தன்பாலின ஆணாக மம்மூட்டி: 'காதல்' படம் கேரளாவில் அதிர்வலைகளை கிளப்புவது ஏன்?

    • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
    • பதவி, பிபிசி நியூஸ், கொச்சி

மூன்று வாரங்களுக்கு முன்பு மலையாள நடிகர் மம்முட்டி நடித்த `காதல் - தி கோர்` (Kaathal: The Core) திரைப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியானது.

இந்தப் படத்தின் முக்கியப் பிரச்னை என்ன என்பதை அந்த டீசர் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தியது என்றாலும் கதை நிகழும் கேரளாவில் உடனேயே அது விவாதங்களை எழுப்பியது.

மலையாள `சூப்பர் ஸ்டாராக` அறியப்படும் மம்முட்டி இந்தத் திரைப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராகக் காட்டப்பட்டுள்ளது ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தத் திரைப்படம் நவம்பர் 23 அன்று வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

சினிமாவில் அரை நூற்றாண்டு பயணம், மூன்று தேசிய விருதுகள் மற்றும் பெரும் ரசிகர் பட்டாளம் என்று நெடிய பாரம்பரியம் கொண்ட எந்த இந்திய நடிகரும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டில் ஆணாதிக்கம் குறித்துப் பேசிய, பெரும் வெற்றி பெற்ற `தி கிரேட் இந்தியன் கிச்சன்` என்னும் மலையாள திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் அவருடைய ரசிகர்களிடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

கதையை உடனேயே புரிந்துகொண்ட மம்முட்டி

எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டு, தன்பாலின ஈர்ப்பை ரகசியமாகப் பேணும் ஆண் பற்றிய கதை இது.

மேத்யூ (மம்முட்டி) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராகும்போது, அவருடைய மனைவி (ஜோதிகா) தன் கணவர் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என குற்றம்சாட்டி விவாகரத்து வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கால் அவர்களுடைய குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் அதிர்வலைகளை திரைப்படம் அலசுகிறது.

"பால்புதுமையினர் எனப்படும் LGBTQ சமூகத்தினருடன் இணைந்து வாழ்வது, குடும்பங்களில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்க விரும்பினேன்," என ஜியோ பேபி பிபிசியிடம் தெரிவித்தார்.

மம்முட்டி போன்ற திறமையான நடிகர் இந்தப் படத்திற்குத் தேவைப்பட்டதாகக் கூறிய அவர், மம்முட்டியே இத்திரைப்படத்தை தயாரித்ததாகவும் தெரிவித்தார். "மம்முட்டி கதையை உடனேயே புரிந்துகொண்டு நடிப்பதற்கு முன்வந்தார்," என்கிறார் அவர்.

இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கேரளா முழுவதும் படத்தின் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஆனால், ’காதல்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் பகிரப்பட்டிருந்த சமூக ஊடக பதிவுகள், மம்முட்டியின் சமூக ஊடக பதிவுகளுக்கு எல்ஜிபிடி பிரிவினரை எதிர்க்கும் பலரும் அத்திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் மம்முட்டியின் அந்த கதாபாத்திரத்திற்காக விமர்சித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். படம் முன்வைக்கும் தன்பாலின ஈர்ப்பு, "இளைஞர்களை மூளைச்சலவை செய்துவிடும்" என முஸ்லிம் மதகுருமார்கள் விமர்சித்துள்ளனர்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆனால், இத்தகைய எதிர்ப்பு படக்குழுவினரும் மம்முட்டியும் எதிர்பாராதது அல்ல என, பால்புதுமையினருக்காக இயங்கிவரும் `கேரளா குயர் பிரைட்` எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அதுல் பி.வி. தெரிவித்தார்.

"பலரால் விரும்பப்படும் நடிகராக மம்முட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது இந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அப்படத்தைத் தயாரிக்கவும் அவர் எவ்வளவு யோசித்திருப்பார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்" என்கிறார் அதுல்.

திருமணமான, தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண் ஒருவரை "கூர் உணர்வுடன்" சித்தரித்திருப்பதாக, கேரளவை சேர்ந்த LGBTQ பிரிவினர் பலரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வருகின்றனர்.

"இந்த திரைப்படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல, ஆனால் இது தைரியமான முயற்சி," என, பால்புதுமையினர் அமைப்பான ’குயரிதம்’ (Queerythm) நிறுவனர் பிரிஜித் பி.கே. தெரிவித்தார்.

இந்தியாவில் அதிக வளர்ச்சிக் குறியீடு மற்றும் அதிகமான கல்வியறிவு விகிதம் கொண்ட கேரளாவின் பல பகுதிகள் இன்னும் ஆணாதிக்கம் மற்றும் பழமைவாதம் நிரம்பியதாகவே உள்ளன.

துடிப்பான திரைப்படத் துறை மற்றும் உலகளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் திரைப்பட விழாவுக்காக இம்மாநிலம் அறியப்படுகிறது.

ஆனாலும், ”LGBTQ பிரிவினர் குறித்த கூர்உணர்வு கொண்ட திரைப்படங்களுக்கு பற்றாக்குறை” நிலவுவதாக, திரைப்படங்களில் பாலின பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் ரோஷ்னி பிரபாகரன் கூறுகிறார்.

தவறான சித்தரிப்புகள்

மேலும், மலையாள சினிமாவில் 1970களில் இருந்தே பால்புதுமையினர் சாயல் கொண்ட கதாபாத்திரங்கள் இருந்து வந்துள்ளன. அப்படி 2005ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் ‘சாந்துபொட்டு’.

இந்தத் திரைப்படம் பெண்மை குணத்துடன் ஆண்மைக்கான பண்புகளையும் கொண்டிருக்கும் ஒருவர் குறித்துப் பேசுகிறது. இந்தக் கதாபாத்திரம் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் பற்றியது அல்ல என்று படத்தின் இயக்குநர் மறுத்திருந்தபோதும், இப்படம் ஆபத்தான புரிதல்களைப் பரப்புவதாக, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கேரள LGBTQ பிரிவினர் பலரும் தீவிரமாக விமர்சித்தனர். படத்தின் தலைப்பான ‘சாந்துபொட்டு’ என்ற வார்த்தை பெரும்பாலும் திருநங்கைகளை அவமானப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தை என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

“சாந்துபொட்டு திரைப்படம் முழுவதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது,” என அதுல் கூறுகிறார். “பால்புதுமையினர் இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்தே இப்படத்தில் உள்ளது” என்கிறார் அவர். சமீப ஆண்டுகளாக, நன்கு அறியப்பட்ட கேரள நடிகர்கள் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக திரையில் தோன்றியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘மூத்தோன்’ திரைப்படம் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், பரவலான பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் தடுமாறியது என, பேராசிரியர் ரோஷ்னி பிரபாகரன் தெரிவித்தார்.

பிருத்விராஜ் நடிப்பில் ‘மும்பை போலீஸ்’ திரைப்படம் 2013ஆம் ஆண்டில் வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர் நடித்திருந்தாலும், அப்படம், “தன்பாலின வெறுப்பு மற்றும் அவர்களை அவமதித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி பிரச்னைக்குரிய வகையில் அவர்களை சித்தரித்திருந்ததாக” விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்த வகையில் பார்த்தால் ’காதல்’ திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானது எனப் பலரும் கூறுகின்றனர். “எதிர்பாலினத்தவரை திருமணம் செய்துகொண்டு, தன்னுடைய தன்பாலின ஈர்ப்பை ரகசியமாகப் பேணும் ஒருவரின் இத்தகைய கடினமான கட்டத்தை மலையாள சினிமாவில் நாங்கள் பார்த்ததில்லை,” என்கிறார் ரோஷ்னி பிரபாகரன்.

பால்புதுமையினர் மீதான வெறுப்பை வளர்க்கும் படங்கள்

பால்புதுமையினரின் ஈடுபாட்டுடன் இத்திரைப்படத்தை உருவாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது என, இந்தத் திரைப்படத்தைப் பார்த்த தன்பாலின ஈர்ப்பு ஆண்கள் தெரிவித்தனர்.

பால்புதுமையினர் குறித்த பல திரைப்படங்களில் இருப்பது போன்று “பால்புதுமையினர் மீதான வெறுப்பு” இந்தத் திரைப்படத்தில் இல்லை என, ’கேரளா நாலேஜ் எகானமி மிஷன்’ (Kerala Knowledge Economy Mission) அமைப்பில் பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் பிரிஜித் பி.கே.

"வரலாற்று ரீதியாக மலையாள திரைப்படங்களில் பால்புதுமையினரை அவமரியாதையுடனும் தவறாகவும் சித்தரித்ததற்கு தெரிவிக்கும் மன்னிப்பு போன்றதுதான் `காதல்` திரைப்படம்" என்கிறார் அவர்.

படத்திலும் அதன் வரவேற்பிலும் மம்முட்டியின் கம்பீரமான இருப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. ஆழமான, பலராலும் ஈர்க்கப்படுகிற வகையிலான கதாபாத்திரங்கள் மூலம் புகழ்பெற்றிருந்தாலும், மம்முட்டி பிற்போக்குத்தனமான ஆணாதிக்க கதாபாத்திரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் நடித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் அவர் நடித்திருந்த `கசாபா` திரைப்படத்தில் "பெண்களை அவமதிக்கும் வசனங்கள் இருப்பதாக" கேரள பெண்கள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மம்முட்டி போன்ற நடிகர்கள் இத்தகைய "தரம்தாழ்ந்த வசனங்களைப் பேசும்போது, பொதுமக்கள் அதை ஆபத்தான வகையில் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்," என ஆணையம் தெரிவித்தது.

"அவருடைய திரைப்படங்களில் மிகை ஆண்மை, அதிகாரம், அகங்காரம் ஆகிய தன்மைகளுடன் திரையில் தோன்றிய அவரே, அவற்றைத் தவிர்க்கும் விதத்தில் `காதல்` திரைப்படம் அமைந்துள்ளது," என பிரிஜித் தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளாக மம்முட்டி வணிக ரீதியாக வெற்றி தரும் படங்களைக் கடந்து பல்வேறு சோதனை முயற்சிகளுடன் கூடிய திரைப்படங்களைத் தனது பெயரில் தயாரித்து, தன் திரை பாரம்பரியத்திற்குப் பலம் சேர்த்து வருகிறார்.

'சோதனை முயற்சி'

"புதிய நடிகர்கள், கருப்பொருள்கள், படங்கள் மீதான பார்வையாளர்களின் ஆர்வம் காரணமாக தற்போது எந்தவொரு புதிய மலையாள திரைப்படமும் சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகிறது," என நடிகர் மம்முட்டி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

"இதனால்தான் மலையாள சினிமாவை இந்திய சினிமா உற்று நோக்குகிறது என நான் கருதுகிறேன். அதனால் இந்தப் பயணத்தில் என்னுடைய திரைப்படங்களும் இருக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

"நம் சமூகத்தில் வாழும் பல ஆண்களின் கதையை `காதல்` கூறுகிறது," என பிரிஜித் தெரிவித்தார்.

"நம்முடைய வீடுகளிலும் இத்தகைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது," என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)