You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெப் சீரிஸால் புதிய சர்ச்சை - கந்தஹார் விமான கடத்தலில் ஈடுபட்டது யார்?
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா மற்றும் அவரது புதிய வெப் சீரிஸ் குறித்து தற்போது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. ஐசி 814 வெப் சீரிஸ் சமீபத்தில் ஒடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இது கந்தஹார் விமானக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டது.
இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்தது. சில சமூக ஊடக பயனர்கள் #IC814, #BoycottNetflix, #BoycottBollywood போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குற்றச்சாட்டு ஏன்?
அனுபவ் சின்ஹா வேண்டுமென்றே உண்மைகளை திரித்துக் கூறுவதாக சமூக ஊடகங்களில் பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத்தொடர் பிரசாரம் போல பயன்படுத்தப்படுகிறது என்றும் தொடரில் கடத்தல்காரர்களின் பெயர்கள் சீஃப், டாக்டர், பர்கர், போலா, சங்கர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெப் சீரிஸில் நான்கு கடத்தல்காரர்களின் பெயர்கள் வேண்டுமென்றே மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
சமூக ஊடகங்களில் எழுந்துள்ள இந்த விவாதத்திற்கு மத்தியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த விஷயம் குறித்து நெட்ஃப்ளிக்ஸின் உள்ளடக்க பிரிவின் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அகில இந்திய வானொலியும், தூர்தர்ஷனும் செய்தி வெளியிட்டுள்ளன.
நெட்ஃப்ளிக்ஸின் உள்ளடக்க பிரிவுத் தலைவர் செவ்வாயன்று அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்றும் அவை தெரிவித்தன.
யார் என்ன சொன்னார்கள்?
இந்த சர்ச்சையில் பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா இயக்குநரை குறிவைத்து பேசினார்.
“ஐசி 814 விமானத்தை கடத்தியவர்கள் பயங்கரவாதிகள். அவர்கள் தங்கள் முஸ்லிம் அடையாளத்தை மறைத்தனர். முஸ்லிம் அல்லாத பெயர்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களின் குற்றத்தை மறைக்க அனுபவ் சின்ஹா முயன்றுள்ளார். இதனால் என்ன ஆகும்? ஐசி814 இந்துக்களால் கடத்தப்பட்டதாக பல தசாப்தங்களுக்குப் பிறகு மக்கள் நினைப்பார்கள்," என்று மாளவியா குறிப்பிட்டார்.
இயக்குநர் அனுபவ் சின்ஹா இந்த விஷயத்தில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அருணேஷ் குமார் யாதவின் பதிவை மறுபதிவு செய்துள்ளார்.
கடத்தல்காரர்களின் பெயர்களை இந்திய அரசே வெளியிட்டதாக இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் டாக்டர் யாதவின் பதிவும் நேரடியாக அவர் எழுதியது அல்ல. அவர் செய்தியாளர் சித்தாந்த் மோகனின் பதிவை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறியுள்ளார்.
”கடத்தல்காரர்களின் பெயர்கள் தொடர்பாக சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் உண்மையான பெயர்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்களை 'போலா', 'சங்கர்' என்று அழைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும் என்று சொல்கின்றனர். உண்மை என்னவென்றால் கடத்தல்காரர்கள் இந்த பெயர்களில்தான் விமானத்திற்குள் நுழைந்தனர். அவர்களின் உண்மையான பெயர்கள் தொடரின் முடிவிலும் வருகின்றன,” என்று சித்தாந்த் மோகன் எழுதியுள்ளார்.
அரசு வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியையும் அவர் தனது பதிவில் சேர்த்துள்ளார்.
இந்த வெப் சீரிஸின் காஸ்டிங் இயக்குநர் முகேஷ் சாப்ரா செய்தி முகமை பிடிஐயிடம், "இந்தத்தொடருக்காக விரிவான ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் ஒருவரையொருவர் இந்த பெயர்களில்தான் அழைத்தனர்," என்று கூறினார்.
உண்மை என்ன?
கடத்தல்காரர்களின் உண்மையான பெயர்கள் இப்ராஹிம் அதஹர் (பஹவல்பூர்), ஷாஹித் அக்தர் சையத் (குல்ஷான் இக்பால், கராச்சி), சன்னி அகமது காஸி ( டிஃபன்ஸ் பகுதி, கராச்சி), மிஸ்திரி ஜாஹூர் இப்ராஹிம் (அக்தர் காலனி, கராச்சி) மற்றும் ஷகீர் (சுக்கூர் நகரம்) என்று 2000 வது ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
பயணிகள் முன்னிலையில் கடத்தல்காரர்கள் ஒருவரையொருவர் சீஃப், டாக்டர், பர்கர், போலா மற்றும் சங்கர் என்று அழைத்ததாகவும் அதே அறிக்கையில் கூறப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிக்கை, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் இப்போதும் உள்ளது.
விமானக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு மும்பையில் நான்கு தீவிரவாதிகளை புலனாய்வு அமைப்புகள் கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
கடத்தல் திட்டத்தை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தீட்டியதாகவும், தீவிரவாத அமைப்பான ஹர்கத்-உல்-அன்ஸார் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் இந்த தீவிரவாதிகள் மூலம் தெரியவந்ததாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
வெப் சீரிஸ் எதை அடிப்படையாகக் கொண்டது?
நெட்ஃப்ளிக்ஸின் இந்த வெப் சீரிஸ் பத்திரிகையாளர் ஷ்ரிஞ்சாய் செளத்ரி மற்றும் கேப்டன் தேவி ஷரண் (ஐசி 814 விமானத்தின் பைலட்) ஆகியோரின் 'Flight into Fear: The Captain's Story' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
விஜய் வர்மா, நசீருதீன் ஷா, பங்கஜ் கபூர், மனோஜ் பஹ்வா, அரவிந்த் சுவாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா, பத்ரலேகா, அம்ரிதா புரி, திபியேந்து பட்டாச்சார்யா மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.
கந்தஹாரில் நடந்தது என்ன?
1999 டிசம்பர் 24 ஆம் தேதி நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானத்தை ஹர்கத்-உல்-அன்ஸார் என்ற அமைப்பை சேர்ந்த ஐந்து கடத்தல்காரர்கள் கடத்தினர்.
அந்த நேரத்தில், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட மொத்தம் 180 பேர் விமானத்தில் இருந்தனர். விமானத்தை கடத்திய சில மணி நேரங்களில் ரூபின் கட்யால் என்ற பயணியை கடத்தல்காரர்கள் கொன்றனர்.
25 வயதான ரூபின் கட்யால், கத்தியால் பலமுறை குத்தப்பட்டார். விமானம் இரவு சுமார் 1.45 மணிக்கு துபாய் சென்றடைந்தது. அங்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஈடாக சில பயணிகளை விடுவிப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
துபாயில் 27 பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். அதன் பிறகு விமானம் கந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்டது.
வயிற்று புற்றுநோயாயால் பாதிக்கப்பட்டிருந்த சிமோன் ப்ரார் என்ற பெண்மணி கந்தஹாரில் சிகிச்சைக்காக 90 நிமிடங்களுக்கு மட்டும் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் தங்களின் கூட்டாளிகள் 36 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் அத்துடன் 20 கோடி அமெரிக்க டாலர்கள் தொகை தரப்படவேண்டும் என்றும் கோரினர்.
காஷ்மீர் பிரிவினைவாதி ஒருவரின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் கடத்தல்காரர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் தாலிபன்களின் வேண்டுகோளுக்குப் பிறகு, அவர்கள் பணம் மற்றும் உடலைக் கோருவதை கைவிட்டனர்.
வாஜ்பாய் அரசு இந்திய சிறைகளில் இருந்த கடத்தல்காரர்களின் கூட்டாளிகள் சிலரை விடுவிக்க ஒப்புக்கொண்ட பிறகு எட்டு நாட்கள் நீடித்த இந்த பணயக்கைதிகள் நெருக்கடி முடிவுக்கு வந்தது.
சரியாக எட்டு நாட்களுக்குப் பிறகு அந்த ஆண்டின் கடைசி நாளில் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதியன்று அரசு அப்போது ஏற்பட்ட உடன்பாட்டை அறிவித்தது. கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை பெருமளவு குறைப்பதில் தனது அரசு வெற்றி பெற்றுள்ளது என்று அப்போது பிரதமாரக இருந்த வாஜ்பாய் புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலையில் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.
அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, விடுவிக்கப்பட்ட மூன்று பேரை தன்னுடன் கந்தஹாருக்கு அழைத்துச் சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)