உத்தர பிரதேசம்: 7 வயது முஸ்லிம் மாணவரிடம் பள்ளி முதல்வர் பாகுபாடு - அசைவ உணவு காரணமா? கள ஆய்வு

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர், அம்ரோஹாவிலிருந்து

ஏழு வயது மாணவருக்கு எதிராக பள்ளி முதல்வர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த போது, மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அதை ஆமோதித்தனர்.

தன் குழந்தையைப் பள்ளியிலிருந்து நீக்கிவிடுவதாக முதல்வர் மிரட்டியதாகவும் மற்ற ஆசிரியர்கள் தன்னை அறையிலிருந்து வெளியே தள்ளிவிட்டதாகவும் அம்மாணவரின் தாயார் குற்றம்சாட்டுகிறார்.

மேற்கு உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தொடர்பான இந்த இரண்டு காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல கேள்விகள் எழுகின்றன.

அந்த வைரல் காணொளியில் ஹில்டன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அவ்னிஷ் ஷர்மா, அந்த ஏழு வயது மாணவர், “பள்ளியில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடுவதாகவும், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வருவதாகவும், கோவில்களை அழிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்” குற்றம் சாட்டினார்.

அந்த மாணவரின் குடும்பம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. பள்ளியில் மத ரீதியாக அம்மாணவர் பாகுபாடுகளை எதிர்கொண்டதாக, குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மாறிமாறி இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த மாணவர் மற்றும் அவரின் தாயாரிடம் பள்ளி முதல்வர் தகாத வார்த்தையில் பேசியதாக விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பள்ளி முதல்வர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை.

இதுகுறித்து அப்பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அம்ரோஹா மாவட்ட பள்ளி ஆய்வாளர் பி.பி. சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, ஏழு நாட்களில் இதுகுறித்து விளக்கம் தருமாறு முதல்வருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஹில்டன் பள்ளியின் நிறுவனரான மறைந்த மங்கல் சிங் சைனி பாஜக அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். எனினும், அவருடைய மகன் அனுராக் சைனி சில ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

பள்ளி குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், செப்டம்பர் 9 அன்று அனுராக் சைனி மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்தார்.

உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?

பள்ளியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் சம்பந்தப்பட்ட மாணவரின் வீடு அமைந்துள்ளது.

நெருக்கடியான இடத்தில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி வீட்டுக்கு வெளியே உள்ளூர் தலைவர்கள் பலர் அமர்ந்துள்ளனர். அம்மாணவரின் தாயார் சபரா பேகத்தை பத்திரிகையாளர்களும் உள்ளூர் தலைவர்களும் சூழ்ந்துள்ளனர்.

அம்மாணவரை சந்திக்க பல தலைவர்களும் விரும்புகின்றனர். தன் தாய்க்கு பின்னால் ஒளிந்துகொண்ட அந்த மாணவர், அழ தொடங்கினார்.

“எதுவும் நடக்காது, எல்லாம் சரியாகிவிடும்,” என தன் மகனை அவர் சமாதானப்படுத்துகிறார்.

இதனிடையே, வந்திருந்த உள்ளூர் தலைவர்களுள் ஒருவர் அம்மாணவரிடம், “நான் (சோயாபீன்) பிரியாணி கொண்டு வந்துள்ளேன்” என்றார்.

இதை கூறியவுடன் அந்த சிறுவன் அமைதியானார். உள்ளூர் தலைவர்கள் தாயாருடனும் சிறுவனுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். “பயப்படாதீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என அவர்கள் கூறிச்சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினர் கோபத்தில் உள்ளனர். சிறுவனின் குடும்பத்தின் நிலைமை குறித்து அறிவதற்காக வந்திருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், “அம்ரோஹாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு முஸ்லிம் சிறுவன் இத்தகைய துன்புறுத்தலை சந்திக்க வேண்டியிருந்தால், முஸ்லிம் மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற பகுதிகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்” என்றனர்.

மேலும், “பள்ளியில் சிறுவனுக்கு நடந்த இந்த அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாது” என அவர்கள் கூறினர்.

சிறுவனின் தாயார் கூறியது என்ன?

சப்ரா பேகத்தின் மூன்று குழந்தைகளும் ஹில்டன் பள்ளியில்தான் படிக்கின்றனர். மூத்த மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறார். வைரல் வீடியோவில் காணப்பட்ட அவருடைய மகன் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, மூன்று குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.

சப்ரா பேகம் கூறுகையில், “அன்றைக்கு நான் என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துவர சென்றபோது, அவனுடைய முகம் சிவந்திருந்தது. அவன் எதுவும் கூறவில்லை. என் மகனை ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தனர். பள்ளியில் ஆசிரியரிடம் பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால், அவர் எதுவும் என்னிடம் கூறவில்லை” என்றார்.

வகுப்பறையில் எடுக்கப்பட்ட அந்த வைரல் வீடியோ செப்டம்பர் 2 அன்று எடுக்கப்பட்டதாக சப்ரா பேகம் கூறுகிறார். தானும் முதல்வரும் வாக்குவாதம் செய்யும் அந்த வீடியோ செப்டம்பர் 3 அன்று எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “என் குழந்தைக்கு நடந்தது குறித்து நான் முதல்வரிடம் கேள்வி எழுப்பினேன். அவர் தகாத வார்த்தைகளில் என்னிடம் பேசினார். பள்ளியிலிருந்து என் மகனை நீக்கிவிடுவதாக மிரட்டினார்” என்றார்.

மேலும், “என் மகன் பள்ளியில் வெடிகுண்டு வைத்துவிடுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்து குழந்தைகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதாக கூறுகின்றனர். அசைவ உணவுகளை என் மகன் எடுத்துவருவதாக கூறுகின்றனர். ஒரு ஏழு வயது குழந்தையின் மீது எப்படி இந்த விஷயங்களை அவர்களால் பேச முடிகின்றது?” என அவர் கேட்கிறார்.

வகுப்பறையில் தன் மகனை முதல்வர் கேள்வி கேட்ட வீடியோவை பார்த்தபோது தான் மிகுந்த கவலையுற்றதாக அவர் கூறினார்.

மேலும், “ஒரு குழந்தைக்கு எதிராக எப்படி இந்த புகார்களை கூற முடிகின்றது? சிறு குழந்தையிடம் எப்படி இத்தகைய கேள்விகளை கேட்க முடிகின்றது?” என அவர் கோபத்துடன் தெரிவித்தார்.

சப்ரா 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தன் குழந்தைகள் தற்போது வளர்ந்துவிட்டதால், சப்ரா மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் செவிலியர் படிப்பு படித்துவருகிறார்.

செவிலியராவதற்கு தயாராகிவரும் அவர், தன் மூத்த மகனை மருத்துவராக்க வேண்டும் என விரும்புகிறார்.

“என் மகன் வளர்ந்ததும் மருத்துவராக விரும்புகிறான். அதனால்தான், என் மூன்று மகன்களையும் அதிக செலவு செய்து அந்த ஆங்கில பள்ளியில் படிக்க வைக்கிறோம். பள்ளிக் கட்டணம் செலுத்துவது எங்களுக்கு எளிதானது அல்ல என்றாலும் எங்களால் முடிந்ததை செய்கிறோம். ஆனால் இப்போது என் மகனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். என் குழந்தைகளின் படிப்பு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

தன் மகன் முஸ்லிம் என்பதாலேயே இவ்வாறு நடத்தப்பட்டதாக சப்ரா கருதுகிறார்.

அவர் கூறுகையில், “இது இந்து-முஸ்லிம் பிரச்னை இல்லையென்றால், அந்த முதல்வர் ஏன் அந்த விஷயங்களை பேச வேண்டும்? இந்து-முஸ்லிம் பிரச்னையைத்தான் அவர் பேசுகிறார்” என்றார்.

பள்ளி முதல்வர் கூறியது என்ன?

வைரல் வீடியோவில் அச்சிறுவனிடம் நடந்துகொண்ட விதம் குறித்து பள்ளி முதல்வர் அவ்னிஷ் ஷர்மாவிடம் கேட்டபோது, “வருத்தமாக இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் உள்ளது முழு சம்பவம் இல்லை. அந்த வீடியோவில் சில பகுதிகள் நீக்கப்பட்டு ‘எடிட்’ செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையை நான் ‘தீவிரவாதி’ என அழைக்கவில்லை” என்றார்.

சிறுவனின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், மதத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் தான் பாகுபாடு காட்டுவதில்லை என கூறினார்.

கல்வித்துறையில் கடந்த 25 ஆண்டுகளாக தான் இருப்பதாக கூறிய அவர், அப்பள்ளியின் முதல்வராக 12 ஆண்டுகளாக இருப்பதாக தெரிவித்தார்.

அவ்னிஷ் ஷர்மா கூறுகையில், “நான் ஓர் இந்து. ஆனால் நான் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை, மாறாக அன்பு செலுத்துகிறேன். நான் யாரிடமாவது பாகுபாடு காட்டியிருந்தால், பள்ளியில் 40% முஸ்லிம் மாணவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்” என்றார்.

அப்பள்ளி அமைந்திருக்கும் பகுதி முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள பகுதியாகும்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் இப்பள்ளியின் மீது முன்பு எழுந்ததில்லை எனக்கூறும் அவ்னிஷ் ஷர்மா, மற்ற முஸ்லிம் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி குறித்து திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குழந்தைகளின் பெற்றோர்களை விசாரணை குழுவின் முன்பு பள்ளி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அந்த பெற்றோர் பள்ளியில் தங்கள் குழந்தைகள் தவறாக நடத்தப்பட்டதில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்கான காரணம் குறித்து விளக்கிய அவ்னிஷ் ஷர்மா, அந்த மாணவர் அசைவ உணவுகளை கொண்டு வருவதாகவும் குழந்தைகளை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவது குறித்து பேசுவதாகவும் பெற்றோர்கள் பலர் புகார் தெரிவித்ததாக கூறினார்.

அவ்னிஷ் கூறுகையில், “இந்த புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக நான் வகுப்பறைக்கு சென்றேன், இந்த புகார்கள் உண்மைதான் என்பதை மற்ற மாணவர்களிடமிருந்து உறுதி செய்தேன். வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் அந்த மாணவர் அப்படி பேசுவதாக கூறினர்” என்றார்.

அவ்னிஷ் குமாரின் கூற்றுகளை நிராகரித்த அம்மாணவரின் தாய் சபரா பேகம், தன்னுடைய குழந்தை பள்ளிக்கு அசைவ உணவுகளை எப்போதும் கொண்டு சென்றதில்லை என்றார்.

சி.பி.எஸ்.இ, எந்த மாநில பாடத்திட்ட பள்ளிகள் அல்லது பல்கலைக்கழக விதிகளிலும் என்ன மாதிரியான உணவுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஹில்டன் பள்ளியில் அசைவ உணவுகளை கொண்டு வருவதற்கு தடை இருப்பதாக அவ்னிஷ் ஷர்மா கூறினார்.

மேலும், “வீட்டில் ஒரு குழந்தை என்ன சாப்பிடுகிறது என்பது அவருடைய விருப்பம். ஆனால், இதற்கென பள்ளியில் விதிமுறை இருக்கிறது. இதனை பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றார்.

சட்டம் என்ன சொல்கிறது?

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், “ஒருவர் என்ன ஆடை அணிகிறார், என்ன சாப்பிடுகிறார், யாரை விரும்புகிறார் என்பதெல்லாம் அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதே உரிமை ஒரு குழந்தைக்கும் இருக்கிறது. பள்ளியில் அசைவ உணவுகள் கொண்டு வரப்படக் கூடாது என விதிமுறை இருந்தால், அதனை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியும்” என்றார்.

மேலும், “பள்ளியில் இப்படியொரு விதி இருக்கிறதென்றால், அசைவ உணவு கொண்டு வந்தால் அதற்கென தண்டனை அல்லது அபராதம் கூட இருக்கலாம். ஆனால், பள்ளியிலிருந்து நீக்குவது அந்த குறிப்பிட்ட மாணவர் மீது களங்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு குழந்தையின் மனநலத்திற்கு நல்லதல்ல” என்றார்.

இந்த சம்பவம் அக்குழந்தையின் நலத்திற்கோ அல்லது அப்பள்ளியின் நலத்திற்கோ ஏற்றதாக இல்லை இல்லை என சஞ்சய் ஹெக்டே கூறுகிறார்.

“இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவது அநீதியானது. இது மக்களிடையே அப்பள்ளியின் பெயரை கெடுக்கும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ விரும்பினால் தங்களின் விதிமுறைக்கு ஏற்ப, அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்” என்று சஞ்சய் ஹெக்டே கூறினார்.

அம்ரோஹா மாவட்டத்தில் மத நல்லிணக்கம்

பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் அம்ரோஹா நகரில் மத நல்லிணக்கம் நிலவிவருகிறது. அம்ரோஹா ஜே.எஸ். இந்து கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மஹேஷ் ஷரன் கூறுகையில், சுற்றுப்புற மாவட்டங்களில் வகுப்புவாத கலவரங்கள் நடந்தாலும், அம்ரோஹாவில் அமைதி நிலவிவருவதாக தெரிவித்தார்.

மேலும், “ஓர் ஆசிரியருக்கு எல்லா மாணவர்களும் சமம்தான். அம்மாணவர் இந்து, முஸ்லிம் அல்லது யாராக இருந்தாலும் சரிதான். இத்தகைய சம்பவங்கள் அநாகரீகமானவை. இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதனை உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதுபோன்று வருங்காலத்தில் எந்த பள்ளியிலும் எந்த குழந்தைக்கும் நேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

சூடுபிடித்துள்ள அரசியல் விவாதம்

இச்சம்பவத்தால் அரசியல் ரீதியான விவாதமும் சூடிபிடித்துள்ளது. அசாதுதீன் ஓவைசியின் கட்சியினரும் அந்த மாணவரை சந்தித்து, “இச்சம்பவம் குறித்து உரிய மட்டத்தில் கட்சி கேள்வி எழுப்பும்” என கூறியுள்ளனர்.

இதனிடையே, நாகினா தொகுதியின் மக்களவை உறுப்பினரான சந்திரசேகர் ஆசாத், இச்சம்பவத்திற்கு எதிராக மாவட்ட தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார். மேலும், பள்ளி முதல்வரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரைமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

இது கல்வித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என தெரிவித்துள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் குன்வார் அனுபம் சிங், இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இதனிடையே, மாவட்ட பள்ளி ஆய்வாளர் பி.பி. சிங் கூறுகையில், “இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளோம். இதுதொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

இச்சம்பவம், குழந்தை நல உரிமைகள் தொடர்பானதும் கூட. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்குமா என ஆணையத்திடம் பிபிசி கேட்டது.

ஆனால், இதுவரை அந்த ஆணையத்திடமிருந்து பதில் வரவில்லை.

‘வெறுப்புக்கு எதிரான தன்னார்வலர்கள்’ (Volunteers Against Hate) எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீரஜ் ஹுசைன், “இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், “தன் தரப்பை தெரிவிக்க பள்ளி முதல்வருக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால், இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் குழந்தைகள் ஆணையம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை” என்றார்.

மீரஜ் ஹுசைன் கூறுகையில், “இச்சம்பவத்தில் அக்குழந்தை முஸ்லிமாகவோ ஆசிரியர் இந்துவாகவோ இல்லையென்றால் உ.பி. அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கும். இது மத விவகாரம் அல்ல. இது மாணவரின் உரிமை சம்மந்தப்பட்டது. ஆனால், மாணவரின் உரிமைகளை பாதுகாக்கவோ, ஆசிரியரை தண்டிக்கவோ யாரும் முன்வரவில்லை” என தெரிவித்தார்.

இதனிடையே அம்மாணவரின் தாயார் சப்ரா பேகம், இதுதொடர்பாக சட்ட போராட்டத்தை மேற்கொள்ள தயாராகிவருகிறார். அவர் கூறுகையில், “என்னுடைய குழந்தைக்கு நிர்வாகம் நீதி வழங்கவில்லையென்றால் நான் நீதிமன்றம் செல்வேன், தேவை எழுந்தால் உச்ச நீதிமன்றமும் செல்வேன். இது என் குழந்தைக்கு மட்டுமான விவகாரம் அல்ல, பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுடையதும் கூட” என்றார்.

இதனிடையே, சம்மந்தப்பட்ட ஏழு வயது மாணவர் அதிர்ச்சியில் உள்ளார். நான் மீண்டும் எப்போது படிப்பேன் என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

அச்சிறுவனின் சகோதரர்களும் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டனர்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)