சண்டையை விலக்கவும் சாதி தேவையா?: சண்டையிட்டவர்கள் சேர்ந்து மாணவரை தாக்கிய கொடுமை

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் காளிராஜ், பட்டியலின தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது மகன் கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பள்ளியில் 11ஆம் படிக்கும் சக மாணவர்கள், ஹரிஷ் மற்றும் விக்ரம்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஆகஸ்ட் 17ஆம் தேதி, பள்ளியில் இவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்த கிருஷ்ணன், சண்டையை நிறுத்தி இருவரையும் விலக்கி, சண்டை போடவேண்டாம் எனக் கூறி சமாதானம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சாதிப் பெயரைச் சொல்லி தாக்குதல் நடந்ததா?

இதன் பிறகு பள்ளி முடிந்து, கிருஷ்ணன் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மாணவர் ஹரிஷ் தனது பகுதியைச் சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு, லட்சுமிபுரம் கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் மீது சாதிப் பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல், கொலை மிரட்டலும் விடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

சண்டையை நிறுத்தி, சமாதானம் செய்த மாணவர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் கிருஷ்ணனிடம் பேசினோம்.

“பட்டியிலினத்தைச் சேர்ந்த நீ எங்களை சமாதானம் செய்யலாமா?” எனக் கேட்டு அடித்தனர் என்கிறார் அவர்.

மேலும், “வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பள்ளியில் ஹரிஷ், விக்ரம் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சென்று இருவரையும் விலக்கி ஏன் சண்டையிடுகிறீர்கள் எனக் கேட்டேன்.

அப்போது எனது சாதிப் பெயரைச் சொல்லி, நீயெல்லாம் எங்களை சமாதானம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டாயா எனக் கேட்டு, நெஞ்சைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். உனது வேலையைப் பார்த்துக் கொண்டு போ எனக்கூறி அடிக்கப் பாய்ந்தார்கள்” எனக் கூறுகிறார்.

தாக்குதலில் மயக்கமடைந்த மாணவர்

“இந்தச் சம்பவத்தை எங்கள் பள்ளி ஆசிரியர் பார்த்துவிட்டார். இது குறித்து அவர்களை எச்சரித்து, நாளை பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறி அனுப்பினார். இதனால் அவர்களுக்கு என் மீது மேலும் கோபம் உண்டானது. பின்னர் மாலை நான் வீட்டிற்குச் சென்று விட்டேன்,” என்கிறார் பாதிக்கப்பட்ட மாணவர்.

இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த ஹரிஷ், தனது பகுதியைச் சேர்ந்த சிலர் மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு, கிருஷ்ணனை தேடி லட்சுமிபுரம் சென்றுள்ளார்.

அங்கு தனது வீட்டின் அருகிலுள்ள சாலையில் நின்றிருந்தபோது கிருஷ்ணனை கீழே தள்ளி ஹரிஷ் மற்றும் அவருடன் வந்த சிலர் தாக்கத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

"எனது சாதி பெயரைச் சொல்லி, இனி எங்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது, மீறினால் கொன்று விடுவோம் எனக் கூறி அடித்தனர். அந்தத் தாக்குதலால் நான் மயங்கிவிட்டேன்.”

தாக்குதலில் காயமடைந்த மாணவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“என் மகன் தாக்கப்பட்டு 10 நிமிடம் கழித்துதான் எனக்கு தகவல் தெரிந்தது. என் உறவினர் ஃபோன் செய்து, உனது மகனை யாரோ சிலர் சேர்ந்து அடித்து விட்டார்கள் எனக் கூறியவுடன் பதறியடித்து அங்கு சென்றோம். அவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, இதுகுறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றேன்.

அங்கு புகாரை பதிவு செய்து விட்டு, நடவடிக்கை எடுப்பதாக காவலர்கள் கூறினார்கள். பின்னர் எனது மகனை மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்,” எனக் கூறுகிறார் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

மேற்கொண்டு பேசியவர், “நான் அன்றாடம் கிடைக்கும் கூலியில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். என் மகன் படித்தால் குடும்பம் முன்னேறும் என்றுதான் பள்ளிக்கு அனுப்புகிறேன். சண்டை போடாதீர்கள், நண்பர்களாக இருங்கள் என்று சொன்னதற்காக மயக்கமடையும் அளவுக்குத் தாக்கி உள்ளார்கள். இது என்ன மாதிரியான மனநிலை எனப் புரியவில்லை.

தலை, கழுத்து, கைகள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் தாக்கியுள்ளதால் நரம்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அழைத்துச் செல்ல இருக்கிறோம்,” என்று கவலையுடன் கூறுகிறார் காளிராஜ்.

இச்சம்பவம் தொடர்பாக, கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய உதவி காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், “பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள், சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மூன்று பெரியவர்கள் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: