கிராமத்து சூப்பர் ஹீரோ 'வீரன்' - ரசிகர்களை வசீகரித்தாரா? சோர்வடைய வைத்தாரா?

கிராமத்து சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வீரன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார்.

‘மரகத நாணயம்’ படத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர் என்பதால், இந்தப் படத்திற்கு ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப படத்தின் டிரைலரும் ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றது.

வினய், அதிரா, காளி வெங்கட், முனிஸ்காந்த், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ’வீரன்’ படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையும் அமைத்துள்ளார்.

'வீரன்' ஆக உருவெடுக்கும் ஹிப்ஹாப் ஆதி

இன்று வெளியான இந்தப் படம், கிராமத்து சூப்பர் ஹீரோ கதைக்களம் கைகொடுத்ததா எனும் கேள்வியுடன் இந்து தமிழ் திசை விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

வீரனூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் குமரனை (ஹிப்ஹாப் ஆதி) சிறுவயதில் மின்னல் ஒன்று தாக்கி விடுகிறது. இதன் காரணமாக அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அவரது அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன.

அவரால் அடுத்தவரது மூளையைக் கட்டுப்படுத்த முடியும். கைகளிலிருந்து மின்னல் சக்தியை வெளிப்படுத்த முடியும். அவர் வளர்ந்ததும் அவரது சொந்த ஊருக்கு வரப்போகும் மிகப்பெரிய ஒரு ஆபத்து குறித்து அடிக்கடி அவருக்கு கனவுகள் வருகின்றன.

இதனால் வீரனூருக்கு கிளம்பி வருகிறார் குமரன். ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தக் கூடிய லேசர் பவர் டெக்னாலஜி என்ற திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் முதலாளியும் (வினய்) அவரது தம்பியும் அந்த ஊர் மக்களை ஏமாற்றி அங்கு செயல்படுத்த முயல்கின்றனர்.

ஊரில் இருக்கும் எல்லை தெய்வமான வீரன் கோயிலை இடித்தால் மட்டுமே அந்தத் திட்டத்தைத் தொடர முடியும் என்கிற நிலை.

வில்லன்களின் திட்டத்தை அறிந்துகொள்ளும் ஆதி தனது சக்திகளின் மூலம், 'வீரன்' ஆக உருவெடுக்கிறார். அவரால் வில்லன்களின் சதியை முறியடிக்க முடிந்ததா என்பதே ‘வீரன்’ படத்தின் கதை என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ கதைக்களம்

மேலும், "தமிழில் சூப்பர்ஹீரோ படங்கள் மிகவும் குறைவு. நமது மாஸ் ஹீரோக்களின் படங்களே சூப்பர்ஹீரோ படங்கள் போல இருப்பதால் தமிழில் பெரிதாக அத்தகைய முயற்சிகளை எடுக்கப்படுவதில்லை.

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படமும் பெரியளவில் பேசப்படவில்லை. பல ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் அதை சாத்தியப்படுத்தியுள்ளார்.

மலையாளத்தில் பேசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான ’மின்னல் முரளி’ படமும் இதே கிராமத்து சூப்பர்ஹீரோ கதைக்களம்தான். ஆனால் அப்படத்தில் இருந்த சூப்பர்ஹீரோ பின்னணிக்கான நியாயமும், அதற்கான மேக்கிங்கும் ‘வீரன்’ படத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு சாதாரண மனிதன், அவனுக்கு திடீரென கிடைக்கும் சக்திகள், அவனுக்கு நிகரான அல்லது அவனைவிட பலமான வில்லன். இவை மூன்றும்தான் அடிப்படை.

இப்படத்தில் முதல் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஹீரோவுக்கு சமமான வில்லன் இதில் இல்லை. மெயின் வில்லனாக வரும் வினய்க்கு படம் முழுக்க ஓவர் பில்டப் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இறுதியில் காமெடி பீஸ் போல அவரது கேரக்டர் முடிக்கப்படுகிறது," என விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, "திரைக்கதை எங்கும் போரடிக்கவில்லை. படம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இப்படத்தின் பிரச்னையே ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கான ஏற்ற இறக்கங்கள் எதுவுமில்லாத தட்டையான கதை சொல்லல்தான்.

படத்தில் எந்தவொரு திருப்பங்களோ, கூஸ்பம்ப் காட்சிகளோ இல்லை. ஒரு சூப்பர்ஹீரோ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அதைத்தானே. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி மட்டும் விதிவிலக்கு," என்றும் இந்து தமிழ் விமர்சனம் தெரிவிக்கிறது.

'நக்கலைட்ஸ்' குழுவினர்

"ஹிப்ஹாப் ஆதி தனக்கு எது வருமோ அதை உணர்ந்து செய்திருக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் முன்னேற்றம் தெரிகிறது. எனினும் எமோஷனல் காட்சிகளில் இன்னும் உழைப்பு தேவை.

நாயகியாக வரும் ஆதிரா ராஜுவுக்கு படத்தில் வேலையே இல்லை. ஆதியின் நண்பராக வரும் சசி செல்வராஜ், பார்வைக் குறைபாடு கொண்ட தோட்டக்காரராக வரும் ஜென்சன், பிரசன்னா பாலச்சந்திரன், சாவித்ரி உள்ளிட்ட ‘நக்கலைட்ஸ்’ குழுவினர் அனைவரது நடிப்பும் வெகு இயல்பு. காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காமெடி ஓரிரு இடங்களில் சிரிப்பு மூட்டினாலும், பல இடங்களில் எடுபடவில்லை.

ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். எழில் கொஞ்சும் மலை கிராமத்தின் அழகை தீபக் மேனனின் கேமரா கண்களுக்கு விருந்தாக்குகிறது.

படத்தின் விசுவல் எஃபெக்ஸில் பெரிதாக மெனக்கெடல் இல்லை என்றாலும், படத்திலும் அதற்கான தேவை இல்லாததால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை," என இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.

"படத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான சின்னி ஜெயந்த், ஹிப்ஹாப் ஆதியால் கட்டுப்படுத்தப்பட்டு மாறி மாறி பேசும் காட்சி, முதல் இரண்டு தடவை சிரிப்பை வரவழைக்கிறது.

ஆனால் அதற்காக அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பது எடுபடவில்லை. வில்லனின் தம்பி பத்ரி சாமியாடும் காட்சியிலும் இதேதான் நடந்துள்ளது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சி பெரிதாக எடுபடவில்லை.

ஹீரோவுக்கு மின்னல் சக்தி கிடைப்பதற்கு பின்புலமாக எந்தக் காரணமும் படத்தில் சொல்லப்படவில்லை, சரி சூப்பர்ஹீரோ படங்களில் இதுபோன்ற லாஜிக்குகள் பார்க்க வேண்டியதில்லை என்றாலும் அதைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி காட்சிப்படுத்தியிருக்க வேண்டாமா?

சிலந்தி கடித்து ஸ்பைடர்மேன் ஆவதையும், வானத்தில் இருந்து வந்த ஏலியன் சூப்பர்மேன் ஆவதையும் பார்வையாளர்கள் நம்பியது அதற்கான நம்பகத்தன்மை அந்தப் படங்களில் இருந்ததால்தான்."

மண்சார்ந்த சூப்பர்ஹீரோ என்ற கதைக்களம் சிறப்பானதுதான் என்றாலும், ஒரு சூப்பர்ஹீரோ படத்திற்கான காட்சியமைப்பும், சுவாரஸ்யமான மேக்கிங்கும் இல்லாததால் சுமாரான ஹீரோவாகவே நின்று விடுகிறான் இந்த ‘வீரன்’ என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வீரன்' முழுமையடையாத முயற்சி

ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ஒரு முழுமையடையாத முயற்சி என இந்தியா டுடே விமர்சனம் வெளியிட்டுள்ளது.

மேலும், "நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையே நேர்த்தியாகக் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன். எந்தப் பக்கத்தையும் புகழ்ந்தும் பேசாமல், நோகடிக்கவும் இல்லாமல் காட்சியமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சுவாரஸ்யமான பல அம்சங்கள் இருந்தாலும், மீண்டும் மீண்டும் சொல்லப்படும் சில அம்சங்கள் படத்தின் மீது ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

திரைப்படம் நெடுக சில இடங்களில் வரும் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், பல காட்சிகள் பொறுமையை சோதிக்கக் கூடியவையாகவே இருக்கிறது," எனவும் இந்தியா டுடே விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, "ஏ.ஆர்.கே.சரவணனின் வீரன், ஒரு சூப்பர் ஹீரோ கற்பனை உலகில் நம்மை மூழ்கடிக்கும் வகையிலான வலுவான குறிப்புடன் தொடங்குகிறது.

ஹீரோவின் சக்தியைக் கண்டறிய நேரம் எடுக்கும் மற்ற படங்களைப் போலல்லாமல், ஒரு வேட்டையாடும் கனவின் காரணமாக வீரன் தனது நோக்கத்தை ஏற்கெனவே அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டு நேரடியாக கதைக்குள் செல்வது ரசிக்க வைப்பதாக" குறிப்பிட்டிருக்கிறது.

அதோடு, "நாயகனின் திறன்கள் நம்பகத்தன்மையுடன் இல்லாமல் இருந்தாலும், சில காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயக்குநர் மூடநம்பிக்கை மற்றும் விஞ்ஞானம் பற்றிய கருத்துகளைப் பகுத்தறிவுடன் அணுகியிருப்பது படத்திற்குப் பலமாக இருக்கிறது.

’வீரன்’ படத்தின் இறுதிக்காட்சி, கதையோட்டத்தின் அடிப்படையில் தனிமனிதர்களே உண்மையான சூப்பர் ஹீரோக்கள் என்ற கருத்துடன் இணங்கி, இன்னும் எதார்த்தமாக இருந்திருக்கலாம்," என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது.

அதோடு, படத்துடன் ஒன்ற வைக்கும் அளவிற்கு ‘வீரன்’ திரைப்படம் உருவாகியிருப்பதாகவும் அதன் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: