You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. மீது வழக்குப் பதிவு - என்ன நடந்தது?
திருநெல்வேலியில் மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் கீழ் உள்ள பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்திற்கு சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த காட்ஃப்ரே நோபிள் என்பவர், அங்கிருந்தவர்களால் நேற்று (ஜூன் 26) அடித்துத் துரத்தப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் திருநெல்வேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பனரான ஞானதிரயத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது.
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்தப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். புதிய நிர்வாகியாக அரசு வழக்கறிஞரான அருள் மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யோவான் பள்ளி வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஞானதிரவியம், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டதோடு, பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் உள்ள சில அறைகளை தனது பூட்டுகளை வைத்துப் பூட்டிவைத்தார்.
இந்த நிலையில் இட்டேரி பகுதியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபிள் என்பவர் நேற்று காலை (ஜூன் 26) பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்திற்குச் சென்றார். அலுவலகத்தைத் திறக்க வேண்டுமென்று அங்கிருந்தவர்களிடம் அவர் கூறியபோது, அங்கு கூடியிருந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அவரை அடித்து, உதைத்தனர்.
அவர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கினர். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கிருந்து சென்ற காட்ஃப்ரே நோபிள், திருநெல்வேலி ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு பாளையங்கோட்டை திருமண்டல அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காட்ஃப்ரே நோபிள் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானதிரவியம், சி.எஸ்.ஐ திருச்சபை பள்ளியில் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் உட்பட 33 பேரின் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு தி.மு.க. தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "ஞானதிரவியம் கழக வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமை கழகத்திற்குப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இச்செயல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இக்கடிதம் கிடைத்த ஏழு நாள்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கத் தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர். இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை. தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன.
இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்குப் பிறகு, பார்னபாஸைச் சுற்றியிருந்த சிலரை நீக்கும்படி ஞான திரவியம் கூறியபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு கமிட்டி கூட்டம் நடக்கும் அறையில் சொத்து அலுவலரால் சிசிடிவி பொருத்தப்பட்டது. இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார்.
ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜூன் 26ஆம் தேதி காட்ஃப்ரே என்பவர் சொத்து அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை சிலர் விரட்டி அடித்துள்ளனர்.
இது குறித்து காட்ஃப்ரே நோபிளிடம் கேட்டபோது, "இந்தத் திருமண்டலத்தை இயங்கவிடாமல் செய்கிறார் ஞானதிரவியம். கடந்த வெள்ளிக்கிழமை மொத்த திருமண்டல அலுவலத்தையும் பூட்டிவிட்டார். இதனால் திங்கட்கிழமையன்று இது குறித்துக் கேட்பதற்காகப் போனேன். சண்டை ஏதும் போடவில்லை. ஏன் இப்படிச் செய்கிறீர்கள், திறந்துவிடுங்கள் என்றுதான் கேட்டேன். இதற்கு எல்லோரும் சேர்ந்துகொண்டு, துரத்தித் துரத்தி அடித்தார்கள்" என்றார்.
காட்ஃப்ரே நோபிளுக்கும் பாளையங்கோட்டை திருமண்டலத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது தவறான தகவல். நான் 1978ல் இருந்து பாளையங்கோட்டை தூயதிருத்தவப் பேராலயத்தில் உறுப்பினர். தனியாகவும் ஊழியம் செய்கிறேன். இருந்தாலும் சிஎஸ்ஐயுடன் இணைந்துதான் செய்கிறேன்." என்றார் காட்ஃப்ரே.
இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் கேட்டபோது, "நேற்றைய சம்பவத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. காட்ஃப்ரே நோபிள் ஒரு போலிச் சாமியார். அவர் மீது எட்டு வழக்குகள் இருக்கின்றன. அந்தத் தகவல்களையெல்லாம் தேடி எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவரது பின்னணியில் வேறு சிலர் இருந்து தூண்டிவிடுகிறார்கள், அவ்வளவுதான்" என்று மட்டும் தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்குகள் தனக்கும் தன் உறவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஒரே நாளில் தொடரப்பட்டவை என்றும் அதற்கும் இந்தப் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்கிறார் காட்ஃப்ரே.
விவகாரம் அடிதடியில் முடிந்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தால், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்