You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்விகி, ஜொமேட்டோ நல வாரியம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும்?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் ‘ஸ்விக்கி, ஜோமேடோ’ போன்ற உணவு விநியோக சேவை, ரேபிடோ, ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரியும் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்காக, ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகமும் நலவாரியம் அமைக்குமென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ‘கிக்’ பணியாளர்கள் எப்படி பார்க்கின்றனர். அவர்களின் தற்போதைய நிலை தான் என்ன, அடிப்படை தேவைகள் என்ன, இந்த அறிவிப்பால் அவர்களின் வாழ்வில் உண்மையில் மாற்றம் ஏற்படுமா?
நாம் வீட்டில் இருந்தபடி டீவியில் நமக்குப்பிடித்த நிகழ்ச்சிகளைக் கண்டுகொண்டே ஸ்விக்கி, ஜோமேடோ போன்ற தளங்களில் உணவு ஆர்டர் செய்கிறோம். உணவு நம்மைத்தேடி வருவதை ‘டிராக்’ செய்யும் நாம், சில நிமிடங்கள் தாமதித்தால் கூட, குறைவான ‘ரேடிங்’ கொடுக்கிறோம்.
ஆனால், நாம் கொடுக்கும் ‘ரேட்டிங்கால்’, நமக்கான உணவு கொண்டு வரும் அந்த நபரின் வேலைகூட பறிபோகும் அபாயம் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று. ‘ரேட்டிங்’ பிரச்சினை, ஆர்டர்களை தவறவிடுவது என பலவகையான காரணங்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் பிரச்சினைகளைக்கூற ஒரு அரசு அமைப்புகூடஇல்லையெனவும், தங்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர் இவ்வகை பணியாளர்கள்.
இந்தியாவில் எத்தனை பேர்?
‘கிக்’ பணியாளர்கள் வகையில் பலதரப்பட்ட முறைசாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் உணவு டெலிவரி தளங்களான ‘ஸ்விக்கி, ஜோமேடோ, டன்ஜோ’ போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், மருந்து மற்றும் இதர பொருட்கள் விநியோகம்; ரேபிடோ, ஊபர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் நிதி ஆயோக் 2022 ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் படி, உணவு விநியோகம், டாக்ஸி சேவை, பகுதி நேரமாக சேவைகள் வழங்குவோர் என ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் மொத்தம் 7.7 மில்லியன் (77 லட்சம் பேர்) ‘கிக்’ பணியாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் ‘கிக்’ பணியாளர்களின் எண்ணிக்கை 23.5 மில்லியன் (2.35 கோடி பேர்) பணியாளர்களாக உயரக்கூடும் என அறிவித்துள்ளது.
77 லட்சம் அளவுக்கான ‘கிக்’ பணியாளர்கள் இருந்தும், இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட இவ்வகை பணியாளர்கள் எந்த வகையிலும் முறைப்படுத்தப்படாத முறைசாரா பணியாளர்களாகவே உள்ளனர்.
‘கிக்’ பணியாளர் நல வாரியம்!
உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி பணி செய்யும் ‘கிக்’ பணியாளர்கள் தங்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் அடிப்படையான சலுகைகளையாவது வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா மாநில தேர்தலுக்கு, வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் ‘கிக்’ பணியாளர்களை சந்தித்துடன், அவர்களுக்கான நலவாரியம் துவங்கி மற்றும் சலுகைகள் ஏற்படுத்தப்படுமென உறுதியளித்தார்.
அதன்பின், கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், இந்த பணியாளர்களின் நலனுக்காக நாட்டில் முதல் முறையாக, 4 லட்சம் ரூபாயில் விபத்து மற்றும் உயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பின், மூன்று வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ‘கிக்’ பணியாளர்களுக்கு தனியான நலவாரியம் அமைக்கப்படுமென மசோதா நிறைவேற்றியுள்ளது.
ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு தேசிய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உணவு, இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி சேவை பணியாளர்களுக்காக தனியான நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார்.
‘தெளிவாக விளக்க வேண்டும்’
தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய, தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் (CITU) தலைவர் கோபிகுமார், ‘‘ராஜஸ்தான் மாநிலம் ‘கிக்’ பணியாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்ததை தவிர, இந்த நலவாரியம் எப்படி செயல்படும், பணியாளர்களுக்கு என்னென்ன சலுகைகள், உரிமைகளை பெற்றுத்தருமென எதுவும் அறிவிக்கவில்லை.
ராஜஸ்தானை தொடர்ந்து தமிழக அரசும் ‘கிக்’ பணியாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், ராஜஸ்தானை போல் அல்லாமல், தமிழக அரசு இந்த நலவாரியத்தின் முழுமையான செயல்பாடுகள், பணியாளர்களுக்கு என்னென்ன செய்யப்பபோகிறது என முழுமையாக விளக்க வேண்டும்.
ஏனெனில் கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் பணியாளர்கள் அனைவரும் தமிழகத்தில் வேலைநிறுத்தம் செய்தோம். அந்தந்த நிறுவனங்களை அழைத்து அரசு தரப்பில் முத்தரப்பு கூட்டம் நடத்தக்கோரிக்கையும் வைத்தோம். ஆனால், தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தைக்கூட நடத்த முன்வரவில்லை. இதனால் தான், நலவாரியத்தின் செயல்பாடு குறித்து தெளிவாக விளக்க வேண்டுமெனக்கூறுகிறோம்,’’ என்றார்.
பல வகைகளில் பாதிக்கிறோம்...
‘கிக்’ பணியாளர்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறார்கள் என்ற தகவல்களுடன், மேலும் தொடர்ந்த அவர், ‘‘நிறுவனங்கள் ‘ரேடிங்’ வைத்து பணியாளர்களுக்கு பணி வழங்குகிறது. ஒரு வாடிக்கையாளர் உணவு குறைவாக உள்ளதெனவோ, அல்லது சூடாக இல்லை, சுவையாக இல்லையென ‘நெகடிவ் ரேடிங்’ கொடுத்தால் கூட, அந்த உணவை விநியோகம் செய்த ‘கிக்’ பணியாளரையும் பாதிக்கிறது.
ஒவ்வொரு பணியாளரும், 5 ரேடிங்கிற்கு குறைந்தது 4.5க்கு மேல் இருந்தால் தான், மீண்டும் அவர்களுக்கு அந்த நிறுவனம் தொடர்ந்து பணி வழங்குகிறது. ரேடிங் குறைந்தால் பணியாளர்களின் ஐ.டியை தடை செய்து திடீரென வேலையை பறிப்பதால், பணியாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
அதேபோல், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர்கள் வாரத்துக்கான டெலிவரி, ரெய்டு முடித்தால் தான், ‘இன்சென்டிவ்’ வழங்குகின்றனர். இந்த ‘இன்சென்டிவ்’க்காக தீர்மானிக்கப்படும் ‘டார்கெட்’ மனச்சாட்சியற்ற முறையில் நிறுவனங்கள் தீர்மானிப்பதால், ‘இன்சென்டிவ்’ பெறவதற்காக பணியாளர்கள், மழை, நேரம் காலம் பார்க்காமல், அதிவேகத்தில் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, ‘இன்சென்டிவ்’ பெறுவதற்காக உந்தப்பட்டு அதிவேகத்தில், மன உளைச்சலில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது,’’ என்றார்.
‘குறைகளை கேட்க யாரும் இல்லை...’
லட்சக்கணக்கான ‘கிக்’ பணியாளர்களின் குறைகளைக்கேட்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில் எந்த அமைப்பும் இல்லை என்கிறார் அவர்.
இது குறித்து மேலும் தொடர்ந்த அவர், ‘‘இந்திய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் குறைகள் கேட்டு சரிசெய்ய எந்த ஒரு அரசு அமைப்பும் இல்லை என்பது தான் வருத்தத்துக்குறியது. ஏனெனில் ‘கிக்’ பணியாளர்கள் அரசின் எந்தவொரு தொழிலாளர் நலவாரியத்திலும் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். இதனால், மற்ற சாதாரண பணியாளர்களுக்கு கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, உதவித்தொகை, ஓய்வூதியம் என எந்தவொரு அடிப்படை தொழிலாளர் நலச்சட்டத்தின் உரிமைகளும், சலுகைகளும் கிடைப்பதில்லை.
தமிழக அரசு நலவாரியம் அமைக்கும் முன், ’கிக்’ பணியாளர்கள், பணி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து, முத்தரப்பு கூட்டம் நடத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனம் – தொழிலாளர் உறவு முறையை தெளிவாக விளக்க வேண்டும்.
ஏனெனில், பணியாளர்கள் போராட்டம் நடத்தினால் அதை சமாளிக்கவும், தப்பிகவும், ‘Delivery Partner, Rider, Service Provider’ எனக்கூறி ’கிக்’ பணியாளர்களை நிறுவனங்கள் வகைப்படுத்துகின்றனர். பார்ட்னர் என்றால் லாபத்தில் தானே ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாற்றாக நியாயமற்ற முறையில், பிளாட் ஃபார்ம் சார்ஜ், ஜி.எஸ்.டி, Penalty எனக்கூறி அதிகப்படியான பிடித்தம் செய்து இறுதியில் சொற்ப தொகையை பணியாளர்களுக்கு கூலியாக வழங்குகின்றனர். பணியாளர்களின் Designation முறையாக வகைப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
தமிழக அரசிடம் பணியாளர்கள் கேட்கும் கோரிக்கைகள் குறித்து, நம்மிடம் பேசிய அவர், ‘தமிழக அரசு ‘கிக்’ பணியாளர்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக அறிவித்து, தொழிலாளர் நலத்துறையின் சட்டங்களின் உரிமைகளை கிடைக்கச்செய்து, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, பணிப்பாதுகாப்பு, நியாயமான கூலி கிடைக்கச் செய்ய வேண்டும். குறைகளை கேட்க பிரத்தியேக உதவி மற்றும் குறைகேட்பு மையம் துவங்க வேண்டும். முழுநேரம் பணி செய்வோரையும், பகுதி நேரம் பணி செய்வோரையும் வகைப்படுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும்,’’ என்றார், விரிவாக.
‘நிறுவனங்கள் எங்களை நசுக்குகின்றன’
தமிழக அரசின் நலவாரியம் அறிவிப்பு குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய ‘ஸ்விக்கி, ஜோமேடோ, ரேபிடோ’ பணியாளர்கள், ’’எங்கள் குறைகளை கேட்க இதுவரை எந்த அமைப்பும் இருந்ததில்லை. நலவாரியம் அமைப்பதால், எங்களுக்கான நியாயமான கூலி, தொடர்ச்சியான பணி மற்றும் திடீரென வேலை பறிப்பு சம்பவங்களை அரசு தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம்.
தற்போது, நாங்கள் நியாயமான கூலி கேட்டு போராட்டம் நடத்தினால் கூட, எங்கள் நிறுவனம் எங்கள் ‘ஐ.டியை பிளாக்’ செய்து எங்கள் பணியை பறிக்கின்றனர். எங்களின் அடிப்படை நியாயத்தை பெறப்போராடினால் கூட, எங்களை முடக்கி நசுக்கும் வேலையில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இந்தப்போக்கு மாறும், அரசு எங்கள் கோரிக்கைகளை கேட்டு எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் என நம்புகிறோம்,’’ என்றனர்.
‘ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும்’
நலவாரியத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘தமிழகத்தில் உள்ள பல தொழிலாளர்களின் நலனை காக்க நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்காக நலவாரியம் அமைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது முதற்கட்ட அறிவிப்பு தான், இனி துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அளவிலான அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, இந்தப்பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நலவாரியத்தின் செயல்பாடுகளை தீர்மானிப்போம். முத்தரப்பு கூட்டம் நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைத்து விஷயங்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்’’ என்றார், சுருக்கமாக.
‘நலன்கள் கிடைக்கும்!’
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தின் செயலாளர் மாதவன், ‘‘தமிழகத்தில் உடலுழைப்புத் தொழிலாளர்கள் சார்ந்த, 18 நலவாரியங்கள் உள்ளன. இதேபோன்று தற்போது, உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் பணியாளர்களுக்கு உருவாக்கப்பட உள்ளது.
இதர நலவாரிய தொழிலாளர்களுக்கான நலன்கள், உரிமைகள் இவர்களுக்கும் கிடைக்கும். நலவாரியம் தொடர்பாக உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, இவ்வகை பணியாளர்களின் நலனுக்கான பிரத்தியேக திட்டங்களை செயல்படுத்தவும், அமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்படும்,’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்