சென்னையில் 2 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது ஏன்?

ரவுடிகள் மீது என்கவுன்டர்

பட மூலாதாரம், TN POLICE

படக்குறிப்பு, காவல்துறையினர் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஷ் காயமடைந்ததாகவும் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறை குறிப்பிடுகிறது.

சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். திடீரென இந்த என்கவுன்டர்கள் நடக்கக் காரணம் என்ன?

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அதிகாலை மூன்றரை மணியளவில், கூடுவாஞ்சேரிக்கு அருகில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு வாகனம் காவல்துறையினரை இடிப்பது போல் வந்து நின்றதாகவும், அந்த வாகனத்தில் இருந்த நான்கு பேர் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும் காவல்துறை கூறுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த காவல் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவரும் காயமடைந்துவிட, மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை தரப்பு கூறுகிறது. இவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

ரவுடிகள் மீது என்கவுன்டர்

பட மூலாதாரம், TN POLICE

படக்குறிப்பு, ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீஸாரை நோக்கி தாக்க முற்பட்டதாக காவல்துறை கூறுகிறது

கொல்லப்பட்ட சோட்டா வினோத் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர். 10 கொலை வழக்குகள், 16 கொலை முயற்சி வழக்குகள், 10 கூட்டுக்கொள்ளை, 16 அடிதடி உள்பட ஏகப்பட்ட வழக்குகள் அவர் மீது இருக்கின்றன. ஓட்டேரி காவல் நிலைய குற்றவாளிகள் சரித்திர பதிவேட்டில் 'ஏ பிளஸ்' பிரிவில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.

கொல்லப்பட்ட இன்னொருவரான ரமேஷும் மண்ணிவாக்கத்தில் வசித்தபடி, சோட்டா வினோத்தின் கூட்டாளியாக செயல்பட்டுவந்தார். இவர் மீதும் ஐந்து கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள், எட்டு அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.

கடந்த ஜூலை 21ஆம் தேதி ஆதனூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு ரவுடிக் கும்பல் அவரிடம் பணம் கேட்டு தராததால், அவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இந்தத் தாக்குதல் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அமரவேல், புகழ்வண்ணன், சக்திவேல், ரமேஷ் ஆகிய நான்கு பேர் சரணடைந்தனர். மேலும் மூன்று பேரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். இவர்கள் அனைவருமே மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் சோட்டா வினோத் இருந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது.

இந்த பின்னணியில்தான் சோட்டா வினோத்தையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடிவந்தனர்.

ரவுடிகள் மீது என்கவுன்டர்

பட மூலாதாரம், TN POLICE

படக்குறிப்பு, கொல்லப்பட்ட வினோத் என்பவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.

தமிழக காவல்துறை சில மாதங்களுக்கும் மேலாகவே ரவுடிகளுக்கு எதிராக DARE (Drive Against Rowdy Elements) என்ற தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவும் இந்த என்கவுன்டர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தற்போது திடீரென ரவுடிகள் மீது என்கவுன்டர் நடப்பதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஜுலை 11ஆம் தேதியன்று மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார். அந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுவாக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து திருப்தி தெரிவித்தாலும், மக்களவைத் தேர்தல் வர இருப்பதால் அடுத்த ஓர் ஆண்டு காலம் மிகவும் முக்கியமானது என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தக் கூட்டம் முடிந்த பத்து நாட்களிலேயே பணம் கேட்டு தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் ரவுடிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்விதமாக இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது.

இது தவிர, இதற்குச் சில நாட்களுக்கு முன்பாக சோட்டா வினோத்தைப் போலவே 50க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் வலம்வந்த வேலூரைச் சேர்ந்த வசூல் ராஜா என்பவரையும் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. அவர் தப்பிச் செல்லும்போது கீழே விழுந்ததால் கை உடைந்ததாகக் கூறி அவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: