இந்திய மாநிலங்களுக்காக சீனாவிடம் வர்த்தகம் பேசும் வங்கதேசம் - முகமது யூனுஸின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்?

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ்

பட மூலாதாரம், @ChiefAdviserGoB

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் கடந்த வாரம் சீனாவுக்கு இருதரப்பு பயணம் மேற்கொண்டார்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் விடுத்த வேண்டுகோள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம் என்றார்.

அத்துடன், அங்கு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க சீனாவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதனையடுத்து, முகமது யூனுஸின் கருத்து ஆட்சேபனைக்குரியது என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் ராஜதந்திரிகளும் யூனுஸின் அறிக்கை குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம், யூனுஸ் சீனாவுக்குப் பயணம் செய்தார். அப்போது, சீனாவுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில், சீன நிறுவனங்களும் டீஸ்டா நதி விரிவான மேலாண்மை மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தில் சேர அழைக்கப்பட்டுள்ளன.

இது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் பயணத்தின் போது, சீனா மற்றும் அதன் நிறுவனங்களிடமிருந்து சுமார் 210 கோடி டாலர் மதிப்பில் முதலீடு, கடன்கள் மற்றும் மானியங்களாக உதவிக்கான உத்தரவாதத்தை வங்கதேசம் பெற்றுள்ளது.

முகமது யூனுஸ் கூறியது என்ன?

மார்ச் 28 அன்று பீஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வின் போது முகமது யூனுஸ் வடகிழக்குப் பகுதிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

"இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதிகள்.

அவற்றுக்குக் கடலுக்குச் செல்ல வழி இல்லை. இந்த முழுப் பகுதிக்கும் கடலின் ஒரே பாதுகாவலர்கள் நாங்கள் தான்.

எனவே, இது மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைத் உருவாக்குகிறது," என்று வங்கதேசத் தலைவர் முகமது யூனுஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எனவே, இது சீனப் பொருளாதாரத்தை விரிவாக்க உதவலாம்.

பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லுங்கள். பொருட்களை சீனாவுக்குக் கொண்டு வந்து உலகின் பிற பகுதிகளுக்கு வழங்குங்கள்." என்றார்.

மேலும், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் நீர்வளங்களைப் பற்றியும் முகமது யூனுஸ் குறிப்பிட்டார்.

"நேபாளம் மற்றும் பூடான் வரம்பற்ற நீர் மின்சாரத்தைக் கொண்டுள்ளன. அதை நாம் நமது நோக்கத்துக்காகப் பயன்படுத்தலாம், தொழிற்சாலைகளை அமைக்கலாம். மேலும், வங்கதேசம் வழியாக நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஏனென்றால் கடல் நமக்குப் பின்னால் உள்ளது" என்றார்.

பின்னர் சீனாவைப் பற்றி அவர் கூறுகையில், "உங்கள் நாட்டில் எதையாவது உற்பத்தி செய்து உலகுக்கு விற்க வேண்டிய அவசியமில்லை, மாறாக அதை வங்கதேசத்தில் உற்பத்தி செய்து சீனாவிலும் விற்கலாம். இவை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வாய்ப்புகள்" என்றார்.

மேலும், வங்கதேசத்தில் பொருட்களை உற்பத்தி செய்வது எளிது என்று அவர் கூறினார்.

வங்கதேச அரசு செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் தெரிவித்ததன் படி, முகமது யூனுஸுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, சிறப்பு சீன தொழில்துறை பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில்துறை பூங்காக்களை மற்ற நாடுகளில் உருவாக்குவதற்கு சீனா ஆதரவளிக்கும் என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

முகமது யூனுஸ் தனது பயணத்தின் போது, ​​நதி நீர் மேலாண்மையில், குறிப்பாக டீஸ்டா நதி தொடர்பாக சீனாவின் நிபுணத்துவத்திடம் உதவி கோரினார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியது என்ன?

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது யூனுஸின் கருத்து ஆட்சேபனைக்குரியது என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்

யூனுஸின் இந்தக் கருத்துக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

"வங்கதேச இடைக்கால அரசாங்கம் என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் அரசாங்கத்தின் அறிக்கை, இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் சூழப்பட்டவை என்றும், வங்கதேசம் மட்டுமே கடலுக்குச் செல்ல அவர்களின் ஒரே பாதுகாவலர் என்றும் விவரிப்பது, ஆட்சேபனைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்," என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"இந்தியாவின் மூலோபாய 'சிக்கன் நெக்' வழித்தடத்துக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதை இந்தக் கருத்து வெளிப்படுத்துகிறது.

வரலாற்று ரீதியாகவும், இந்தியாவில் உள்ள சில உள்நாட்டுக் குழுக்களே வடகிழக்கு பகுதியை முக்கிய நிலப்பரப்பிலிருந்து துண்டிப்பது குறித்து ஆபத்தான பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

எனவே, 'சிக்கன் நெக்' வழித்தடத்துக்கும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மேலும் வலுவான ரயில் மற்றும் சாலை வசதிகளை உருவாக்குவது அவசியமாகிறது."

"மேலும், வடகிழக்கு பகுதியை இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் மாற்று சாலைப் பாதைகளை ஆராய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இது சிக்கன் நெக் பகுதியை திறம்பட கடந்து செல்கிறது."

"இது பொறியியல் ரீதியாக சவால் அளிக்கும் என்றாலும், உறுதியாலும், புதுமையாலும் இதை அடைய முடியும்."

"முகமது யூனுஸின் இத்தகைய சிக்கலான அறிக்கைகள் ஆழமான மூலோபாய நோக்கங்களையும் நீண்டகால செயல்திட்டத்தையும் பிரதிபலிப்பதால், அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது."

நிபுணர்கள் கூறுவது என்ன ?

"வர்த்தக வழிகள் குறித்து இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே துல்லியமான எல்லை ஒப்பந்தங்கள் உள்ளன, அவை மதிக்கப்பட வேண்டும்" என்று வங்கதேசத்துக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் நிலத்தால் சூழப்பட்டிருப்பதாக வங்கதேசத்தின் தற்போதைய தலைமை கூறியதன் பின்னணியில் உள்ள தர்க்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சீனாவில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி குறிப்பிடும் போது, ​​முகமது யூனுஸ் அது இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மறந்து விடுகிறார்.

வங்கதேசத்தின் பொறுப்பான அரசியல்வாதியாக, அவர் எந்த மூன்றாவது நாட்டிலும் இதைப் பற்றி விவாதிக்கக்கூடாது, ஏனெனில் இது ஒரு நல்ல ராஜதந்திர நடைமுறை அல்ல," என்று தெற்காசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தனஞ்சய் திரிபாதி பிபிசியிடம் கூறினார்.

"வடகிழக்கு பகுதி நிலத்தால் சூழப்படவில்லை, அது இந்தியாவின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி குறித்து இந்தியா சீனாவுடன் பேச வேண்டும் என்றால், அது தானாகவே அதைச் செய்யலாம்.

யூனுஸ் இந்தியாவுடன் சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்பைப் பெற விரும்பினால், இருதரப்பு அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும், இதற்கு வங்கதேசத்தில் நிலையான அரசியல் சூழல் தேவைப்படும். இது தற்போது ஒரு தீவிரமான கவலையாக உள்ளது."

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வால் சிபல், முகமது யூனுஸின் அறிக்கையை 'ஆபத்தான சிந்தனை' என்று வர்ணித்துள்ளார்.

"வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு முன்பிருந்த அரசியலில், இந்தியா வங்கதேசத்தை மூன்று பக்கமும் சுற்றி வளைத்து, அதன் நிலைமை சிக்கலானதாக மாறினால், வங்கதேசமும் நமது வடகிழக்கு பகுதியை மூன்று பக்கங்களிலிருந்து சுற்றி வளைத்து அழுத்தம் ஏற்படுத்த பயன்படுத்தலாம் என்று ஒரு விவாதம் இருந்தது. நமது வடகிழக்கு மாநிலங்களை ஒரு நாடாகக் குறிப்பிட்டு, பின்னர் அதைத் திருத்துவது அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை வெளிப்படுத்துகிறது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

"வங்கதேசம் பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்திக்கொண்டு வருவது, அந்த நாடு மீண்டும் பிஎன்பி (வங்கதேச தேசியவாதக் கட்சி) ஆட்சி கால நிலைக்குத் திரும்பும் அபாயத்தை உருவாக்குகிறது.

