'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா

பட மூலாதாரம், Alok Putul

    • எழுதியவர், ஆலோக் புதுல்
    • பதவி, பிபிசி இந்திக்காக

ராய்ப்பூரின் அவதியா பாராவின் வளைந்த குறுகிய தெருக்களில், ஒரு பழைய வீடு இருக்கிறது. சுமார் 84 வயதான ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா அந்த வீட்டில்தான் வசிக்கிறார்.

இந்த வீட்டின் பாழடைந்த சுவர்களில் பெயர்ப் பலகைகள் ஏதுமில்லை, வெற்றியின் அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் இந்த சுவர்களால் பேச முடிந்தால், ஒரு மனிதர் 39 ஆண்டுகள் நீதியின் கதவைத் தட்டிய கதையை அவை சொல்லும். அந்தக் கதவு இறுதியில் திறந்தபோது, அவரது வாழ்க்கையின் பெரும்பாலான ஜன்னல்கள் ஏற்கனவே மூடியிருந்தன.

பிளவுபடாத முந்தைய மத்தியப் பிரதேசத்தின் மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, 1986-ல் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுமார் 39 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவரை தற்போது மரியாதையுடன் விடுதலை செய்திருக்கிறது.

சமூக அமைப்பின் அலட்சியத்துக்கு, தாமதமான நீதிக்கு, உடைந்துபோன ஒரு மனிதனின் நம்பிக்கைக்கு அடையாளமாக மாறியுள்ள ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, "இந்த முடிவில் இப்போது எந்த அர்த்தமும் இல்லை. என் வேலை போய்விட்டது. சமூகம் என்னைப் புறக்கணித்துவிட்டது. என் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. உறவினர்கள் என்னை விலக்கி வைத்துவிட்டனர். சிகிச்சை கிடைக்காததால் என் மனைவி இறந்துவிட்டாள். என் கடந்த காலத்தை யாராவது எனக்கு மீண்டும் கொடுக்க முடியுமா?" என்று கேட்கிறார்.

"உயர் நீதிமன்றம் என்னை நிரபராதி என்று சொல்லிவிட்டது. ஆனால், இந்த சான்றிதழ் நான், என் குடும்பத்தோடு கடந்த 39 ஆண்டுகளாக சந்தித்த கடுமையான பாரங்களுக்கு முன் ஒன்றுமே இல்லை" என்று வருத்தமும் வலியும் கலந்து பேசுகிறார் அவர்.

"லஞ்சம் வாங்க மறுத்தேன்"

பல ஆண்டுகளாய்த் தேங்கிய துயரத்திலிருந்து மீள முயல்வது போல, பேசிக் கொண்டிருக்கும் போதே ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா திடீரென மௌனமாகி விடுகிறார். அவர் ஒரு பழைய கோப்பின் பக்கங்களை எடுத்துக் காட்டினார். மஞ்சளாக மாறி, தேய்ந்து கிழிந்த ஒவ்வொரு பக்கமும் 39 ஆண்டுகளின் கதையை பதிவு செய்யும் தேதிகளைப் போலத் தெரிகின்றன.

"நான் எதுவுமே செய்யவில்லை. ஆனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். இப்போது நான் எதுவும் செய்யவில்லை என்று யாரிடம் போய் சொல்வது? அதைக் கேட்க இப்போது யாருமே இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிக்கவே என் வாழ்க்கை முழுவதும் கழிந்துவிட்டது. இப்போது அது நிரூபிக்கப்பட்டிருக்கும் போது என்னிடம் எதுவுமே இல்லை. என் இளமையும் போய்விட்டது" என்று தழுதழுத்த குரலில் கூறினார் அவர்.

நீதிமன்ற ஆவணங்களின் படி, மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் பில் உதவியாளராக பணியாற்றிய ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, அருகில் இருந்த சந்திப்பில் லோகாயுக்தா குழுவால் ₹100 லஞ்சப் பணத்துடன் இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, தான் கைது செய்யப்பட்ட அந்த நாளில் தனக்கும் தனது குடும்பத்துக்குமான தண்டனை தொடங்கியதாகக் கூறுகிறார் ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா

"நிலுவையில் இருக்கும் தொகைக்காக ஒரு ரசீது தயார் செய்யச்சொல்லி ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார். மேலதிகாரிகள் கைப்படி எழுதிய உத்தரவுக்குப் பிறகே கோப்புகள் என் கைக்கு வரும் என்றும், அதன் பிறகே என்னால் ரசீது தயார் செய்ய முடியும் என்றும் நான் அவரிடம் கூறினேன். அவர் எனக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றார். என் அதிருப்தியை வெளிப்படுத்திய நான், அவரை மறுபடியும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்" என்கிறார் அவதியா.

