You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் தலையை துளைத்த தோட்டாவுடன் வாழ்ந்து வரும் முன்னாள் போலீஸ் அதிகாரி
- எழுதியவர், மு.சுப கோமதி
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அதிகம் தேடப்பட்ட ஒருவராக இருந்த வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருந்தது.
அந்தத் தேடுதல் வேட்டையின்போது, வீரப்பனை பிடித்தே தீருவோம் எனத் தமிழ்நாடு அதிரடிப்படையில் சேர்ந்திருந்த இளைஞர் பட்டாளம் ஒன்று 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியான ஓசுர் அருகே ரோந்துப் பணியில் இருந்தது.
அன்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீரப்பனின் கூட்டாளிகள் சிலர் ஓசுர் அருகே அரேபியாலயம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைக்க, அருகிலிருந்த அதிரடிப்படை வீரர்கள் சுமார் 10 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிரடிப்படையினரைக் கண்ட வீரப்பனின் கூட்டாளிகள், போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் பலியாக, மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
“பதினைந்து நபர்கள் மூன்று, நான்கு வகையான துப்பாக்கியுடன் இருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் என்னுடைய பின் தலையில் தோட்டா துளைத்தது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். எனக்கு சுயநினைவு இல்லை."
"கண்விழித்துப் பார்த்தபோது மைசூர் பசப்பா மருத்துவமனையில் இருந்தேன். சுயநினைவு வருவதற்கே மூன்று நாட்கள் ஆகிவிட்டது,” என அன்று நடந்ததை நினைவுகூர்கிறார் அந்த கமாண்டோ ஆபரேஷனில் இருந்த ஒய்வுபெற்ற காவல் அதிகாரி லயோலா இக்னேஷியஸ்.
தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா
திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சேர விரும்பாத காலகட்டத்தில், திருமணமான சில ஆண்டுகளிலேயே தனது 32 வயதில் சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார் லயோலா இக்னேஷியஸ்.
பிப்ரவரி 1997இல் நடந்த கமாண்டோ ஆப்ரேஷனில் தனது பின்புற தயைத் துளைத்த தூப்பாக்கியின் தோட்டாவுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் லயோலா.
“முதலில் நான் மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. தலையில் அதிக வலி இருந்தது. மண்டை ஓட்டைத் துளைத்து மூளைக்கு அருகில் தோட்டா தங்கிவிட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் தோட்டாவை வெளியில் எடுப்பது ஆபத்து எனக் கூறினர்" என்கின்றார் லயோலா.
"நான் ஒரு அதிஷ்டசாலியாகவே உணர்கிறேன். மருத்துவர்களும் மூளைக்கு பாதிப்பு இல்லாமல் தோட்டா தலையில் இருப்பதை வியப்பாகவே பார்த்தனர," என்று அப்போது நடந்த சம்பவத்தை விவரித்தார் லயோலா.
இதுபோன்ற சம்பவங்களில் பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
அந்த நேரத்தில் கையில் ஒன்றரை வயது குழந்தையுடன், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி, செய்தித்தாளில் 'வீரப்பன் கூட்டாளி சுட்டு காவலர் மரணம்: எஸ்.ஐ. கவலைக்கிடம்' என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டதாக இக்னேஷியஸ் கூறுகிறார்.
செய்தியைப் பார்த்த அவரது மனைவி தகவல் கிடைக்கும் வரை காத்திருக்க முடியாமல் தன்னைத் தேடி நேராக சத்தியமங்கலத்திற்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.
"என் மனைவி என்னைத் தேடி சத்தியமங்கலம் சென்றார். ஆனால், அங்கிருந்து மைசூர், பிறகு சென்னை என என்னைப் பார்பதற்கே ஹெலனுக்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என்னைவிட ஹெலன் தான் இந்தச் சம்பவத்தால் அதிகம் பதிக்கப்பட்டார்," என்றார்.
