You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணச் சிக்கலைத் தவிர்க்க 5 எளிய வழிகள்
- எழுதியவர், ஐவீபி கார்த்திகேயா
- பதவி, பிபிசி செய்திகள்
கண் மருத்துவரான டாக்டர் விமல் கிருஷ்ணா, பெங்களூருவில் உள்ள நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கொரோனா அதிவேகமாகப் பரவிய காலத்தில் தான் நோயாளிகள் எவ்வளவு பணப்பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர் என்பதை முழுமையாக அவர் புரிந்துகொண்டார்.
அது போன்ற ஒரு மோசமான காலகட்டத்தில் பொதுமக்கள் எவ்வளவு பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்தனர் என்பதை அவர் புரிந்துகொண்டதன் காரணமாக உருவானது தான் பொருளாதாரத்தைத் திட்டமிட 5 வழிகள் என்ற அவருடைய புத்தகம்.
பொருளாதாரத் தற்சார்பு என்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அவருடைய இந்த புத்தகம் அருமையாகப் புரியவைத்துள்ளது.
பொருளாதாரம் குறித்த பாடம் எதுவும் படிக்காவிட்டாலும், டாக்டர் விமல் அவருடைய சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்டறிந்த விஷங்களையே இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். இதே விஷயத்தைத் தான் அவர் தனது முன்னுரையாகவும் இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பொருளாதாரப் பிரச்னையில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்ற ஒரு பொதுவான சிந்தனை நிலவும் நேரத்தில், அது போன்ற எண்ணத்தை உடைக்கும் வகையிலான கருத்துக்களே இந்த புத்தக வடிவில் நமக்குக் கிடைத்துள்ளன.
பொருளாதாரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிறுவனமான என்.சி.எஃப்.ஈ. (National Centre for Financial Education) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 72 சதவிகித பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அறியாமையே காரணம் எனத்தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரம் ஒன்றே, டாக்டர் விமலின் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என உணர்த்துவதற்குப் போதுமானதாக உள்ளது.
தனிநபர் பொருளாதாரம் சார்ந்த விவரங்கள் அடங்கிய ஏராளமான புத்தகங்கள் ஏறத்தாழ நூறாண்டுகளாகவே கிடைத்து வருகின்றன. ஆனால், இந்த புத்தகங்கள் அனைத்தும் பொருளாதாரக் கல்வி கற்ற நிபுணர்கள் அல்லது பங்கு வர்த்தகத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எழுதிய புத்தகங்களாகவே உள்ளன.
இந்த புத்தகத்தின் தலைப்புக்கேற்றவாறு, பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்வது எப்படி என்ற விவரங்கள் கேள்வி - பதிலாகவே கொடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஏன், என்ன அல்லது எப்போது என்ற கேள்விகளும், அவற்றிற்கான பதில்களாகவும் உள்ளன. தனித்தனியாக இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், புத்தகத்தை வாசிப்பவர்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை நேரடியாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். இந்த கேள்வி - பதில் வடிவ புத்தகத்தில் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை கொஞ்சம் விரிவாகவே நாம் பார்ப்போம்.
பொருளாதாரத் திட்டமிடல் என்றால் என்ன?
இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் பொருளாதாரத் திட்டமிடல் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
பெரிய அளவில் எந்த வித முன் அனுபவமும் இன்றி உடல் உழைப்பின் மூலம் உடலை வலிமையாக்குவது போலவே, பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும் நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை என்பதை டாக்டர் விமல் விளக்குகிறார்.
பொருளாதாரத் திட்டமிடல் என்பது முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் அல்ல. இந்த புத்தகத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகவே இது தொடர்பான விளக்கம் அமைந்துள்ளது.
தனிநபர் பொருளாதாரத் திட்டமிடல் குறித்து வெளியாகியுள்ள நூல்களில் பொருளாதாரம் தொடர்பான ஏராளமான விஷயங்கள் விரிவாகவும், ஆழமாகவும் அளிக்கப்பட்டுள்ளன.
பங்குவர்த்தகத்தில் வெற்றிபெறுவது எப்படி(Win with Stocks), ஏழை மற்றும் பணக்கார தந்தைகள் (Rich Dad Poor Dad) போன்ற நூல்களில் தனிநபர் பொருளாதாரம் குறித்த ஏராளமான விஷயங்களை ஆசிரியர்கள் தொட்டுச் சென்றுள்ளனர்.
