கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு கத்தார் சிறையிலிருக்கும் எட்டு இந்திய முன்னாள் கடற்படையினர் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு, கத்தார் சிறையில் உள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை இந்திய தூதர் சந்தித்தார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தார்.

இந்த எட்டு இந்திய அதிகாரிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கத்தார் சிறையில் உள்ளனர். அக்டோபர் 26 அன்று, கத்தார் நீதிமன்றம் இந்த எட்டு இந்திய அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்தது.

இந்த முடிவால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

‘கைதிகளைச் சந்திக்க அனுமதி கிடைத்தது’

டிசம்பர் 7-ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். “இது கைதிகளின் குடும்பம் சார்பாகச் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு விசாரணைகள் நடந்தன. ஒன்று நவம்பர் 30-ஆம் தேதியும் மற்றொன்று நவம்பர் 23-ஆம் தேதியும் நடந்ததாக நான் நினைக்கிறேன்,” என்றார்.

மேலும், அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடக்கும் என்று நினைப்பதாகவும், வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதற்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

"இதற்கிடையில், டிசம்பர் 3 அன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது," என்றார்.

‘தி டெலிகிராஃப்’ செய்தி இணையதளத்தின்படி, இதற்கு முன்பே இந்திய தூதரக அதிகாரிக்கு தூதரக அணுகல் கிடைத்தது.

கடந்த வாரம் துபாயில் நடந்த COP28 உச்சிமாநாட்டின் போது கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தபோது பிரதமர் மோதி இந்த விவகாரத்தை எழுப்பினாரா என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாக்சியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு நேரடியான பதிலை அளிக்காமல், சமூக வலைதளமான X-இல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவை பாக்சி குறிப்பிட்டார்.

அந்தப் பதிவில், “இந்தியா-கத்தார் இருதரப்பு உறவுகள் குறித்தும், கத்தாரில் உள்ள இந்திய சமூகம் குறித்தும் நாங்கள் உரையாடினோம்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கத்தார் அரசாங்கம் 8 முன்னாள் இந்திய கடற்படையினரைக் கைது செய்தது. அவ்வாண்டு மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய குடிமக்களும் முன்னாள் கடற்படை அதிகாரிகள். கத்தாரில் இருக்கும் ஜாஹிரா அல் அலாமி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரைத் தவிர்க்கக்கூடிய இத்தாலிய உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நிறுவனத்தில் 75 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள். அந்நிறுவனம் 2022-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிறுவனத்தை மூடப்போவதாக கூறியிருந்தது.

நிறுவனத்தின் பின்னணி

அந்நிறுவனத்தின் இணையதளத்தில், அது கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகப் பங்காளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தனியார் நிறுவனம் கத்தார் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கி வந்தது.

பாதுகாப்பு உபகரணங்களை இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தன்னை ஒரு நிபுணராக இந்நிறுவனம் விவரிக்கிறது.

இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர்.

"பாதுகாப்பு உபகரணங்களை இயக்குவதிலும் மக்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் இது கத்தாரில் முன்னணியில் உள்ளது" என்று நிறுவனத்தின் LinkedIn பக்கம் கூறுகிறது.

மேலும், "பாதுகாப்பு மற்றும் விண்வெளி விஷயங்களில் அல் ஜாஹிரா நிறுவனம் கத்தாரில் ஒரு சிறந்த நிலையில் உள்ளது," என்று கூறியிருக்கிறது.

ஊடக அறிக்கைகளின்படி, இந்நிறுவனத்தின் தலைவர் காமிஸ் அல் அஜாமி மற்றும் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் பொதுவானவை, சில தனித்துவமானவை.

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களும் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சம்பள பாக்கியும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், கத்தார் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது மற்றும் அதன் சுமார் 70 ஊழியர்களை 2023-ஆம் அண்டு மே மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்ட ஊழியர்கள் இஸ்ரேலுக்கு முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஊடகங்கள் மற்றும் பிற உலகளாவிய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த முன்னாள் கடற்படையினர் மிகவும் மேம்பட்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பான கத்தாரின் உளவுத் திட்டம் குறித்து இஸ்ரேலுக்கு தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது இந்த மாலுமிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்படலாம்.

கத்தாரின் உளவு நிறுவனம், இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னணு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறது.

கத்தாரின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜாஹிரா அல் அலாமியில் பணியாற்றிய இந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள், கத்தார் கடற்படைக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து வந்தனர்.

இந்தியா மற்றும் கத்தார் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தியா-கத்தார் உறவுகள்

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் ஜூன் 2022-ஆம் ஆண்டு வந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டார்.

அந்த நேரத்தில், இந்தியாவிடம் 'பொது மன்னிப்பு' கோரிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இஸ்லாமிய உலகில் கோபம் பரவாமல் இருக்க, பா.ஜ.க உடனடியாக நுபுர் ஷர்மாவை நீக்கியது.

இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இரண்டாவது பெரிய சவாலாக கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும்.

மேலும், இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. கத்தார், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரிய நாடு.

காஸாவில் இஸ்ரேலின் குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)