தலையை வெட்டி கடலில் வீசிவிட்டு, உடலை ரயில் ஏற்றி அனுப்பிய தம்பதி - தமிழ்நாட்டை உலுக்கிய கொலை வழக்கு

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் இருக்கலாம்

சென்னை எழும்பூருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கும் இடையில் தி இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கிக் கொண்டிருந்தது.

அது 1950களின் துவக்கம். அந்த ரயிலின் பயணிகள், இலங்கையில் உள்ள தலைமன்னாருக்குச் செல்ல சென்னை எழும்பூரிலேயே பயணச்சீட்டை எடுக்க முடியும். எழும்பூரில் கருந்து புறப்படும் ரயில் தனுஷ்கோடியை வந்தடைய 19 மணி நேரம் ஆகும்.

அந்தப் பயணிகள் தனுஷ்கோடியை வந்தடைந்த பிறகு அங்கு இறங்கி, ஒரு ஸ்டீமர் கப்பலின் மூலம், இலங்கையின் தலைமன்னாருக்கு பயணம் செய்ய வேண்டும்.

இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். பேச்சு வழக்கில் இந்த ரயில் போட் மெயில் என்று அழைக்கப்பட்டு வந்தது.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த போட் மெயிலில் கிடைத்த தலையில்லாத ஒரு சடலம் சென்னை மாகாணத்தையே அதிரச் செய்தது.

அந்தக் கொலை நடந்த விதமும் கொலை செய்யப்பட்டதற்கான காரணமும் தமிழ்நாட்டில் பல நாட்களுக்குப் பேசப்பட்டன.

ரயிலில் கிடைத்த டிரங்க் பெட்டி - டிரங்க் பெட்டியில் கிடைத்த தலையில்லா உடல்

அன்று 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள்.

முந்தைய நாள் இரவு எட்டு மணியளவில் சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட ரயில், காலை பத்து மணியளவில் மானாமதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு கம்பார்ட்மென்ட்டில் இருந்த டிரங்க் பெட்டியிலிருந்து மோசமான துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் செய்தனர். அந்தப் பெட்டி யாருடையது என்றும் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறைக்கும் ரயில்வே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில் மானாமதுரையில் வந்து நின்றபோது, அந்தப் பெட்டி காவல் துறையால் கீழே இறக்கப்பட்டது. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, தலையில்லாத ஒரு சடலம் இருந்தது.

அந்த சடலத்தின் கால்களில் பச்சை நிற 'சாக்ஸ்' இருந்தது. சடலத்தை அடையாளம் காண ஏதும் கிடைக்காத நிலையில், அந்த உடல் மதுரை எர்ஸ்கின் மருத்துவமனைக்கு (தற்போது அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை) அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு, உடற்கூராய்வு செய்த மருத்துவர் அது 25 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் என முடிவு செய்தார். அந்த ஆணுக்கு 'சுன்னத்' செய்யப்பட்டிருந்ததால், அது இஸ்லாமியர் ஒருவரின் சலடம் என்று காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர். ஆனால், இந்த இரண்டு முடிவுகளும் தவறு என்பது பிறகு தெரிய வந்தது.

சென்னையில் பெறப்பட்ட புகார்

சென்னை ராயபுரத்தில் உள்ள கல்லறை சாலையில் இருந்த அந்த வீட்டிற்கு வேகவேகமாக வந்து கதவைத் தட்டினார் அந்தப் பெண்மணி. தேவகி என்ற பெண்ணைத் தேடித்தான் அவர் அங்கே சென்றார். ஆனால், கதவைத் திறந்தது தேவகியின் கணவர் பிரபாகர மேனன்.

தன் கணவரை நேற்று முதல் காணவில்லை என்றும் கடைசியாக தேவகியுடன் பார்த்ததாக சிலர் சொல்வதால், அங்கே தேடி வந்ததாகவும் சொன்னார் அந்தப் பெண்மணி. அப்படி யாரும் தங்கள் வீட்டிற்கு வரவில்லையென்று சொல்லிவிட்டார் பிரபாகர மேனன்.

தன் கணவரைத் தேடி தேவகியின் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், ஆளவந்தார் என்ற ஒரு வியாபாரியின் மனைவி. தன் கணவர் இரவில் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் காலை முதல் அவர் ஆளவந்தாரை தேடிக்கொண்டிருந்தார்.

பிறகு, தன் கணவரின் நெருங்கிய நண்பரான குன்னம் செட்டியை அணுகிய ஆளவந்தாரின் மனைவி, தன் கணவரைக் காணவில்லையென காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி கூறினார்.

எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டது. அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், விசாரணையை முதலில் தேவகியின் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று கல்லறை சாலைக்கு வந்தார். ஆனால், வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது தேவகி - பிரபாகர் தம்பதி மும்பைக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முந்தைய நாள் பிரபாகர் மேனனை கையில் ஒரு மூட்டையுடன் கடற்கரையில் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை ராயபுரம் கடற்கரையில் சில நாட்கள் தேடுதல் நடத்தியது.

மூன்றாவது நாள் தேடுதலின்போது, ராயபுரம் கடலோரத்தில் ஒதுங்கிய ஒரு பையிலிருந்து துர்நாற்றம் வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சென்று அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது, பழுப்பு நிற சட்டையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு மனிதத் தலை கிடைத்தது. அந்தத் தலை அழுகிப் போயிருந்தது. அடுத்த நாள் இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளியாகி, சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தத் தலை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதொநேரம், மதுரையில் இருந்த தலையில்லாத சடலமும் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

இந்த இரண்டையும் புகழ்பெற்ற தடயவியல் பேராசிரியரான சி.பி. கோபாலகிருஷ்ணன் ஆராய்ந்தார். அவர்தான், முதலில் சடலத்தின் வயது 42- 45 ஆக இருக்கலாம் என்றார். சென்னையில் கிடைத்த தலையின் காதில் இரண்டு துளைகள் இருந்தன.

பிறகு, காதுகளில் இருந்த துளையையும் பல் வரிசையையும் பார்த்து, அது ஆளவந்தாருடைய தலைதான் என்று ஆளவந்தாரின் மனைவி அடையாளம் சொன்னார்.

ஆளவந்தார் யார்?

ஆளவந்தார் 1952இல் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது இருக்கலாம். ஆவடியில் இருந்த ராணுவ அலுவலகத்தில் சப் - டிவிஷனல் அதிகாரியாக இருந்த ஆளவந்தார், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறினார்.

பிறகு, அவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் பணியைச் செய்து வந்தார். சென்னை எஸ்பிளணேட் பகுதியில் பேனா கடை வைத்திருந்த குன்னம் செட்டி இவருக்கு நண்பர்.

அவரது கடையின் ஒரு பகுதியிலேயே ஆளவந்தார் தனது பிளாஸ்டிக் பொருள் கடையை நடத்தி வந்தார். இது தவிர, சேலைகளை தவணை முறையில் விற்கும் தொழிலையும் அவர் செய்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் தவணை முறையில் பொருட்களை விற்பது புதிது என்பதால், அந்தத் தொழில் அவருக்குச் சிறப்பாகவே நடந்து வந்தது.

ஆளவந்தார் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. இருந்தபோதும் அவருக்குப் பிற பெண்கள் மீது தொடர்ந்து நாட்டம் இருந்து வந்தது.

இது தவிர, போதைப் பொருளான ஓபியம் உட்கொள்ளும் பழக்கமும் அவருக்கு இருந்து வந்தது.

ஒரு நாள் இரவில் ஆளவந்தார் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரது மனைவி, தன் கணவர் கடை வைத்திருந்த பேனா கடையில் சென்று கேட்டபோது, கடைசியாக அவர் தேவகி என்ற பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு போனதைத் தெரிவித்தார்கள்.

தேவகி - பிரபாகர் மேனன் தம்பதி

தேவகி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் ஒரு மொழி பிரசார நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஆளவந்தாரின் கடையை ஒட்டியிருந்த பேனா கடையில் பேனா வாங்கச் செல்லும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. 1951 ஆகஸ்டில் ஏற்பட்ட இந்த உறவு, ஒரு மாதத்திலேயே திருமணத்தைக் கடந்த உறவாக மாறியது. அந்த நேரம் தேவகி தனது பெற்றோருடன் ஆதம் சாஹிப் தெருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், 1952ஆம் ஆண்டில் பிரபாகர் மேனன் என்பவரைச் சந்தித்தார் தேவகி. அவர் முதலில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பிறகு, 'ஃப்ரீடம்' என்ற பத்திரிகையின் ஆசிரியரானார். தேவகியும் பிரபாகரும் திருமணம் செய்துகொண்ட பிறகு, கல்லறை சாலைக்குக் குடிபெயர்ந்தனர்.

