You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - தேர்தலுடன் தொடர்புபடுத்தப்படுவது ஏன்?
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபரான பைடனுக்கு தற்போது 80 வயதாகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கீழே விழுந்த போது, அவரது உதவியாளர்கள் அவரைத் தாங்கிப்பிடித்து மேலே எழவைத்தனர். இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
921 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி கை குலுக்கிய அதிபர், இதற்காக சுமார் ஒன்றரை மணிநேரம் நின்றுகொண்டே இருந்தார்.
"அவருக்கு காயங்கள் ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்," என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
"வியாழக்கிழமையன்று பட்டம் பெற்றவர்களுடன் அவர் கைகளை குலுக்கிக் கொண்டு நின்றிருந்த இடத்தில் ஒரு மணல் நிரப்பப்பட்ட பை வைக்கப்பட்டிருந்தது," என பென் லாபோல்ட் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வெள்ளை மாளிகை திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், "மணல் பையில் நான் சிக்கிக்கொண்டேன்," என சிரித்தபடியே கூறினார்.
வெள்ளை மாளிகையின் செய்தி அறையின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், மேடை மீது நின்றிருந்த அதிபர், அங்கிருந்த கருப்பு நிற மணல் பையில் கால் பட்டு இடறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடந்த போது பதிவான காட்சிகளில், அதிபர் உரை நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த டெலிப்ராம்ப்டர் சாய்ந்துவிடாமல் பிடிப்பதற்காக இருபுறமும் இருந்த மணல் பையில் தவறுதலாக கால் பட்டு இடறி கீழே விழுந்தார். அப்போது விமானப் படை அலுவலர்களும், அதிபரின் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகளும் அவரைத் தாங்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர் யாருடைய உதவியுமின்றி அவரது இருக்கைக்கு நடந்து சென்ற காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. நிகழ்ச்சி முடிந்த பின் அவர் வேகமாக நடந்து சென்றதையும் காணமுடிந்தது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அலுவலர் மேலும் பேசுகையில், அதிபர் தமது விமானத்துக்குத் திரும்பிய போது செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு அலுவலர் கரைன் ஜீன்-பியாரே, அதிபரின் உடல் நிலை "நன்றாக இருப்பதாகவும்" விமானத்தில் ஏறிய போது அனைவரையும் பார்த்து ஒரு "பெரிய புன்னகையுடன்" விமானத்தில் ஏறியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட அவரது வயது தடையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த தேர்தல் நடைபெறும் போது அவருக்கு 82 வயதாகி இருக்கும் என்பதால், இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாலும், அதிபர் பதவியில் அவர் மீண்டும் தொடர முடியுமா என்பது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களில் பெரும்பாலான பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
ஏற்கெனவே ஒருமுறை தனது சைக்கிளில் இருந்து விழுந்த அதிபர், மற்றொருமுறை விமானத்தில் ஏற முயன்ற போது கீழே விழுந்த சம்பவமும் தற்போதைய சம்பவத்துடன் சேர்ந்து பொதுமக்களின் கவலையை அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பைடனை எதிர்த்துப் போட்டியிடத் தயாராகி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அயோவாவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், பைடன் கீழே விழுந்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்தார். அப்போது, பைடன் இப்படி சிறுபிள்ளையைப் போல் கீழே விழுந்திருந்தாலும், "அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்," என்றார். 76 வயதான டிரம்ப், பைடனின் வயது குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டில் ஒரு மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப், அந்த மேடையில் மிகவும் கவனமாக நடந்து சென்ற செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாகப் பேசிய அவர், "கால் விரல் இடறினால் கூட கீழே விழும் ஆபத்து இருப்பதால் இது போன்ற நிலையில் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்," என்றார்.
அந்த சம்பவத்தின் போது, நியூயார்க் நரின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்வுப் பாதை வழுக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தமது உடல் நிலை குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார்.
ஃப்ளோரிடா ஆளுனரும், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடத் தயாராகும் மற்றொரு நபருமான ரோன் டேசான்டிஸ், நியூஹாம்ப்ஷையரில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்த போது, பைடன் கீழே விழுந்தது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது,"இந்த சம்பவத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்,
மேலும், "ஜோ பைடனின் தவறான கொள்கைகளால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவும் விரைவில் அதிலிருந்து மீண்டு வர வாழ்த்துகிறேன்," என்றார்.
அதிபர் ஜோ பைடன் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.
அப்போது வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓ'கான்னர், "அதிபர் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தமது வேலைகள் முழுவதையும் தாமாகவே செய்துகொள்கிறார். எந்த ஒரு வேலையையும் அவர் செய்யாமல் விடுவதில்லை," என தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
முதுகு தண்டுவடம் மற்றும் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் நடக்கும் போது சிறிது வித்தியாசமாகத் தெரிகிறது என்றும் இருப்பினும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார் என்றும் டாக்டர் ஓ' கான்னன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது கடந்த 2012ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மாடிப்படிகளில் ஏறிய போது இப்படி கால் இடறிய சம்பவம் நடந்தது. இதே போல் கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் விமானப் படை படிக்கட்டில் இருந்து கால் இடறி கீழே விழுந்தார்.