You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய சினிமாவுக்கு முதல் சூப்பர் ஸ்டாரை தந்த 'பேய் பங்களா' - அங்கே குடியேறியதும் என்ன நடந்தது?
- எழுதியவர், யாசிர் உஸ்மான்
- பதவி, திரைப்பட வரலாற்று எழுத்தாளர், பிபிசி இந்திக்காக
சினிமா நடிகர்களின் ஆடம்பரமான பங்களாக்களை அவர்களின் நட்சத்திர அந்தஸ்துடன் அடையாளப்படுத்திய காலம் இருந்தது.
வானளாவிய வெற்றி முதல் இதயத்தை நொறுக்கும் தோல்வி வரை, இந்த பங்களாக்கள் எல்லா காலத்திலும் அவற்றுக்கு மௌன சாட்சிகளாக இருந்தன.
பாலிவுட்டின் பிரபலமான பங்களாக்கள் குறித்த இந்த சிறப்புத் தொடர், ஷாருக்கானின் 'மன்னத்' பங்களாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமான ஒரு பங்களாவுடன் தொடங்குகிறது.
அதுதான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவின் 'ஆஷிர்வாத்' பங்களா.
ஆனால், இந்த பங்களாவின் கதை ராஜேஷ் கண்ணா சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
'பேய் பங்களா'
மேற்கு மும்பையின் புகழ்பெற்ற புறநகர்ப் பகுதி பாந்த்ரா. இன்று இங்குள்ள பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் அருகிலுள்ள கார்ட்டர் சாலை ஆகியவை முக்கிய இடங்களாக அறியப்படுகின்றன.
இன்றும் பல திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கடலுக்கு அருகே இந்த ஆடம்பரமான பகுதியில் வசித்து வருகின்றனர்.
தற்போது பல உயரமான கட்டடங்கள் இருப்பதால் இப்பகுதி நெருக்கமான இடமாக உள்ளது. ஆனால் இந்த ஆடம்பர கட்டடங்கள் மற்றும் உயரமான கட்டடங்களுக்கு மத்தியில் நீங்கள் உற்று நோக்கினால், இன்றும் சில பாழடைந்த கட்டடங்கள் மற்றும் பல ஆண்டுகளாக உயர்ந்து நிற்கும் பழைய பங்களாக்களை காணலாம்.
இந்த கட்டடங்கள் மற்றும் பங்களாக்கள் தங்களுக்குள் ஒரு முழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. 1950-60 ஆண்டுகளில் கார்ட்டர் சாலையில் பல பங்களாக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான பங்களாக்கள் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. அதே கார்ட்டர் சாலையில் கடலை பார்த்தபடி அமைந்துள்ள 'ஆஷியானா' என்ற பங்களா, அந்தக் காலத்தில் இந்தி சினிமாவின் சிறந்த இசையமைப்பாளரான நௌஷாத் என்பவருடையது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'ஆஷியானா'விற்கு அருகில் மற்றொரு இரண்டு மாடி பங்களா உள்ளது. அது மிகவும் பாழடைந்து, மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த பங்களா வங்க நடிகர் பாரத் பூஷனுக்கு சொந்தமானது என்று இணையத்தில் காண கிடைக்கும் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூற்று சரியானது அல்ல.
இந்த பங்களாவின் வெளிப்புறச் சுவரில் 'பானோ வில்லா' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சுற்றியுள்ள மக்கள் இந்த பங்களாவை ‘சபிக்கப்பட்ட பங்களா’ அல்லது ‘பேய் பங்களா’ என்று அழைத்தனர்.
அந்த பங்களாவை வாங்க யாரும் தயாராக இல்லை.
அந்த காலகட்டத்தில், இந்தி சினிமாவில் சுமார் பத்து ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த நடிகர் ராஜேந்திர குமார், ‘மதர் இந்தியா’ (1957) மற்றும் அதற்குப் பிறகு ‘தூல் கா பூல்’ ( Dhool Ka Phool) (1959) ஆகிய திரைப்படங்களில் தனது சிறிய கதாபாத்திரங்களின் மூலம் ஓரளவு பிரபலமாகியிருந்தார்.
ராஜேந்திர குமாருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருக்கு டிம்பிள் என்று பெயரிட்டனர். குடும்பம் பெரிதானதால், ராஜேந்திர குமார் சாண்டா குரூஸில் உள்ள தனது சிறிய வாடகை வீட்டில் இருந்து பெரிய வீட்டிற்கு மாற விரும்பினார்.
பிப்ரவரி 3, 1959 அன்று காலையில், அவருக்கு வீட்டு தரகர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. “நீங்கள் தேடுவது போன்றே கார்ட்டர் சாலையில் இரண்டு மாடி வீடு உள்ளது. இப்போது வந்து பார்க்க முடியுமா?” என அந்த தரகர் கேட்டார்.
ராஜேந்திர குமாரின் அதிகாரப்பூர்வ சுயசரிதையான ‘ஜூபிலி குமார்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் எ சூப்பர் ஸ்டார்’ புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சீமா சோனி அலிம்சந்திடம் இருந்து இந்த தகவல் கிடைத்தது.
அவர் என்னிடம், “ராஜேந்திர குமார் அந்த வீட்டை சென்று பார்த்தார். குளிர்ந்த காற்று வீசும் கடலுக்கு எதிரே இருந்த, அந்த அழகான வீட்டைக் கண்டார். தன்னுடைய புதிய வீடு கடலுக்கு அருகில் இருக்கும் என்று தன் குடும்ப ஜோதிடர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு உடனே நினைவுக்கு வந்தன. பானோ வில்லா பங்களாவை முதல் முறை பார்த்தபோதே ராஜேந்திர குமாருக்கு பிடித்துவிட்டது,” என்றார்.
வீட்டின் வாடகை குறித்து கேட்ட போது, உரிமையாளர் அந்த வீட்டை வாடகைக்கு விட விரும்பவில்லை, விற்க விரும்புகிறார் என்று தரகர் கூறியுள்ளார். “இந்த வீட்டை விற்க முடியாதபடி, இந்த வீட்டில் பேய்கள் வாழ்கின்றன என்று மக்களிடம் தொடர்ந்து ஒரு எழுத்தாளர் சொல்லி வருகிறார். யாரும் இந்த வீட்டை வாங்காமல் தான் மட்டுமே வசிப்பதற்காக அவர் அவ்வாறு சொல்லிவருகிறார். எந்த விலையானாலும் வீட்டை விற்க உரிமையாளர் தயாராக இருக்கிறார். இந்த வீட்டை நீங்கள் நல்ல விலையில் வாங்க முடியும்" என அந்த தரகர் கூறியுள்ளார்.
வீட்டை 65,000 ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. பேய் வீட்டைப் பற்றி கேள்விப்பட்டு ராஜேந்திர குமாரின் மனைவி பயந்து போனார். ஆனால், ராஜேந்திர குமாரின் தாய், “பம்பாய் (மும்பை) போன்ற நகரத்தில் மனிதர்கள் வாழவே இடமில்லை, பேய்கள் எப்படி வாழும்” என்றார்.
வீட்டை வாங்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ராஜேந்திர குமாரிடம் போதிய பணம் இல்லை. பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பி.ஆர்.சோப்ராவிடம், கானூன் திரைப்படத்தில் மட்டுமின்றி அடுத்த இரண்டு படங்களுக்கும் முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் தான் பணிபுரியத் தயாராக இருப்பதாகக் கூறினார் ராஜேந்திர குமார்.
அதற்கு பி.ஆர். சோப்ரா ஒப்புக்கொண்டார். ராஜேந்திர குமார் ‘பூத் பங்களா’ என்று பிரபலமாக அறியப்பட்ட 'பானோ வில்லா'வை வாங்கினார். தனது மகளின் பெயரான ‘டிம்பிள்’ என்பதை அந்த பங்களாவுக்கு சூட்டினார். நெருங்கிய நண்பரான நடிகர் மனோஜ் குமாரின் ஆலோசனையின் பேரில், வீட்டில் வசிக்கத் தொடங்கும் முன்பு, ‘பேய்களை’ விரட்டும் வகையில் ஹோமம் போன்ற சடங்குகளை மேற்கொள்ள ராஜேந்திர குமார் மறக்கவில்லை.
இந்த வீடு ராஜேந்திர குமாரின் தலைவிதியை மாற்றியது என்பதை திரையுலகில் மூத்தவர்கள் நினைவு கூர்கின்றனர். பத்து ஆண்டுகளாக அவர் தேடிக் கொண்டிருந்த பெரிய வெற்றி திடீரென்று கிடைத்தது.
இந்த பங்களாவில் வாழ்ந்த காலம், ராஜேந்திர குமாருக்கு பொற்காலமாக அமைந்தது. ‘மேரே மெஹபூப்’, ‘கரானா சங்கம்’, ‘அர்சூ’, ‘சூரஜ்’ போன்ற அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டன.
எழுத்தாளர் சீமா சோனி அலிம்சந்த் எழுதிய 'ஜூப்ளி குமார்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் எ சூப்பர் ஸ்டார்' எனும் வாழ்க்கை வரலாற்றில் ராஜேந்திர குமார் கூறுகையில், "என் வாழ்க்கையின் மிக வெற்றிகரமான மற்றும் சிறந்த ஆண்டுகளை இந்த வீட்டில் கழித்தேன்” என தெரிவித்துள்ளார். பெரும் செல்வமும், புகழும் பெற்ற ராஜேந்திர குமார், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பங்களாவை விட்டு வெளியேறி பாலிஹில் பகுதியில் உள்ள தனது புதிய பங்களாவுக்கு மாறினார். ராஜேந்திர குமாரின் சிறந்த காலத்திற்கு சாட்சியாக இருந்த கார்ட்டர் சாலையில் உள்ள இந்த பங்களா இப்போது புதிய உரிமையாளருக்காக காத்திருக்கிறது.
வரலாறு திரும்பியது
1969ல் ராஜேஷ் கண்ணாவின் வெற்றி, நாட்டை புயலாக தாக்கியது. அவர் ஓர் ‘அதிசயம்’ என அழைக்கப்பட்டார். அவருக்காகவே ‘சூப்பர் ஸ்டார்’ என்ற சொல் உருவாக்கப்பட்டது.
பம்பாயில் வளர்ந்த ராஜேஷ் கண்ணா, கடலை நேசித்தார். அதனால், கடலை பார்த்தபடி உள்ள வீட்டை வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். தன் கனவுக்கு மிக அருகில் இந்த பங்களா இருப்பதாக ராஜேஷ் கண்ணா நினைத்தார்.
ஒரு மாலை வேளையில் இயக்குநர் ரமேஷ் பாஹ்லும் ராஜேஷ் கண்ணாவும் ராஜேந்திர குமாரின் வீட்டில் அமர்ந்திருந்த போது, 1969-ம் ஆண்டில் பாதிக்கு மேல் கடந்துவிட்டது. அப்போது ராஜேஷ் கண்ணா ராஜேந்திர குமாரிடம், “பாப்பாஜி (தந்தை போன்றவர்), கார்ட்டர் சாலையில் உங்கள் பங்களா காலியாக உள்ளது, நான் அதை வாங்க விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு, “நான் அந்த வீட்டை விற்கத் தேவையில்லை” என, ராஜேந்திர குமார் பதிலளித்தார்.
“இதைப் பற்றி யோசியுங்கள். நான் இப்போதுதான் சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். நீங்கள் இந்த நாட்டிலேயே பெரிய நடிகராக உள்ளீர்கள். உங்கள் வீட்டை வாங்கினால் என் வாழ்க்கையே மாறும். உங்களைப் போல நானும் ஒரு வெற்றியைப் பெறலாம்” என ராஜேஷ் கண்ணா கூறினார்.
ராஜேந்திர குமாரிடம் ராஜேஷ் கண்ணா நீண்ட நேரம் கெஞ்சினார். இறுதியாக ராஜேந்திர குமார் புன்னகையுடன், “அப்படியானால் டிம்பிள் இனி உங்களுடையது. இந்த வீடு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகிறேன்” என்றார். பிறகு, ராஜேஷ் கண்ணா ராஜேந்திர குமாரின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
வெற்றிகளை கொடுத்த பங்களா
இதனால் கோபமடைந்த ராஜேந்திர குமாரின் மனைவி சுக்லா, “நமக்குப் பணம் தேவையில்லை, ஆனாலும் அந்த வீட்டை மூன்றரை லட்சத்துக்கு நீங்கள் விற்றிருக்கிறீர்கள்” என்று ராஜேந்திர குமாரிடம் கூறியதாக சீமா சோனி அலிம்சந்த் எழுதியுள்ளார்.
ஆனால், ராஜேந்திர குமார் வாக்கு கொடுத்துவிட்டார். அந்த பங்களாவை விற்ற பின்னர், ராஜேந்திர குமாரின் படங்கள் வியக்கத்தக்க வகையில் தோல்வியைத் தழுவின. ஒரு கதாநாயகனாக அவரது வாழ்க்கை வீழ்ச்சியடைந்தது.
‘டிம்பிள்’ பங்களாவை விற்றதே இதற்குக் காரணம் என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் ராஜேந்திர குமார் அதை நம்பவில்லை.
சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா பெரும் ஆரவாரத்துடன் பங்களாவுக்கு மாறினார். பங்களாவுக்கு பெயர் வைக்குமாறு தன் தந்தை சுன்னிலால் கண்ணாவிடம் கேட்டார்.
இந்த பங்களாவுக்கு பெயர் வைப்பது தொடர்பான சுவாரஸ்யமான விஷயத்தை நடிகர் சச்சின் பில்கோன்கர் என்னிடம் கூறியிருந்தார். “பங்களாவுக்கு ஆஷிர்வாத் என்று பெயர் வைக்கலாம் என்று ராஜேஷ் கண்ணாவின் தந்தை கூறினார்” என்றார் சச்சின்.
"இதன் பின்னணியில் உள்ள எண்ணம் என்னவென்றால், தனது மகன் எப்போதும் 'ஆஷிர்வாத்' (ஆசீர்வாதம்) நிழலில் இருப்பான். யாராவது ஒருவர் ராஜேஷ் குறித்து தவறாக கடிதம் எழுதினால் கூட, அதில் ‘ராஜேஷ் கண்ணா, ஆஷிர்வாத்’ என்றுதான் முகவரியை குறிப்பிட வேண்டும். இந்த வீட்டுக்கு வரும் ஒவ்வொரு கடிதம் மற்றும் செய்தியிலும் ராஜேஷுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என அவருடைய தந்தை கூறினார்,” என்கிறார் சச்சின்.
அந்த பங்களாவில் குடிபெயர்ந்தவுடன், தொடர்ந்து பதினைந்து சூப்பர்ஹிட் படங்களை ராஜேஷ் கண்ணா கொடுத்தார். அவருடைய பங்களாவின் படங்கள் திரைப்பட இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் வெளியாகின.
ராஜேஷ் கண்ணா போன்று ‘ஆஷிர்வாத்’ பங்களாவும் பிரபலமானது, பம்பாய் சுற்றுலாத் துறையின் சிறப்பு சுற்றுலாத் தலமாக மாறியது.
நாடு முழுவதிலுமிருந்து பம்பாய்க்கு வரும் மக்கள், சூப்பர் ஸ்டாரின் பங்களாவை பார்க்க வேண்டும் என்று விரும்பினர்.
ஒவ்வொரு நாளும் அவருடைய ரசிகர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன. அதில், ‘ ராஜேஷ் கண்ணா, ஆஷிர்வாத், பம்பாய்’ என முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
‘ஆஷிர்வாத்’ பங்களாவுக்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவற்றுக்கு பதில் அளிக்க ஒரு நபரை ராஜேஷ் கண்ணா நியமித்தார். அந்த நபர் பிரசாந்த் ராய். பிரசாந்த் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ‘ஆஷிர்வாத்’தில் தொடர்ந்து பணியாற்றினார்.
பிரசாந்த் என்னிடம், “ஆஷிர்வாத் பங்களாவுக்கு தினமும் கடிதங்கள் குவியும். தேர்ந்தெடுத்த சிறந்த கடிதங்கள் குறித்து ராஜேஷ் கண்ணா என்னிடம் கேட்பார். கடிதங்களை சத்தமாகப் படித்துவிட்டு எங்களைப் பார்த்துச் சிரிப்பார்." என்றார்.
இந்த பங்களாவில் ராஜேஷ் கண்ணாவின் புகழ்பெற்ற புகைப்படங்கள் மற்றும் கோப்பைகளால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அறை இருந்தது, அதில் தான் அவர் அமர்ந்தபடி பேட்டி கொடுப்பார்.
திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் என்னிடம், "இன்று என் மகன் சல்மான் கான் பெரிய நட்சத்திரமாகிவிட்டான். அவனைப் பார்க்க தினமும் எங்கள் வீட்டுக்கு வெளியே கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு முன் ஒரு நடிகர் மீது மக்கள் இப்படி ஆர்வம் கொள்வதை பார்த்ததில்லை என பலரும் என்னிடம் கூறுவார்கள். இந்த சாலையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆஷிர்வாத் பங்களாவில் சினிமா நட்சத்திரம் மீதான இதைவிட பெரும் ஆர்வத்தைப் பார்த்திருக்கிறேன். ராஜேஷ் கண்ணாவுக்குப் பிறகு அப்படியொரு ஆர்வத்தை நான் பார்க்கவில்லை என அவர்களிடம் நான் கூறுகிறேன்,” என்றார்.
ஆஷிர்வாத் பங்களாவில் தினமும் மாலையில் ‘கண்ணா தர்பார்’ என அழைக்கப்படும் ஒரு கூட்டம் நடைபெறும்.
ராஜேஷ் கண்ணாவின் வீழ்ச்சி
முன்பு 'டிம்பிள்' என பெயரிடப்பட்ட பங்களாவின் சொந்தக்காரராக மற்றொரு டிம்பிள் ஆனது விசித்திரமான தற்செயல் நிகழ்வு.
ராஜேஷ் இல்லாத நேரத்தில், வீட்டிற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை குறிப்பெடுத்து வைப்பது பிரசாந்த் ராயின் வேலையாக இருந்தது. “53117 என்பது அவருடைய தொலைபேசி எண்ணாக இருந்தது, இந்த எண்ணுக்கு ஒவ்வொரு நிமிடமும் அழைப்பு வரும்" என்கிறார் அவர்.
"ஒருநாள் காலை பெண் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் ராஜேஷ் கண்ணாவிடம் பேச விரும்பினார். தன் பெயர் டிம்பிள் என்று அவர் கூறினார். ராஜேஷ் கண்ணா படப்பிடிப்பிற்குப் போயிருப்பதாகச் சொன்னேன்." என்றார்.
"பின்னர் 3-4 நாட்கள் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அப்பெண் என்னிடம் மிகவும் மரியாதையாகப் பேசுவார், பிரசாந்த் சாஹேப் (மரியாதையாக) என்று அழைத்தார். ஒருநாள் மாலை நான் ராஜேஷ் கண்ணாவிடம் டிம்பிள் என்ற பெண் தினமும் போன் செய்து உங்களைப் பற்றி கேட்கிறார் என்று சொன்னேன். ராஜேஷ் கண்ணா சிரித்தார். .. .ஆம் ஆம்...அவர் ‘பாபி’யின் (திரைப்படம்) நாயகி” என்றார்.
சில நாட்களுக்குப் பிறகு சன்னிபாய் கபாடியா, ஆஷிர்வாத் பங்களாவுக்கு வந்தார். உடன் அவருடைய மகளும் இருந்தார். பிரசாந்தை பார்த்ததும், “பிரசாந்த், இது என் மகள் டிம்பிள்” என்றார். இதைப் பார்த்து சிரித்த டிம்பிள், 'பிரசாந்த் சாஹப், என்னை அடையாளம் தெரிகிறதா? நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்." என்றார்.
பிரசாந்த் சிரித்துக் கொண்டே விருந்தினர்களை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
மார்ச் 1973 இல், தனது முதல் படமான ‘பாபி’ வெளியாவதற்கு முன்பே, டிம்பிள் கபாடியா, ராஜேஷ் கண்ணாவின் வாழ்க்கை துணையானார்.
அப்போது பம்பாயில் மட்டுமின்றி நாட்டிலேயே மிகப் பெரிய திருமணமாக இது அறியப்பட்டது. அவர்களுடைய திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகள், வெற்றி மற்றும் மகிழ்ச்சியான காலகட்டமாக இருந்தது.
டிம்பிள் திரைத்துறைக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டார். இருவருக்கும் இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனால், பாலிவுட்டில் அமிதாப் பச்சனின் வருகையால், காதல் படங்களுக்கு மாறாக அதிரடி படங்களின் புதிய சகாப்தம் தொடங்கியது.
சில ஆண்டுகளிலேயே அமிதாப் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். அவரது வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட வீழ்ச்சி, ராஜேஷ் கண்ணாவை மோசமாக உலுக்கியது.
மகாச்சோர், மெஹபூபா, அஜ்னபி, ஆஷிக் ஹூன் பஹாரோன் கா போன்ற பெரிய படங்களின் தோல்வி, ராஜேஷின் தன்னம்பிக்கையை காயப்படுத்தியது. உள்ளுக்குள் எரியும் தோல்வியின் நெருப்பு, ஒவ்வொரு மாலையும் உட்கொள்ளும் மதுவால் இன்னும் அதிகமாக எரிந்தது.
பின்னர் ஒருநாள் இரவு, ஆஷீர்வாத் பங்களாவின் மொட்டை மாடியில் அந்த சம்பவம் நடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திரைப்பட இதழுக்கு அளித்த பேட்டியில் ராஜேஷ் கண்ணா விவரித்தார். “ஒரு முறை அதிகாலை மூன்று மணி என நினைக்கிறேன். நான் அதிகமாக மது அருந்தினேன். முதன்முறையாக இதுபோன்ற தோல்வியை எதிர்கொண்டதால் திடீரென்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வது எனக்கு மிகவும் கடினமாகிவிட்டது. என்னுடைய ஏழு படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியடைந்தன. அன்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது, இருட்டாக இருந்தது, நான் என் மொட்டை மாடியில் தனியாக இருந்தேன். 'இறைவா! உங்கள் இருப்பை நாங்கள் மறுக்கும் அளவுக்கு அப்பாவியான எங்களை மிகவும் கடுமையாக சோதிக்காதீர்கள்’ என திடீரென்று நான் என் சுயநினைவை இழந்து அலறினேன்" என்றார்.
டிம்பிள் உடனான அவரது உறவிலும் பதற்றம் அதிகரித்து வந்தது. ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு ராஜேஷ் கண்ணாவும் டிம்பிளும் பிரிந்தனர்.
டிம்பிள் ஆஷீர்வாத் பங்களாவை விட்டு வெளியேறினார். 1992 இல், ராஜேஷ் கண்ணா திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்து, அரசியலில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து, டெல்லியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றார். இருபது ஆண்டுகள் ஆஷீர்வாத் பங்களாவில் வாழ்ந்த பிறகு, அவரும் அங்கிருந்து வெளியேறி டெல்லிக்கு மாறினார்.
ஆஷிர்வாத் பங்களாவில் பணிபுரிந்த ஊழியர்களில் பலர் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று பணிபுரிந்தனர்.
ராஜேஷ் கண்ணாவின் வாழ்க்கையில் பல கட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு நெருக்கமானவர்களின் ஆதரவை அவர் இழந்தார். அவரை விட்டு எப்போதும் விலகாத ஒன்று உண்டு என்றால் அது தனிமைதான். ஒவ்வொரு நாளும் அவர் மேலும் மேலும் தனிமையில் இருந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அரசியலிலும் ஏமாற்றமடைந்தார். அவர் பம்பாயிலிருந்து மும்பையாக மாறிய தனது நகரத்திற்குத் திரும்பினார்.
வருமான வரி தொடர்பான பிரச்னை தீவிரமடைந்தது. அவரது ஆஷிர்வாத் பங்களாவுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். ராஜேஷ் கண்ணா ஆஷிர்வாத் பங்களாவை விட்டு வெளியேறி, பாந்த்ரா லிங்கிங் சாலையில் உள்ள டைட்டன் ஷோரூமுக்கு மேல் தளத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு மாறும் நேரம் வந்தது. அந்த அலுவலகம் மிகப் பெரியது, ஆனால் அவர் தனது பங்களாவை விட்டு வெளியேற மிகவும் வருத்தப்பட்டார்.
அவரது கடைசிப் படமான ‘ரியாசத்’தின் இயக்குநர் அசோக் தியாகி என்னிடம் கூறுகையில், “இது அவர் லிங்க்கிங் சாலையில் உள்ள அலுவலகத்தில் வசித்த அந்த நாட்களைப் பற்றியது. அவரது பங்களாவுக்கு வருமான வரித்துறை சீல் வைத்தது. ஒருநாள் அவர் என்னை காரில் அழைத்துச் சென்று, காரை ஆஷிர்வாத் பங்களா முன்பு நிறுத்தினார். நாங்கள் இருவரும் எதிரெதிரே பார்த்தபடி ஒரு மேசையில் அமர்ந்தோம்.
அன்று இரவு, லேசான மழைக்கு நடுவே, ராஜேஷ் கண்ணா அசோக் தியாகியிடம் தனது பொற்காலத்தைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னார். அவர் அசோக்கிடம், "ஒரு காலத்தில், என்னைப் பார்க்க இதே மேசைக்கு அருகே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள்" என கூறியுள்ளார்.
கடந்த கால சூப்பர் ஸ்டார்களின் வலி அசோக்கிற்கு புரிந்தது. “கவலைப்படாதீர்கள், அந்த ரசிகர்கள் மீண்டும் வருவதை நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள் என நான் அவரிடம் சொன்னேன்” என்கிறார் அசோக்.
அப்போது, ராஜேஷ் கண்ணா மெலிதாக புன்னகைத்தார்.
ராஜேஷ் கண்ணாவின் இறுதி பயணம்
நிதி சிக்கலில் இருந்து மீண்டு, தன் வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளை ராஜேஷ் கண்ணா ஆஷிர்வாத் பங்களாவில் தனியாக வசித்தார்.
அவரால் ஒருபோதும் படங்களில் வலுவான மறுபிரவேசத்தைக் கொடுக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகச் செய்தி வந்தபோது, ராஜேஷ் கண்ணா மிகவும் பலவீனமாகி, மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்தார். அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூன் 20 ஆம் தேதி மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியபோது, மருத்துவமனையில் தங்க விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் கூறினார். அவர் தனது வீட்டிற்கு செல்ல விரும்பினார்.
அன்று கார்ட்டர் சாலையில் உள்ள தனது பங்களா ஆஷிர்வாத்தை அடைந்த போது, வரலாறு மீண்டும் திரும்பியது.
அன்றைய தினம் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆஷிர்வாத் பங்களா முன் திரண்டிருந்தனர். நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய அனைவரும் விரும்பினர்.
ஜூன் 21, 2012 அன்று மதியம், கறுப்புக் கண்ணாடி அணிந்து, கழுத்தில் சால்வை அணிந்து, ராஜேஷ் கண்ணா, தனது வழக்கமான பாணியில் சிரித்துக்கொண்டே, கார்ட்டர் சாலையில் உள்ள அவரது பங்களாவின் அதே பிரபலமான பால்கனியில் இருந்து வெளியே வந்தார்.
எதிரே நின்றிருந்த அவரது ரசிகர்கள் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அப்போது, மற்ற எல்லா செய்திகளையும் தவிர்த்துவிட்டு, நாட்டின் ஒவ்வொரு செய்தி சேனலும் ராஜேஷ் கண்ணாவின் இந்த படங்களை நேரலையில் காட்டின.
ராஜேஷ் கண்ணா, தனக்குப் பழக்கப்பட்ட ஸ்டைலில், கையை உயர்த்தி, அபாரமான ஸ்டைலில் அனைவரையும் நோக்கி அசைத்தார்... உதட்டில் புன்னகை பரவியது... ஆம்... அவரது ரசிகர்கள் திரும்பிவிட்டனர். அந்தச் சூழல் முழுவதும் அவரது சூப்பர்ஸ்டார் நாட்களை நினைவுபடுத்தியது.
அடுத்த நாள், அதாவது ஜூன் 23 ஆம் தேதி, அவர் மீண்டும் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் ஆஷிர்வாத்தில் பங்களாவில்தான் தனது கடைசி மூச்சை விட வேண்டும் என்பதில் ராஜேஷ் கண்ணா உறுதியாக இருந்தார்.
அவரது விருப்பப்படி, ஜூலை 17-ஆம் தேதியன்று, அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது பங்களாவான ஆஷிர்வாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ராஜேஷ் கண்ணாவின் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை குறித்து நான் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன், அந்த புத்தகத்தை எழுதும் போது அவருக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஜூலை 18 அன்று, ஆஷிர்வாத்தில் உள்ள தனது படுக்கையறையில் அவர் தனது இறுதி மூச்சை விடும்போது, "நேரம் முடிந்துவிட்டது. …பேக்கப்!” என கூறியதாக தெரிவித்தனர்.
2014 ஆம் ஆண்டு, ராஜேஷ் கண்ணாவின் குடும்பத்தினர் ஆஷிர்வாத் பங்களாவை தொழிலதிபர் ஒருவருக்கு விற்றனர். புதிய கட்டடம் கட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷிர்வாத் பங்களா இடிக்கப்பட்டது.
ஒருவேளை ராஜேஷ் கண்ணாவுடன் ஆஷிர்வாத் பங்களாவின் வட்டமும் முடிவுக்கு வந்திருக்கலாம். திரைப்பட வரலாற்றின் பக்கங்களில் ராஜேஷ் கண்ணா குறிப்பிடப்படும் போதெல்லாம், சினிமாவின் முக்கியமான காலகட்டத்தின் சாட்சியாக ஆஷிர்வாத் பங்களாவும் இடம்பெறும்.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)