இலங்கையின் பொருளாதார சவால்களை 2023ல் வெற்றிக் கொள்ள முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச நாணய நிதியத்தின் கடன், சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு, வரி வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல், வர்த்தக நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்த்தல், மின்சார பிரச்னை, மனித உரிமையை பாதுகாத்தல், தேர்தல் நடத்துதல், எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட புவிசார் அரசியல் ஆகிய பிரச்னைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுடன் 2023ம் ஆண்டிற்குள் பிரவேசித்துள்ளது.
இந்த பிரச்னைகளுக்கு வெற்றிகரமான தீர்வை தேடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, 2023ம் ஆண்டு எதிர்காலத்தை தீர்மானிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு, வரி சுமை, உர பிரச்னை, நாளாந்த மின்சார வெட்டு, வேலையின்மை பிரச்னை, கடன் வட்டி வீதம் அதிகரித்தல், மனித உரிமை மீறல்கள் ஆகிய பிரச்னைகளினால் 2023ம் ஆண்டில் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு, இந்த ஆண்டு பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.
அதாவது, உணவு தேவைகளை நிவர்த்தி செய்தல், குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புதல், மாதாந்த கட்டணங்களை செலுத்துதல், கடன் தவணைகளை செலுத்துதல் ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதிலும் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பொருளாதாரம், கைத்தொழில், மனித உரிமைகள் மற்றும் காலநிலை போன்ற விடயங்கள் இலங்கைக்கு 2023ம் ஆண்டு சவால்மிக்கதொரு ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
2023 பொருளாதார சவால்

பட மூலாதாரம், Getty Images
பாரிய சிரமங்கள், நிச்சயமற்ற நிலைமை, ஏமாற்றங்களுக்கு மத்தியிலான கடந்த ஒரு வருடத்தை பூர்த்தி செய்து, தற்போது 2023ம் ஆண்டுக்குள் பிரவேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கிய முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, எம்மில் பெரும்பாலானோர் அனுபவித்த பின்னடைவுகள் மற்றும் எமது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை தொடர்பில் தனக்கு நல்ல புரிதல் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார்.
ஆனால், இந்த மோசமான காலத்தை கடந்து விட்டதாக தான் நம்புவதாகவும், 2023ம் புதிய ஆண்டில் பொருளாதாரத்தின் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு தீர்மானமிக்க ஆண்டாக இருக்கும் எனவும் நம்புவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள், 2023ம் ஆண்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கம் இருக்கின்றது. எனினும், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அதற்கான உறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த உறுதிப்பாட்டை ஜனவரி மாதம் பெற்றுக்கொள்வதும் உறுதியற்ற நிலையாக காணப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள மற்றுமொரு பாரிய சவாலாக காணப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அரசாங்கம் வரவு செலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, வருமானத்தை 63 வீதத்தினால் அதிகரித்துக்கொள்வதற்கு, அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.
வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்ளாவிடின், அரசாங்கம் தனது இலக்கை நோக்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.
நாட்டிற்குள் உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி 85 பில்லியன் டாலராக காணப்படுகின்றது. இந்த உள்நாட்டு உற்பத்தி 2023ம் ஆண்டு 9.2 வீதத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, 50 பில்லியன் டாலரினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images
தொழிற்சாலைகள் மேலும் மூடப்படுமாயின், வேலையில்லா பிரச்னை மேலும் வலுவடையும் அபாயம் காணப்படுகின்றது.
''2022ம் ஆண்டை விடவும், 2023ம் ஆண்டு சிரமமான ஆண்டாக இருக்கும். பாரதூரமானது, நாம் எட்டும் தீர்மானத்திற்கு அமையவே, நாளைய தினம் தீர்மானிக்கப்படும்" என வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார்.
''நாம் இன்று கடனை செலுத்துவதில்லை. நாம் இன்று டாலரை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். டாலரை நெகிழ்வு தன்மையாக விடும் பட்சத்தில், எதிர்வரும் மார்ச் மாதம், அதன் பெறுமதி 550 ரூபாவாக காணப்படும். டாலரின் பெறுமதி 550 ரூபாவாக அதிகரிக்கும் பட்சத்தில், மீண்டும் பெட்ரோலின் விலை அதிகரிக்கும். பெட்ரோலிய கூட்டுதாபனம் நட்டமடையும். தமது சொத்துக்களை விற்பனை செய்து, 3 பில்லியன் டாலரை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தொழிற்சங்கங்கள் அதற்கு இடமளிக்க போவதில்லை. பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பில் ஈடுபடும் பட்சத்தில், எமது வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் வீழ்ச்சி அடையும். சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்து, அனைத்தும் இல்லாது போகும்" என பேராசிரியர் அமிந்த மெத்சிறி பெரேரா கூறுகின்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 75 வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
''65 வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் பட்சத்தில், எமது ஆடை கைத்தொழில் துறை இல்லாது போகும். மறுபுறத்தில் ஏற்றுமதி தடைப்படும். உற்பத்தி செலவு அதிகரிக்கும்"
''இது சிக்குண்டுள்ள நூல் பந்தாகும். நுணிப் பகுதி எங்குள்ளது என்பதனை முதலில் தேட வேண்டும். முறையாக அதனை அவிழ்க்க வேண்டும். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்றவாறு, அங்காங்கே அவிழ்க்க முற்பட்டால், இந்த நூல் பந்து மேலும் சிக்குண்டுவிடும். மேலும் சிக்குண்டுள்ளதே தவிர, இதுவரை நுணிப் பகுதியை தேடவில்லை" என பேராசிரியர் அமிந்த மெத்சிறி பெரேரா தெரிவித்துள்ளார்.
மீண்டுமொரு போராட்டம் வெடிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
வாழ்க்கை செலவு, அரசாங்கத்தின் அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை வழங்குதல், முக்கிய அரசியல்வாதிகள் அந்த சலுகைகளுடன் வாழ முயற்சித்தால், மக்களின் பிரச்னைகளுக்கு பதில் கிடைக்காது. இதற்கு பதில் வழங்க தவறும் பட்சத்தில், அடுத்த இரண்டு தலைமுறையும் போராட்டத்தில் களமிறங்கும்" என பேராசிரியர் அமிந்த மெத்சிறி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
''உண்பதற்கு உணவு இல்லாமல், குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், சொத்துக்களை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுமானால், அடுத்த போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் கூறுகின்றார். இந்த இடத்தில் எமது வங்கி கட்டமைப்பு வீழ்ச்சி அடையும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மக்கள் ஒன்றிணைந்து கடனை செலுத்தாது இருந்தால், வரி செலுத்தாது இருந்தால், காலி முகத்திடல் போராட்டத்தை விடவும் போராட்டம் தீவிரமடையும்" என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
''கடந்த ஆண்டு நாங்கள் பிரச்னைக்கு உரிய தீர்வை காணவில்லை. தீர்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். எனினும், தீர்வு இல்லை. இன்று வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. மக்கள் அது தெரியாது. எங்களிடம் எரிபொருள் உள்ளது. எரிவாயு இருக்கின்றது. வரிசைகள் கிடையாது. அதனால், பிரச்னை முடிவடைந்து விட்டது என மக்கள் நினைக்கின்றார்கள்.
இரண்டு அல்லது இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு காணப்படுகின்றது. மக்கள் அதற்கு தற்போது பழக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு தீர்வு கிடையாது. நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைகின்றோம்." என அவர் கூறுகின்றார்.
