'96 ரன்கள் வித்தியாசம்' - இந்தியாவின் அபார வெற்றிக்கு வித்திட்ட 5 பேர் யார்?

3வது முறை சாம்பியன் - இந்தியா வெற்றிக்கு வித்திட்ட 5 பேர் யார்?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

இதன் மூலம், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 2007 மற்றும் 2024-ல் வென்ற பிறகு, இந்தியா இப்போது 2026இல் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

நியூசிலாந்து வெற்றி பெற இந்தியா 256 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது, ஆனால் நியூசிலாந்து 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3வது முறை சாம்பியன் - இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இந்த வெற்றியின் மூலம், இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ச்சியாக இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் அற்புதமாக செயல்பட்டனர்.

குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 15 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், அக்சர் படேல் மூன்று ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக, சஞ்சு, இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புயல் ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்தது.

அக்சர் - பும்ரா அபாரம்: நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து ஆட்டம் எப்படி?

256 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கின் அழுத்தம் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் ஆலன் மீது முதல் பந்திலேயே தெளிவாகத் தெரிந்தது.

இருப்பினும், முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஃபின் ஆலனின் கேட்சை சிவம் துபே கைவிட்டார்.

அர்ஷ்தீப்பின் முதல் ஓவரில் நியூசிலாந்து வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் டிம் சீஃபர்ட் இரண்டாவது ஓவரிலேயே தனது ஆக்ரோஷத்தைக் காட்டினார். ஹர்திக் பாண்ட்யா இரண்டாவது ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

நியூசிலாந்து ஆட்டம் எப்படி?

மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் ஃபின் ஆலனை அவுட்டாக்கி, அக்சர் படேல் இந்தியாவுக்கு முதல் திருப்புமுனையை வழங்கினார்.

பின்னர் பும்ரா நான்காவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவை அவுட்டாக்கினார்.

பிளிப்ஸ் விக்கெட்டை அக்‌ஷர் பட்டேல் வீழ்த்த, பவர்பிளேயில் நியூசிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கிடையில், டிம் சீஃபர்ட் களத்தில் இருந்து 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

எட்டாவது ஓவரின் நான்காவது பந்தில், ஹார்திக் பாண்ட்யா மார்க் சாப்மேனை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அவர் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே டிம் சீஃபர்ட்டை வருண் சக்ரவர்த்தி அவுட்டாக்கினார். நியூசிலாந்து வெறும் 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்தது.

இருப்பினும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல்லுடன் இணைந்து நியூசிலாந்தின் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர்.

13வது ஓவரில், அக்சர் படேல் இந்த கூட்டணியை முறியடித்தார். அக்சர் படேல் டேரில் மிட்செலின் விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர்.

16வது ஓவரில், பும்ரா மூன்றாவது பந்தில் நீஷனையும், நான்காவது பந்தில் ஹென்றியையும் அவுட்டாக்கினார்.

பும்ரா அதோடு நிற்கவில்லை,18வது ஓவரில் சாண்ட்னரையும் அவுட் ஆக்கினார். சாண்ட்னர் 43 ரன்கள் எடுத்தார்.

19வது ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா, ஜேக்கப் டஃபியை வீழ்த்த, நியூசிலாந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

சஞ்சு சாம்சன் அதிரடி

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக், சஞ்சு, கிஷன் அரை சதம்

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருப்பினும், முதல் ஓவரில் ஏழு ரன்களும், இரண்டாவது ஓவரில் ஐந்து ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

மூன்றாவது ஓவரில் சஞ்சுவும் அபிஷேக்கும் 15 ரன்கள் எடுத்து ரன் விகிதத்தை அதிகரித்தனர்.

நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அபிஷேக் சர்மா பவுண்டரிகள் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா நல்ல தொடக்கம்

2026 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக, இந்திய தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

அபிஷேக் சர்மா 18 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இந்தியாவின் ஸ்கோர் பவர்பிளேயில் 92 ரன்களை எட்டியது.

இருப்பினும், எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

அபிஷேக் சர்மா அரைசதம்

பட மூலாதாரம், Getty Images

இஷான் கிஷனும் சஞ்சு சாம்சனும் ரன்களின் வேகத்தைக் குறைக்க விடவில்லை. அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 127 ரன்களை எட்டியது.

சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது சாம்சனின் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். டி20 உலகக் கோப்பையின் இறுதி மற்றும் அரையிறுதி இரண்டிலும் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

14வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

சஞ்சு, அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் அரைசதம் - இந்தியா 255 ரன்கள் குவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், இஷான் கிஷன் 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியாவின் ஸ்கோர் வெறும் 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.

16வது ஓவரில் சஞ்சு, கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தி, நீஷம் நியூசிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டு வந்தார்.சஞ்சு சாம்சன் 89 ரன்களும், கிஷன் 54 ரன்களும் எடுத்தனர்.

சிவம் துபே

இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்ட்யாவும் நீண்ட நேரம் கிரீஸில் நீடிக்க முடியாமல் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதியில் அதிரடி காட்டினார். திலக் வர்மா எட்டு ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு வந்த பாதை

இந்திய அணி குரூப் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளை இந்தியா வென்றது.

அடுத்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதிக்கு இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யகுமார் யாதவின் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

நியூசிலாந்து அணி குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றது. அதனால், 6 புள்ளிகளோடு டி பிரிவில் அந்த அணி இரண்டாவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

சூப்பர் 8 சுற்றில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சுற்றில் 3 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து, ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது.

இந்தியா முதலில் பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள் இதுவரை

2007: சாம்பியன் - இந்தியா, ரன்னர் அப் - பாகிஸ்தான்

2009: சாம்பியன் - பாகிஸ்தான், ரன்னர் அப் - இலங்கை

2010: சாம்பியன் - இங்கிலாந்து, ரன்னர் அப் - ஆஸ்திரேலியா

2012: சாம்பியன் - வெஸ்ட் இண்டீஸ், ரன்னர் அப் - இலங்கை

2014: சாம்பியன் - இலங்கை, ரன்னர் அப் - இந்தியா

2016: சாம்பியன் - வெஸ்ட் இண்டீஸ், ரன்னர் அப் - இங்கிலாந்து

2021: சாம்பியன் - ஆஸ்திரேலியா, ரன்னர் அப் - நியூசிலாந்து

2022: சாம்பியன் - இங்கிலாந்து, ரன்னர் அப் - பாகிஸ்தான்

2024: சாம்பியன் - இந்தியா, ரன்னர் அப் - தென்னாப்பிரிக்கா

தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.

உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?

உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு