என்.டி.ராமராவின் அரசியல் வேர்களை சாமர்த்தியமாக வெட்டிய மருமகன் சந்திரபாபு நாயுடு

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

[இன்று, மே 28, என்.டி.ராமராவ் பிறந்ததினம். அதன்பொருட்டு இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.]

என்டிஆரின் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானவை. உலகம் கண்விழிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே அவர் படுக்கையை விட்டு எழுந்து சூரியன் உதிக்கும் முன் வயிறார உணவை உட்கொள்வார்.

என்.டி.ஆரை நன்கு கவனித்து பணிவிடை செய்வதற்காக அவர் எழுவதற்கு முன்பே அவருடைய மனைவி எழுந்துவிடுவார். 1984 இல் அவர் புற்றுநோயால் இறக்கும் வரை இந்த செயல்முறை தொடர்ந்தது.

என்டிஆர் தனிமையை விரும்பும் நபர், அவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் மிகக் குறைவு. அவரைச் சந்தித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள், அவர்களுடன் அவருக்கு வணிக உறவு மட்டுமே இருந்தது.

அவருக்கு ஏழு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகஅரிது.

"ஒருமுறை நான் என் தந்தையை சந்திக்க என் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். இவன் என்னுடைய இளைய மகன், இன்டர்மீடியட் படிக்கிறான் என்று என் தந்தை அங்கிருந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். ஆனால் அது சரியல்ல. முதலாவது, நான் அவருடைய இளைய மகன் இல்லை, இரண்டாவதாக, நான் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், இன்டர்மீடியட் அல்ல,” என்று அவரது மகன் பாலகிருஷ்ணா ஒருமுறை கூறினார்.

அவரது பதினொரு குழந்தைகளில், யார் மூத்தவர், யார் இளையவர் அல்லது எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பது கூட என்டிஆருக்கு தெரியாது என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர் தனது சொந்த உலகத்தில் தொலைந்து போயிருந்தார்.

"ஒருமுறை என்.டி.ஆர். தனது பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்ள செகந்திராபாத் வந்திருந்தார். ஹாலில் தனியாக அமர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள்," என்று 'தி இந்து' நாளிதழின் செய்தியாளர் ராஜேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

லட்சுமி பார்வதியிடம் அதிகரித்த நெருக்கம்

இத்தகைய வெறுமையான வாழ்வில் அவருடைய வயதில் பாதி மட்டுமேயான ஒரு பெண் நுழைந்தார். முதலில் ரசிகையாகவும், பின்னர் வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் பின்னர் காதலியாகவும் ஆன அவர் பிறகு அவரது மனைவியாக மாறினார். அவர் பெயர் லட்சுமி பார்வதி.

என்டிஆரின் பாதங்களைத் தொட்டுத் தன் பக்தியைக் காட்டுவார். 'சுவாமி' என்று அவரை அழைப்பார். தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ஒரு துணையின் குறையை உணர்கிறேன் என்று என்டிஆர், அவரிடம் ஒப்புக்கொண்டார்.

என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது ஒரு சாக்காக மாறியது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.

"லட்சுமி பார்வதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என்டிஆர் உடன் தங்குவார். திங்கட்கிழமை தனது வீட்டிற்குத் திரும்புவார். என்டிஆர் லட்சுமி பார்வதியுடன் பேசுவதற்காக அவரது வீட்டில் தொலைபேசியை நிறுவினார். பல வருடங்கள் கழித்து லட்சுமியிடம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வந்திருந்த பழைய டெலிபோன் பில்லைக் காட்டினார். கோடை விடுமுறையில் லட்சுமி பார்வதி என்டிஆருடன் இரண்டு மாதங்கள் முழுவதுமாக செலவழித்தார்." என்று கே சந்திரஹாஸ் மற்றும் கே லட்சுமிநாராயணா, தங்களின் 'NTR A Biography' புத்தகத்தில் எழுதியுள்ளனர்.

என்டிஆர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்

இந்த காதல் விவகாரம் பற்றி முதல்முறையாக பேசப்பட்டபோது, என்டிஆர் அதை மறுக்கவில்லை. இது தனது பிரச்னையை தீர்த்துவிட்டதாக லட்சுமி பார்வதியும் ஒப்புக்கொண்டார். ஆனால் என்டிஆரின் குடும்ப உறுப்பினர்கள் அதில் மகிழ்ச்சியடையவில்லை.

லட்சுமி பார்வதி என்டிஆரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். "இந்த வயதில் எனக்கு உடலுறவு முக்கியமில்லை. இந்த நேரத்தில் எனக்கு பாசமும் தோழமையும் தேவை. லட்சுமி எனக்கு ஒரு தோழி போன்றவர்" என்று என்டிஆர் தெளிவுபடுத்தினார்.

அப்போது லட்சுமி பார்வதிக்கும் ஏற்கனவே திருமணமாகியிருந்தது. தனது மனைவி வேறொரு ஆணுடன் வசிக்கிறார் என்று அவரது கணவர் சுப்பா ராவுக்கு புகார் இருந்தது. இருவரும் விவாகரத்து கோரி மனு செய்தனர். நீதிமன்றம் விவாகரத்து உத்தரவை பிறப்பித்த நாளன்று என்டிஆருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.

"என்.டி.ஆருக்கு இதயநோய் இருந்தது. ஆனாலும் அவர் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டாலும் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தவில்லை. மருந்துகளையும் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஆனாலும் 70 வயதாகியும் அவரது முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை. அவர் பளபளப்பாக இருந்தார். இந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது என்.டி.ஆரை கவனித்துக்கொண்டவர் லட்சுமி பார்வதி." என்று கே.சந்திரஹாஸ் மற்றும் கே.லட்சுமிநாராயணா எழுதியுள்ளனர்.

லட்சுமி பார்வதியுடன் திருமணம்

சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய என்டிஆர், திருப்பதியில் லட்சுமி பார்வதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

ஒரு பெண் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினார். அந்தப்பெண் சம்மதித்தால் நான் அவளை திருமணம் செய்துகொள்ளத்தயார் என்று மேடையில் அவர் கூறினார். பின்னர் உரத்த குரலில் லட்சுமியை மேடைக்கு அழைத்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் லட்சுமியின் கழுத்தில் தாலி கட்ட அவர் தயாராக இருந்தார்.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த என்டிஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே மின்சாரத்தை துண்டித்துவிட்டார். எங்கும் இருள் சூழ்ந்தது. என்டிஆரின் பேச்சு முடிந்து, அவர் லட்சுமியின் கழுத்தில் தாலி கட்டினாரா இல்லையா என்பதை மக்களால் அறிய முடியவில்லை. இந்த செயலால் என்டிஆர் மிகவும் கோபமடைந்தார். அவரை சமாதானப்படுத்த எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன.

சந்திரபாபு நாயுடுவின் கிளர்ச்சி

1995 ஆகஸ்ட் 23 ஆம் தேதி என்டிஆர் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார். ஆனால் எட்டு நாட்களுக்குள் அதிகாரம் அவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டு அவர் முன்னாள் முதல்வரானார். என்டிஆர் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி வராமல் இருந்திருந்தால் கூட அவரை ஆட்சியில் இருந்து நீக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு நிறுத்தியிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான 'NTR A Political Biography' புத்தகத்தின் ஆசிரியர் ராமசந்திர மூர்த்தி கொண்டுபட்லா,,"உண்மையில் என்டிஆர் எந்த அறிவுரையையும் ஏற்கத் தயாராக இல்லை. அவர் தன்னிச்சையாகவும், எதேச்சதிகாரமாகவும் செயல்பட்டார். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார். எல்லா விஷயத்திற்கும் சந்தேகப்படுவார். லட்சுமி பார்வதி மீது ஒருவித வெறியுடன் இருந்தார். என்டிஆர்-க்கு எதிராக நாயுடு ஒரு சூழலை உருவாக்கிய விதம் அவரது வியூக சாதுர்யத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. யாருக்கு எதிராக, எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நாயுடு நன்கு அறிந்திருந்தார்," என்று எழுதியுள்ளார்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே, துணை முதல்வர் பதவியின் ஆசையைக் காட்டி தனது மைத்துனர் டாக்டர் தக்குபதி வெங்கடேஸ்வர ராவை தன் பக்கம் இழுத்தார் சந்திரபாபு நாயுடு.

இப்படியாக ஹரிகிருஷ்ணா மற்றும் தக்குபதி இந்த பிரச்சாரத்தில் அவருடன் சேர்ந்து என்டிஆரை எதிர்க்கத் தொடங்கினர்.

லட்சுமி பார்வதி இலக்காக இருந்தவரை என்டிஆர் இந்தக் கிளர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தான்தான் உண்மையான இலக்கு என்பதை அவர் உணர்ந்து கொள்வதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டது.

