You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த புழுக்கள் விஞ்ஞானிகளால் புத்துயிர் பெற்ற அதிசயம்
கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஒரு ஜோடி புழுக்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ள வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகின் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சைபீரியாவில், எப்போதும் பனிப்படலம் மூடிய நிலையில் காணப்படும் உறை மண் படுகையில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த நூற்புழுக்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த அதிசய கண்டுபிடிப்புக்கு பிறகு, நூற்புழுக்கள் தண்ணீரில் மறுநீரேற்றம் செய்யப்பட்டபோது அவை மீண்டும் உயிர்ப்பித்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நூற்புழு வகையைச் சேர்ந்த இந்தப் புழுக்கள் கிரிப்டோ பயாசிஸ் நிலையில் பராமரிக்கப்பட்டன. தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையையும், தீவிர வெப்பநிலையையும் பொறுத்துக் கொள்ள புழுக்களை இந்த நிலை அனுமதிக்கிறது.
இது முதல்முறை அல்ல
செயலற்ற நிலையில் இருக்கும் நூற்புழுக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் இந்த முறை உயிர்ப்பிக்கப்பட்ட புழுக்களை போன்று, இதற்கு முன் அவற்றின் செயலற்ற காலம் இவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் நீண்டதாக இருந்ததில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அதாவது 40 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு, புழுக்கள் உயிர்ப்பிக்கப்பட்ட இந்த செயல்முறை மேற்கொள்ளப்படலாம் என்று யாரும் நினைக்கவில்லை” என்று PLOS Genetics எனும் அறிவியல் இதழில் அண்மையில் வெளியிட்ட இதுதொடர்பான ஆய்வு கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும், ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விலங்கியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு தலைவருமான பிலிப் ஷிஃபர் கூறினார்.
“இவ்வளவு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இந்தப் புழுக்களின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவது வியப்பளிப்பதாக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
ஒத்த மரபணுக்கள்
45,839 முதல் 47,769 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முந்தைய காலகட்டத்தில், இந்த வகை நூற்புழுக்கள் செயலற்ற நிலைக்கு சென்றதாக, கார்பன் டேட்டிங் கால அளவை முறை மூலம் விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த உயிரினங்களை செயலற்ற நிலைக்கு செல்ல அனுமதிக்கும் முக்கிய மரபணுக்களை பகுப்பாய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கேனோர்ஹப்டிடிஸ் எலிகன்ஸ் எனப்படும் சமகால நூற்புழுக்களில் காணப்படும் அதே மரபணுக்கள், இவற்றிலும் இருப்பதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்தது. கோனோர்ஹர்டிடிஸ் எலிகன்ஸ் வகை நூற்புழுக்களிலும் ‘கிரிப்டோபயோசிஸ்’ நிலையை அனுமதிக்கும் மரபணுக்களை காண முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சத்து உற்பத்தி
இந்த இருவகை நூற்புழுக்களையும் ஆய்வகத்தில் வைத்து லேசாக நீரிழப்பு செய்தபோது, ‘ட்ரெஹலோஸ்’ எனப்படும் சர்க்கரை சத்தை அவை உற்பத்தி செய்கின்றன. இந்த உற்பத்தித் திறனே உறைபனி மற்றும் கடுமையான நீரிழப்பை தாங்குவதற்கு இவற்றை அனுமதிக்கலாம் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றனர்.
புறத்தோற்றம் மற்றும் ஆயுட்காலம்
தோராயமாக ஒரு மில்லி மீட்டர் நீளமுள்ள இந்த வகை புழுக்கள், சில நாட்களே வாழும் தன்மை கொண்டவையாக இருப்பது ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் இவை இறப்பதற்கு முன், தங்களின் குறுகிய கால வாழ்நாளில் பல தலைமுறைகளை உருவாக்கும் விதத்தில் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்ந்தனர்.
46 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட நூற்புழுக்களின் சந்ததிகளில் உள்ள உயிர் வாழ்வதற்கான தகவமைப்பு செயல்முறை குறித்த தங்களது தீவிர ஆராய்ச்சியை தொடர உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்