தனது பத்திரிகைக்கு தீவிரமாக விளம்பரம் தேடிக்கொண்டிருந்தார் பிரபாகர். தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் விளம்பரம் வாங்கலாம் என்று கூறி, ஆளவந்தாரின் கடைக்கு அழைத்துச் சென்றார் தேவகி.

இந்த வழக்கை மேற்பார்வை செய்த எம். சிங்காரவேலுவின் கூற்றுப்படி, ஆளவந்தார் தேவகியை கல்யாணத்திற்குப் பிறகும் தொந்தரவு செய்ததால், இந்தக் கொலை நடந்திருக்கிறது.

தி மெட்ராஸ் போலீஸ் ஜர்னல் (The Madras Police Journal) 1955ஆம் ஆண்டில் வெளிவந்துகொண்டிருந்தது. அதில் இந்தக் கொலை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையில், கொலையின் பின்னணியை விரிவாக விவரிக்கிறார் இந்த வழக்கை மேற்பார்வை செய்த ஐ.பி.எஸ். அதிகாரியான எம். சிங்காரவேலு.

அதாவது, ஒரு நாள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரியை சந்திக்கச் செல்வதாகவும், தேவகி வந்தால் எளிதாக விளம்பரம் வாங்கிவிடலாம் என்றும் பிரபாகரிடம் கூறிவிட்டு தேவகியை அழைத்துச் சென்றிருக்கிறார் ஆளவந்தார்.

அருகில் இருந்த விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆளவந்தார் தேவகியிடம் அத்துமீற முன்றிருக்கிறார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ஆளவந்தாருடன் உறவைத் தொடர விரும்பாமல் அங்கிருந்து வெளியேறிய தேவகி, தன் கணவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார்.

அப்போது, பிரபாகர் மேனன் இதற்கு முன்பே இருவருக்கும் உறவு இருந்ததா என்று விசாரித்தார். அப்படி எந்த உறவும் இல்லை என்று மறுத்த தேவகி, ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் உறவு இருந்ததை ஒப்புக்கொண்டார்.

பிறகு, தான் சொல்வதைச் செய்ய வேண்டுமென தேவகியிடம் கூறினார் பிரபாகர் மேனன். தேவகியும் அதை ஏற்றுக்கொண்டார்.

கொலை நடந்த நாள்

அன்று 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி. அன்று மதியம் ஆளவந்தாரின் கடைக்கு வந்த தேவகி, தனது வீட்டுக்கு வரும்படி ஆளவந்தாரை அழைத்தார்.

அவர் வருவதற்கு முன்பாக, அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த நாராயணனிடம் சிறிய அளவில் பணம் கொடுத்து வெளியில் சென்றுவிட்டு மாலையில் வரும்படி சொன்னார்கள்.

தேவகி கூறியபடியே, கல்லறை சாலையில் இருந்த வீட்டிற்குச் சென்றார் ஆளவந்தார். வீட்டிற்குள் ஆளவந்தார் நுழைந்ததும் அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றார் பிரபாகர் மேனன்.

பிறகு அவரது தலையைத் தனியாகத் துண்டித்தார். உடலை ஒரு டிரங்க் பெட்டியில் வைத்தார். தலையை மட்டும் ஒரு பையில் போட்டு ராயபுரம் கடல்பகுதியில் வீசினார்.

ஆனால், சிறிது நேரத்திலேயே அந்தப் பையை அலைகள் கரையில் திரும்பக் கொண்டுவந்து சேர்த்தன. பிறகு, அந்தப் பையில் சிறிது மண்ணை அள்ளிப்போட்டு மீண்டும் தண்ணீரில் எறிந்தார். அதற்குள் அந்தப் பக்கமாக சிலர் வரவும் அங்கிருந்து புறப்பட்டார் பிரபாகர் மேனன்.

வீட்டிற்கு வந்து ஆளவந்தாரின் உடல் இருந்த ட்ரங்க் பெட்டியை ஒரு ரிக்ஷாவில் ஏற்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு போக முடிவு செய்தார். ஆனால், அங்கு போலீஸ் இருக்கலாம் என்று தோன்றியதும், உடனே எழும்பூர் ரயில் நிலையத்திற்குக் கொண்டு போனார்.

போட் மெயிலில் ஆளில்லாத ஒரு கம்பார்ட்மென்ட்டில் பெட்டியை ஒரு போர்ட்டரின் உதவியுடன் ஏற்றிவிட்டு வீடு திரும்பினார் பிரபாகர் மேனன்.

அடுத்த நாள் ஆளவந்தாரின் மனைவி வந்து தேடிவிட்டுச் சென்றதும், அந்தத் தம்பதி உடனடியாக பம்பாய்க்கு சென்றுவிட்டனர்.

ஆளவந்தாரின் கொலையையும் இந்தத் தம்பதியையும் இணைக்க காவல்துறைக்கு ரொம்ப நேரமாகவில்லை. அதற்குக் காரணம், அந்த வீட்டிற்குள் ஆளவந்தார் நுழைவதைப் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனால், அவர் திரும்பி வந்ததை யாரும் பார்க்கவில்லை.

பம்பாய்க்கு சென்ற சென்னை மாகாண காவல்துறை, அங்கே ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்த தேவகி - பிரபாகர் மேனன் தம்பதியைக் கைது செய்தது. சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விசாரித்தபோது, அவர்கள் கொலை செய்ததை முதலில் மறுத்தனர். ஆனால், அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தன.

டிரங்க் பெட்டியை ஏற்றிச் சென்ற ரிக்ஷாக்காரன், அதை ரயிலில் வைத்த போர்ட்டர் ஆகியோர் பிரபாகர் மேனனை அடையாளம் காட்டினர். மேலும், தேவகி வீட்டில் பணியாற்றிய நாராயணனும் பல விஷயங்களைச் சொன்னார்.

இந்த வழக்கை நீதிபதி ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர் விசாரித்தார். பிரபாகர் மேனன் தரப்பில் பி.டி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் ஆஜரானார். அரசுத் தரப்பில் பிரபல வழக்கறிஞரான கோவிந்த் சுப்ரமணியம் வாதாடினார். பிரபாகர் மேனன் தரப்பைப் பொருத்தவரை, இந்தக் கொலை ஆத்திரத்தில் நடந்த கொலை என வாதிட்டனர்.

தன் வீட்டிற்கு வந்த ஆளவந்தார், தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றபோது, சமையலறையில் கத்தியுடன் இருந்த தான், ஆத்திரத்தில் ஆளவந்தாரைக் கொன்றுவிட்டதாக பிரபாகர் மேனன் கூறினார். ஆனால், தடயவியல் ஆய்வுகளின்படி அது திட்டமிட்ட கொலை என நிரூபிக்கப்பட்டது.

இருந்தபோதும், ஆளவந்தார் குறித்து நீதிபதிக்கு மிக மோசமான பார்வை இருந்தது. ஆகவே, கொலையாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையையே விதிக்க நீதிபதி முடிவு செய்தார். அதன்படி, பிரபாகர் மேனனுக்கு ஏழாண்டு தண்டனையும் தேவகிக்கு இரண்டு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

தமிழக புலனாய்வு வரலாற்றில் முக்கியமான கொலை வழக்கு

இந்தத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விரும்பினார் பிரபாகர் மேனன். ஆனால், அவரது வழக்கறிஞர் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறியதால், விட்டுவிட்டார்.

அரசுத் தரப்பும் இவ்வளவு குறைவான தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விரும்பியது. ஆனால், இந்த விவகாரம் தொடர்ந்து மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் என்பதால், மேல் முறையீட்டு யோசனையைக் கைவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகர் மேனனும் தேவகியும் நன்னடத்தை காரணமாக 50களின் பிற்பகுதியிலேயே தண்டனை முடிந்து வெளியில் வந்தனர். பிறகு சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்று அங்கே புதிதாக கடை ஒன்றைத் தொடங்கினர். அதற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை வெற்றிகரமானதாகவே இருந்தது.

இந்தக் கொலை நடந்து எழுபதாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும்கூட, இந்தக் கொலை குறித்த ஆர்வம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக காவல்துறையின் புலனாய்வு வரலாற்றில் இந்தக் கொலை விசாரணை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொலையை நிரூபிப்பதில் தடய அறிவியல் முக்கியப் பங்காற்றியது.

இந்தக் கொலை குறித்துப் பல புத்தகங்கள் தமிழில் எழுதப்பட்டுவிட்டன. 1995இல் ராண்டார் கையின் திரைக்கதையில், இந்த வழக்கு ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு, தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: