You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள், கொச்சி
நிமிஷா பிரியா... 19 வயதில் கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து பெரிய கனவுகளுடன் ஏமனை நோக்கிப் புறப்பட்டவர்.
ஏமன் தலைநகர் சனாயாவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக அவருக்கு வேலை கிடைத்தது. குறைவான ஊதியத்திற்கு வீட்டு வேலை செய்யும் தன் தாயிடம், நம் கஷ்ட காலம் விரைவில் முடிவுக்கு வரும் என நிமிஷா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கனவு நிமிஷாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொடுங்கனவாக மாறியுள்ளது. ஆம், தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் 34 வயதான நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி நாட்களை சனாயாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது.
ஆனால், ஏமன் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பை நிமிஷாவிற்கு வழங்கியுள்ளது. அதன்படி, இழப்பீட்டுத் தொகை செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே மரண தண்டனையில் இருந்து தப்பிக்க நிமிஷாவிற்கு உள்ள ஒரே வாய்ப்பு.
தற்போது அவர் குடும்பத்தினரும், நிமிஷா மரண தண்டனைக்கு எதிராக பிரசாரம் செய்து வருபவர்களும் அந்த அதிசயத்தை நிகழ்த்த முயன்று வருகின்றனர்.
என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள்
நிமிஷாவின் தாயாரான 57 வயது பிரேமா குமாரி, தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கும்போது மீண்டும் மீண்டும் மனம் உடைந்து போனார்.
'’நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்,'' என்கிறார் கொச்சியில் வசித்து வரும் பிரேமா குமாரி.
நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும் என்றும் பிரேமா குமாரி கூறுகிறார்.
ஆனால், ஏமனுக்கு செல்வது என்பது எளிதல்ல. 2017ஆம் ஆண்டு இந்தியர்கள் ஏமனுக்கு செல்ல அரசு தடை விதித்தது. கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் அரசின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்.
நிமிஷாவின் தாய் மற்றும் அவரது 11 வயது மகள் மிஷால் இருவரும் சனாயாவுக்கு செல்ல அனுமதி கோரி, சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவர்களைத் தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கோரிக்கையை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்பதை அவர்கள் காரணமாகக் கூறினர்.
ஏமனில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இந்த காரணத்தைக் கூறுகிறது. ஏமனை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்தியா அங்கீகரிக்கவில்லை. எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது.
தற்போது சேவ் நிமிஷா கவுன்சில் மீண்டும் ஒருமுறை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை என அவர் கூறுகிறார்.
"நிமிஷாவிற்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. இப்படியொன்று அவருக்கு நடந்திருக்கக் கூடாது’’ என்கிறார் சேவ் நிமிஷா கவுன்சிலின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பாபு ஜான்.
நிமிஷா நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால், உள்நாட்டுப் போரில் ஏமனில் சிக்கிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கியதாகவும், அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டதாகவும் அவரது தாயார் கூறுகிறார். ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை.
ஏமன் வேலை என்பது வறுமையில் இருந்து விடுபட அவருக்கான வாய்ப்பாக இருந்தது. 2011ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய நிமிஷா , டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கணவருடன் மீண்டும் ஏமன் சென்றார். அவர் கணவருக்கு எலக்ட்ரீஷியன் உதவியாளராக சொற்ப ஊதியத்தில் அங்கு வேலை கிடைத்தது.
கடந்ட் 2012ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் மகள் பிறந்தபோது அவர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டனர். அதனால், குழந்தையுடன் 2014ஆம் ஆண்டு தாமஸ் கொச்சி திரும்பினார். தற்போது அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தன்னுடைய குறைந்த ஊதிய வேலையை விட்டுவிட்டு சொந்தமாக மருத்துவமனை தொடங்க 2014ஆம் ஆண்டு நிமிஷா முடிவெடுத்தார். ஆனால், அந்த நாட்டு சட்டப்படி உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நிமிஷா வாழ்க்கை திசை மாறக் காரணமான மஹ்தி என்பவர் கதைக்குள் வருகிறார்.
மஹ்தி ஜவுளிக்கடை நடத்தி வந்தவர். அவரது மனைவி நிமிஷா பணி செய்த மருத்துவமனையில்தான் குழந்தை பெற்றார். தன் மகளின் ஞானஸ்தானத்திற்காக நிமிஷா இந்தியா வந்தபோது மஹ்தியும் விடுமுறையில் வந்தார்.
