You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் தொடர்பான இந்த சொற்களை நீதிமன்றத்தில் பயன்படுத்த தடை
சமூகத்தில் பாலினரீதியாக ஒருவர் இப்படித்தான் செயல்படுவார், இப்படித்தான் நடந்துகொள்வார் என்று வகைப்படுத்தக்கூடிய பழமைவாத வார்த்தைகளைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணையின்போது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அத்தகைய வார்த்தைகளைத் தடை செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
'ஹேண்ட் புக் ஆன் காம்பேட்டிங் ஜெண்டர் ஸ்டீரியோடைப்ஸ்’ என்ற கையேடு ஒன்றை உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டது.
பாலின ரீதியாக ஒருவரின் செயல்பாடுகளை அடையாளப்படுத்தும் வார்த்தைகள் ஸ்டீரியோடைப் என அழைக்கப்படுகின்றன. இந்த வார்த்தைகள் பகுத்தறிவுக்கும் தற்காலத்திற்கும் பொருந்தாத நடத்தையைக் குறிக்கிறது.
நீதிமன்ற விவாதங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மாற்றுவதன் நோக்கம், பாலின உணர்திறனை (Gender sensitivity) உறுதி செய்வதாகும். இந்த வார்த்தைகளின் பயன்பாடு காரணமாக, பாரபட்சமான நடத்தைக்கு சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வார்த்தைகளை நீக்கி அவற்றுக்குப் பதிலாக எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பட்டியலையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஸ்டீரியோடைப்பிங் என்றால் என்ன, அதை ஏன் மாற்ற வேண்டும், என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகள், வாதங்கள், பிரதிவாதங்கள் ஆகியவற்றின்போது நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இனி இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன சொன்னார்?
இந்த கையேட்டின் நோக்கம், நீதிமன்ற விசாரணைகளில் பயன்படுத்தப்படும் சட்ட மொழி மற்றும் பாலின பாகுபாடு வார்த்தைகளைக் கண்டறிந்து அவற்றின் பயன்பாட்டைத் தடுப்பதாகும் என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாக பிபிசியின் துணை செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி தெரிவித்தார்.
“இந்தக் கையேட்டின் மூலம் ’ஜெண்டர் ஸ்டீரியோடைப்பிங்கை’ கட்டுப்படுத்த நீதிபதிகளுக்கு உதவி கிடைக்கும். இதனுடன் புதிய மாற்று வார்த்தைகளும் வழங்கப்பட்டுள்ளன,” என்று சந்திரசூட் கூறினார்.
“வழக்கறிஞர் சமூகம் மற்றும் நீதிபதிகளின் உதவிக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. சட்ட விஷயங்களில் பெண்களைப் பற்றிய ஒரே மாதிரியான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம். இந்தக் கையேடு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கானது,” என்றார் அவர்.
"வார்த்தைகள் என்பது சட்டத்தின் மதிப்புகளைத் தெரிவிக்கும் வழிமுறை. இந்த வார்த்தைகள், சட்டம் இயற்றுபவர் அல்லது நீதிபதியின் நோக்கத்தை நாட்டுக்கு உணர்த்துகின்றன.
ஒரு நீதிபதி பயன்படுத்தும் மொழி சட்டத்தின் விளக்கத்தை மட்டுமல்லாமல் சமூகத்தைப் பற்றிய அவரது கருத்தையும் பிரதிபலிக்கிறது,” என்று இந்த கையேட்டின் முன்னுரையில், டி.ஒய்.சந்திரசூட் எழுதியுள்ளார்.
பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வார்த்தைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தினத்தையொட்டி சந்திரசூட் கூறியிருந்தார்.
இந்த கையேட்டின் பணிகள் கோவிட் காலத்தில் துவங்கியதாக உச்சநீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.
"எந்தவொரு தீர்ப்பையும் சந்தேகிப்பதோ அல்லது விமர்சிப்பதோ இதன் நோக்கம் அல்ல. மாறாக ஸ்டீரியோடைப்பிங் பற்றிய, குறிப்பாக பெண்கள் குறித்துப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்,” என்று கையேடு வெளியீட்டு விழாவில், நீதிபதி சந்திரசூட் கூறினார். இந்தக் கையேடு ஸ்டீரியோடைப்பிங் என்றால் என்ன என்பது பற்றி ஆராய்கிறது.
ஸ்டீரியோடைப்பிங் என்றால் என்ன? – உச்சநீதிமன்றத்தின் விளக்கம்
இந்தக் கையேடு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த கையேட்டில் ஸ்டீரியோடைப்பிங் என்றால் என்ன, பாலின சமத்துவமின்மையைக் கொண்டு வருவதில் அது எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த கையேட்டில் சான்றுகளுடன் ஸ்டீரியோடைப்பிங் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
"ஒரு பெண் பாரம்பரியமாகக் கருதப்படாத ஒரு ஆடையை அணிந்தால், அவர் ஆணுடன் உடலுறவை விரும்புகிறார். அத்தகைய சூழ்நிலையில் ஆண் ஒரு பெண்ணை அவளது அனுமதியின்றித் தொட்டால், அதற்கு பெண்தான் பொறுப்பு.”
இந்த மாதிரியான நடவடிக்கைகளுடன் உண்மைநிலை குறித்தும் கையேட்டில் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.
"ஒரு பெண்ணின் ஆடை, அவர் ஒருவருடன் உடலுறவை விரும்புகிறார் என்பதைச் சுட்டிக் காட்டாது. அதை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு பெண்கள் திறமைசாலிகள். அந்தப் பெண் ஒரு வகையான ஆடைகளை அணிந்ததன் மூலம் அவ்வாறு செய்ய தூண்டினார் என்று ஒரு பெண்ணை அவளது அனுமதியின்றி தொடும் ஆண் சொல்ல முடியாது,” என்று கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு ஆண், பாலியல் தொழிலாளியை வன்புணர்வு செய்ய முடியாது என்று சொல்வது ஸ்டீரியோடைப்பிங் அணுகுமுறை. ஏனெனில் ஒரு ஆண், பாலியல் தொழிலாளியை வன்புணர்வு செய்ய முடியும் என்றும் கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற இன்னும் பல உதாரணங்களை உச்சநீதிமன்றம் இந்த கையேட்டில் கொடுத்துள்ளது.
இதனுடன் புதிய கையேட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.
என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது?
கீழ்க்கண்ட ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பதிலாக அவற்றை விவரித்து எழுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது முழு பட்டியல் அல்ல.
- Adultery i.e. Adultery: A woman having physical relations with someone outside of marriage
- Affair: Relationship outside marriage
- Bastard: a child born out of wedlock
- Biological sex / biological male or man: the gender assigned at birth
- Born a girl - Boy: boy or girl at birth
- Career Woman: Woman or woman
- Carnal intercourse: sexual intercourse
- Chaste women i.e. virgin women: women
- Child Prostitute: Child who has been trafficked
- Dutiful wife, good wife: wife or wife
- Easy Virtue: Woman
- Slut: Female
- Sex Change: Sex Reassignment or Gender Transition
- Seductors i.e. a woman who entices to have a physical relationship: Woman
- Spinster: unmarried woman
- Provocative clothing, dress ie provocative clothing: clothing or dress
- Mistress: a romantic or physical relationship with a man outside of marriage.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்