You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இன்ஸ்டாகிராம் பதிவுக்காக மரண தண்டனை - இந்த 20 வயது இளைஞர் அப்படி என்ன செய்தார்?
- எழுதியவர், ஜீயர் கோல்
- பதவி, பிபிசி பாரசீக சேவை
கைதிகள் இடமாற்றம் திட்டத்தின்கீழ், இரான் அரசால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட நான்கு ஐரோப்பியர்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பயண வலைப்பதிவரான தாமஸ் கேஜெம்ஸும் ஒருவர்.
‘ஹிட்ச்ஹைக்கிங்’ எனப்படும் சாகசப் பயணத்தை மேற்கொண்டு வரும் 28 வயது வாலிபரான தாமஸ், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டென்மார்க்கில் இருந்து யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் அங்கு சென்றடைந்த சில வாரங்களிலேயே யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
அதன் காரணமாக அங்கிருந்து அவர் ஆர்மீனியாவுக்கு பயணித்தார். அங்கு சென்றதும் அதன் அண்டை நாடான இரானுக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆவல் தாமஸுக்கு ஏற்பட்டது. அவரது இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக, ஆர்மீனியாவின் தலைநகரமான யெரெவானில் உள்ள இரானிய தூதரகம் கடந்த ஆண்டு செப்டம்டரில் தாமஸுக்கு இரான் செல்ல சுற்றுலா விசா வழங்கியது.
உலகம் சுற்றும் வாலிபர்
விசா கிடைத்த மகிழ்ச்சியில், தாமஸ் உடனே இரான் சென்றடைந்தார். அப்போதுதான் அங்கு குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மஹ்சா ஜினா அமினி போலீஸ் காவலில் இருந்தபோது இறந்த சம்பவம் நிகழ்ந்தது. இஸ்லாமிய குடியரசின் ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக இரான் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த ஜினா அமினி மரணித்ததையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதை பல்வேறு நகரங்களில் தான் கண்கூடாக கண்டதாகக் கூறுகிறார் தாமஸ்.
இவ்வாறு, கடந்த ஆண்டு தாம் பயணம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் போர் மற்றும் போராட்டங்களை சந்தித்த தாமஸ், இரானில் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தபோது தான் எதிர்கொண்ட பல்வேறு அனுபவங்களை பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார். அப்போது, சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில், பெல்ஜியம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரானிய தூதரக அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டது குறித்து தாமஸ் மிகவும் வருத்தம் தெரிவித்தார்.
காரணம் கூறாமல் கைது
“மஹ்சா ஜினா அமினியின் மரணத்தை கண்டித்து, இரானில் நடைபெற்று வந்த மோதல்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பக்கம் செல்லக்கூடாது என்று எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ராணுவ தளங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என்று பிபிசி பேட்டியில் தெரிவித்திருந்தார் தாமஸ்.
ஆனாலும், இரான் பாதுகாப்புப் படையினரின் கழுகுப் பார்வையில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. தலைநகர் தெஹ்ரானில் ஓர் விடுதியில் தங்கியிருந்த தாமஸை, இரான் உளவுத் துறையினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கைது செய்தனர்.
பல போராட்டகாரர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த எவின் சிறைச்சாலைக்கு தாமஸ் கேஜெம்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார்.
“நான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உளவுத்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், ‘உங்களை ஏன் கைது செய்கிறோம் என்று தெரிகிறதா?’ என அவர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு ‘தெரியவில்லை’ எனக் கூறிய நான், சில வீடியோக்களை எடுத்திருந்தேன்” என்று மட்டும் சொன்னதாக, தான் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விவரித்தார் தாமஸ்.
இரான் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டாரா டென்மார்க் வாலிபர்?
அதன் பின்னர், பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்த இரண்டு தாள்களில் கையெழுத்திடுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்னை வற்புறுத்தினார் என்றும் தனது பேட்டியில் தாமஸ் கூறினார்.
“நான் கையொப்பமிட்ட தாள்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இரானின் உளவுத்துறை என் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டு அடிப்படையில் உண்மைதான் என்பதை ஏற்றுக்கொண்டேன்” எனவும் தாமஸ் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
இரானின் தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருதப்படும் போராட்டங்களில் பங்கேற்றதுடன், அவற்றை படம் பிடித்ததாகவும் தாமஸ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சிறையில் மதகுருவுடன் சந்திப்பு
எவின் சிறைச் சாலையில் தாமஸ் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் இருந்த அறையில் இரானிய போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் ஒரே அறையில் தங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவர்களில் ஒருவர்தான் மதகுருவான அயதுல்லா அப்தோல்ஹமித் மசெளமி-தெஹ்ரானி. இரான் அதிபரை விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டார்.
“தம்மை சிறையில் அடைத்தவர்களை அடிப்படையாகக் கொண்டு, இரான் இப்படி தான் என்று முடிவுக்கு தாமஸ் வரமாட்டார் என்று நம்புகிறேன்” என்று காணொளி அழைப்பில் பேசியபோது பிபிசியிடம் அயதுல்லா தெரிவித்திருந்தார்.
“சிறையில் தினமும் தமக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு பகுதியை அயதுல்லா தம்முடன் பகிர்ந்து கொண்டார். சக கைதிகளுடன் உணவை பரிமாறி கொள்வது சிறையில் மிகப் பெரிய விஷயம்” என்றும் பூரிப்புடன் கூறினார் தாமஸ்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்
எவின் சிறைச் சாலையில் தாமஸுடன் இருந்த மற்றொரு கைதி முகமது போரோஹானி. 20 வயது இளைஞரான இவர் மீது, கடவுளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெஹ்ரான் நீதிமன்றம் முகமதுக்கு மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன், பாதுகாவலர் ஒருவரை தாக்கியதாகவும், அரசு கட்டிடத்திற்கு தீ வைத்ததாகவும் முகமது மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அவர் மீதான இக்குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு கூறியிருந்தது.
முகமது போரோஹானிக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில், தான் அவருடன் சிறையில் இருந்ததாக தாமஸ் கூறினார்.
அப்போது, “ ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்று முகமதுவிடம் கேட்டேன்” என்று கூறிய தாமஸ், அதற்கு, ‘அவரது காவல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படும் என்று சக கைதிகள் தெரிவித்தனர். “தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் கடும் சினத்தில் இருந்த முகமதுவை ஊக்கப்படுத்த முயற்சித்தேன்” என்றும் தாமஸ் தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் பதிவுக்காக மரணத் தண்டனை
ஆனால், “சில நாட்களுக்கு பின் உண்மை தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன். கலவரத் தடுப்பு போலீசாரில் ஒருவரை தான் தாக்க முயன்றதாகவும், ஆனால் அதில் வெற்றி பெறவில்லை என்றும் முகமது தம்மிடம் சொன்னதாக நினைவிருக்கிறது” எனவும் பிபிசியிடம் கூறினார் தாமஸ்.
அத்துடன், “ இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை வெளியிட்டதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களும், இரான் நாட்டு சிறையில் தம்முடன் இருந்தனர்” என்றும் தாமஸ் கூறினார்.
உளவுத் துறை அதிகாரிகள் தம்மை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்று கூறிய தாமஸ், ஆனால், விசாரணை என்ற பேரில் சக கைதிகள் பலர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானதை கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கைதிகள் இடமாற்றம்
எவின் சிறைச் சாலையில் இவ்வாறு பல்வேறு அனுபவங்களை பெற்று வந்த தாமஸ், ஏழு மாத சிறைவாசத்திற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஓமன் நாட்டுக்கு புறப்படவிருந்த தனியார் விமானம் ஒன்றில் தாமஸ் ஏற்றப்பட்டார்.
சிறைக் கைதிகள் இடமாற்றம் திட்டத்தின் கீழ், ஓமன் அரசு மேற்கொண்ட மத்தியஸ்தத்தின் பயனாக தாமஸ் விடுவிக்கப்பட்டார். அவருடன், இரானிய- ஆஸ்திரிய நாடுகளின் குடியுரிமை பெற்ற மசூத் மொசோஹேப், கம்ரான் காதேரி ஆகியோரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை போன்றே பெல்ஜியம் அரசின் உதவியுடன், இரானில் பணியாற்றி வந்த ஊழியரான ஒலிவியர் வான்டேகாஸ்டீல் என்பவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இரானில் உளவுப் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மூன்று பேரும் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர். ஆனால் தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டை மூவரும் மறுத்தனர்.
இரானிய அதிகாரியை விடுவித்த பெல்ஜியம்
தாமஸ் உள்ளிட்ட நான்கு பேர் இரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அதே வேளையில், அந்நாட்டின் தூதரக அதிகாரியான அசடோல்லா அசாதி என்பவரை பெல்ஜியம் அரசு சிறையில் இருந்து விடுவித்தது.
பிரான்சில் நாடு கடத்தப்பட்ட இரானிய எதிர்ப்பு குழுவின் பேரணியில் குண்டு வீச திட்டமிட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அசாதி பெல்ஜியத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
அரசியல் பிரச்னை
“அசாதி சிறையில் இருந்து விடுவித்தப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்” என்று தாமஸ் தெரிவித்தார். ஏனெனில், “கைதிகள் விடுவிப்பு என்ற இந்த முழு பரிமாற்றமும் ஒரு நெறிமுறை சார்ந்த சடங்காகும்” எனவும் அவர் விமர்சித்தார்.
“தாமஸ் ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி. ஆனால் இவரை போன்றவர்கள் மீதான வழக்குகளை, இரானில் உள்ள சட்ட நடவடிக்கைகளால் மட்டும் தீர்க்க இயலாது” என்று டென்மார்க்கை சேர்ந்த அவரது வழக்கறிஞரான ஷாம் ஜலே கூறினார்.
“தாமஸ் போன்றவர்களின் கைது நடவடிக்கை என்பது ஓர் அரசியல் பிரச்னை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எனவே தான், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, டென்மார்க் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் உளவுத்துறையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்” எனவும் ஷாம் ஜலே தெரிவித்தார்.
தாமஸ் எடுத்த சபதம்
ஏழு மாத சிறைவாசத்திற்கு பிறகு, டென்மார்க் திரும்பிய தாமஸ் கேஜெம்ஸ், வீட்டுக்கு சென்று தனது தாயின் கையால் ஒரு கோப்பை காபியை சுவைக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிபிசிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தலைநகர் கோபன்ஹெபனில் ஒரு காபி ஷாப்பில், திடமான காபி அருந்தியபடி இவ்வாறு கூறினார்: “இரானில் ஆட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது; வெளிநாட்டினரை அவர்கள் எப்படி பணத்தை போல பயன்படுத்துகின்றனர் என்று எனக்கு தற்போது நன்கு புரிந்துவிட்டது. எனவே இனி ஒருபோதும் இரானுக்கு மீண்டும் செல்லமாட்டேன்” என்று சபதம் எடுத்து கொண்டார் தாமஸ் கேஜெம்ஸ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்