You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராணி என அழைக்கப்பட்ட ரோமானியப் பேரரசர் : பிரிட்டன் அருங்காட்சியகம் தரும் தகவல்கள்
- எழுதியவர், யஸ்மின் ருஃபோ
- பதவி, கலாசார செய்தியாளர்
ஒருநாள் ஒரு கவர்ச்சியான நபர் ஒருவர் ரோமப் பேரரசர் எலகபாலஸை "ஐயா பேரரசரே!" என்று குறிப்பிட்டபோது, "என்னை ஐயா என்று அழைக்க வேண்டாம், ஏனென்றால் நான் ஒரு பெண்மணி," என எலகபாலஸ் தெரிவித்ததாக ரோம் நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் டியான் கேசியஸ் தெரிவித்தார்.
பழங்காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த சாம்ராஜ்யங்களுக்கு எதிராக நின்று போர் புரிந்த ஒரு அரசனின் பாலியல் அடையாளத்தைப் பற்றிய கதைகள் பல நூற்றாண்டுகளாகவே ஆர்வத்திற்கும் ஆய்வுக்கும் உள்ளாகி வருகின்றன.
ஆனால் இப்போது, பிரிட்டனின் உள்ள நார்த் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் அருங்காட்சியகம், எலகபாலஸ் பற்றி நடத்தப் போகும் கண்காட்சியில் அவரை ஒரு திருநங்கையாக அடையாளப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும், அவரைக் குறிப்பிடுவதற்காக ‘அவள்/அவர்கள்’என்னும் பிரதிபெயர்களைப் (pronouns) பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்தது.
அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கடந்த காலத்தைச் சேர்ந்த நபர்களின் பிரதிப் பெயர்களை அடையாளம் காணும்போது நாம் உணர்திறன் உடையவர்களாக இருப்பதுதான் அவர்களுக்கு அளிக்கும் மரியாதை,” என்று அவர் தெரிவித்தார்.
'மனைவி, எஜமானி மற்றும் ராணி என்று அழைக்கப்பட்டார்'
அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் காணப்படும் பொருட்களில், இளம் பேரரசரின் முகத்துடன் ஒரு நாணயம் உள்ளது.
அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில் "கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், விளம்பரம் மற்றும் பேச்சுக்கள் முடிந்தவரை அனைத்து அடையாளங்களையும் உள்ளடக்கியவை" என்பதை உறுதிப்படுத்த LGBTQ+ தொண்டு நிறுவனமான ஸ்டோன்வால் உடன் ஆலோசனை செய்ததாகக் கூறினார்.
எலகபாலஸ் என்று அழைக்கப்படும் மார்கஸ் ஆரேலியஸ் அன்டோனினஸ் ரோமானியப் பேரரசை கி.பி 218 முதல் கி.பி 222ல் தனது 18 வயதில் படுகொலை செய்யப்படும் வரை நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார்.
வரம்பற்ற பாலியல் உறவுகள் அவரை மிகவும் சர்ச்சைக்குரிய நபராக மாற்றியது.
ஒரு செனட்டராகவும் ஹெலியோகபாலஸின் சமகாலத்தவராகவும் இருந்த டியான் காசியஸ், அவரது வரலாற்றுக் குறிப்புகளில், “பேரரசர் எலகபாலஸ் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். நான்கு முறை பெண்களோடும், ஒரு முறை முன்னாள் அடிமை மற்றும் தேரோட்டியான ஹியர்கோல்ஸ் எனும் ஆணோடும் அவருக்கு திருமணம் நடந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
பேரரசர், "அவரது திருமண உறவில் மனைவி, எஜமானி மற்றும் ராணி என்று அழைக்கப்பட்டார்" என்று டியான் எழுதுகிறார்.
எலகபாலஸ் திருநங்கை என்பதற்கு என்ன ஆதாரம்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை சுஷ்மா மாலிக் பிபிசியிடம் கூறுகையில், "எலகபாலஸின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாம் தேடிச்செல்லும் வரலாற்றாசிரியர்கள் அவருக்கு மிகவும் விரோதமானவர்கள். எனவே அவர்கள் கூறுவதை நம்ப முடியாது. "எலகபாலஸே அவரைப் பற்றி கூறியதாக எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை." எனத் தெரிவித்தார்.
"ஒரு அரசரை விமர்சிக்க அல்லது பலவீனப்படுத்துவதற்காக அவரை பெண் தன்மை கொண்டவர் என்று விமர்சிக்கும் மனநிலை பழங்காலத்தில் இருந்ததற்கு ரோம இலக்கியத்தில் பல உதாரணங்கள் உள்ளன” என அவர் தெரிவித்தார்.
"எலகபாலஸ் மேக்அப் அணிந்து, விக் அணிந்து, உடலை மாற்றிக் கொண்டதைப் பற்றிய குறிப்புகள் பேரரசர் எலகபாலஸை குறைத்து மதிப்பிடப்படுவதற்காக எழுதப்பட்டிருக்கலாம்” என்றும் சுஷ்மா மாலிக் தெரிவித்தார்.
ரோமானியர்கள் பாலினத் தன்மையைப் பற்றி அறிந்திருந்தாலும், இலக்கியத்தில் பிரதிபெயர்கள் மாற்றியமைக்கப்பட்டதற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றும் இது மக்களின் பாலின அடையாளத்தை குறிக்காமல், புராணம் மற்றும் மதத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும் மாலிக் கூறினார்.
எவ்வாறாயினும், "எலகபாலஸ் நிச்சயமாக 'அவள்' என்ற பிரதிபெயரை விரும்பினார் என்பதற்கு ஆதாரங்களை வரலாற்றாசிரியர் டியான் வழங்குவதாகக் நார்த் ஹெர்ட்ஸ் கவுன்சிலின் வணிகம் மற்றும் கலைகளுக்கான நிர்வாக உறுப்பினர் கவுன்சிலர் கீத் ஹோஸ்கின்ஸ் கூறினார்.
இப்போது நாம் நம்பும் விஷயங்கள் அந்த காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒன்று என அந்த ஆதாரங்கள் மூலம் தெரியவருவதாக அவர் தெரிவித்தார்.
"எலகபாலஸ் ஒரு பெண்ணாக அடையாளம் காணப்பட்டதை நாங்கள் அறிவோம். மேலும் என்ன பிரதிபெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி வெளிப்படையாக அவர் பேசியிருக்கிறார். இது பிரதிபெயர்கள் புதியவை அல்ல என்பதைக் காட்டுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)