வேலூர்: பெண் சிசுவை கொன்று வீட்டின் முன்புறம் புதைத்த பெற்றோர் - சிசுக்கொலை அதிகரிக்கிறதா?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

"குழந்தை நல்லாதான் இருந்துச்சு. பெரிய பொண்ணு போர்வையைத் தூக்கிப் போட்டதுல மூச்சுத் திணறி செத்துப் போச்சு..."

"குழந்தை சத்தம் போட்டது கேட்கலையா?"

"நான் சாப்பாடு கொடுக்க போயிட்டேன். என் பொண்டாட்டி தூங்கிட்டா. வந்து பார்த்தா குழந்தை உடம்பு ஜில்லுன்னு ஆயிருச்சு."

வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராம நிர்வாக அதிகாரி சக்திவேலுவுக்கும் அவரது எல்லைக்கு உட்பட்ட பொம்மன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜீவா-டயானா தம்பதிக்கும் இடையே புதன்கிழமையன்று (செப்டெம்பர் 4) நடந்த உரையாடல் இது.

இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிரசவ வலியால் துடித்த டயானாவை ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது, டயானாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்ததால் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து புதன்கிழமையன்று காலை வீட்டுக்கு வந்துள்ளனர். அதன் பிறகுதான் 'அந்த' கொடூர சம்பவம் நடந்துள்ளது.

"அன்று மதியம் 1 மணியளவில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக வி.ஏ.ஓ அலுவலக உதவியாளர் செல்வராசா கூறினார். நான் அங்கு சென்றபோது, குழந்தை இறந்தது தொடர்பான எந்தக் கவலையும் பெற்றோரிடம் இல்லை. 'குழந்தையை எங்கே புதைத்தீர்கள்?' எனக் கேட்டேன். கேட்டுக்கு முன்புறம் நான்கு அடி குழிதோண்டிப் புதைத்து அதன் மீது செடியை நட்டு வைத்தததாக குழந்தையின் தந்தை தெரிவித்தார்," என்று கூறினார் சேர்பாடி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல்.

குழந்தை மரணம் தொடர்பாக வருவாய் ஆய்வாளர், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் விசாரித்தபோதும், இதே கதையை ஜீவா-டயானா தம்பதியினர் கூறியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெற்றோர் மீது சந்தேகம் வந்தது எப்படி?

வேலூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் உள்ள மலையடிவாரப் பகுதி என்பதால் தாசில்தார் உள்ளிட்ட இதர அதிகாரிகள் அங்கு வருவதற்குச் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில், 'மாடுகளைக் கட்டிவிட்டு வருகிறேன்' எனக் கூறிவிட்டுச் சென்ற ஜீவாவும் டயானாவும் தலைமறைவாகிவிட்டனர்.

அதன்பிறகே, 'இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொன்றிருப்பார்களோ?' என்ற சந்தேகமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. "வீட்டுக்கு முன்பாக பப்பாளி மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. எருக்கஞ்செடிகளும் நிறைய இருந்தன," என்கிறார் வி.ஏ.ஓ சக்திவேல்.

மறுநாள் (செப்டெம்பர் 5) வருவாய்த்துறை அதிகாரியின் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பப்பட்டது. போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஜீவாவும் டயானாவும் கைது செய்யப்பட்டனர்.

வி.ஏ.ஓ விசாரணை நடக்கும்போதே வேப்பங்குளம் காவல் நிலையத்தில், டயானாவின் தந்தை சரவணன் புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், 'புதன்கிழமையன்று காலை 11.30 மணியளவில் மர்மமான முறையில் குழந்தை இறந்துள்ளது. உறவினர்களுக்குத் தெரியாமல் குழந்தையைப் புதைத்துவிட்டனர். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தையை வளர்ப்பதில் சிரமமா?

புகாரின் பேரில், 'இயற்கைக்கு முரணான மரணம்' என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"பெற்றோரைக் கைது செய்துவிட்டோம். தந்தையிடம் விசாரித்தபோது, 'பெண் குழந்தையை வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுத்தால் பத்து பவுன் நகை போட வேண்டும். அதனால் கொன்றுவிட்டேன்' என்கிறார். அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதுதான் ஒரே காரணம். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பெற்றோரின் வாக்குமூலத்தை வைத்து முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்யப்படும்," என்கிறார்.

"குழந்தையை வளர்ப்பதில் சிரமம் இருப்பதால் கொன்றதாகத் தகவல் பரவுகிறது. இதில் உண்மை இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர்களின் பொருளாதார நிலை ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. புதிதாக வீடு கட்டியுள்ளனர். 'ஆண் குழந்தைதான் குடும்பத்தின் வாரிசு' என்ற பழைமையான சிந்தனையில் ஊறியவர்களாக உள்ளனர்," என்கிறார் வேலூர் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர் ஒருவர்.

‘பெற்றோரிடம் பயமே இல்லை’

வேலூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் பிபிசி தமிழிடம் பேசியபோது, "குழந்தையைக் கொன்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற பயம் அந்தப் பெற்றோரிடம் இல்லை. பெண் குழந்தை வேண்டாம் என்று நினைத்தால் அரசிடம் ஒப்படைக்கலாம், அல்லது உறவினர்களுக்குத் தத்துக் கொடுத்திருக்கலாம். அவ்வாறு கொடுப்பதையே கௌரவக் குறைச்சலாக இந்தத் தம்பதி கருதியுள்ளது.

"இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பாதுகாக்க முடியும். ஒடுகத்தூர் உள்பட அந்தப் பகுதியைச் சுற்றிலும் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன," என்கிறார்.

சரிகிறதா பாலின சராசரி?

குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு, "ஒரு குழந்தை கருவானால் தமிழக அரசின் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசின் அனைத்து மருத்துவ உதவிகளும் கிடைக்கும். இதைப் பதிவு செய்யச் செல்லும் செவிலியர்கள், பெற்றோரின் அணுகுமுறைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. புறச்சூழல்களைக் கவனித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம்," என்கிறார்.

"ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கையின்படி, குழந்தையின் உரிமை என்பது மைனஸ் ஜீரோ முதல் 18 வயது வரை என வரையறுத்துள்ளனர். குழந்தை கருவாகும்போதே அதற்கான உரிமை தொடங்கிவிடுகிறது.

"கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன்பிறகு வந்த தேசிய குடும்ப நல சர்வேயின்படி (2020-21), தமிழ்நாட்டில் 1,000 ஆண்களுக்கு 878 பெண்கள் என்பது சராசரியாக உள்ளது.

"பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சராசரி என்பது 850 என்ற அளவுக்கும் குறைவாகச் சென்றுவிட்டது. ஆண், பெண் பாலின விகிதம் குறையும்போது, ஒருகட்டத்தில் பெண்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்," என்கிறார் தேவநேயன் அரசு.

"சிசுக்கொலைகளின் மூலம் உலகளவில் ஆண், பெண் பாலின விகிதம் என்பது மோசமான அளவில் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை மேலும் சிக்கலாக உள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் பாதுகாப்பு, திருமணம், வரதட்சனை எனப் பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். ஆணாதிக்க சிந்தனை மேலோங்குவதே இதற்குக் காரணம்," என்கிறார்.

"கருக்கொலை, சிசுக்கொலை, இளவயது கர்ப்பம் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்றால் சட்டங்களாலும் திட்டங்களாலும் நடக்க வாய்ப்பில்லை. அதுவொரு கலாசாரமாக மாற வேண்டும். ஆண், பெண் சமத்துவத்துக்கான பாடத் திட்டங்கள், அதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை எளிமைப்படுத்த வேண்டும்," என்கிறார் தேவநேயன் அரசு.

தத்தெடுப்பில் சிக்கலா?

பெண் சிசுக்கொலை நடக்கும் அதேநேரத்தில் நாடு முழுவதும் குழந்தையின்மை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் தேவநேயன் அரசு, "அண்மைக்காலமாக, செயற்கைக் கருவூட்டல் மையங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகமான குழந்தைகள் தேவைப்படும் நாடாக இந்தியா உள்ளது.

"குழந்தைகள் கொல்லப்படாமல் தடுப்பதற்குச் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மிக அவசியம். கரு உருவானால் அந்தக் குழந்தையை நாடு பாதுகாக்கும் என்று கூறி பெற்றோரை நெறிப்படுத்த வேண்டும்.

"தமிழ்நாட்டில் தத்தெடுப்புக்காக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4,000 பேர் காத்திருக்கிறார்கள். இங்கு நான்கு ஆண்டுகள் காத்திருந்தால்தான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். இதை எளிமைப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் நாட்டின் சொத்து. அவர்களை அழிப்பதற்கும் கொல்வதற்கும் யாருக்கும் உரிமை இல்லை," என்கிறார் தேவநேயன் அரசு.

சிசுக்கொலை சம்பவங்கள்

  • சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார்-விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஜூலை 7-ஆம் தேதி குழந்தையின் வயிற்றில் மூன்று இடங்களில் ரத்தம் வெளியேறியுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. விசாரணையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதைக் கொன்றதாக குழந்தையின் தந்தை காவல்துறையில் வாக்குமூலம் அளித்தார்.
  • மதுரை சேடப்பட்டி அருகே முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி கௌசல்யாவுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஆறு நாட்களில் அதனைக் கொன்று வீட்டின் அருகில் புதைத்ததாக காவல் நிலையத்தில் பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர்.
  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பி.மீனாட்சிபட்டியைச் சேர்ந்த வைரமுருகன்-செளமியா தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையை மார்ச் 2-ஆம் தேதி கொன்று புதைத்ததாக வைரமுருகன் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் கீதா ஜீவன் கூறுவது என்ன?

தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "பெண் குழந்தைகளைக் காப்பதற்கு எவ்வளவோ திட்டங்கள் இருந்தும் வேலூரில் ஒரு குழந்தையைக் கொன்ற சம்பவம் மிகுந்த மன வேதனையைக் கொடுத்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கான சூழல் இல்லாவிட்டால் அவர்களை அரசிடம் ஒப்படைத்துவிடலாம். கல்வி, பாதுகாப்பு, எதிர்காலம் போன்றவற்றை அரசு பார்த்துக்கொள்ளும்," என்கிறார்.

"ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளது. அரசு இல்லம், தனியார் நடத்தும் இல்லம் என எங்கே ஒப்படைத்தாலும் அவர்களை அரசு பராமரிக்கும். மாவட்டக் குழந்தைகள் நலக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 1098 என்ற ஹெல்ப்லைன் எண் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களே நேரில் வந்து குழந்தையை அழைத்துச் சென்றுவிடுவார்கள்," என்கிறார்.

"கர்ப்பிணிப் பெண்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வருகிறவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்களைக் காப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"ஒரு காலத்தில் தருமபுரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சிசுக் கொலைகள் அதிகமாக நடந்தன. அரசின் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பணிகள் மூலம் அவை தடுக்கப்பட்டுவிட்டன," என்கிறார் கீதா ஜீவன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)