யூனுஸ், வங்கதேசத்தை ஒரு பாலமாக பயன்படுத்தி, நமது வடகிழக்கு பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை விரிவுபடுத்தவும், கடற்கரையின் மீதான வங்கதேசத்தின் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, நமது வடகிழக்கில் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களை சீனாவின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரவும் வெளிப்படையாக ஊக்குவிப்பதாகத் தெரிகிறது."

"இதற்கு நாம் அதிகாரப்பூர்வமாக உரிய முறையில் பதிலளிக்க வேண்டும்."

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன என்ற முகமது யூனுஸின் கூற்று குறித்து பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"இந்தியாவின் ஏழு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன என்று யூனுஸ் சீனாவிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பது சுவாரஸ்யமானது.

வங்கதேசத்தில் முதலீடு செய்ய சீனா வரவேற்கப்படுகிறது, ஆனால் ஏழு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன என்று குறிப்பிடுவதன் மூலம் அவர் உண்மையில் என்ன சொல்கிறார்?" என்று யூனுஸின் அறிக்கையின் வீடியோ துணுக்கைப் பகிர்ந்து, சஞ்சீவ் சன்யால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

வங்கதேசம் மற்றும் சீனா இடையேயான நெருக்கம் குறித்து பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விவாதம்

இந்தியாவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித்

பட மூலாதாரம், Youtube/Screen Shot

படக்குறிப்பு, சீனாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான நெருக்கம் இந்தியாவுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்

வங்கதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கம் மற்றும் சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸின் சமீபத்திய பயணம் குறித்து பாகிஸ்தானில் ஒரு பரபரப்பு நிலவுகிறது.

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித், 'டீஸ்டா நதி திட்டத்தை சீனா பெற்றது' என்று கூறியுள்ளார்.

'சீனாவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வங்கதேசம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது, இது இந்தியாவின் சிக்கல்களை, குறிப்பாக டீஸ்டா தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும்.'

அப்துல் பாசித் வெளியிட்டுள்ள தனது காணொளி பதிவு ஒன்றில், 'இரு நாடுகளும் தங்கள் உறவுகளை விரிவான மூலோபாய கூட்டுறவு என்று அழைத்துள்ளன, இது ஒரு மிக முக்கியமான உத்தியாகும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது' என்று தெரிவித்தார்.

"டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஒரு தகராறு உள்ளது.

இப்போது, டீஸ்டா நதி விரிவான மேலாண்மை மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தில், வங்கதேசம் சீனாவை முதலீடு செய்ய அழைப்பது இந்தியாவுக்கு பிரச்னையை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் ஹசீனாவின் காலத்தில் கூட, வங்கதேசம் இதை சீனாவுக்கு வழங்கியது.

பின்னர் இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் ஹசீனா அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றார்" என்று அப்துல் குறிப்பிட்டார்.

"வங்கதேசத்தின் இந்த முடிவு, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பை அதிகரிக்கும், மேலும் இது இந்தியா சீனாவைப் பார்க்கும் விதத்துக்கு ஒரு பிரச்னையாகும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதைத் தவிர, பெல்ட் அண்ட் ரோட் முன் முயற்சியின் (BRI) கீழ், ஒரு பொருளாதார வழித்தடம் கட்டப்பட்டு வரும் மியான்மருடன் சீனா நல்ல உறவைக் கொண்டிருப்பதால், ரோஹிங்கியா மக்கள் விவகாரத்தில் வங்கதேசத்தையும் சீனா ஆதரித்துள்ளது.

"ஜனவரி 2026க்கு முன்னர் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன, அதற்கு நிறைய நேரம் உள்ளது, அதனால் மேலும் பல முன்னேற்றங்களைக் காணலாம்."

ஏப்ரல் 3-4 தேதிகளில் பாங்காக்கில் நடைபெறும் பிஐஎம்எஸ்டிஇசி (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி) கூட்டத்தில் பிரதமர் மோதியும் யூனுஸும் கலந்து கொள்கிறார்கள் என்றும், இந்த இரு தலைவர்களும் அங்கு சந்திக்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் பாசித் கூறினார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு