You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? – படங்கள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ள நிலையில், புயல் நாளை கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னையில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புது வண்ணாரப்பேட்டையில், மழை வெள்ளம் நிரம்பியிருந்த ஒரு பகுதியில், பக்கவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்ததாகப் பெருநகரச் சென்னை காவல்துறை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி, சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளதையடுத்து பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் தேங்கி இருக்கிறது.
புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரை தளங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசும் போது, மழையினால் சென்னையில் வசிக்கும் 3 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வெளியில் வரமுடியாத இடங்களில் பொதுமக்களுக்கு உணவளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சென்னை மாநகரின் பல தெருக்களும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. போக்குவரத்து வசதிகள் ஸ்தம்பித்திருக்கின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையின் காரணமாக 4-ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தையும் மீறி சென்னையில் மக்கள் ஆங்காங்கே நடந்தும், வாகனங்களிலும் செல்வதைக் காண முடிந்தது.
மழையுடன் சேர்த்து பலத்த காற்று வீசுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
காஞ்சிபுரத்தில், சுமார் 60 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் ஒன்று முறிந்து காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் விழுந்தது.
இதனால் அந்தப் பகுதி வழியாக செல்கின்ற தனியார் நிறுவனத்தின் பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் மழையின் போது சுமார் 82 கி.மீ வேகத்தில் காற்று விசியது.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்புத்துறை, காவல்துறை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் அருகிலுள்ள நிவாரண மையங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை நகரில் உள்ள நிவாரண மூகாம்களில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நிவாரண மூகாம்களுக்கு வர தயங்குவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சென்னையின் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், வெள்ளநீரில் அடித்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்படுகின்றன.
சில இடங்களில் தரை தளத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால், மக்கள் முதல் மாடியில் உள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளிலும் மழைவெள்ளம் அதிகரித்துள்ளதல், வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
புயல் காரணமாக சூறைக்காற்று வீசும் என்பதால் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் பல மீனவ கிராமங்களில் மீனவர்களின் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் மெரினா, பெசண்ட் நகர், எண்ணூர், பழவேற்காடு என இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)