You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் பழமையான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் காணாமல் போனதா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.
நேற்று (புதன், டிசம்பர் 6) இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை மாத்திரம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிபிசி தமிழிடம் கூறினார்.
இது தொடர்பாக, பிபிசி தமிழ் தொண்டீஸ்வரத்திற்கு நேரடியாகச் சென்று தரவுகளைத் திரட்டியது.
‘117 சைவ ஆலயங்களைக் காணவில்லை’
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அநுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 117 சைவ ஆலயங்களைக் காணவில்லை என்றார்.
மேலும், அநுராதபுரம் மாவட்டத்திற்கு பக்கத்தில், பொலன்னறுவை மாவட்டத்தில் இன்றும் சிவன் கோவில் இருக்கின்றது. சிதிலமடைந்து காணப்படும் அந்தச் சோழர் காலத்து சிவன் கோவிலை சீரமைக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்றார் அவர்.
ஆனால், கௌதாரிமலையிலும், நெடுந்தீவிலும் விகாரைகளை கட்டலாமா, அல்லது தமிழர்கள் வாழும் இடங்களில் கட்டலாமா என்று ஒவ்வொரு இடமாக அரசாங்கம் ஆராய்ச்சி செய்து வருகிறது, என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தொண்டீஸ்வரம் சிவன் கோவிலை சீரமைக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறினார்.
“அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்த 117 சிவன் ஆலயங்களை, சைவ ஆலயங்களை கட்ட நீங்கள் தயார் இல்லை. பொலன்னறுவையில் இருக்கின்ற சிவன் ஆலயத்தை கட்டுவதற்கு நீங்கள் தயார் இல்லை. என்ன மனநிலை. நீங்கள் எப்படி திருந்த போகின்றீர்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார்.
பஞ்ச ஈஸ்வரங்கள்
இலங்கையில் பல சிவன் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் பஞ்ச ஈஸ்வரங்கள் எனப்படும் ஆலயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
சிலாபம் நகரில் முன்னேஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், மன்னாரில் திருகேதீஸ்வரம், கீரிமலையில் நகுலேஸ்வரம், மாத்தறையில் தொண்டீஸ்வரம் என ஐந்து சிவன் ஆலயங்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் பஞ்ச ஈஸ்வரங்களில் மாத்தறை பகுதியிலுள்ள தொண்டீஸ்வரம் ஆலயம் மாத்திரம் அழிவடைந்து, ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்களே முற்றாக இல்லாது போயுள்ளன.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
“விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முதல் இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன. தொண்டீஸ்வரம் மாத்தறையில் இருந்தது. இன்றைக்கு அந்த ஆலயம் எங்கே?” என்றார் அவர்.
பழமையான பஞ்ச ஈஸ்வரங்களில் ஒரு ஆலயமான தொண்டீஸ்வரம் என்கின்ற ஆலயத்தை ஏன் இன்னும் கட்டுவதற்கு முயற்சிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தொண்டீஸ்வரம் ஆலயம் காணாமல் போனதா?
இலங்கையின் தெற்குப் பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் இந்த தொண்டீஸ்வரம் ஆலயம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை (தெவிநுவர) எனும் பகுதியிலேயே இந்த ஆலயம் இருந்ததாக நம்பப்படுகின்றது.
எனினும், இந்த ஆலயம் தொடர்பான எந்தவித தகவல்களும் தற்போது இல்லாது போயுள்ளதுடன், ஆலயம் முழுமையாக அழிவடைந்து காணாமல் போயுள்ளது.
பிபிசி தமிழ் தொண்டீஸ்வரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு ஆலயம் இருந்ததற்கான சான்றுகளைத் திரட்டியது.
தேவேந்திரமுனை (தெவிநுவர) பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் மாத்திரம், பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று மற்றும் ஆலயம் ஒன்று காணப்பட்டமைக்கான பழமை வாய்ந்த கற்கள் சிலவற்றை அங்கு சென்ற எம்மால் காண முடிகின்றது.
தேவேந்திரமுனை பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் ஒத்பிலிம புராண விகாரை வளாகத்தில் இந்த சிவலிங்கம் மற்றும் சில சான்று பொருட்களை காண முடிகின்றது.
இவ்வாறு காணப்படுகின்ற இந்த சான்றுகளே, தொண்டீஸ்வரம் ஆலயத்தின் சான்றுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும், இதை தவிர தேவேந்திரமுனையின் எந்தவொரு இடத்திலும் வேறு தொண்மை வாய்ந்த சான்றுகளை அடையாளம் காண முடியவில்லை.
அரசாங்கத்தின் பதில் என்ன?
காணாமல் போனதாகக் கூறப்படும் தொண்டீஸ்வரம் ஆலயம் குறித்து உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்ட தகவல்கள் குறித்து, ஆராயுமாறு தான் தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு ஆலயமொன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)