You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தண்ணீர்! தண்ணீர்! என்ற கதறல் எங்கும் கேட்டது" - அதிர்ச்சியில் உறைந்து போன உள்ளூர் மக்கள்
ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 261 பேரை பலி கொண்ட கோர விபத்து நேரிட்ட இடத்தில் காணக் கிடைக்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. உடல் உறுப்புகளை இழந்து வலியில் துடிக்கும் சிலர், உயிரிழந்தவர்களின் உற்றார், உறவினர்களின் கதறல், தண்ணீர் கேட்டு கதறிய பெண்கள், குழந்தைகள் என நமது செய்தியாளர்கள் கண்ட துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை, ரயில்வே ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினருடன் ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து கொண்டு, விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்களில் டுட்டு விஸ்வாஸும் ஒருவர்.
விபத்து நடந்த போது தன்னுடைய வீட்டில் இருந்ததாக விஸ்வாஸ் கூறுகிறார்.
’’பெரும் சத்தம் கேட்டது. வீட்டை வெளியே வந்து பார்த்த போது இந்த விபத்து நடந்திருப்பதை கண்டோம். பயணிகள் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதியிருந்தது. நான் அந்த இடத்திற்கு சென்ற போது நிறைய பேர் காயமடைந்திருப்பதையும், இறந்துகிடப்பதையும் பார்த்தேன். இறந்து கிடந்த பெற்றோருக்கு அருகில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அழுதுகொண்டிருக்கும் போதே அந்தக் குழந்தையும் இறந்தது’’ என்கிறார் விஸ்வாஸ்.
’’நிறைய பேர் தண்ணீர் கேட்டனர். என்னால் முடிந்தவரை நான் தண்ணீர் வழங்கினேன். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து உதவி செய்தனர்’’ என்றும் விஸ்வாஸ் கூறினார்.
காயமுற்றவர்களை நாங்கள் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் எங்களுக்கு நன்றி சொன்னார்கள். நேற்றைய சம்பவத்தை பார்த்த பிறகு எங்கள் மூளை வேலை செய்யவில்லை. என் உடல் முழுவதும் ரத்தம் இருந்தது’’ என்றும் விஸ்வாஸ் கூறினார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்களின் கிரிஜாசங்கர் ராத்தும் ஒருவர்.
‘’இந்தச் சம்பவம் நடந்த போது ஒரு ரயில் ஒருபுறமும் மற்றொரு ரயில் எதிர்ப்புறமும் வந்துகொண்டிருந்தது. அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதியது. மறுபுறம் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அது பின்னால் இருந்து மோதியதில் அதன் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன. அந்த இடம் முழுவதும் பீதி நிலவியது. நாங்கள் அங்கு சென்று ரயில் பெட்டிக்குள் இருந்து வெளியேற உதவி செய்தோம். முழு இரவும் நாங்கள் உதவினோம்’’ என்கிறார் கிரிஜாசங்கர் ராத்.
ரயிலில் பயணித்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களில் முகேஷ் பாண்டேவும் ஒருவர்.
தற்போது காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகேஷ் பாண்டே, ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த போது கடும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.
’’அரை மணி நேரம் கழித்து நான் ரயிலில் இருந்து வெளியேறினேன். தீவிர காயத்துடன் இருந்தவர்கள் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். நிறைய பேர் இறந்துவிட்டனர். ஆனால், யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை’’ என்கிறார் முகேஷ் பாண்டே.
ரயில் விபத்திற்கு உள்ளானதும் தான் மயக்கமடைந்துவிட்டதாகவும், அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகிறார் கோரமண்டல் ரயிலில் பயணித்த பிகாரைச் சேர்ந்த சன்னிகுமார்.
விபத்தில் உயிர் தப்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணி ஒருவர், ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, "ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். பலத்த சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். ரயிலில் இருந்து கீழே இறங்கி பார்த்த போது அனைவரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்கு உதவுவது? அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்” என்று கூறினார்.
ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய மற்றொரு நபர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன். எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் வெளியே வந்தபோது, ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவர் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்