அந்த ஊழியர் இதனால் மனவருத்தம் அடைந்ததாகக் கூறுகிறார் அவர். "போலீசாக இருந்த தனது தந்தையிடம் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். அந்நிகழ்வு நடந்த மூன்றாவது நாள் நான் அலுவலகத்தில் இருந்து வெளியேறியபோது அந்த ஊழியர் என் பின்னாலிருந்து வந்து என் பாக்கெட்டில் எதையோ வைத்தார். என்ன நடந்தது என்று நான் சுதாரிப்பதற்குள் சீருடை அணிந்திடாத போலீஸ்காரர்கள் என்னைப் பிடித்தனர். அவர்கள் விஜிலென்ஸ் துறையை (vigilance) சேர்ந்தவர்கள் என்றும், நான் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக என்னைக் கைது செய்வதாகவும் கூறினார்கள்" என்று கூறினார் அவதியா.

அந்த நாளில் தனக்கும் தனது குடும்பத்துக்குமான தண்டனை தொடங்கியதாகக் கூறுகிறார் ஜாகேஷ்வர் பிரசாத்.

குழந்தைகளின் கல்வி பாதிப்பு

இந்த சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1988-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 1988 முதல் 1994 வரையிலும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ராய்ப்பூரில் இருந்து ரேவாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவரது பாதி சம்பளத்தில் (சுமார் இரண்டாயிரம் ரூபாய்) குடும்பத்தை நடத்துவது கடினமாக இருந்தது. அவர் ரேவாவில் வசிக்க, அவரது மனைவியும் நான்கு குழந்தைகளும் ராய்ப்பூரிலேயே வாழ்ந்தார்கள். பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக அவரது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது.

52 வயதான அவரது இளைய மகன் நீரஜுக்கு சம்பவம் நடந்தபோது 13 வயது. தன் தந்தையின் போராட்டத்தில் நீதிமன்றத்தின் வாசலிலேயே தன் குழந்தைப் பருவம் தொலைந்துவிட்டதாகச் சொல்லி வருந்துகிறார் அவர்.

கண்களின் ஓரம் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே பேசிய நீரஜ், "அப்போது எனக்கு லஞ்சம் என்பதற்கு அர்த்தம் கூடத் தெரியாது. ஆனால், 'அவன் லஞ்சம் வாங்கியவனின் மகன்' என்று மக்கள் என்னைப் பார்த்து சொல்வார்கள். சிறுவர்கள் என்னை கேலி செய்தார்கள். என்னால் பள்ளியில் நண்பர்களை சம்பாதிக்க முடியவில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக் கதவுகள் மூடிவிடும், உறவினர்கள் தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர். பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் பலமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன்" என்றார்.

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் மகன் நீரஜ்

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் மகன் நீரஜ்

அவதியாவின் மனைவியான இந்து, இந்த சுமைகளை தனக்குள்ளேயே சுமந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் இந்தத் தண்டனை அவரை பாதிக்க, 24 நாள்கள் அரசு மருத்துவமணையில் இருந்து விட்டு ஒரு நாள் அவரும் இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்றது உடைந்துபோன ஒரு குடும்பத்தை மட்டும்தான்.

"என் மனைவி வருத்தத்தினாலேயே இறந்துவிட்டாள். என் மீதான லஞ்சப் புகாராலும் அதன்பிறகான இடைநீக்கத்தாலும் அவள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானாள். அந்த துக்கமே அவளை உடைத்துவிட்டது. அவளுக்கு சரியான சிகிச்சை கொடுக்கக் கூட என்னிடம் போதிய பணம் இருக்கவில்லை. அவள் இறந்த தினம் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவள் இறுதிச் சடங்கை செய்யக்கூட என்னிடம் அப்போது பணம் இருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் 3000 ரூபாய் கொடுத்ததால் தான் இறுதிச் சடங்கை செய்ய முடிந்தது" என்று கூறுகிறார் ஜாகேஷ்வர் பிரசாத்.

"காலம் திரும்பவில்லை"

2004-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவதியாவை குற்றவாளி என்று அறிவித்தது. அனைத்து சாட்சிகளும் தங்களது வாக்குமூலங்களை திரும்பப் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

ஆனால் அவதியா சோர்ந்துவிடவில்லை. அவர் உயர் நீதிமன்றத்தை நாட, இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தது.

தன் குடும்பத்தை ஆதரிக்க அவர் பல்வேறு வேலைகள் செய்தார். சில சமயங்களில் பயண முகவர்களுக்காகவும், சில சமயங்களில் பேருந்து ஓட்டுநர்களுக்காகவும் வேலை செய்தார். வயதான காலத்திலும் கூட அவர் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. நூறு ரூபாய் லஞ்சப் புகார் அவரை ஒரு 'மாயச் சிறையில்' சுமார் 14,000 நாள்கள் சிறைப்படுத்தியது.

அதன்பிறகு 2025-ல் அந்த நாள் வந்தது. அவதியாவை உயர் நீதிமன்றம் நிரபராதி என்று அறிவித்தது.

"நீதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலம் திரும்பவில்லை. என் மனைவி திரும்பவில்லை. என் பிள்ளைகளின் குழந்தைப் பருவம் திரும்பவில்லை. மரியாதை? அதுவும் கூடத் திரும்பவில்லை" என்று கூறினார் அவதியா.

ஒருகாலத்தில் தன் துயரங்களையும் வலிகளையும் மறைத்து சிரித்துக்கொண்டே பேசக்கூடிய ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வாழ்க்கையில் இப்போது மீதமுள்ளது சோர்வும் துயரம் நிறைந்த நினைவுகளும் மட்டுமே. அவரின் கைகளில் இருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளின் பக்கங்கள் இப்போது சாதாரண ஆவணங்களாகி விட்டன. ஏனெனில், ஒருவன் தனது எதிர்காலத்தை எழுத விரும்பும் வாழ்க்கைப் புத்தகம் அவருக்கு எப்போதோ மூடப்பட்டுவிட்டது.

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, நூறு ரூபாய் லஞ்சப் புகார் அவதியாவை, ஒரு மாயச் சிறையில் சுமார் 14.000 நாள்கள் சிறைப்படுத்தியது

பல ஆண்டுகளாக எந்த விடையும் இல்லை

இந்த விஷயம் பற்றிப் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரியங்கா சுக்லா, "அவதியா இந்த வழக்கில் இழப்பீடு கேட்கலாம். ஆனால் அந்தப் பணம் உடைந்து போன அவர் வாழ்க்கையை சரிசெய்துவிடுமா என்பதுதான் கேள்வி. அவருடைய கடந்த காலத்தை எந்த இழப்பீடாலும் கொண்டுவர முடியுமா? ஜாகேஷ்வர் பிரசாத்தின் கதை வெறும் ஒரு நபரின் சோகக் கதை மட்டுமல்ல. இது 'தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லும் நம் நீதித் துறையின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிலரின் இளமைக் காலம் நீதிமன்றங்களில் கழிகின்றன. சிலருக்கு அவர்களின் முதுமைக் காலம் நீதிமன்றங்களில் கழிகின்றன. தீர்ப்புகள் வரும்போது எத்தனையோ விஷயங்கள் இழக்கப்படுகின்றன" என்றார்.

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் நிலை இனி மக்களுக்கு வராமல் இருக்க, பழைய வழக்குகள் நீதிமன்றங்களில் முன்னுரிமையுடன் விசாரிக்கப்பட்டு அவற்றுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்கிறார் பிரியங்கா.

அவதியாவின் வழக்கில் 39 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சத்தீஸ்கரில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரணைக்கே வராமல் இருக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகள் எந்த தீர்ப்பும் சொல்லப்படாமல் சுமார் 50 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.

அரசு தரவுகளின்படி, தற்போது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 77,616 வழக்குகளில் 19,154 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் பதியப்பட்டவை. 10-20 ஆண்டுகளான வழக்குகளின் எண்ணிக்கை 4,159. இவைபோக, 105 வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன.

சுர்குஜா, பிலாஸ்பூர், பலோதாபஜார் மற்றும் துர்க் மாவட்டங்களிலுள்ள உள்ளூர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலான சில வழக்குகளும் இருக்கின்றன.

வாதி, பிரதிவாதி யாரும் உயிருடன் இல்லை

தாராபாய் vs பகவான்தாஸ் வழக்கு துர்க் மாவட்ட நீதிமன்றத்தில் 1976ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கிறது. அதாவது சுமார் 50 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கைத் தொடர்ந்த தாராபாயோ, அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பகவான்தாஸோ இன்று உயிரோடு இல்லை. இருந்தாலும் இன்னும் வழக்கில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.

அதேபோல், சுர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபூர் நீதிமன்றத்தில் 1976 முதல் சுமார் 46 ஆண்டுகளாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இணையதளத்தில் கிடைத்த தகவல்களின்படி, இந்த நந்தகிஷோர் பிரசாத் vs ஜகன் ராம் வகையறா வழக்கில், 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் 291 முறை வாய்தா வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இறுதி தீர்ப்பு கிடைத்தாலும், உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அங்கும் சில ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடும்.

சத்தீஸ்கர் நீதிமன்றங்களில் வழக்குகள் இவ்வளவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி யதீந்திர சிங் வருத்தப்படுகிறார்.

பிபிசி இந்தியிடம் பேசிய அவர், "இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, ஆதாயம் அடையக்கூடிய தரப்பு இந்த வழக்கு முடியக்கூடாது என்று நினைக்கும். இரண்டாவது, ஒரு அரசியல் கட்சியோ, தலைமை நீதிபதியோ, இடைக்கால நீதிபதியோ வற்புறுத்தாத வரை எந்த நீதிபதியும் பழைய வழக்குகளைத் தொடுவதில்லை" என்கிறார்.

ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா, குறைந்தபட்சம் தனது ஓய்வூதியத்தையும் நிலுவைப் பணங்களையும் அரசு வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு இனி நீதி வேண்டாம். வாழ்க்கை முழுவதும் கடினமாக உழைத்த அந்தக் கைகள், இனி உதவி கேட்டு யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இருக்காது என்ற நிம்மதியே இப்போது அவருக்குத் தேவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு