You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்து நடந்த நேரத்தில் தற்செயலாக பதிவான வீடியோவின் பயங்கர காட்சிகள்
"ஓ! ரயில் விபத்துக்குள்ளானது போல் தெரிகிறது
அட கடவுளே! எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நிறைய பேர் இருக்கிறார்கள்
தயவு செய்து யாரேனும் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வாருங்கள்."
இது துளசி மாலிக்கின் நம்பிக்கையற்ற வேதனையான குரல்.
பலத்த சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்தை இவர் அடைந்தார். இவரது வீடு அருகில்தான் கமாரிபூர் கிராமத்தில் உள்ளது. ஒரு விளைக்கை ஏந்திக்கொண்டு, மின்சார கேபிள்களில் மிதித்துவிடாமல் இருளில் அலைந்தார். அவர் தனது மொபைல் போன் டார்ச்சை ஆன் செய்ய முயன்றாள், ஆனால் தவறுதலாக அவரது போனில் கேமரா ஆன்-ஆகி இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது.
துளசி மாலிக் ரயில் பயணிகளுக்கு, இயன்ற வழிகளில் உதவ விரும்பினார்.
“மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்று யாரோ எச்சரித்ததால் நாங்கள் அவர்களுக்கு அதிக தண்ணீர் கொடுக்கவில்லை. அவர்களின் நெற்றியில் சிறிது தண்ணீரை மட்டும் ஊற்றி, அருகில் உள்ள வயல்களில் கிடத்தினோம்.” என்கிறார் துளசி மாலிக்
“அவர்களுக்கு சமைத்தேன். டாக்டர்கள் வரும் வரை காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தேன். அன்று இரவு முழுவதும் விழித்திருந்தோம்.”
அந்த இரவின் வலியை நினைவுகூர்கையில் உணர்ச்சிவசப்படுகிறார்.
விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏதேனும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அருகிலுள்ள கிராமங்களை நோக்கி ஓடியபோது இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் காயமடைந்திருந்த பலருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. நல்லவேளையாக ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த சௌபாக்யரஞ்சன் சாரங்கியின் மருந்தகத்தை அடைந்தனர்.
“நான் மக்களைப் பார்த்தபோது அவர்களுக்கு ரத்தம் உறைவதற்கு ஒரு ஊசி போட வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அந்த ஊசியின் ஐந்து குப்பிகள் மட்டுமே என்னிடம் இருந்தன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், எனக்கு மருந்து சப்ளை செய்யும் சவுரவுக்கு ஃபோன் செய்து, அந்த மருந்தை அதிகமாக அனுப்பச் சொன்னேன். பின்னர் அந்த மருந்துகள் வந்தன. எனக்கு மருந்து கொடுக்க உதவுங்கள் என்று அவரிடம் சொன்னேன். நான் ஊசி போடுகிறேன், நீங்கள் மாத்திரைகள் கொடுங்கள், காயம்பட்டவர்களுக்கு கட்டுப் போடுங்கள் என்று சொன்னேன். மேலும் இரண்டு, மூன்று பேர் எனக்கு உதவினார்கள். காயமடைந்தவர்களில் ஒருவரின் கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்ததால், அவரது கையைப் பிடித்துக்கொண்டு கவனமாக அழைத்துச் சென்று அமர வைத்தோம்.” என்கிறார் சௌபாக்ய ரஞ்சன் சாரங்கி.
மகேஷ்குமார் குப்தாவின் மளிகை கடையும் அந்த சாலையை ஒட்டி இருந்தது. அவரும் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
“காயம்பட்ட நிறைய பேர் இங்கே ஓடி வந்தார்கள். அவர்களுக்கு குளிர்ந்த நீர், வலி எதிர்ப்பு மருந்துகள் கொடுத்தேன். டீ போட்டுக் கொடுத்தேன். என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன். பின்னர் அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை வெளியேற்ற ஏணிகளையும், பிற உபகரணங்களையும் பெற்றோம். மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளில் உதவினோம். தொடர்ந்து வேலை செய்தோம். அன்று இரவு நாங்கள் தூங்கவில்லை.” என்றார் அவர்.
நிர்வாக உதவிகள் வருவதற்கு முன்பே, உள்ளூர் மக்கள் பயணிகளுக்கு தங்களால் இயன்ற விதத்தில் உதவ முயன்றனர். விபத்து நடந்ததும், தண்டவாளத்தின் இருபுறமும் வசிக்கும் இவர்களைப் போல ஏராளமானோர் இங்கு வந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர்.
தண்டவாளத்தின் அருகே உள்ள கமாரிபூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பிரதாப் சிங். ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை எப்படி வெளியே எடுப்பது என்ற சவாலை எதிர்கொண்டார். பின்னர் சாக்குப்பைகளைப் பயன்படுத்தி தற்காலிக ஸ்ட்ரெச்சர்களை உருவாக்கினார்.
“ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் இல்லை. கால் எலும்பு முறிந்து பல பேர் இருந்ததால், அவர்களை அசைக்க வழியில்லாததால், சணல் பைகள் மற்றும் மூங்கில்களை பயன்படுத்தி ஸ்ட்ரெச்சர் செய்து அதன் உதவியுடன் நகர்த்தினோம்.” என்றார் அவர்.
“இது மிகவும் கடினமான வேலை. அங்கு இறந்தவர்கள் இருந்தனர். உயிருடன் இருப்பவர்களை வெளியே எடுக்க இறந்த உடல்களின் மேல் செல்ல வேண்டியிருந்தது.”
மோசமாகப் பழுதடைந்த ரயில் பெட்டிகளைப் பார்க்கும்போதே நமக்கு நடுக்கம் ஏற்படுகிறது. அந்த இரவில் பயணிகள் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த வலியை உணர்ந்ததால் தான், இந்த மக்களும் தங்கள் சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல், பயணிகளுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்