"உண்மையில், என்.டி.ஆர் ஒரு ஷோமேன். மக்களை வசீகரிக்கும் கவர்ச்சி அவருக்கு இருந்தது. ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் கூட அவருக்குத் தெரியாது. சாதாரண அரசியல்வாதிகளிடம் பேசுவது கூட அவருக்குப்பிடிக்காது. மறுபுறம் என்டிஆரின் முதுகிற்குப்பின்னால் சந்திரபாபு எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுக்க தன்னால் இயன்ற முயற்சிகளை செய்தார். நாயுடுவின் லட்சியத்தை அறிந்துகொள்ள என்டிஆர் முற்றிலும் தவறிவிட்டார்," என்று கொண்டுபட்லா எழுதுகிறார்.

லட்சுமி பார்வதி மற்றவர்களின் பார்வையில் சாதாரணமானவராகவும், சுயநலவாதியாகவும் இருக்கலாம். ஆனால் அவர் என்டிஆருக்கு மிகமுக்கியமானவராக இருந்தார். மனைவியை என்பதைவிட, ஒரு மதிப்புமிக்க துணையாக இருந்தார்.

என்டிஆரின் ராஜிநாமா

இரண்டு அமைச்சர்கள் அஷோக் கஜபதி ராஜு மற்றும் தேவேந்திர கெளட் உட்பட 3 பேர் கொண்ட குழுவை என்டிஆரை சமாதானப்படுத்த சந்திரபாபு நாயுடு அனுப்பினார். எட்டு எம்.எல்.ஏக்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுதல், லட்சுமி பார்வதிக்கு விசுவாசமான 8 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தல், பார்வதியை அரசு மற்றும் கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுக்கி வைத்தல், தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை அவர்கள் என்டிஆர் முன் வைத்தனர்.

நான்கு கோரிக்கைகளையும் ஏற்க என்டிஆர் மறுத்துவிட்டார்

மாறாக என்டிஆர் அவர்களிடம், "பார்வதியால் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளை சொல்லுங்கள். என் சொந்த மனைவியை இப்படி அவமானப்படுத்தப்படுவதை நான் எப்படிப் பொறுத்துக்கொள்வது. என் மனைவியை கட்டுப்படுத்த சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது, தேவைப்பட்டால் கட்சியைக் கலைக்கவும் தயங்கமாட்டேன்,” என்று சொன்னார்.

இந்த மூன்று தலைவர்களும் அமைதியாக எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். நாயுடுவுக்கு ஆதரவாக 171 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்கள் நாயுடுவுடன் வைஸ்ராய் ஹோட்டலில் தங்கியிருந்தனர். சட்டப்பேரவையில் என்டிஆர் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அங்கிருந்தே அவர் ஆளுனருக்கு ஃபேக்ஸ் அனுப்பினார்.இதையறிந்த என்.டி.ஆருக்கு கோபம் தலைக்கேறியது.

சட்டப்பேரவையை கலைக்க அவர் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அவருக்கு ஆளுநர் அவகாசம் அளித்தார். முன்னாள் ஆளுனர் ராம்லாலை உதாரணம் காட்டி என்டிஆர், செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் கோரினார். இந்தக்கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் கிருஷ்ணகாந்த், பெரும்பான்மையை நிரூபிக்கும் கால அவகாசத்தை ஒரு நாள் நீடித்து அதை ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆக்கினார்.

இதற்கிடையில் என்டிஆர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்க அங்கு சென்ற ஆளுநரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார். அதே நாளில் சட்டப்பேரவையில் தெலுங்கு தேசக்கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் அவர் முதல்வராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க மறுப்பு

பதவிப்பிரமாணம் எடுத்த உடனேயே சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் லோகேஷ் ஆகியோருடன் என்டிஆர் இல்லத்திற்கு சென்றார். மூன்று பார்வையாளர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஹாலில் அமர்ந்திருந்தனர். என்டிஆர் அவர்களை மாடியில் தனது அறைக்கு வரச் சொல்லவில்லை. அவர்களை சந்திக்க கீழே வரவும் இல்லை. என்டிஆர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர்களை சந்திக்கும் நிலையில் இல்லை என்றும் என்டிஆரின் செயலாளர் புஜங் ராவ் அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது.

சந்திரபாபு நாயுடு பூங்கொத்தை புஜங்கிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றார். அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு நிரந்தரமாக முறிந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.

"எம்.எல்.ஏ.க்களை எப்படி ஒன்றாக வைத்துக்கொள்வது என்று வழிகாட்டும் அரசியல் ஆலோசகர்கள் என்.டி.ஆரிடம் இல்லை. இந்த விஷயத்தில் லட்சுமி பார்வதி சந்திரபாபு நாயுடுவுக்கு இணையாக இல்லை. கடல் அமைதியாக இருக்கும்போது பொதுவாக மக்கள் புயல் பற்றி நினைக்கமாட்டார்கள் என்று அரசியல் தத்துவவாதி மேக்யாவலி கூறினார் என்டிஆர் இதே தவறை செய்தார். அவர் நீண்டகாலம் அலட்சியமாக இருந்தார். அவர் தனது தவறை உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது." என்று சந்திரஹாஸ் மற்றும் கே லக்ஷ்மிநாராயணா எழுதுகிறார்கள்.

"லட்சுமி பார்வதிக்கு அரசியல் ஆசைகள் இல்லாமல் அவர் இல்லத்தரசியாக மட்டும் இருந்திருந்தால், என்டிஆர் இறக்கும் வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்திருப்பாரா, சந்திரபாபு நாயுடு அவரது அரசில் முக்கிய பங்கு வகித்திருப்பாரா என்ற ஊகங்கள் சுவாரசியமானவை,” என்று தி இந்து நாளிதழின் செய்தியாளர் ராஜேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

மருமகனை ஒருபோதும் மன்னிக்கவில்லை

என்டிஆர் தன் மனைவிக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார். அவர் தனது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகளை கூட விட்டுவிட்டார். கடைசியில் அதிகாரம் கூட அவர் கையை விட்டுப் போய்விட்டது. அவரது சொந்த மருமகன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அவரை அதிகாரத்திலிருந்து நீக்கினார்.

அவரை என்டிஆர் ஒருபோதும் மன்னிக்கவே இல்லை. செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியபோது என்டிஆர் தனது அறிக்கையை படிக்க அனுமதிக்கப்படவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகே அவருக்கு பேச அனுமதி வழங்கப்படும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவை 183 தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். என்டிஆர் ராஜிநாமா செய்த ஒரு நாள் கழித்து, அவரது செயலர் ஜெயப்பிரகாஷ் நாராயண், சிஎஸ் ராவ் மற்றும் அவருடன் பணிபுரிந்த சிலர் அதிகாலையில் அவரை சந்திக்க வந்தனர்.

என்டிஆர் சாதாரணமாக எழுந்திருக்கும் நேரத்திற்கு முன்பே எழுந்துவிட்டார். அவர்களை ஸ்டடி ரூமில் வரவேற்றார். ஒன்றுமே நடக்காதது போல் அவர்களிடம் பேசினார். என்டிஆர் கடைசியாக அவர்களிடம் கூறிய வார்த்தைகள், "நான் முதலமைச்சராகப் பிறக்கவில்லை. இப்போது நான் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் என்ன வித்தியாசம்."

மக்கள் இறுதி ஊர்வலத்தில் கூடினர்

என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாலரை மாதங்களுக்குப்பிறகு 1996 ஜனவரி 17 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் வைக்கப்பட்டது.

அவரது உடலின் தலைப்பகுதியில் நாற்காலியில் அமர்ந்திருந்த லட்சுமி பார்வதி அவரது முகத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்தார். லட்சுமி பார்வதிக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் மேடையில் இருந்தனர். அங்கு வந்த என்டிஆரின் மகன் ஹரிகிருஷ்ணா, குடும்ப உறுப்பினர்களுக்கு வழிவிடுமாறு லட்சுமி பார்வதியின் ஆதரவாளர்களிடம் சத்தம்போட்டுக்கூறினார்.

அங்கு லட்சுமி பார்வதி மட்டும் தனியாக உட்கார அனுமதிக்கப்பட்டார். என்டிஆரின் முதல் மனைவியின் படத்தை ஒருவர் கொண்டு வந்தார். என்டிஆர் உடல் அருகில் அது வைக்கப்பட்டது. பார்வதி சிறிது நேரம் கழிவறைக்கு சென்றபோது, அவரது நாற்காலி அங்கிருந்து அகற்றப்பட்டது. போலீசார் தலையிட்டு அவரது நாற்காலியை மீண்டும் அங்கேயே போட வைத்தனர். ஹரிகிருஷ்ணாவுக்கு மற்றொரு நாற்காலி வரவழைக்கப்பட்டது.

என்டிஆரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆட்சியில் இல்லாத ஒருவரின் இறுதிச் சடங்கில் இவ்வளவு பேர் கலந்து கொண்ட நிகழ்வு, ஒருவேளை மகாத்மா காந்திக்குப் பிறகு அப்போதுதான் நடந்தது என்று கூறப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)