இலங்கை: இராமாயணத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் பிரபல சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை.
வெப்ப பிரதேசம், குளிர் பிரதேசம், நடுநிலையான பருவநிலையை கொண்ட பிரதேசம் என அனைத்து விதமான பருவநிலைகளையும் கொண்டமைந்த நாடு இலங்கையாகும்.
ஒரு பருவநிலையிலிருந்து இன்னுமொரு பருவநிலையை கொண்ட பிரதேசத்திற்கு வெறுமனே 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய வகையில் சூழல் அமைந்துள்ளது.
கடல், மலைகள், ஆறுகள், குளங்கள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகுகளை கொண்டமைந்துள்ள இலங்கையில், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு அரிய வகை மிருகங்களையும் இலகுவாகப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.
இயற்கையான சூழல் கட்டமைப்பு மாத்திரமன்றி, வரலாற்று ரீதியில் சிறப்புமிக்க இடங்களையும் சுற்றுலா பயணிகளினால் பார்க்க முடியும்.
இன்று (செப் 27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில், இலங்கையில் பார்க்கக்கூடிய முக்கிய இடங்கள் தொடர்பான தொகுப்பே இது.
சிகிரியா

பட மூலாதாரம், Getty Images
யுனேஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலமாக சிகிரியா உள்ளது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளையை அண்மித்து இது அமைந்துள்ளது.
இலங்கையை ஐந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பம் மன்னாரினால் இந்த சிகிரியா வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிங்கத்தை போன்ற பாரிய கற்பாறையில் இது அமைந்துள்ளது.
இந்த கோட்டையானது, பாரம்பரிய ஓவியங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெழுகு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அழகிய ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. வித்தியாசமான பெண்களின் ஓவியங்களே, அனைவரது கவனத்தையும் இங்கு ஈர்க்கின்றன.
1144 அடி உயரமான இந்த குன்று முழுவமும் காணப்படும் ஓவியங்களே, அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நின்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இலங்கையின் அடையாளங்களில் சிகிரியா மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிகிரிய கோட்டையானது, இராவணனின் கோட்டை எனவும் சிலர் இன்றும் நம்பி வருகின்றனர்.
இராமாயண இதிகாசம் சொல்லும் சுற்றுலாத் தலங்கள்

இலங்கையில் இராமாயண இதிகாசத்தைப் பிரதிபலிக்கும் பல சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றன.
இலங்கையின் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் என நாட்டில் பெரும்பாலான இடங்களில் இராமர் - இராவணன் ஆகியோரின் பெயர் சொல்லும் அடையாளங்கள் காணப்படுகின்றன.
இராமாணயத்தின்படி இராவண மன்னன், சீதையை இலங்கைக்கு கடத்தி வந்ததை அடுத்து, சீதை இலங்கையில் சிறை வைத்ததாகக் கூறப்படும் அசோக வனம் அமைந்துள்ள இடமாக நுவரெலியா கருதப்படுகின்றது.
நுவரெலியா நகரிலிருந்து பதுளை நோக்கி செல்லும் பாதையில் இந்த இடம் அமைந்துள்ளது. நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
இராமாயணத்தின்படி சீதையை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இடத்திற்கு வருகைத் தந்த அனுமான், இந்த இடத்திலேயே சீதையை கண்டு தரிசித்ததாகப் கூறப்படுகிறது.
உலகில் சீதைக்காக ஆலயம் அமையப் பெற்ற இடமாக இந்த இடம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த ஆலயத்தை சூழ அசோக மரங்களைக் காண முடிகின்றது. சீதை அமர்ந்திருந்ததாக கூறப்படும் அசோக மரமொன்றிற்கு இன்றும் பூஜைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், சீதை ஆலயத்திற்கு அருகிலுள்ள கற் பாறையில் ஒரு கால் தடம் காணப்படுகின்றது. அது அனுமானின் கால் தடம் என சிலர் நம்புகின்றனர். அதேநேரம் அது இராவணனின் கால் தடம் என இன்னும் சிலர் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அதேவேளை, இலங்கையின் ஊவா மாகாணத்தில் இராவணா எல்லை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. எல்லை - வெல்லவாய பிரதான சாலையின் இடையில் இந்த இராவணா எல்லை அமைந்துள்ளதுடன், பிரதான வீதியில் இருந்தவாறே இதனைப் பார்வையிட முடிகின்றது.
இந்த நீர்வீழ்ச்சியானது, இராமாயணத்துடன் நேரடியாகவே தொடர்புப்படுத்தப்படுகிறது. சீதையை கடத்தி வந்த இராவண மன்னன், அவரை இந்த நீர்வீழ்ச்சிக்கு பின்னால் உள்ள குகையொன்றிலேயே மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சியானது, இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
அதேபோன்று, இராவணனின் நிலத்துக்கு கீழ் அமைந்துள்ள கோட்டையும் இங்கு அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images
அதேபோன்று, திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம், இராமாயணத்துடன் நேரடியாக தொடர்புப்படுகின்றது. மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்க, நடுவில் பாரிய மலை குன்றொன்று அமைந்துள்ளது. இந்த மலை குன்றிலேயே இந்த திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது.
இலங்கையை ஆட்சி செய்த இராவணன், இந்த ஆலயத்துடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளார் என்கின்றனர். அதேநேரம், சீதையை கடத்தி வருவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் புஸ்பக விமானத்தை இலங்கையில் தரையிறக்கியதாக சொல்லப்படும் சில இடங்களும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக கருதப்படுகின்றது.
குறிப்பாக மலையகத்திலும் அவ்வாறான இடங்கள் காணப்படுவதுடன், தென் பகுதியிலும் அவ்வாறான இடங்கள் காணப்படுகின்றன.
இலங்கையின் வலிமைமிக்க அரசனாக ஆட்சி செய்த இராவணனின் வரலாற்றை கூறும் வகையிலான சுமார் 50-ற்கும் மேற்பட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
சோழரின் வரலாற்று சின்னங்கள்

பட மூலாதாரம், Getty Images
சோழர்களின் ஆட்சி இலங்கையிலும் தொடர்ந்தமைக்கான வரலாற்று சின்னங்கள், இன்று இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன. குறிப்பாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் சோழர்களின் ஆட்சி அடையாளங்களை காண முடிகின்றது.
குறிப்பாக சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதேபோன்று, பௌத்த விகாரைகளும், கட்டடங்களும் இலங்கையில் அடையாளங்களாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், சோழர்களின் ஆட்சியை அறிந்துக்கொள்வதற்காக பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்வது பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை மீது படையெடுத்த சோழர்கள், அநுராதபுரத்துடனான ஆட்சியைக் கைப்பற்றி, அவர்களின் ஆட்சியில் பொலன்னறுவையை தலைநகரமாக மாற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் இன்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, மிருகங்களின் சரணாலயங்கள், சுற்றுலாத்துறையின் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக சஃபாரி வாகனங்களின் உதவியுடன் சரணாலயங்களுக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, யானைகளை மிக மிக அருகிலேயே காண முடிகின்றது. அத்துடன், இலங்கைக்கே உரித்தான அரிய வகை சிறுத்தைகளையும் இங்கு காண முடிகின்றது.
தமிழர்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் இன்னும் பல சுற்றுலாத்தலங்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இருப்பதை கூற முடியும். தமிழர் பகுதிகளை தாண்டியும் சில தமிழர்களின் வரலாற்று சான்றுகள் இருக்கின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் சுற்றுலாத்துறை பயங்கரவாதத் தாக்குதல்கள், கொரோனா போன்ற எதிர்பாரா தருணங்களில் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டாலும், அடுத்த ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் தலைதூக்கி நிற்கின்றது.
பொருளாதார வீழ்ச்சியில் நாடு பின் நோக்கிச் சென்றிருந்த நிலையில், இன்று பழைய நிலைமையை நோக்கி நகர்ந்துள்ளது என்றால், அதற்கு சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பை செய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












