மகளிர் இட ஒதுக்கீடு எப்போது சாத்தியம்? இந்திரா, ராஜீவை நினைவுகூர்ந்து சோனியா பேச்சு

பட மூலாதாரம், Dmk
சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “பெண் ஏன் அடிமையானாள்' என்ற கேள்வியை பெரியார் எழுப்பி 100 ஆண்டுகள் ஆகியும் பெண் அடிமைத்தனம் தொடர்வதாக குறிப்பிட்டார்.
திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
வணக்கம் சென்னை என்று தமிழில் தனது பேச்சை தொடங்கிய தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவா் சுப்ரியா சுலே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா என்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை அண்ணி என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், X/SUPRIYA SULE
“அம்பேத்கரின் மாநிலத்தில் இருந்து நான் வருகிறேன். அதே பாரம்பரியம் உங்களுக்கும் உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் உள்ளனர். இங்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் எது குறித்து பெருமிதம் கொள்கின்றனர் என்று சிலரிடம் கேட்டேன். அதற்கு அவர், சமூக நீதி குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். இங்கு மதம், சாதி குறித்து பெருமிதம் கொள்ளாமல் மொழி குறித்து பெருமிதம் கொள்வதாக கூறினார். கனிமொழி என்றால் இனிமையான மொழி என்று அர்த்தம். அவர் உண்மையாகவே இனிமையாக பேசுவார். மகளிர் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசுவதற்கு முன்பே பாஜகவினர் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் 300 பேர், நாங்கள் வெறும் 100 பேர். அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தோம். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மரபில் தமிழ்நாடு எங்கள் அனைவரும் வழிகாட்டுகிறது” என்றார்.
"மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அதன் சின்னத்தையும் தக்க வைக்க நாங்கள் போராடி வருகிறோம். ஒருவேளை அங்கே தேர்தலில் போட்டியிட எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எனக்கு தமிழ்நாட்டில் திமுக சார்பாக போட்டியிட எனக்கு டிக்கெட் கிடைக்கும் என்று தெரியும்." என்றும் அவர் சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார்.
கனிமொழி பேசியது என்ன?
கனிமொழி பேசும்போது, “பெண்ணுக்கு ஆண் தான் பாதுகாப்பு என்று சொல்வார்கள் ஆனால், இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளித்து ஆண்களுக்கும் பெண்கள் பாதுகாப்பு வழங்க முடியும் என்பதை செய்து காட்டியவர் கருணாநிதி.
50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வர முடியாத மசோதாவை கொண்டுவந்து பெண்களை ஏமாற்ற பாஜக துடித்து வருகிறது. பாஜக ஆட்சியில் எந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மணிப்பூர் பற்றி எரிகிறது. நாட்டின் முதல் குடிமகள் என்று சொல்லக் கூடிய குடியரசுத் தலைவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலுக்கு செல்ல முடியாது, நாடாளுமன்றத்துக்குள் வர முடியாது என்று அவமானப்படுத்தக்கூடிய சூழல் நடந்துகொண்டு இருக்கிறது.
பாஜக கூட்டணியில் உள்ள பாஜகவில் பெண், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருவர் தனது அமைச்சர் பதவியை ராஜிமானா செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.” என்றார்.

பட மூலாதாரம், Kanimozhi @social media
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசும்போது தனது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலையின் நினைவுகளை குறிப்பிட்டார்.
“32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மண்ணில் முதன்முறையாக கால் வைத்தேன். என் தந்தையின் உருக்குலைந்த உடலை வாங்க வந்தேன். அப்போது எனக்கு 19 வயதுதான். விமானத்தின் கதவுகள் திறந்தபோது இரவு எங்களை கவ்விக்கொண்டது. ஆனால், நான் பயப்படவில்லை. ஏனென்றால், அதைவிட மோசமான நிகழ்வு நடந்துவிட்டது. சில மணி நேரத்திற்கு முன்பாக என் தந்தை கொல்லப்பட்டார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நானும் என் அம்மாவும் அதிர்ச்சியுடனும் தனிமையாகவும் நின்றிருந்தோம். அப்போது, நீல சேலை அணிந்திருந்த பெண்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். என் அம்மாவை அவர்களின் கைகளில் தாங்கிக்கொண்டு அழுதனர். அந்த உணர்வை வார்த்தைகளால் கூற முடியாது. நீங்கள்தான் என் தாய். உங்களுடன் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்று உணர்ச்சிபொங்க பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண் ஏன் அடிமையானாள்' என்ற கேள்வியை பெரியார் எழுப்பி 100 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் பெரியார், அதை அண்ணாதுரையும் கருணாநிதியும் முன்னெடுத்து சென்றனர். பெரியார் கேள்வி எழுப்பி 100 ஆண்டுகளுக்கு பிறகும் பெண் அடிமைத்தனம் இன்னும் உள்ளது. ” என்றார்.
பெண் அர்ச்சகர்கள் - தமிழ்நாட்டை பாராட்டிய மெகபூபா முஃப்தி
ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி பேசும்போது தமிழ்நாடு அரசின் திட்டங்களை வெகுவாக பாராட்டினார்.
“ பெண்கள் முன்னோற்றத்திற்காக கருணாநிதி பெரும் பங்காற்றியுள்ளார். எழுத்தாளராக இருந்தபோதே அவரின் எழுத்துகள் காலத்தை தாண்டியதாக இருந்தது. பெண்களுக்கு இலவச கல்வி, பெண் மறுமணத்தை ஊக்குவித்தது, சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியது போன்றவை எல்லாம் அவரின் மகத்தான சாதனை. கருணாநிதியின் சிறப்பை ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் முன்னெடுத்து செல்கின்றனர்.
அரசு பள்ளியில் பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆகியவை சிறப்பானவை. முக்கியமாக, பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் சூழலில் மூன்று பெண் அர்ச்சகர்களை நியமித்துள்ளது மாபெரும் சாதனை” என்றார்.

பட மூலாதாரம், DMK
மகளிர் இடஒதுக்கீட்டிற்கு இந்தியா கூட்டணி பாடுபடும் - சோனியா காந்தி
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை தனது உரையில் குறிப்பிட்டு பேசிய சோனியா காந்தி,
“ஒரு ஆணுக்கு கல்வியை கற்பித்தால் ஒருவருக்கு மட்டுமே கற்பிக்கிறீர்கள், ஒரு பெண்ணுக்கு கல்வியை கற்பிப்பதன் மூலம் ஒரு குடும்பத்திற்கே கல்வியை கற்பிக்கிறீர்கள். பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்றால் இந்தியா அதிகாரத்தில் இருக்கிறது என்று அர்த்தம் என்ற ஜவஹர்லால் நேருவில் பொன்மொழியை நான் குறிப்பிடுகிறேன்.
இந்திரா காந்தி காண்பித்த தலைமைத்துவம், ஆற்றல், வழிகாட்டுதல், ஒரு பெண் எப்படி தலைமையேற்று செயல்பட முடியும் என்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு. ராஜீவ் காந்தி, வரலாற்று புகழ் மிக்க 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பெண்களுக்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளூர் ஆட்சி அமைப்புகளிலும் கொண்டு வந்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதுதான் இன்று நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்தினுடைய முன்னெடுப்பாக அமைந்தது. இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியால் 2010ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் கருத்தொற்றுமை உருவாக்க முடியாத காரணத்தினால் நிறைவேற்றப்பட முடியவில்லை.
இப்போது, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கும் நாம் கொடுத்த அழுத்தங்கள் அதிகம். இருப்பினும், இந்த சட்டம் என்றைக்கு நடைமுறைக்கு வரும் என்று தெளிவே இல்லாத ஒரு சூழ்நிலையில் இந்த சட்டம் உருவாக்கியிருப்பது, நாளை இந்தியா கூட்டணி வந்து தான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் என்று எண்ணத்தை தருகிறது. இந்தியா கூட்டணி என்பது மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீரும். இதை இந்தியா கூட்டணியின் கட்சிகள் நிச்சயமாக செய்யும், வெற்றி நமதே” என்றார்.
ஸ்டாலின் பேச்சு
கடைசியாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கனிமொழி கர்ஜனை மொழியாக, கனல் மொழியாக நாடாளுமன்றத்தில் முழங்கிவருவதை பார்க்கும்போது கட்சி தலைவராக மட்டுமில்லாமல் அண்ணனாக பெருமைப்படுகிறேன். ” என்று கனிமொழியை பாராட்டினார். சுப்ரியா சுலேவை பற்றி பேசும்போது, அவரை பார்த்தாலே நாடாளுமன்றத்தில் பாஜகவினர் அஞ்சு நடுங்குவார்கள் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவின் அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. நாங்கள் நிச்சயமாக பாஜகவை தோற்கடிப்போம். அவர்கள் இந்திய மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக உள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே மொழி என ஒற்றை கட்சி ஆட்சியை கொண்டுவர பாஜக திட்டமிடுகிறது.
பெண்களுக்கு மகளிர் இடஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக கொண்டு வந்தது. நிபந்தனைகள் மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை தடுக்க நினைக்கும் பாஜக 2024க்குப் பிறகு ஆட்சியில் இருக்கப் போவதில்லை. ” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












