You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்து: தமிழக பயணிகள் எத்தனை பேர்? அவர்களின் நிலை என்ன?
ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் ஒன்று, ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பயணித்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் அவர்களின் நிலை என்னவென்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விபத்து நேரிட்ட பாலசோருக்கு விரைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணிகளில் முதல் கட்டமாக 250 பேர் மீட்கப்பட்டு, சிறப்பு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பயணிகள் எத்தனை பேர்?
கொல்கத்தா மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது நேற்று இரவு மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகே இருந்த தண்டாவாளத்தில் விழுந்தன.
அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதி விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு முதல் விபத்து நடந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளும் கணிசமான அளவில் வந்துகொண்டிருந்ததாகக் கூறப்படு்கிறது.
விபத்துக்குள்ளான ரயிலில் மொத்தம் 867 பயணிகள் சென்னைக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கணக்கிடப்பட்டுவருவதாகவும் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை செண்ட்ரல் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்தார்.
எனவே பலியானவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு
நேற்று இரவே ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, இன்று காலை சென்னை செண்ட்ரல் நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், மீட்புப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேந்தவர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில் ஒடிசாவின் பத்ரக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த ரயிலில் சுமார் 250 பயணிகள் வந்துகொண்டுள்ளனர். அதேபோல விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களை ஒடிஷா அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்துவருவதாகத் தெரிவித்தார்.
மேலும், விபத்து குறித்த தகவல்களை அறிய 9445869843 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவும் மாநில கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம்.
3 அமைச்சர்கள் ஒடிஷா பயணம்
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாலசோருக்கு விரைந்துள்ளனர். அவர்களுடன் அதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறது.
அடுத்த 4 நாட்கள் அங்கே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.
தமிழ்நாடு அரசின் நிதியுதவி
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், ரயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்