You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'போர் தொழில்' - சீரியல் கில்லர் கதை ரசிகர்களை வசீகரித்ததா? - சினிமா விமர்சனம்
அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ படத்தில் நிகிலா விமல், தேனப்பன், நிழல்கள் ரவி ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
'போர் தொழில்’ திரைப்படம் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் விருந்து என்று பாராட்டியிருக்கிறது இந்து தமிழ் திசை.
திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தத் தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி. லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர்.
இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’ என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரியல் கில்லர்களின் பின்னிருக்கும் சமூகக் காரணிகள்
மேலும், “முறையான குழந்தை வளர்ப்புக்கான தேவையையும், திருமண உறவுச் சிக்கல்களில் எழும் முரண்களை களைய வேண்டியதற்கான அவசியத்தையும் முன்வைத்து ஒரு அழுத்தமான சீரியல் கில்லர் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அவர் கட்டமைக்கும் அந்த உலகில் வெறும் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சுருங்காமல் குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் பின்னாலிருக்கும் சமூக உளவியல் காரணிகளை அலசி விடை தேட எத்தனிக்கிறார்.
"அத்துடன் இரண்டு வெவ்வேறு குணாதிசயம் கொண்ட முதன்மைக் கதாபாத்திரங்களை ‘விசாரணை’ என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்லும் வகையிலான திரைக்கதை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது,” என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"‘கோல்டு’ மெடல் வாங்கி வெறும் படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு களத்துக்கு வரும் அசோக் செல்வன் கதாபாத்திரத்தை அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியான சரத்குமார் அணுகும் விதமும், இரண்டு கதாபாத்திர முரண்களும் கதையை எங்கேஜிங்காக்குகிறது. அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது ஈர்ப்பு.
குறிப்பாக சீரியல் கொலைகள் குறித்து சரத்குமார் விவரிக்கும் காட்சி, கொலைகாரனை நெருங்கும் காட்சியும், இடைவேளை என விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி கடக்கும் முதல் பாதி முத்திரை பதிக்கிறது."
மறைந்த சரத்பாபுவின் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்
இன்னசென்ட் இளைஞராக அசோக் செல்வனின் நகைச்சுவை கலந்த உடல்மொழி, ஆங்காங்கே சில ஒன்லைன்கள், அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள செய்யும் செயல்கள் என படம் முழுக்க ஈர்க்கிறார்.
கடுகடுப்பான முகத்துடன் கறார் காட்டும் உயர் அதிகாரியாகவும், எமோஷனலான காட்சி ஒன்றில் முகத்திலிருந்து மொத்த நடிப்பை கடத்தும் இடத்திலும் ‘மூத்த’ நடிகர் என்ற முத்திரையைப் பதிக்கிறார் சரத்குமார்.
நிகிலா விமலுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நேர்த்தி காட்டுகிறார். மறைந்த நடிகர் சரத்பாபுவின் சர்ப்ரைஸ் கதாபாத்திரமும், அதற்கான அவரின் நடிப்பும் யதார்த்தம். ஹரீஷ்குமார் எதிர்மறை கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாய் தனது இசையால் சில இடங்களில் பயமுறுத்துபவர் சில இடங்களில் அமைதியை பரவ விட்டது படத்துக்கு பெரும் பலம். கலைச் செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் தனித்து தெரிவதாக விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிந்த அளவு தான் எடுத்துக்கொண்ட கதையை சஸ்பென்ஸ் குறையாமல் அதே வேகத்தில் இரண்டாம் பாதியிலும் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குநர்," என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
'வழக்கமான க்ரைம் த்ரில்லர்கள் போலில்லாமல்...'
'போர் தொழில்’ திரைப்படத்தின் தேர்ந்த எழுத்து படம் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்வதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படம் வழக்கமான புலனாய்வு திரைப்படங்களைப் போலவே, காவல்துறையினரின் கைகளில் சிக்கும் ஒரு மர்மமான கொலை வழக்குடனேயே தொடங்குகிறது. ஆனால், அந்தக் கொலை குறித்த விசாரணை முறைகளை முற்றிலும் வித்தியாசமாகவும், அசாதாரணமானதாகவும் இடம்பெறச் செய்து விறுவிறுப்பை கூட்டுகிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
தமிழ் சினிமாவில் பல இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்கள் வந்திருந்தாலும், ’போர் தொழில்’ நம்மை முழுவதுமாக கவர்ந்து படத்தின் மீதான ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது. மேலும், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் அளவிற்கு அடிப்படையான செய்தியையும் கொண்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
'அறிமுக இயக்குநரிடமிருந்து நேர்த்தியான படம்'
தினமலர், ‘போர் தொழில்’-லாபம் எனக் குறிப்பிட்டு தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், "ஒரு முழுமையான க்ரைம் த்ரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருவதும் அபூர்வமானதுதான். ஒரு நாவலை படிப்பது போன்ற பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த ‘போர் தொழில்’ படம் அமைந்திருக்கிறது.
"ஒரு அறிமுக இயக்குநரிடமிருந்து இப்படி ஒரு நேர்த்தியான படம் வந்திருப்பதும் ஆச்சர்யம்தான். படத்திற்கு என்ன தேவையோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே திரைக்கதையில் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
"ஜேக்ஸ் பிஜயின் பின்னணி இசை, த்ரில்லிங்கான காட்சிகளுக்கு நிறையவே உயிரூட்டியிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளிலும், மற்ற காட்சிகளிலும் ஒரு த்ரில்லர் படத்திற்குரிய மிரட்டலான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் கலைச்செல்வன் சிவாஜி" என தினமலர் தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டியிருக்கிறது.
"2010-ல் நடக்கும் கதை, அந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சில சினிமாத்தனமான காட்சிகள் ஆங்காங்கே இருப்பது மட்டுமே படத்திற்கு மைனஸ்,"எனவும் தினமலர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா, விறுவிறுப்பான ஒரு போலீஸ் திரைப்படத்தைக் கொடுத்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி இயக்குநரின் எளிமையான அணுகுமுறையிலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹீரோயிசம் மற்றும் ரொமான்ஸ் என்கிற பெயரில் எந்தவிதமான மசலாக்களையும் சேர்க்காமல் இயக்குநர் ரசிக்க வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்