நிமிஷாவும் அவரது கணவரும் நண்பர்கள், குடும்பத்தினரிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினர். ஒரு மாதத்திற்குப் பின் ஏமன் சென்ற நிமிஷா சொந்த மருத்துவமனையைத் தொடங்கினார். கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் உள்நாட்டுப் போர் வெடித்தது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை.
அதற்கடுத்த இரண்டு மாதங்களில் ஏமனில் இருந்து 1000 வெளிநாட்டினர் உட்பட 4,600 குடிமக்களை மீட்டது இந்தியா. அப்போது வெளியேறாத சில நூறு பேரில் நிமிஷாவும் ஒருவர். “நாங்கள் கிளினிக் அமைப்பதற்காக அதிகமான பணத்தை முதலீடு செய்திருந்தோம். அதனால், நிமிஷாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை,” என்று கூறுகிறார் தாமஸ்.
அவரது மொபைல் போனில் இருந்து கிளினிக்கின் படங்களை அவர் காட்டினார். அதில் 14 படுக்கைகள் கொண்ட அல் அமான் மெடிக்கல் கிளினிக் என்ற பெயர் பலகையுடன் கூடிய கிளினிக், புதிய நீல நிற நாற்காலிகளை கொண்ட வரவேற்பு அறை, புத்தம் புது சோதனைக்கூட கருவிகளோடு வெள்ளை கோட் அணிந்த நபர், காத்திருப்போர் அறையில் மாட்டப்பட்டிருந்த புதிய சோனி டிவி மற்றும் மருந்தகத்தில் மஹ்தி அமர்ந்திருப்பது உள்ளிட்ட படங்கள் இருந்தன.
கிளினிக் நன்றாக செயல்படத் தொடங்கிய அதே நேரத்தில் மஹ்தி குறித்து நிமிஷா புகார்களைத் தெரிவிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறார் தாமஸ்.
பிபிசிக்கு கிடைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின்படி, மஹ்தி “ கொச்சியில் உள்ள தாமஸ்-நிமிஷா தம்பதியினர் வீட்டிற்குச் சென்றபோது அவர்களது திருமண புகைப்படத்தைத் திருடியுள்ளார். பின்னர் அதை மாற்றி அவரே நிமிஷாவை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்."
மேலும் அதில், “அவர் உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமை படுத்தியதாவும், கிளினிக் வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும், இந்த நிதி மோசடி குறித்து நிமிஷா அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர்களது உறவு மோசமான நிலையை அடைந்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில், "மஹ்தி துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்" மற்றும் "அவர் வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நிமிஷா போலீசில் புகார் அளித்தபோது, "மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இவரையே ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்" கூறப்பட்டுள்ளது.
கொலை மற்றும் கைது
தாமஸ் இந்தக் கொலை குறித்து முதன்முதலில் 2017ஆம் ஆண்டு தொலைக்காட்சி வழியாகவே தெரிந்து கொண்டாராம்.
“தலைப்புச் செய்தியில் ஏமனில் மலையாளி (கேரளா) செவிலியரான நிமிஷா பிரியா தனது கணவரைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டியதற்காக கைது என்று செய்திகள் வெளியானதாக” கூறினார். மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்தே சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
"நிமிஷாவுக்கும் எனக்கும் திருமணம் ஆகியிருக்கும்போது, இந்த நபர் எப்படி அவரது கணவனாக இருக்க முடியும்?" என்று அவர்களின் திருமண ஆல்பத்தை என்னிடம் காட்டிக் கொண்டே கேட்டார் தாமஸ்.
நிமிஷா கைது செய்யப்பட்டு ஒருவாரம் கழித்து தாமஸை போனில் தொடர்பு கொண்டபோது இருவரும் அழுதுவிட்டதாகக் கூறுகிறார் தாமஸ்.
“எனக்காகவும், எங்களது குழந்தைகளுக்காகவுமே இதைச் செய்ததாக நிமிஷா என்னிடம் கூறினார். அவர் எளிய வழியைத் தேர்ந்தெடுத்து மஹ்தியுடனே வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. இந்த பிரச்னைக்குப் பிறகு அவர் மீதான அன்பும் காதலும் எனக்கும் அதிகரித்துள்ளது.”
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிமிஷாவின் தாயார் மற்றும் கவுன்சில் சார்பில் ஆஜராகும் புலம்பெயர்ந்தோர் உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.ஆர்.சுபாஷ் சந்திரன், "உண்மையில் நிமிஷாவுக்கு மஹ்தியை கொல்லும் நோக்கம் இல்லை" என்றும் "அவரும் பாதிக்கப்பட்டவர்தான்" என்றும் கூறுகிறார்.
"மஹ்தி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருந்ததால், அதை அவரிடமிருந்து திரும்பப் பெற முயன்றார் நிமிஷா. எனவே, அவரை மயக்கமடையச் செய்ய முயன்றார். ஆனால் அவருக்கு அதிக மருந்தைக் கொடுத்து விட்டதால் அவர் இறந்து விட்டார்,” என்று கூறுகிறார் சுபாஷ் சந்திரன்.
வளைகுடா நாடுகளில் குறைந்த திறன் கொண்ட மற்றும் திறன் சாராத இந்திய தொழிலாளர்கள் சுரண்டப்படுவது ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் தமது தொழிலாளிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைத் தன்னிடத்தில் வைத்திருக்கும் கஃபாலா என்ற முறையைப் பின்பற்றுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு இதன் மற்றொரு பெயர் அடிமைத்தனம் என்றும் இது புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அனைத்து வகை துஷ்பிரயோகங்களுக்கும் வழிவகுப்பதாகவும் கூறுகிறது.
இந்த கஃபாலா முறையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தங்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக வீட்டு வேலை செய்யச் செல்லும் பெண்கள்தான் என்றும் கூறுகிறார் சந்திரன்.
மேலும் இவர் தற்போது "நிமிஷா தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதால் மறுவிசாரணைக்கு" தாக்கல் செய்துள்ளார்.
“நிமிஷாவுக்கு முறையான சட்ட விசாரணை கிடைக்கவில்லை. அவருக்காக வாதாட நீதிமன்றம் ஜூனியர் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது. ஆனால், நிமிஷாவுக்கு அரபு மொழி தெரியாததால் அவரோடு தொடர்புகொள்ள முடியவில்லை. அவருக்கு மொழிபெயர்ப்பாளரும்கூட வழங்கப்படவில்லை. தான் எந்த ஆவணங்களில் கையெழுத்திடுகிறோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது," என்று கூறுகிறார் சந்திரன்.
டெல்லியில் நடக்கும் இந்த வழக்கு குறித்து ஏமன் அதிகாரிகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், சேவ் நிமிஷா கவுன்சிலின் துணைத் தலைவருமான தீபா ஜோசப் கூறுகையில், நிமிஷாவை காப்பாற்ற இந்திய அரசின் ஆதரவு முக்கியம். "மஹ்தியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதும், அவர்களுடன் பேரம் பேசுவதும் மட்டுமே ஒரே வழி," என்று தெரிவிக்கிறார் அவர்.
இதற்காக கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் (112,000 அமெரிக்க டாலர்) நன்கொடை அளித்துள்ளார். ஏதாவது பணப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை ஈடுசெய்ய உள்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள கேரள மக்கள் பங்களிப்பார்கள் என்று கவுன்சில் நம்புகிறது.
“நிமிஷா கண்டிப்பாகக் காப்பற்றப்படுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் இழப்பீடு பணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நினைப்பதாகவும்” கூறுகிறார் ஜோசப். “அவர் வேண்டுமானால் குற்றம் புரிந்திருக்கலாம். ஆனாலும் அவரது மகள் மற்றும் தாய்க்காக அவரைக் காப்பாற்ற விரும்புகிறேன்."
தற்போது பிரேமகுமாரி ஏமனுக்கு பயணம் செய்து மஹ்தியின் குடும்பத்துடன் பேச முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஏமனின் உச்சநீதிமன்றம் நிமிஷாவின் மேல்முறையீட்டை நிராகரிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னாள் அவரிடம் தாமஸ் பேசும்போது, நிமிஷா நம்பிக்கையுடன் காணப்பட்டுள்ளார். “மன உறுதியுடன் இருக்குமாறும், தனக்காக பிரார்த்திக்குமாறும்” கூறியுள்ளார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அவருடன் பேசும்போது அவர் “மனம் தளர்ந்து” காணப்பட்டதாகக் கூறுகிறார் தாமஸ்.
"அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி நான் அவரைத் தேற்ற முயன்றேன், ஆனால் அவர் நம்பவில்லை. இதற்கு மேல் நான் எப்படி நம்பிக்கையுடன் இருக்க முடியும்? என்று நிமிஷா கேட்டதாக,” தாமஸ் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)