சிறப்பு அதிரடிப் படையில் மீண்டும் சேர்க்கப்படாத இக்னேஷியஸ்
வீரப்பன் தேடுதல் வேட்டை 1989இல் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அதிரடிப்படையை 1993ஆம் ஆண்டு வால்டர் தேவாரம் தலைமையில் அமைத்தது தமிழ்நாடு அரசு.
இந்தச் சிறப்பு அதிரடிப்படையில் 1993ஆம் ஆண்டு சேர்ந்த லயோலா, 1996இல் விபத்து நடக்கும் வரை அதிரடிப்படையில் பணியாற்றினார்.
“அன்று நடந்த கமாண்டோ ஆபரேஷனில் கிரேடு 1 காவலர் செல்வராஜ் இறந்துவிட்டார். மேலும், எஸ்.பி. தமிழ் செல்வன், மோகன் நவாஸ், ரகுபதி, இளங்கோவன் உள்ளிட்ட காவலர்களும் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம். அங்கிருந்து தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்வதே பெரும் சவாலாக இருந்தது. பிறகு மாதேசுவரன் மலையில் இருக்கும் கர்நாடகா தலைமையகத்தைத் தொடர்ப்பு கொண்டு மீட்புக் குழு வருவதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது," என்கிறார் லயோலா.
"அன்று நடந்த மோதலில் என் பின்புற தலையில் தோட்டா மண்டை ஓட்டைத் துளைத்து மூளையின் பக்கமாகச் சென்று தங்கிவிட்டது. சுயநினைவு வருவதற்கு மூன்று நாட்கள் ஆனது.
மருத்துவமனையில் தீவர சிகிச்சை முடிந்து வீடு திரும்ப ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், நான் விரும்பம் தெரிவித்தும் என்னை மீண்டும் சிறப்பு அதிரடிப் படையில் இணைக்கவில்லை. பிறகு துணை காவல் ஆய்வாளராகப் பணியாற்றினேன்," என்று விவரித்தார் லயோலா.
"வாழ்க்கையை சாதாரணமாகப் பார்க்கத் துவங்கினேன்"
பிறகு அவருக்கு, 2000ஆம் ஆண்டில் காவல் ஆய்வாளர், 2010இல் துணை காவல் கண்காணிப்பாளர், 2014இல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு கிடைத்தது.
"1996 சம்பவத்தில் பணியாற்றிய காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அது வழங்கப்படாமலே இருந்தது. மீண்டும் 2001ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கைகள் திவிரமடைந்தது."
"அதோடு வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. மேலும், 2004இல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு அதிரடிப் படையில் இருந்த காவலர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டு, பதவி உயர்வு மற்றும் வீட்டு மனையும் கொடுக்கப்பட்டது. வீரப்பனைப் பிடிக்கும்போது நான் அங்கு பணியாற்றாமல் போனாலும் எனக்கும் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன," என்கிறார் லயோலா.
சிறப்பு அதிரடிப்படைக்குப் பிறகான தனது பணி குறித்துப் பேசிய அவர், 1997ஆம் ஆண்டு வரை அவ்வப்போது தலையில் வலி இருந்ததாகக் கூறுகிறார். அதற்கு பிறகு சாதாரணமாக தன் வாழ்க்கையை பார்க்க தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார்.
"அப்போதில் இருந்து எந்தவித வலியையும் இன்றளவும் உணரவில்லை. மருத்துவரின் பரிந்துரையின்படி 10 ஆண்டுகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு அதையும் நானாகவே நிறுத்திவிட்டேன்.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். சிறப்பு அதிரடிப்படையில் இருந்தபோது எனக்கு 32 வயது. அதிலிருந்து வெளியில் வந்து 26 ஆண்டுகள் திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை, கிருஷ்ணகிரி எனப் பல பகுதிகளில் பணியாற்றி இருக்கிறேன். பணி ஓய்வு பெற்ற பிறகு திருநெல்வேலியில் என் குடும்பத்துடன் மனநிறைவுடன் இருக்கிறேன்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்