்ள அறநிலை யத்துறைக்கு சொந்தமான இடத்தில் எனது மனைவி கடை வைத்துள்ளார். அந்த இடத்திற்கு 120 பேர் சென்று எனது மனைவி வைத்துள்ள கடையை நொறுக்கி எனது மனைவியையும் அடித்துள்ளனர். இதனால் அவர் காது, மூக்கில் ரத்தம் வருகின்றது. இது தொடர்பாக நான் எஸ்பியிடம் பேசினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் லோக்கல் ஸ்டேஷனில் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது எனது மனைவியை காப்பாற்றுங்கள். கத்தி எடுத்து கொண்டு வெட்ட வருகின்றார்கள். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... அரை நிர்வாணமாக்கி எனது மனைவியை அடித்துள்ளார்கள். காப்பாற்றுங்கள்" என்று கூறி அந்த வீடியோவில் மண்டியிட்டுஅவர் கதறி அழுகிறார்.
அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
"எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.. எனக்கு நியாயம் வேண்டும்"
சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி நம்மிடம் அரசு மருத்துவமனையில் இருந்து தொலைபேசியில் பேசினார்.
"நேற்று திடீரென்று கும்பலாக 20 பேர் வந்தார்கள் எதுவும் கேட்காமல் எனது கடையில் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். இதை அருகில் இருப்பவர்கள் வேடிக்கை தான் பார்த்தார்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னை நிம்மதியாக இருக்க விட மறுக்கின்றார்கள். இது வியாபாரப் போட்டிக்காக செய்யப்பட்டது. எங்கள் கடையில் எதிர்புறம் இருப்பவர்கள் தூண்டுதலிலேயே இது நடந்தது. எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண்ணும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். எங்கள் கடையில் வளையல் உள்ளிட்ட பேன்சி ஐட்டங்களை விற்பனை செய்து வருகின்றோம். எங்கள் கடைப் பொருட்களை முழுவதுமாக அடித்து நொறுக்கி விட்டார்கள். ஆனால் நான் குத்தியதாக பொய் கூறுகிறார்கள்" என்று அவர் முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ரியல் ஹீரோஸ் அமைப்பைச் சேர்ந்த சண்முகமும் அவர் நண்பர்களும் கீர்த்தியை பார்த்து ஆறுதல் கூற வந்திருந்தனர். அவர்கள் நம்மிடம் பேசுகையில், "இது தொடர்பாக காவல்துறை அதிகாரியிடம் பேசியுள்ளோம். கீர்த்தியின் கணவர் எங்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் அடிப்படையில் நாங்கள் மருத்துவமனைக்கு வந்து கீர்த்தியை பார்த்தோம் அவருக்கும் ஆறுதல் கூறியுள்ளோம். எங்களால் முடிந்த உதவிகளையும் செய்துள்ளோம்" என்று கூறினார்கள்.
கடை வாடகை ஒப்பந்தம் கூறுவது என்ன?
தொடர்ந்து கீர்த்தியை தாக்கியதாக கடையை அடித்து உடைத்ததாக கூறப்படும் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமுவை தொடர்பு கொண்டோம் என்ற போதிலும் அவர் மருத்துவமனையில் உள்ளதால் நம்மிடம் பேச இயலவில்லை என்று கூறினார். ஆனால் நம்மிடம் பேசிய அவரது நண்பர், இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்று கூறியதுடன் "ஏற்கனவே இந்த கடை தொடர்பாக ஒப்பந்த ஆவணமும் உள்ளது. அதன் நகலை உங்களுக்கு தருகிறேன் அதில் அனைத்து விஷயங்களும் உள்ளன" என்று தெரிவித்தார்.
அதில் 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது. அதில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் முன்பு உள்ள கடையை கதவு எண் 1473 உங்கள் தகப்பனார் குமார் என்பவரிடமிருந்து வாடகைக்கு பேசி வாடகைக்கு இருந்து வந்தோம். தற்பொழுது அவரது மகன் ராமு நீங்கள் கடையை காலி செய்ய சொல்வதால் இன்றைய தேதியில் இருந்து அதாவது 10 .12. 2022-ம் தேதியிலிருந்து 10. 2. 2023 ஆம் தேதிக்குள் கடையை காலி செய்து விட வேண்டியது. மேலும் நீங்கள் எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய் 9 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை எங்களுக்கு கொடுத்து விட வேண்டியது. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கோ தொடுக்க மாட்டோம் என நாம் அனைவரும் சாட்சிகள் முன்னிலையில் ஒருமனதாக பேசி சம்மதித்து எழுதிக் கொண்ட கடை காலி செய்யும் ஒப்பந்தமாகும். என்று அந்த ஆவணத்தில் தெளிவாக எழுதி இரண்டு தரப்பினரும் சாட்சிகளுடன் வழக்கறிஞர் ரமேஷ். ஆரணி என்பவர் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர்.
நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நேற்றைய தினம் இந்திய ராணுவ வீரர் பிரபாகரன் சமூக வலைதளத்தில் ஒரு புகாரை தெரிவித்தார். அதில் தனது மனைவியை 120 பேர் அடித்து துன்புறுத்தி மானபங்க படுத்தியதாக தெரிவித்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் படவேடு கிராமத்தில் ராமு என்பவர் இடத்தில் ராணுவ வீரரின் மனைவி வாடகைக்கு கடை வைத்துள்ளார். அதில் அவர்கள் பேன்சி ஸ்டோர் வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ராமு என்பவர் இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக ஒப்பந்த ஆவணமும் போடப்பட்டுள்ளது. ஆனாலும் ராணுவ வீரரின் மனைவி தரப்பு கடையை காலி செய்யவில்லை.
ஜூன் 10ஆம் தேதி கடையின் உரிமையாளர் ராமு, கீர்த்தியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடையை காலி செய்து தருமாறு பேசும் பொழுது வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது ராணுவ வீரரின் மைத்துனர் ஜீவா என்பவர் ராமுவை கத்தியால் தலையில் தாக்கி உள்ளார். இதை பார்த்த அருகில் இருந்த கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆவேசப்பட்டு பேன்சி ஸ்டோரில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியே வீசி விடுகிறார்கள். அடித்து நொறுக்கி விடுகிறார்கள்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில் ராணுவ வீரரின் மனைவியை யாரும் அடிக்கவில்லை, அவர் மானபங்கப்படுத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது என்ற போதிலும் ராணுவ வீரருக்கு தவறாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரரின் மனைவிக்கு காவல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக யாரும் வதந்தியை கிளப்ப வேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
இதுதான் நடந்தது...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவில் அருகில் கடை நடத்துபவர்களிடம் இது தொடர்பாக கேட்டபோது "இருவருக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. ராமு என்பவர் தனது கடையை கீர்த்தி குடும்பத்தாரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். அவர்களும் பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றார்கள், என்ற போதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் ஒன்று சேர்ந்து எழுதிய ஆவணத்தில் கடையை காலி செய்து கொள்வதற்கு சம்மதித்துள்ளனர். இது தொடர்பாக ஆவணமும் எழுதப்பட்டது" என்றும் தெரிவித்தனர்.
என்ற போதிலும் கடையை கீர்த்தி தரப்பினர் காலி செய்ய மறுத்ததாக தெரிவித்தனர் மேலும் இத்தொடர்பாக சந்தவாசல் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினரும் கொடுத்த மனுக்கள் அடிப்படையில் இருதரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்