You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முளைகட்டிய பயறை பச்சையாக சாப்பிடுவது ஆபத்தா? இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது கவனம் தேவை
- எழுதியவர், மார்க் ஷியா
- பதவி, பிபிசி உலகச் சேவை
உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார்.
ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார்.
அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என்ற ஆவணப்படத்திலும் அவர் தோன்றியுள்ளார்.
உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பதை பிபிசியுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதான ஸ்டெப்னி இங்க்பேர்க் தனது பெற்றோருடன் டாம்னிக் ரிபப்ளிக் உள்ள விடுதி ஒன்றில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.
பயணத்துக்கு முன்பே ஸ்டெப்னிக்கு சிறிய அளவில் வயிறு வலி இருந்தது. எனினும், அதை பொருட்படுத்தாமல் பயணத்தை அவர் மேற்கொண்டார். டாம்னிக் ரிபப்ளிக் சென்றதும் ஸ்டெப்னிக்கு வயிறு வலி சற்றே குறைந்திருந்தது. ஆனால், இரவில் எல்லாமே தலைகீழாக மாறியது. வயிறு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த நாள் காலையில் தனது அம்மாவையே யார் என்று ஸ்டெப்னியால் நினைவுக்கொள்ள முடியவில்லை. அவருடைய சிறுநீரகங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. மூளையில் ஏற்படும் அழற்சியின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.
இதையடுத்து அவருடைய பெற்றோர் ஸ்டெப்னியை உடனடியாக அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் ஸ்டெப்னியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு E.coli பாக்டீரியல் தொற்று கடுமையாக இருப்பதை கண்டறிந்தனர்.
ஒரே இரவில் ஸ்டெப்னியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, இறுதிச் சடங்குகளை செய்ய ஒரு பாதிரியாரும் அழைத்து வரப்பட்டார்.
'விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்' என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றவர்களுள் ஸ்டெப்னியும் ஒருவர். நமது உணவுச் சங்கிலியில் ஏற்படும் சுகாதாரத் தோல்விகள் அதனை உட்கொள்பவர்களுக்கு பேரழிவை தரும் விளைவுகளை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதை இந்த ஆவணப்படம் கூறுகிறது.
பாதிரியார் பிரார்த்தனையை ஆரம்பித்ததும் ஸ்டெப்னி மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். அவர் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் அதற்கான விளைவுகளை ஸ்டெப்னி அனுபவித்து வருகிறார்.
“எனது சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகளை வலுப்படுத்த நான் ஒவ்வொரு நாளும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்” என்று நெட்பிளிக்ஸின் ஆவணப்படத்தில் ஸ்டெப்னி கூறுகிறார்.
அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும்.
“ நான் வெறும் சாலட் தான் சாப்பிட்டேன். அதனால், என் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று ஸ்டெப்னி கூறுகிறார்.
கெட்டுப்போன உணவை உண்பதால் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் 6 கோடி பேரில் ஒருவராக ஸ்டெப்னியும் உள்ளார். நல்லவேளையாக, கெட்டுப்போன உணவை உண்பதால் உயிரிழக்கும் 4,20,000 பேர்களில் ஸ்டெப்னி இணையவில்லை.
நாம் எத்தகைய உணவை உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பில் மார்லர் கூறுகிறார்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், உணவில் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
பதப்படுத்தப்படாத பால்
பதப்படுத்தப்படாத பால், பால் பொருட்கள் மற்றும் ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பில் மார்லர் கூறுகிறார்.
ஸ்டெஃபனியின் நோய்க்கு காரணமான ஈ.கோலி பாக்டீரியாவால் தொற்று ஏற்படும் அபாயத்தை இத்தகைய உணவு ஏற்படுத்தும் என்பதால் அவர் அவற்றை தவிர்க்கிறார்.
“பாலை பச்சையாக குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஒருசிலர் கருதினாலும் , அவற்றால் ஆபத்தே அதிகம். 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட நோய்களை மக்கள் மறந்துவிட்டனர் . ” என்று பில் மார்லர் குறிப்பிடுகிறார்.
முளைகட்டிய பச்சைப்பயறு
முளைகட்டிய பீன்ஸ்கள் பாக்டீரியா இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன
பீன்ஸ் உட்பட எந்தவித முளைகட்டிய பயறையும் பில் மார்லர் உண்பதில்லை.
உலகின் மிகப்பெரிய உணவுப் பரவல் நோய்களுடன் இவை தொடர்புடையவை. 2011ஆம் ஆண்டில் வெந்தய விதைகளுடன் தொடர்புடைய பாதிப்பு ஒன்று ஜெர்மனியில் ஏற்பட்டது. இதனால் 900 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .
“விதைகள் உட்பக்கமாக இல்லாமல் வெளியில் வளர்க்கப்படுவதால் அவை மாசுபடுகின்றன. அவற்றை உள்ளே கொண்டுவந்து முளைக்க வைக்க நீங்கள் தண்ணீரில் போடும்போது, அது பாக்டீரியா வளர்ச்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது ” என்கிறார் பில் மார்லர்.
“ முளைகட்டிய பயறை பச்சையாக சாப்பிடுபவர்கள் யாரையும் உணவு பாதுகாப்புத்துறையில் எனக்கு தெரியாது ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பச்சை மற்றும் சமைக்காத இறைச்சி
இறைச்சியை தரையில் கிடத்தும்போதோ அல்லது அவற்றை துண்டு துண்டாக வெட்டும்போதோ, இறைச்சியின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியா உட்புறத்திலும் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இறைச்சியை முழுமையாக சமைக்க வேண்டியது அவசியம்.
மேலும், ஆரோக்கியமாக இருக்கும் உங்களை நோய்வாய்ப்படவைக்க அதிக பாக்டீரியாக்கள் தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“உங்கள் உயிரை பறிப்பதற்கு வெறும் 50 ஈ.கோலை பாக்டீரியாக்களே போதும். ஊசி முனைப்போன்ற இடத்தில் கூட 1,00,000 ஈ.கோலை உள்ளன. அவற்றை உங்களாக பார்க்கவே, உணரவோ முடியாது. எனவே, இறைச்சியை முழுமையாக சமைத்து உண்ணுவதே இதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி ” என்கிறார் பில்.
பழம், காய்கறிகளை கழுவாமல் மற்றும் சமைக்காமல் சாப்பிடுவதால் என்ன ஆபத்து?
நீங்கள் ஒரு பர்கரை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் மிகவும் ஆபத்தானது அதிலுள்ள பச்சை வெங்காயம், கீரைகள், தக்காளி போன்றவைதான் என்கிறார் உணவு பாதுகாப்பு ஆலோசகரான மன்சூர் சமத்பூர்.
2006ஆம் ஆண்டுவாக்கில் கீரையுடன் தொடர்புடைய ஈ.கோலை பாக்டீரியா பாதிப்பு அதிகளவில் பரவத் தொடங்கியது. அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பலருக்காகவும் மார்லர் வாதாடினார்.
கலியோர்னியாவில் உள்ள ஒரு கீரைப் பண்ணைக்கும் பாக்டீரியா மாசுபாட்டுக்கும் தொடர்பு இருப்பது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருசில விலங்குகளின் மலம் போன்றவை காரணமாக கீரையில் ஈ.கோலை பாக்டீரியா ஏற்பட்டது தெரியவந்தது.
அந்த பண்ணையில் இருந்து கீரை அறுவடை செய்யப்பட்டு சுத்தப்படும் மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு மூன்று முறை கீரை கழுவப்பட்டது. இதனால் கீரை முழுவதிலும் பரவிய ஈ.கோலை, கீரையை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த பிற பொருட்களிலும் பரவியது. இது நாடு முழுவதும் பரவியது, இதனால் அதனை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர்.
மற்ற உணவுப் பொருட்களைப் போலவே கீரையும் பலர் கைகளில் மாறும்போது அது மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மார்லர் கூறுகிறார்.
பச்சையான, முழுதாக சமைக்காத முட்டை
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியாவான சால்மோனெல்லா நோய்த்தொற்று ஆபத்து முட்டை மூலம் ஏற்படுகிறது. குழந்தைகள், முதியோர் ஆகியோர் இதனால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகி சில நேரங்களில் உயிரிழக்கவும் கூடும்.
முட்டைகள் சம்பந்தப்பட்ட பல பேரழிவு நிகழ்வுகள் சமீபத்திய வரலாற்றில் உள்ளன: 1988 இல் சால்மோனெல்லா பற்றிய அச்சம் காரணமாக பிரிட்டன் அரசாங்கம் 20 லட்சத்துக்கும் அதிகமான கோழிகளை அழிக்க உத்தரவிட்டது. 2010 ஆம் ஆண்டில், இதேபோன்ற அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் 50 கோடி முட்டைகளை திரும்பப் பெறப்பட்டன.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது முட்டைகள் பாதுகாப்பானதாகவே உள்ளன எனினும் முட்டையை பச்சையாகவோ சரியாக சமைக்காமல் உண்ணுவதோ தற்போது சால்மோனெல்லா பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.
“10,000 முட்டைகளில் ஒரு முட்டையில் ஓடுக்கு உள்ளேயே சால்மோனெல்லா இருக்கலாம். இதேபோல் கோழியின் கருப்பையிலேயே சால்மோனெல்லா உருவாக்கி முட்டைக்குள் செல்லலாம். எனவே, அதனை அகற்ற சமைப்பதை தவிர வேறு வழியில்லை ” என்று பில் தெரிவிக்கிறார்.
நண்டு போன்றவற்றை பச்சையாக உண்ணுவதால் ஏற்படும் ஆபத்து
நத்தைகள், கிளாம்கள் மற்றும் நண்டுகள் போன்ற ஓடு உடையவைகள் பொதுவாக வடிகட்டி ஊட்டிகளாகும்.
அதாவது.. தங்களுக்குத் தேவையான உயிரினங்களை தண்ணீரில் நன்கு சிதறடித்து, அந்தச் சிறு துகள்களை உண்கின்றன. எனவே, பாக்டீரியாக்கள், வைரஸ் பாதிப்பு இருந்தால் அவை எளிதாக உணவுச் சங்கிலிக்குள் நுழைகிறது.
அதனால், நண்டு போன்றவற்றை முழுமையாக சமைக்காமல் சாப்பிடுவது ஆபத்தானது.
பேக் செய்யப்பட்ட சாண்ட்விச்
நீங்கள், கடைகளில் சாண்ட்வீச் வாங்கி சாப்பிடுபவராக இருந்தால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளை கவனமாக பார்க்க வேண்டும். முடிந்தவரை நீங்களே அவற்றை தயாரித்து சாப்பிடலாம். இல்லையென்றால், குறைந்தபட்சம் உங்கள் கண் முன்னால் தயாரிக்கப்படும் சாண்ட்விச்களை சாப்பிடுவது நல்லது என்கிறார் பில்.
ஏனென்றால், சாண்ட்விச் தயாரிக்கப்பட்ட நீண்ட நாட்கள் ஆகியிருந்தால் அவை கெட்டுப்போய்விடும், லிஸ்டீரியா மோன்டோசைட்டோஜென்ஸ் பாக்டீரியாவை உருவாக்கி உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஏராளமான இறப்புகளுக்கும் நோய்வாய்ப்படுதலுக்கும் இந்த பாக்டீரியா காரணமாக இருப்பதாக பில் கூறுகிறார்.
பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும்போது லிஸ்டீரியா பாக்டீரியாக்கள் சிறப்பாக வளர்ச்சி பெறுகின்றன. எனவே, முடிந்தவரை சாண்ட்விச் போன்றவற்றை உடனடியாக சாப்பிட வேண்டு. ஒரு வாரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சாப்பிடுவதாக இருந்தால் அது மிகவும் ஆபத்தானது என்றும் பில் எச்சரிக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்