தனிநபர் பொருளாதாரத் திட்டமிடலின் அவசியம் என்ன?
டாக்டர் விமல் எழுதியுள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயம் முழுக்க முழுக்க பொருளாதாரத் திட்டமிடலின் அவசியம் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களால் நிரம்பியுள்ளது. பொருளாதாரத் தற்சார்பு குறித்த ஏராளமான விஷயங்களை அவர் விளக்கியுள்ளார்.
வாரன் பஃபெட், பெஞ்சமின் கிரஹாம் போன்ற புகழ்பெற்ற நபர்கள் பொருளாதாரத் திட்டமிடலின் அவசியம் குறித்து அதிகம் பேசியுள்ளனர்.
கொரோனா போன்ற அவசர காலங்கள், வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வெடுத்தல், இயல்பாக நேரிடும் சில அவசர நிலைகள் போன்றவை குறித்து இந்த அத்தியாயத்தில் டாக்டர் விமல் விளக்கியுள்ளார்.
அதிக செலவு செய்வதால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்தும் ஏராளமான நூலாசிரியர்கள் ஏற்கெனவே விளக்கியுள்ளனர். வரவுக்கு மீறிய செலவு என்பது எப்படி ஒரு மனிதனை அழிக்கிறது என்பதை திரைப்படப் பாடல்கள் கூட விளக்கியுள்ளன.
எப்போது பொருளாதாரத் திட்டமிடல் தேவை?
இந்த நூலின் மூன்றாவது அத்தியாயத்தில், பொருளாதாரத் திட்டமிடல் குறித்து எப்போது சிந்திக்கத் தொடங்கவேண்டும் என விளக்கப்பட்டுள்ளது. டாக்டர் விமல், பொருளாதாரத் திட்டமிடல் என்பது வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை விளக்குகிறார்.
தனிநபர் பொருளாதார வளத்தைப் பெருக்க நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நமது முதலீடுகளின் மீதான கூட்டு வட்டியால் நமக்குக் கிடைக்கும் பயன்களை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
பல்வேறு உதாரணங்கள் மூலம் இதை அவர் எளிமையாகப் புரியும் வகையில் விளக்கியுள்ளார். கூட்டு வட்டியின் தத்துவம் குறித்து இந்த அத்தியாயத்தில் ஒரே இடத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் முழுக்க, பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அனைத்து விஷயங்களையும் டாக்டர் விமல் விளக்கியுள்ளார்.
72 தத்துவங்களின் அடிப்படையிலான விதியைப் பயன்படுத்தி எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வது என்பதை குறிப்பிடும் போது, ஒவ்வொருவருக்கும் எழும் பொதுவான சந்தேகங்கள் குறித்தும் பல கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் அவர் அளித்துள்ளார்.
அது போன்ற முதலீட்டாளர்களுக்கு அறிவுரை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த அத்தியாயம் அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் உள்ளது என்பதே உண்மை.
பொருளாதாரத் திட்டமிடலின் போது எதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்?
இந்த நூலின் நான்காவது அத்தியாயத்தில், பொருளாதாரத் திட்டமிடலின் போது நாம் எந்த விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய பொருளாதார நிலை என்ன, வருமானத்துக்கும், நம்மிடையே இருக்கும் பொருளாதார வளத்துக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது போன்ற மிகவும் அடிப்படையான விஷயங்களை உணர்ந்து பொருளாதார வளங்களைப் பெருக்குவது குறித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது, நமது தற்போதைய நிலை குறித்து நல்ல புரிதலும் கிடைக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
நமது வருமானத்துக்கு அதிகமான செலவுகளை மேற்கொள்ளும் போது, அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து ஏற்கெனவே பல நூலாசிரியர்களும் விளக்கியுள்ளனர்.
அதே விஷங்களை மிகவும் எளிமையாக இந்த அத்தியாயத்தில் டாக்டர் விமல் விளக்கியுள்ளார். 50-30-20 விதியைப் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும், சரியான திட்டமிடலின் மூலம் மேற்கொள்ளும் செலவுகள் நம்மை எப்படி பாதுகாக்கின்றன என்றெல்லம் டாக்டர் விமல் பல உதாரணங்கள் மூலம் மிகவும் எளிமையான புரிதலை ஏற்படுத்தியுள்ளார்.
இதே அத்தியாயத்தை மேலும் தொடரும் அவர், நீண்ட கால அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது, மருத்துவக் காப்பீட்டில் முதலீடு செய்வது உள்ளிட்ட அறிவுரைகளையும் விரிவாக வழங்கியுள்ளார். இது போன்ற விளக்கத்தை அளிக்கும் போது தான், அவர் கொரோனா தொற்றை பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இது போல் மேலும் பல விஷயங்கள் குறித்துப் பேசியுள்ள அவர், பல முக்கியமான விஷயங்களை எளிமையாகப் புரியும் வகையில் கூறியிருக்கிறார்.
தனிபர் பொருளாதாரத் திட்டமிடலில் காப்பீடு குறித்து பலர் கவலைப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அது சரியான பொருளாதாரத் திட்டமிடலுக்கு உதவாது எனத் தெரிவித்துள்ளார். சரியான காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யாததே பலரது பொருளாதார சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துவிட்டதாகவே அவர் கருதுவது போல் தோன்றுகிறது. தனிநபர் பொருளாதாரத் திட்டமிடலில் நீண்ட கால அடிப்படையில் காப்பீட்டில் முதலீடு செய்வது முதல் படி என்பதையும் குறிப்பிட அவர் தவறவில்லை.
பழக்கவழக்கம் சார்ந்த பொருளாதாரம்
"பொருளாதாரத் திட்டமிடல் என்பது வெறும் 20 சதவிகிதம் தான் நமக்கு உதவும். மீதம் 80 சதவிகிதம் நமது பழக்கவழக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது" என தனிநபர் பொருளாதாரத் துறை நிபுணர் டேவ் ராம்சே கூறுகிறார்.
உதாரணமாக நாம் நமது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்று உணவருந்தும் போது, நாம் ஜிஎஸ்டி வரியாக 5 சதவிகிதம் பணம் செலவழிக்கிறோம். அதே நேரம், அதே உணவை ஆன்லைன் மூலமாக வாங்கும் போது நாம் ஜிஎஸ்டி வரியாக 18 சதவிகிதம் பணம் செலவழிக்கும் நிலை இருக்கிறது. ஒரே தேவைக்கு குறைவாக செலவழிக்க முடியும் போது, அதிகமாக பணத்தைச் செலவழிப்பது பொருளாதாரம் சார்ந்த திட்டமிடலுக்கு எதிரானது. இதன் பெயர் தான் பழக்கவழக்கம் சார்ந்த பொருளாதாரம் என்பது.
ஏற்கெனவே தனிநபர் பொருளாதாரம் குறித்த ஏராளமான புத்தகங்களில் இது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் விமலின் இந்த நூலில், ஒரு அத்தியாயத்தின் பெரும் பகுதியில் பழக்கவழக்கம் சார்ந்த பொருளாதாரம் குறித்த எளிமையான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
பொருளாதாரம் சார்ந்த நற்குணங்களை நாம் வளர்த்துக்கொள்வதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் குறித்து ஏராளமான உதாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த புரிதல் மிகவும் முக்கியம் என்பதால் டாக்டர் விமலின் நூல் குறித்து பேச வேண்டிய தேவை இருப்பதாகவே தோன்றுகிறது.
வாழும் போதும், வாழ்க்கைக்குப் பின்னரும் தேவைப்படும் பொருளாதாரத் திட்டம்
உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் வாழ்க்கைக்குப் பின்னர் தேவைப்படும் பொருளாதாரத் திட்டம் குறித்து சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். இது போன்ற நிலையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் டாக்டர் விமல் பல விளக்கங்களை அளித்துள்ளார்.
ஓய்வு காலத்திற்கான பொருளாதாரத் திட்டங்கள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வாழ்க்கைக்குப் பின்னரான பொருளாதாரத் திட்டங்களும் மிக முக்கியம். ஏனென்றால் நமது சொத்துக்கள் அனைத்தும் நமது குடும்பத்தினருக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும்.
அதில் ஏதாவது வழக்கு போன்ற சூழ்நிலைகள் ஏற்படாதவாறு இப்போதே திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். பலர் இது போன்ற திட்டமிடலின்றி மறைந்து போவதால், குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்பட்டு அந்த சொத்துக்களை அவர்கள் அடைவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒரு எளிமையான உதாரணத்தின் மூலம் இதை டாக்டர் விமல் விளக்குகிறார். தனிநபர் பொருளாதாரம் குறித்த நூல்களில் இது குறித்து மிகவும் அரிதாகவே பேசப்படுகின்றன. ஆனால், இது குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் டாக்டர் விமல் விளக்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்