You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 3: தரையிறங்கத் தயாராகும் விக்ரம் லேண்டர்
இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிப்படியாக தரையிறங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும் விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
தற்போது நிலாவில் பாறைகள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து, பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்வதற்கான பணியில் விக்ரம் லேண்டர் ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பியிருக்கிறது. Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC) எனப்படும் ஆபத்தான இடத்தைத் தவிர்க்க உதவும் கேமராவால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நிலாவைச் சுற்றிவரும் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் பகுதி மட்டும் பிரிந்து நிலவில் தரையிறங்குவதற்கான பயணத்தையும் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது, “விக்ரம் தரையிறங்கிக் கலனின் திசைவேகத்தைக் குறைக்கும் இரண்டாவது மற்றும் இறுதி செயல்முறையைச் செய்து 25கி.மீ x 134கி.மீ என்ற நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
விண்கலம் அதன் உட்புற சோதனைகளைச் செய்துகொண்டு, தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்திற்காகக் காத்திருக்கும். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 23, 2023ஆம் தேதியன்று மாலை 5:45 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நிலாவின் ஈர்ப்பு விசைக்குள் இருக்கும் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் 113 கி.மீ. x 157 கி.மீ. என்ற நீள் வட்டப் பாதையில் முன்பு நிலாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இப்போது 25கி.மீ x 134கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
இதன் பிறகு படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு தரையிறங்குவதற்கு பணிகள் தொடங்கும். இஸ்ரோவின் திட்டப்படி நாளை மாலை 5:45 மணிக்கு தரையிறங்கும் நிகழ்வு நடைபெறும்.
விக்ரம் லேண்டர் உயரம் குறைப்பது ஏன் முக்கியமானது?
சந்திரயான் 3 ஏற்கெனவே நிலாவின் ஈர்ப்புவிசைக்குள் வந்துவிட்டது. இப்போது, அதை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கப்பட்டிருக்கிறது.
விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 150கி.மீ தொலைவில் விண்கலம் சுற்ற வைக்கப்பட்டிருக்கிறது.
சந்திரயான் விண்கலத்தில், உந்துகலம், தரையிறங்கி கலம் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. இதில் உள்ள தரையிறங்கி கலத்தில்தான் ஊர்திக்கலமும் அமைந்துள்ளது. தரையிறங்கி கலத்தை விக்ரம் லேண்டர் என்றும், ஊர்தியை பிரக்யா என்றும் அழைக்கிறார்கள்.
இவற்றை அப்படியே தரையிறக்க முடியாது. உந்துகலத்தையும் தரையிறங்கி கலத்தையும் பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்து, தரையிறங்கி கலத்தை அதிகபட்சமாக 100 கி.மீ முதல் குறைந்தபட்சமாக 30 கி.மீ வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள்.
இதற்காகவே விக்ரம் லேண்டர் இப்போது 11 கிமீ X 153 கிமீ என்ற வட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக இந்த வட்டப்பாதையின் உயரமும் குறைக்கப்படும்
நிலாவில் சந்திரயான் 3 எப்படி தரையிறங்கும்?
நிலாவில் விக்ரம் லேண்டர் விண்கலத்தைத் தரையிறக்குவதுதான் இந்தத் திட்டத்திலேயே முக்கியமான சவால்.
இதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம், வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது.
இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இதுதான். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இந்த இடத்தில்தான்.
விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறங்குவதற்கான புதிய உத்தி என்ன?
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள்
இதற்காக, தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும்.
கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தின்போது தரையிறங்கி கலத்தை நிலவின் தரைப்பரப்பில் இறக்கும்போதுதான் தவறு நிகழ்ந்து, தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல், கீழே விழுந்து உடைந்துவிட்டது.
ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களைச் சரிசெய்து பல மேம்படுத்தல்களைச் செய்துள்ளார்கள். ஆகவே, பத்திரமாகத் தரையிறங்கும் என்று நம்புகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டமாக, தரையிறங்கி கலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலாவின் தரையில் இயக்கவேண்டும். அதற்கு, தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப் போல் திறந்து கீழ்நோக்கி இறங்கும்.
அந்த சாய்வுப் பலகையின் வழியே உருண்டு இறங்கி, நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தனது வேலையைத் தொடங்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்