''இந்த ஆண்டும் இவ்வாறே பொருளாதாரத்தை கொண்டு செல்ல எதிர்பார்த்திருந்தால், மக்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நிச்சயமாக வீதிக்கு இறங்குவார்கள். மக்கள் உணவின்றி ஒரு புறத்தில் வீதிக்கு இறங்குவார்கள். வரி உள்ளிட்ட ஏனைய பிரச்னைகளுக்காக தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கும். இடைநடுவில் நிறுத்தப்பட்ட போராட்டத்தை புதிய தலைமுறையினர் கையில் எடுப்பார்கள். அவ்வாறு கையில் எடுக்கும் பட்சத்தில், இந்த நாடு முழுமையாக இல்லாது போயிவிடும்" என பேராசிரியர் அமிந்த மெத்சிறி பெரேரா தெரிவிக்கின்றார்.
''ஜனவரி மாதமாவது பாரவாயில்லை. தீர்வை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் எடுக்கும் பட்சத்தில், குறைந்தது ஒரு சிறிய கட்டுப்பாட்டையாவது எடுக்க முடியும். அரசாங்கத்தின் முடிவிலேயே அது இருக்கின்றது" என அவர் கூறுகின்றார்.
மனித உரிமை சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
2023ம் ஆண்டு சாதாரண பொதுமக்களுக்கு உணவு இருக்குமா? மருந்து இருக்குமா? எதிர்ப்புக்கள் காணப்படுமா? அரசாங்கத்தின் அடக்குமுறை எவ்வாறு இருக்கும்? ஊழல் நிறுத்தப்படுமா? பொருளாதார குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து ஆராய வேண்டும் என மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் சட்டத்தரணி பவாணி பொன்சேகா தெரிவிக்கின்றார்.
''2023ம் ஆண்டு இலங்கைக்கு ஒவ்வொரு விதத்தில் மனித உரிமைகள் தொடர்பில் பிரச்னைகள் வர முடியும். தேர்தல் புதிய பிரச்னையாக காணப்படுகின்றது. தேர்தலை நடத்துவதா? மக்களுக்கு வாக்களிக்க முடியுமாக இருக்குமா? என பார்க்க வேண்டும். தேர்தலை நடத்துவது அவசியமானது"
''தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த பிரச்னையும் வருகின்றது. பொருளாதார குற்றங்கள் மாத்திரம் அல்ல, தேர்தல் பக்கத்திலும் பிரச்னை உள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் தேர்தலை நடத்தாது பிற்போட்ட சந்தர்ப்பங்களில், நீதிமன்றத்தை நாடிய போது, தேர்தலை நடத்துவது அவசியமானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில், மனித உரிமை மீறப்படும் என கூறப்பட்டது. அனைத்து பிரஜைகளுக்கும் வாக்குரிமை உள்ளது. தேர்தலை பிற்போடும் போது, பிரச்னை ஏற்படக்கூடும். 2023ம் ஆண்டு பொருளாதார ரீதியிலும், தேர்தல் பக்கத்திலும் பிரச்னைகள் வரக்கூடும்" என பவாணி பொன்சேகா தெரிவிக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை 2023ம் ஆண்டு முன்வைக்கப்படாது என அவர் கூறுகின்றார்.
எனினும், இலங்கையின் மனித உரிமை நிலைமை மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
''யோசனையொன்று முன்வைக்கப்படுமாயின், அது 2024ம் ஆண்டே முன்வைக்கப்படும். எனினும், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். 2023ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மனித உரிமை தொடர்பில் அறிக்கையிடலாம்."
''ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன எமக்கு உதவிகளை வழங்கும் போது, மனித உரிமை நிலைமை குறித்து அவதானம் செலுத்தும். பொருளாதார குற்றங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் பிரச்னை வரும். என அவர் தெளிவுப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
''இந்த சவால்களுக்கு 2023ம் ஆண்டு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது குறித்து நாம் பார்க்க வேண்டும். பொருளாதாரம், பொருளாதார குற்றங்கள், மனித உரிமை, சட்டவாதிக்கம் ஆகியவற்றில் எவ்வாறு ஊழல் தவிர்க்கப்படும் என்பது குறித்து பார்க்க வேண்டும்"
''2022ம் ஆண்டு எமக்கு பாரிய பிரச்னைகள் காணப்பட்டன. 2023ம் ஆண்டும் இலங்கைக்கு பாரிய பிரச்னைகள் காணப்படுகின்றன. இந்த பிரச்னைகளுக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்பதே பிரச்னையாக உள்ளது."
''2022ம் ஆண்டு நாம் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தியதை நாம் அவதானித்தோம். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினால், ராணுவத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கையில் பல பிரச்னைகள் காணப்படுகின்றன. பொருளாதார பிரச்னைகள் காணப்படுகின்றன. மக்களுக்கு உணவு இல்லாத பிரச்னைகள் அதிகரிக்கும் போது, எதிர்ப்புக்களும் அதிகரிக்கக்கூடும். அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்த இடமளிக்குமா?. எவ்வாறு செய்யப் போகின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். ராணுவத்தை பயன்படுத்தினால், அது பாரிய பிரச்னை. 2022ம் ஆண்டு அரசாங்கம் முன்னெடுத்த விடயங்களை 2023ம் ஆண்டும் அவ்வாறே முன்னெடுக்கும். ஜனாதிபதியே இதனை கூறியுள்ளார்" என அவர் குறிப்பிடுகின்றார்.
போசாக்கு சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இலங்கையிலுள்ள 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் - மக்கள் தொகையில் 30 வீதத்திற்கு அண்மித்தோர் உணவு பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு விவசாய உற்பத்தி குறைவடைந்துள்ளமை, அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளமை, உள்நாட்டு பணப் பெறுமதி மதிப்பிழந்துள்ளமை ஆகிய காரணிகள் உணவு தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கான காரணமாக அமைந்துள்ளது. இதனால், மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் விலை குறைந்த உணவு வகைகள் கிடைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியானது, குடும்பங்களை வறுமைக்கு தள்ளியுள்ளது. தொற்று நோய் காரணமாக இந்த நாட்டிலுள்ள அரை மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
86 வீதமான குடும்பங்கள் விலை குறைவான மற்றும் போசாக்கு இல்லாத உணவு வகைகளை கொள்வனவு செய்வதாக உலக உணவு திட்டத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் உணவு வேளைகளை முழுமையாக தவிர்க்கும் குடும்பங்களும் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்று நோய் பரவலுக்கு முன்னர், இலங்கை முழுவதும் போசாக்கின்மை விகிதாசாரம் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. இந்த நிலையில், தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமைக்கு மத்தியில், அது மேலும் வலுவடைந்துள்ளது.
அதனால், 2023ம் ஆண்டு மக்களுக்கு போசாக்கான உணவு வழங்குதல் மற்றும் அனைவருக்கும் உணவு விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.
காலநிலை சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில காலமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மாற்றங்களினால், இந்த நாட்டு மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
வறட்சி, வெள்ளம், மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினால், உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்தது. அதனால், 2023ம் ஆண்டு காலநிலை சவால்களை வெற்றிகரமான எதிர்கொள்வதற்கான தேவை இலங்கைக்கு காணப்படுகின்றது.
லா நின்யா (மழை பெய்யாத காலங்களில் மழை பெய்யும் நிலைமை) காலநிலை நிலைமை தற்போது பலவீனமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்த நிலைமை தொடர்கின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
''லா நின்யா பாலவீனமடைந்துள்ளமையினால், நாட்டில் காலநிலை அழுத்தங்கள் காணப்படுகின்றன. அது இருக்கும் பட்சத்தில், ஜனவரி, பெப்ரவரி மழை கிடைக்கும். அதனால், மழை வீழ்ச்சி குறைவடையும் சாத்தியம் உள்ளது. சாதாரண மழையை எதிர்பார்க்கமுடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையாக மழையை எதிர்பார்க்க முடியாது. எனினும், மே மாதத்தில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அவர் கூறுகின்றார். நாட்டில் தற்போது நீர்த்தேக்கங்களில் 55 முதல் 60 வீதம் வரையான நீர் மட்டமே காணப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













