You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலூர் சிறை: ஆயுள் தண்டனை கைதி பெண் டி.ஐ.ஜி வீட்டில் வீட்டு வேலைகளை செய்தாரா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
வேலூர் சரக சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி வீட்டில், ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் பெண் அதிகாரி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆயுள் தண்டனை கைதி தனிமைச் சிறையில் 95 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிபதியின் விசாரணை அறிக்கை கூறுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
வேலூர் சிறையில் உள்ள தன்னுடைய மகன் சிவக்குமாரின் நிலை குறித்து அறிய, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை அவரது தாய் கலாவதி தாக்கல் செய்தார். அதில் சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
''கடந்த மே 21-ஆம் தேதி என் மகனை சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். ஜூன் மாதம் 6-ஆம் தேதி வழக்கறிஞர் சென்று பார்த்தபோது, சிவக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அவர் அறிந்து கொண்டார். 90 நாள்கள் கடந்தும் என் மகனை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை', என்றிருந்தது.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, "சிறைத்துறை டி.ஐ.ஜி., மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கைதி சிவக்குமார் நலமுடன் இருப்பதாக கடிதம் வாயிலாக அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.''
மேலும், ''பணம் திருடு போனதாக கூறி ஆயுள் தண்டனை கைதி கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் தகவலுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனுதாரர் தெரிவிக்கும் தகவலுக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறும் தகவலுக்கும் முரண்பாடு இருப்பதால், உண்மையை அறிய வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கைதி சிவக்குமாரை நேரில் சந்தித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, தனது கருத்து என்ன என்பதையும் மாவட்ட நீதிபதி பதிவு செய்து இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"வேலூர் சிறைக்குப் போன போது என் மகனை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அங்கு என்னை விசாரித்த ஜெயில் அதிகாரி ஒருவர், 'உன் மகன் எதாவது பொருளை கொண்டு வந்து கொடுத்தானா?' எனக் கேட்டு மிரட்டினார்.
கொலை வழக்கில் 10 வருடமாக என் மகன் சிறையில் இருக்கிறான். இப்போது அவனுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை" என பிபிசி தமிழிடம் கலாவதி தெரிவித்தார்.
என்ன நடந்தது?
தனது மகனை பார்க்க சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்காததை, வழக்கறிஞர் புகழேந்தியிடம் கலாவதி கூறியுள்ளார்.
சிறைக் கைதிகள் நல உரிமை மையத்தின் இயக்குநரான புகழேந்தி, சிவக்குமாரை பார்க்க சிறைக்கு சென்றுள்ளார்.
அப்போது சக கைதிகள் மற்றும் சிவக்குமார் தன்னிடம் பல விஷயங்களை கூறியதாக புகழேந்தி கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வேலூர் சரக பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி வீட்டில் சில வேலைகளைச் செய்வதற்காக கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்பின்னர், பெண் அதிகாரியின் வீட்டில் இருந்து 4 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பணம், வெள்ளிக் குத்துவிளக்கு ஆகியவற்றை கைதி சிவக்குமார் திருடியதாக கூறி தாக்கியுள்ளனர்.
கைதி சிவக்குமாரை தோட்ட வேலைக்கு மட்டும்தான் பயன்படுத்தியதாக பெண் டி.ஐ.ஜி கூறுகிறார். அப்படியானால், அவரது வீட்டுக்குள் கைதி சிவக்குமார் எவ்வாறு அத்துமீறி நுழைந்திருப்பார்?" எனக் கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் பா.புகழேந்தி.
'' சிவக்குமாரை நான் நேரில் சந்தித்தபோது, நான் பணம் எதையும் எடுக்கவில்லை எனவும் பெண் டி.ஐ.ஜி குடும்பத்தினர் மீதான சர்ச்சைக்குரிய விவகாரங்களை திசை திருப்பவே தன் மீது புகார் கூறப்பட்டது என்று சிவகுமார் என்னிடம் கூறினார்.
திருட்டு தொடர்பாக, சிவக்குமார் மீது சிறையில் கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்து, வேலூர் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தோம்" என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.
ஆனால், மாவட்ட முதன்மை நீதிபதி அளித்த அறிக்கையில்,''4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுவது குறித்தும், அதன் பின்னர் சிவக்குமார் தான் மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் முடிவுக்கு வரும் நிலையில் நான் இல்லை. சிவக்குமார் உடன் சென்றவர்களுடன் இது குறித்து விசாரிக்கப்பட்ட வேண்டும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,''சில சம்பவங்களின் தாக்கம் காரணமாக தனிமைச் சிறையில் 95 நாட்களாக சிவக்குமார் அடைக்கப்பட்டு இருந்தார்.'' எனவும் அந்த அறிக்கையில் மாவட்ட முதன்மை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தனது அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த வாரம் (செப்டம்பர் 5) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, வேலூர் மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் காவல்துறை இயக்குநருக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர். கைதி சிவக்குமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி அவரை சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில், 14 சிறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிக்கையில் உள்ள விவரங்களை முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
' சிறைத்துறை ஐஜியின் உத்தரவு இல்லாமல் தண்டனை பெற்ற சிறைவாசிகள் சிறையைத் தாண்டி வெளியில் செல்லக் கூடாது என சிறை விதி 447 (1983) கூறுகிறது. டி.ஐ.ஜி வீட்டில் பணியாட்களாக கைதிகள் வேலை செய்துள்ளனர். தொடர்ந்து தண்டனை பெற்ற சிறைவாசிகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். இது சிறைக் கைதிகளின் உரிமைக்கு எதிரானது' என்று இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் டி.ஐ.ஜி சொல்வது என்ன?
கைதி சிவகுமாரின் வழக்கறிஞர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி ராஜலட்சுமி, "என் வீட்டு வேலைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தவில்லை. அவர்கள் தோட்ட வேலைக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர். வெளி வேலைக்கு அழைத்துச் செல்லும்போது அதை அவர்கள் உரிய முறையில் செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை", என்றார்.
காவலர்கள் மீது வழக்கு
இந்த வழக்கில், வேலூர் மத்திய சிறையின் பெண் டி.ஐ.ஜி ராஜலட்சுமி, மத்திய சிறைச்சாலையின் கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான் உள்பட 14 பேர் மீது சட்டவிரோத சிறைவைப்பு உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 பெண் சிறைக் காவலர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"டி.ஐ.ஜி ராஜலட்சுமி வீட்டில் கைதிகள் திருட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அருகில் உள்ள பாகாயம் காவல்நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்து, விசாரணை நடத்தியிருக்க வேண்டும்" என்கிறார், வழக்கறிஞர் புகழேந்தி.
பணம், நகை சர்ச்சை குறித்து வேலூர் பெண் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் கேட்டபோது, "இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சிறைத்துறை மீது தேவையில்லாமல் புகார் தெரிவித்துள்ளனர்" என்று மட்டும் பதில் அளித்தார்.
"சிறையில் கைதிகளின் நகர்வுகளை மட்டுமே அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியும். அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவால், சிறைகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)